Search This Blog

Sunday, September 13, 2015


செவ்வாய் கிரகத்துக்கு குடிபோகலாம் 

தொடக்கத்தில் மனிதன் ஊர்விட்டு ஊர் குடியேறினான். சிறிது காலம் கழித்து மாநிலம் விட்டு மாநிலம் குடியேறினான். அதற்குபின் நாடு விட்டு நாடு. இப்போது அவன் நாட்டமெல்லாம் பூமியை விட்டு வேறு எங்காவது போகலாமா? என்பதுதான். அப்படி பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு கூட்டிப் போவதற்காகவே ‘மார்ஸ் ஒன்’ என்ற நிறுவனம் தயாராக இருக்கிறது. நெதர்லாந்தில் இருக்கும் இந்த நிறுவனத்தில் ஒரு சிறுதொகையை கட்டிவிட்டு காத்திருந்தால் போதும். 2024-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துப் போவார்கள். அப்படி அங்கு போவோர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அவர்கள் நிரந்தரமாக செவ்வாயில் குடியேற வேண்டியதுதான். இப்படி செவ்வாயில் நிரந்தரமாக குடியேறுவதற்காக 2,02,586 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களில் 660 பேரை மட்டும் தேர்வு செய்து அடுத்தச் சுற்றுக்கு தேர்வு செய்தது அந்த நிறுவனம். அவர்களையும் வடிகட்டி 100 பேரை தேர்வு செய்துள்ளது. அந்த 100 பேரில் நால்வரை மட்டும் முதல்கட்ட பயணத்துக்கு அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த நால்வரும் 7 வருட பயிற்சிக்குப் பின் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். செவ்வாய்க்குப் போனால் கடைசி வரை அங்கேயே இருக்க வேண்டியது தான். இந்த பயணத்துக்கு மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளார்கள். இவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே தங்குவதற்கு வசதியாக ஆளில்லா விண்கலங்கள் மூலம் குடில்கள் எடுத்துச் சென்று அமைப்பார்கள். செவ்வாயில் நமது பூமியைப் போல் ஆறு, குளம், மரம், செடி, கொடி எதுவும் இருக்காது. இவர்கள் தங்கி இருக்கும் குடில்களுக்கு அருகே காய்கறி பயிரிடுவதற்கான இடம் இருக்கும். அதில் விளைவித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அங்கு தங்குபவர்களை பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப குடிகளுக்குள் டிவி கேமராக்கள் இருக்கும். முதல் குழுவில் இருக்கும் நான்கு பேர்களில் இரண்டு பேர் ஆண்கள். இருவர் பெண்கள். இவர்களின் வயது 18 முதல் 40 வரை. இவர்கள் எந்த நிலைமையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு வாழ முடியும். இந்த நால்வரும் 7 மாதம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைவார்கள். இப்படி இவர்கள் பயணம் செய்யும் நிகழ்ச்சிகளையும் அவர்களின் பேட்டிகளையும் ஒளிபரப்புவதற்கான உரிமை ஏலம் மூலம் விடப்பட்டு பெரும் பணம் திரட்டப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. செவ்வாயில் மனிதனுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் இல்லை. கடுங்குளிர் வேறு. புழுதிப் புயல் ஏற்பட்டால் பல மாதங்களுக்கு நீடிக்கும். அதில் இருந்து தப்ப முடியாது. அங்கு நிலவும் கதிர்வீச்சால் காய்கறிகளை பயிர் செய்வதும் சிரமமே. தண்ணீரும் போதிய அளவு அங்கு கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் அவர்கள் பூமியில் இருந்து செல்லும் விண்கலன்கலையே நம்பி இருக்க வேண்டும். நிலைமை இப்படி இருக்க மரணத்துக்கான ஒருவழிப் பாதைபோல் செவ்வாயில் மனிதர்களை இறக்கிவிட்டு வருவது நியாயமில்லை என்ற கருத்தும் எழாமல் இல்லை. சந்திரனுக்கு மனிதன் சென்று திரும்புவது போல செவ்வாய்க்கும் சென்று திரும்பலாமே என்றால் அது முடியாது என்கிறது விஞ்ஞானம். நிலவின் தூரம் பூமியில் இருந்து 4 லட்சம் கி.மீ. மூன்று நாள் பயணத்தில் சென்று சேரலாம். நிலவு சிறிய கோள் என்பதால் அங்கு ஈர்ப்பு விசையும் குறைவு. அதனால் சிறிய விண்கலங்களில் மனிதன் சென்று வந்து விடலாம். செவ்வாயின் கதையோ வேறு. அது பெரிய கிரகம். தூரமோ 20 கோடி கி.மீ. 7 மாதங்கள் பயணிக்க வேண்டும். அதிகமான ஈர்ப்பு சக்திக் கொண்டது. அதற்கு பெரிய விண்கலங்கள் வேண்டும். அவ்வளவு பெரிய விண்கலங்களை ராக்கெட்டால் சுமந்து செல்ல முடியாது. அப்படியே சென்றாலும், செவ்வாயில் இறங்கிய அந்த விண்கலங்களை மீண்டும் பூமி நோக்கி செலுத்த பெரிய ராக்கெட் ஏவுதளம் வேண்டும். அதெல்லாம் இப்போதைய தொழில்நுட்பத்தில் நடக்கவே முடியாத உண்மைகள். வருங்காலத்தில் வேண்டுமானால் நடக்கலாம். அதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன. அதனால் செவ்வாய் பயணத்துக்கு தடை வரலாம் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment