Search This Blog

Friday, September 4, 2015


கரும்பு ஒரு கசப்பான வரலாறு 

       இன்று உலகம் முழுக்கவே கரும்பு பெரும் விவசாய விளைபொருளாக இருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. கரும்புச்சாறு தந்த ருசியில் மயங்கிய மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதி, ‘தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’ என்று கரும்பை வர்ணித்தார். 

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டிலேயே கரும்பில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறையை தெரிந்து வைத்திருந்தார்கள். கி.மு.100-ம் ஆண்டில் இந்த முறை சீனாவுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்தது தான். 

கி.பி. 636-ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. 

இனிப்பான கரும்பிற்குப் பின்னால் ஒரு கசப்பான கண்ணீர்க் கதையும் உண்டு. தெரிந்தோ தெரியாமலோ அடிமைகள் வியாபார உலகில் பெருமளவு உருவாவதற்கு கரும்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஏராளமான கரும்புத்தோட்டங்கள் அப்போது இருந்தன. அவற்றில் குறைந்த கூலியில் வேலை செய்ய அதிகமான ஆட்கள் மிக தேவைப்பட்டார்கள். 

ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக பொருட்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அதற்கு பதிலாக அடிமைகளை பண்டமாற்று முறையில் விலைக்கு வாங்கினார்கள். அந்த அடிமைகள் கரும்புத் தோட்ட முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டார்கள். தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஆடு, மாடுகளைப் போல கேவலமாக நடத்தினர். கி.பி.18-ம் நூற்றாண்டில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய ஒரு வருடத்திற்கு சுமார் 50 ஆயிரம் அடிமைகள் இங்கிலாந்து கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். 

இப்படி அடிமைகள் பெருமளவு உருவாவதற்கு கரும்பு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனிக்கும் கரும்பிற்குப் பின்னால் இருக்கும் இந்த கசப்பான வரலாறு இன்றைய தலைமுறை அறியாதது.

No comments:

Post a Comment