Search This Blog

Thursday, August 13, 2015




ஈமு பறவை
ஈமு பறவை ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டது. இதன் சரியான உச்சரிப்பு “ஈம்யு” என்பதாகும் எனினும் தமிழக வழக்கில் இது ‘ஈமு கோழி’ என்றே அழைக்கப்படுகிறது. ஒரு ஆள் உயரத்திற்கு மேல் (ஆறரை அடி) சாதாரணமாக வளரும். நெருப்புக் கோழியை விட சற்றே சிறிதான இப்பறவையால் பறக்க இயலாது. ஆனால் நெருப்புக் கோழியைப் போலவே வேகமாக ஓடக் கூடியது. இதன் கால்கள் மிக பலமானவை. காலால் தாக்கி இரும்பு வலை வேலியையே கிழித்து விட முடியும். கூர்மையான பார்வையும் கேட்கும் திறனும் இருப்பதால் மற்ற மிருகங்களையும் ஆபத்தையும் எளிதில் உணர்ந்து விடும். பல வகைத் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்ணும். சில சமயம் உணவில்லாமல் கூட வாரக்கணக்கில் தாக்குப் பிடிக்கும். நீர் கிடைக்கும் பொழுது அதிகமாக அருந்தும், மற்ற சமயங்களில் நீரில்லாமலும் தாக்குப்பிடிக்கும். இப்பறவைகளில் ஆண், பெண் இனம் பிரித்து அறிவது கடினம். இதன் முட்டை பச்சை நிறத்தில் பெரியதாக சுமார் 700 கிராம் முதல் 900 கிராம் வரை இருக்கும். முட்டை அடை காப்பதற்காக ஆண் பறவை தரையில் கூடு கட்டும். பின்பு ஆண் பறவை அதிக காலத்திற்கும் பெண் பறவை சில காலத்திற்கும் அடை காக்கும். ஆஸ்திரேலிய படைச் சின்னத்தில் கங்காரு ஒரு பக்கத்திலும் ஈமு மற்றொரு பக்கத்திலுமாக பொறிக்கப்பட்டுள்ளன. ஈமுவை ஆஸ்திரேலியாவின் தேசிய பறவையாக அறிவிக்காவிட்டாலும், மக்கள் அவ்வாறே கருதுகின்றனர். பின்னர் இது அமெரிக்காவிற்கு கொண்டு சென்று வளர்க்கப்பட்டது. ஈமுவை அதன் இறைச்சிக்காவும், தோல் மற்றும் எண்ணெய்க்காகவும் வளர்க்கின்றனர். இது குறைந்த கொழுப்பு சத்து கொண்ட இறைச்சியாகும்.

 தமிழ் நாட்டில் சேலம், ஈரோடு மாவட்டங்களில், வியாபார ரீதியாக இதை வளர்க்கத் துவங்கினர். ஆனால் அதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது பலரும் அறிந்ததே.

No comments:

Post a Comment