Search This Blog

Saturday, September 5, 2015


ஆவி உலகம்
லண்டனில் இருக்கும் “சொசைட்டி பார் சைக்கிள் ரிசர்ச்” என்ற இயக்கம் 17,000 பேரிடம் பேயைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேள்விகேட்டு கடிதம் அனுப்பியது. அவர்களில் 10 சதவீதம் பேர் பேயைப் பார்த்ததாக சொல்லி யிருக்கிறார்கள். அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பார்த்திருக்கிறார்களாம். இத்தனைப் பேர் பேயைப் பார்த்திருப்பது சாதாரண விஷயமில்லை என்று கூறுகிறது, அந்த அமைப்பு. சரி, இப்படி தூணிலும், துரும்பிலும் நிறைந்திருக்கும் ஆவிகள் நம் முன் தோன்றினால் அவற்றை எப்படி விரட்டுவது? முதலில் ஆவிகளைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. பயந்தால்தான் ஆபத்து என்கிறார், பல அனுபவங்களைப் பெற்ற ஆவி ஆராய்ச்சியாளர் பாய்ன், 

இவரும் ஒரு பெண் தான். இவருக்கு ஆவிகள் என்றால் அலாதியான பிரியம். எங்காவது ஆவிகள் நடமாடுவதாக கேள்விப்பட்டால் பெட்டி-படுக்கையோடு அங்கே ஆஜராகி, அதைப் பற்றி ஆராயத்தொடங்கி விடுவார். அவர் தனது ஆராய்ச்சி மூலம் பெற்ற அனுபவங்களையும், ஆவிகளிடம் எக்குதப்பாக நாம் மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிக்க வேண்டும், ஆவிகளை எப்படி விரட்ட வேண்டும் என்றும் விலாவாரியாக சொல்கிறார். ஆவிகளில் நான்கு வகை இருக்கிறதாம். ஒருவர் மரணமே அடைந்திருக்க மாட்டார். ஆனால் வெகு தொலைவில் உள்ள மற்றொருவர் கண்ணுக்கு அந்த ஆவி தெரியும். இது முதல்வகை ஆவி. 

இரண்டாவது வகை, பாசப் பிணைப்போடு சம்பந்தப்பட்டது. ஒருவர் மரணிக்கும் தருவாயில் அவருக்கு வேண்டியவர்கள் முன்பு தோன்றுவது. அல்லது இறந்த உடனே தோன்றுவது. 

மூன்றாவது வகை தான் நாம் அடிக்கடி கேள்விப்படும் சாதாரண ஆவிகள். இவை இறந்து பல நாட்கள் ஆகியிருக்கும். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தோன்றும். நாம் கொஞ்சம் பயந்த ஆள் என்றால் நம்மை அதிகமாக பயமுறுத்தும். 

 நான்காவது வகை ஆவிதான் நமது சினிமாக்காரர்களுக்கு பிடித்த ஆவி. பேய்ப் படங்கள் எல்லாவற்றிலும் இந்த ஆவிகள்தான் வந்து நம்மை பயமுறுத்தும். இவை பழம்பெரும் ஆவிகள். இவை எப்போதும் ஒரே இடத்தில் இருக்கும். பாழடைந்த வீடுகள், பழைய கோட்டைகள் போன்ற இடங்கள்தான் இவற்றின் புகலிடம். இந்த ஆவிகள் நூற்றாண்டுகளுக்கு மேல் அங்கு தங்கியிருக்குமாம். 

மனிதர்களில், பயப்படும் மனிதனைத்தான் மற்றவர்கள் மேலும் மிரட்டி பயமுறுத்துவார்கள். தைரியமானவர்களிடம் அதே மனிதர்கள் பணிந்து போவார்கள். இதே லாஜிக்தான் ஆவிகளுக்கும். பயந்தால் அது மேலும் நம்மை பயமுறுத்தும். 

நாம் பயப்படும்போது நமது உடலில் இருந்து ஒரு சக்தி வெளிப்படுகிறது. அந்த சக்தியைத்தான் ஆவிகள் உபயோகப்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலான மனிதர்கள் பயத்தில்தான் இறந்து போயிருக்கிறார்களே தவிர, ஆவி தாக்கியதால் அல்ல என்கிறார், பாய்ன். 

ஆவிகள் எதிரே வந்தால் அவற்றை கொஞ்சம் அலட்சியப் படுத்துங்கள். கண்டுகொள்ளாதீர்கள். நம்மை தொடர்ந்து வரும் நாயை விரட்டுவது போல பலமான சைகை மூலம் ‘போ’ என்று விரட்டுங்கள். உங்கள் பயத்தின் மூலம் உங்கள் சக்தியை எடுத்து ஆவிகளை ரீசார்ஜ் செய்து கொள்ள அனுமதித்து விடாதீர்கள். உங்கள் துணிவு ஆவியை அங்கிருந்து நகர்ந்து போக வைத்துவிடும். அடுத்த முறை ஆவி வந்தால் இப்படி செய்து பாருங்களேன்! என்கிறார், பாய்ன்.

No comments:

Post a Comment