Search This Blog

Monday, September 28, 2015


செஞ்சிலுவை சங்கம்
செஞ்சிலுவை சங்கம் என்பது உலக அளவில் வியாபித்திருக்கும் ஒரு மனிதநேய சங்கமாகும். ஆரம்பத்தில் போரில் காயம்பட்ட வீரர்களை கவனித்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. விபத்துகளால் தாக்குண்ட நாடுகளின் நலனுக்காக பாடுபடுவதோடு, அமைதி காலத்தில் முதலுதவி தருதல், விபத்துகளைத் தடுத்தல், குடிநீரைப் பாதுகாத்தல், நர்சுகளுக்கு பயிற்சியளித்தல், தாய்சேய் நல மையங்களை பேணுதல், மருத்துவமனைகளை நிறுவுதல், ரத்த வங்கி அமைத்தல் முதலியவற்றை செய்து வருகிறது. செஞ்சிலுவை சங்கம் 1859-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி நிறுவப்பட்டது. 

 இதன் நிறுவனர் ஜீன்ஹென்றி டுனண்ட். இவர் தனது வியாபார விஷயமாக லாபார்டி நகரத்துக்கு சென்று இருந்தார். அப்போது ஆஸ்திரியாவுக்கும், பிரான்சுக்கும் ஓயாத போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த நாட்களில் லாபார்டி நகரம் தாக்குதலின் மையமாக இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் போரின் கொடுமையால் அவதிக்குள்ளாயினர். முதலுதவி கிடைக்காததால் அநேக மக்கள் மாண்டனர். 

நெஞ்சை பிளக்கும் இந்த காட்சிகள் ஹென்றியின் மனதை பாதித்தன. அவர் தனது சொந்த வேலையை அறவே மறந்தார். துன்பமுற்ற மக்களின் துயரை துடைக்க முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது சேவை பல உயிர்களைக் காப்பாற்றியது. 

இந்த போர் முடிந்ததும் அவர் உலக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். போரில் காயமடைந்த வீரர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் சேர்ந்தவர் அல்ல. படைக்கலத்திலே நாதியற்ற இந்த வீரர்களுக்கு மனிதாபிமானத்துடன் சேவை செய்வது மனித குலத்தின் கடமை என்று அவர் அதில் குறிப்பிட்டார். இந்த வேண்டுகோள் உலக மக்களை கவர்ந்தது. 

1864-ல் ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்க அனைத்துலக மாநாடு நடைபெற்றது. அதில் 14 நாடுகள் செஞ்சிலுவை சங்கத்தை நிறுவ ஒப்புதல் அளித்தன. சுவிட்சர்லாந்து நாட்டின் கொடியில் சிவப்பு நிற நிலைக்கலனில் வெள்ளை நிற சிலுவை பொருத்தி இருந்தது. இதனை மாற்றி வெள்ளை நிற கலரில், சிவப்பு நிற சிலுவையை இந்த நிறுவனத்தின் கொடியில் பொருத்தினார். 

 இதுவே செஞ்சிலுவை சங்கம் பிறந்த கதை. செஞ்சிலுவைக்கு மூன்று குழுக்கள் உள்ளன. முதலாவது, செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்துலக குழு. கட்சி சார்பற்ற இந்த குழுவில் சுவிட்சர்லாந்து நாட்டின் 25 குடிமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைமை இடம் ஜெனீவாவில் உள்ளது. இரண்டாவது, செஞ்சிலுவை சங்கங்களின் லீக் என அழைக்கப்படுகிறது. மூன்றாவது, தேசிய செஞ்சிலுவை சங்கங்கள் என்று அழைக்கப்படுகிறது. 

போர்க்காலங்களில் செஞ்சிலுவையின் அனைத்துலக குழு போரில் ஈடுபட்ட நாடுகளுக்கும், தேசிய செஞ்சிலுவை சங்கங்களுக்கும் நடுவராக செயலாற்றும். இது போர்க் கைதிகளின் நலத்தை பாதுகாக்கிறது. உறவினர்களிடம் இருந்து அவர்களுக்கு அனுப்பப்படும் தபால்களை சேர்ப்பிக்க உதவுகிறது. பெரும்புயல், கொள்ளை நோய், பஞ்சம் ஆகியவற்றில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமிக்க பணிகளை செஞ்சிலுவை சங்கம் செய்து வருகிறது.

No comments:

Post a Comment