Search This Blog

Monday, September 28, 2015


கல்லீரலின் போராட்டம்
மது குடிப்பவர்களிடம் நடைபெறும் மிகப் பெரும் போட்டியே இதுதான். அதாவது எவ்வளவு மது அருந்தினாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என்பது. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த ஸ்டெடி மனிதர்கள் எவ்வளவு அபாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது. உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தகவல் அனுப்பிவிடும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு ‘ப்ரோத்ரோம்பின்’ என்ற ரசாயனத்தை அனுப்பி வைத்துவிடும். அந்த ரசாயனம் ரத்தத்தை உறையச் செய்கிறது. இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. கல்லீரல் மட்டும் இதை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு. ரத்தம் உறையாமல் முழுவதும் வெளியேறி மரணம் ஏற்படும். இன்றைக்கு லேசான தலைவலி, உடல் மெலிவு, சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை உள்ளது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். இது மட்டும் கெட்டுவிட்டால் நச்சு இதயத்தை நேரடியாக தாக்கி மரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து சேர்க்கும். மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால், அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது? கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது. கல்லீரலும் அப்படித்தான். தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். அதன்பின் படுத்துக் கொண்டால் அவ்வளவுதான். அதனால், “மதுவை மறந்து கல்லீரலை காத்து உடல் ஆரோக்கியம் பெறுவோம்” என்கிறது, அந்த ஆய்வு.

No comments:

Post a Comment