Search This Blog

Monday, August 31, 2015


செவித்திறனை பாதிக்கும் ‘ஹெட்போன்’ இசை
மொபைல் என்ற நவீனம் வந்த பின், ஹெட்போன் மூலம் பாடல் கேட்பது தாறுமாறாக வளர்ந்து இருக்கிறது. பஸ், ரெயில், இரைச்சல் மிகுந்த போக்குவரத்து நெரிசலில், அதிக சத்தத்தில் ஹெட்போனில் பாடல் கேட்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அருகில் சென்றால் அந்த ஹெட்போனையும் மீறி பாடல்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும். இப்படி காதுக்குள் இசை கேட்பவர்களுக்கு, காது பாதிக்கப்பட்டால், மீண்டும் கேட்கும் சக்தியை பெறவே முடியாது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு டினைடஸ் என்று மருத்துவப் பெயர். இந்த நோய் வந்துவிட்டால், சுற்றுப்புறம் சத்தமின்றி அமைதியாக இருந்தாலும், நம் காதுக்குள் மட்டும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். இது சில சமயம் மென்மையாகவும், பல நேரங்களில் தாங்கமுடியாத அளவுக்கு அதிக ஒலியுடனும் கேட்கும். இந்த டினைடஸ் வந்துவிட்டால், காதுக்குள் மணி அடிப்பது போலவோ, கடல் அலையைப் போன்ற சத்தமோ, காதுக்குள் காற்று அடைத்துக் கொண்டது போலவோ, சலசலவென்று தண்ணீர் ஓடுவது போலவோ அல்லது இனம் புரியாத ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சில நிமிடங்களே இதன் தாக்கம் இருக்கும். பின்னர் காணாமல் போகும். பல ஆண்டுகளாக இதில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுபவர்களும் உண்டு. இதில் அகநிலைக் காது இரைச்சல், புறநிலைக் காது இரைச்சல் என வேறுபட்ட நிலைகள் உள்ளன.இவை வருவதற்கு முதுமை, அதீத சத்தம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, இதய நோய்கள், மத்திய நரம்பு மண்டல நோய்கள், தசைநார் கூட்டு செயற்பாட்டுக் கோளாறுகள், கர்ப்பப்பை, வாய், முதுகெலும்பு நோய்கள், வளர்சிதை மற்றும் சிறுநீரக நோய்கள், கழுத்து நரம்புகளின் ரத்த ஓட்ட மாற்றங்கள், காதில் உள்ள கட்டிகள் போன்றவை காரணங்களாக கருதப்படுகின்றன. இவை எதுவுமே இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு ஹெட்போன் இசையால் இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் உதட்டு அசைவை கவனித்துத்தான் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது தேவையா? இசையை ரசிக்க நினைப்பவர்கள், இரைச்சல் உள்ள இடங்களில் அதை கேட்காதீர்கள். இரவு நேரத்தில் அமைதியான இடத்தில் மிகக் குறைந்த சத்தத்தில் ஹெட்போனில் இசையை கேளுங்கள். அதுவும் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே ஹெட்போன் இசையை தவிர்ப்போம். காதுகளைக் காப்போம்!

No comments:

Post a Comment