Search This Blog

Tuesday, March 15, 2016


தனி மனிதன் உருவாக்கிய காடு 16/03/2016

பழங்குடி இனத்தவர்களுக்கு இயல்பாகவே வனக் காதல் அதிகம். ஜாதவ் பயேங் என்பவருக்கும் அந்த காதல் இருந்தது. அவர்  சிறுவனாக இருந்த போது பிரம்மபுத்திரா நதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மாஜூலி தீவு. பிரம்மபுத்திரா நதியின் மையத்தில் அமைந்து இருக்கும் ‘மாஜூலி’ தீவுதான், உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும். இந்த தீவில் பாம்புகள் மடிந்ததற்கு காரணம் மரங்கள் இல்லாததுதான் என்பதை ஜாதவ் உணர்ந்தார். அப்போது அவரின் வயது 16.

1980-ல் வனத்துறையினர் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் மாவட்டம் ‘கோகிலமுக்‘ என்ற இடத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில் சமூக காடுகளை உருவாக்க முனைந்தார்கள். அந்த திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஜாதவ் மற்ற தொழிலாளர்களோடு இணைந்து மரக்கன்றுகளை நட்டார். வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்கள் அவரவர் ஊருக்கு புறப்பட்டச் சென்று விட்டனர்.  லேசாக துளிர் விட்டு நிற்கும் மரக்கன்றுகளை அப்படியே விட்டு விட்டால், வாடிப்போய்... மரித்துவிடும் என்பதால் அந்த மரங்களைப் பார்த்து பராமரிக்க அனுமதி கேட்டார், ஜாதவ். வனத்துறையும் அனுமதி கொடுத்தது. அதன்பின் ஒருவர் கூட அந்த பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. சமூக காட்டின் மண்ணை வளப்படுத்துவதற்காக ஜாதவ் ஒரு யுக்தியை கையாண்டார். நமது மண்ணை மண்புழுக்கள் வளப்படுத்துவது போல், அசாமில் சிவப்பு நிற எறும்புகள் மண்ணை வளப்படுத்தும் உயிரினம். அதற்காக தனது ஊருக்குச் சென்று சிவப்பு நிற எறும்புகளை பெருமளவில் பிடித்து வந்து, மணல் திட்டில் விட்டார்.

30 வருடங்களாக எந்த பிரதிபலனும், எதிர்பார்க்காமல் தன்னந்தனியாக தனது குடும்பத்தினருடன் இணைந்து காடு வளர்ப்பதற்காக நகர வாழ்க்கையை விட்டு இந்த காட்டில் வாழத்தொடங்கினார். மாஜூலி தீவில் மரங்களால் ஆன சிறு வீட்டை ஏற்படுத்திக் கொண்டார். அதில் அவரின் மனைவி பினிதா பயேங்க். மகன்கள் சஞ்சய், சஞ்ஜீவ் மற்றும் மகள் மூன்முனி ஆகியோருடன் தற்போதும் வாழ்ந்து வருகிறார். தனது வருமானத்திற்காக 50 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். பாலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். காலை 3.30 மணிக்கே எழுந்துவிடும். இவர் மாடுகளிடம் பால் கறந்து விற்ற பின் முழு நேரமும் காட்டைப் பராமரிக்கவே நேரத்தை செலவிட்டார். சிறிய உயிரினம் கூட வாழத் தகுதியற்றதாக இருந்த இந்த மணல் திட்டில், மரங்கள் பெருக பெருக பல உயிரினங்கள் வாழும் இடமாக மாறியது.

பக்கத்து காடுகளில் இருந்து வரும் புலிகள் அவரின் வளர்ப்பு ஆடுகளை உணவாக்கி கொண்டன. அப்படி இருந்தும் தனது காட்டில் விலங்குகள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இப்போது இவரின் காட்டில் 5 புலிகள், 3 காண்டா மிருகங்கள் நிரந்தரமாக வாழ்கின்றன. தனது 17-வது வயதில் தொடங்கி 51 வயது வரை மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவை செய்துள்ள ஜாதவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் இதை எதையும் காதில் வாங்காத ஜாதவ், ‘நான் உருவாக்கிய காட்டை வனத்துறையினர், நன்றாக பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால், நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயாராக உள்ளேன்’ என்கிறார், இந்த சாதனை மனிதர்.

ஒரு அரசாங்கம் செய்யத் தயங்கும் வேலையை தனிமனிதனாக இருந்து சாதித்த ஜாதவ் பயேங்கை வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment