Search This Blog

Monday, August 31, 2015


மூட நம்பிக்கை மலைத்தொடர்
உலகில் பல்வேறு மர்ம சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான விடைகள் மட்டும் சில நேரங்களில் கிடைப்பதில்லை. அதனால் பல்வேறு சம்பவங்கள் மூடநம்பிக்கையால் தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு இடம்தான் அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மூடநம்பிக்கை மலைத்தொடர். இதை சுற்றி நிகழும் சம்பவங்கள் எப்போதும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கின்றன. இந்த மலைத்தொடரை ஜக்கப் வால்ட்ஸ் என்பவர் 1800-ல் கண்டுபிடித்தார். அங்கு அவருக்கு ஒரு பெரிய தங்கப் புதையல் இருந்த இடம் தெரிந்ததாகவும், அதை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். கடைசியாக அவர் நோயால் மரணப் படுக்கையில் கிடந்தபோது, அவருடைய நெருங்கிய நண்பரிடம், புதையல் ரகசியத்தை சொன்னாராம். அந்த நண்பர் அதை வேறு சிலரிடம் சொல்ல, அவர்களில், ஒருவர் அவரை கொன்றுவிட்டார். இதனால், அந்த புதையல் எங்கே இருக்கிறது என்ற சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதையல் இருக்கும் கதை காட்டுத்தீயைப் போல பல இடங்களுக்கும் பரவியது. அப்போது புதையலை தேடிச் சென்றவர்களில் பாதிக்கு மேல் திரும்பி வரவில்லை. அவர்கள் மர்மமான முறையில் இறந்து போனார்கள்!. திரும்பி வந்தவர்கள் புதையலை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு வந்ததாக கூறினர். மேலும் அவர்கள் மலைத்தொடரில் புதையலுக்குப் பதில், தங்களுக்கு முன்பு அங்கு சென்றவர்களின் எலும்புக் கூடுகளைத்தான் கண்டார்களாம். அதைப்பற்றி பலவித கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அதனால் அந்த பகுதி மர்மப் பிரதேசமாக மாறியது. மேலும் சிலர் அங்கு ‘டார்டும்ஸ்‘ என்ற குள்ளமான மனிதர்கள் வாழ்வதாகவும், அவர்கள் தான் புதையலை காப்பதாகவும் கூறினார்கள். இதனால் அந்தப் பகுதி மேலும் மர்ம முடிச்சுகள் நிறைந்த பகுதியாக மாறியது. இன்னும் சிலர் அங்கு ‘ஏலியன்ஸ்‘ என்ற வேற்றுக்கிரக மனிதர்கள் வந்து செல்வதாகவும், ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். இன்னும் சிலரோ அந்த இடத்தில் மலைகளுக்கு நடுவே மிகச் சிறிய இடுக்குகள் இருக்கின்றன என்றும், அது நரகத்தின் நுழைவுவாசல் என்றும் அங்கிருந்த மதகுருமார்கள் ஒரு கட்டுக் கதையை கட்டிவிட்டதால், அந்த பகுதியில் திகில் பற்றி எரிந்தது. மக்கள் அந்தப் பக்கம் போகவே பயந்தனர். ஆனால், விஞ்ஞானிகள் வேறு விதமாக கூறுகிறார்கள். மலைத்தொடரில் எப்போதும் வெப்பம் 115 முதல் 125 பாரன்ஹீட் வரை கொதித்துக்கொண்டிருக்கும். இங்கு நீர்நிலைகள் எதுவும் இல்லை. மழை பெய்தாலும் உடனே நீர் வழிந்தோடி வற்றிவிடும். இந்த மலைத் தொடர் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. பல குறுகிய குகைகளும் நிறைய உள்ளன. மிகக் குறுகலான இந்த மலை இடுக்குகளில் நுழைந்து வெளிவரமுடியாமல் மாட்டிக்கொண்டும், நீர் இன்றியும் பலர் இறந்திருக்கிறார்கள் என்கின்றனர். ஆனாலும் மனிதனுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆசை விடவில்லை. உயிர் போனாலும் பரவாயில்லை. புதையலை அடைந்தே தீருவோம் என்று இன்னும் பலர் அங்கு சென்று கொண்டே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திரும்புவதே இல்லை.

No comments:

Post a Comment