Search This Blog

Tuesday, August 11, 2015


பாகிஸ்தானில் இந்திய உளவாளி
உளவு பார்த்தல் சாதாரண வேலையில்லை. அதிலும் பாகிஸ்தான் போன்று எப்போதும் சீற்றத்துடன் இருக்கும் ஒரு நாட்டில் உளவு பார்ப்பது ஒரு அசாதாரண சாதனைதான். இந்தியாவுக்காக பாகிஸ்தான் சென்று உளவு பார்த்த ஒருவரைப் பற்றிய புத்தகம்தான் ‘மிஷன் டூ பாகிஸ்தான்‘ என்பது. இந்த புத்தகத்தை கிருஷ்ணாதர் என்ற எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் உளவாளி யாரென்று கடைசி வரை சொல்லவில்லை. அது மர்மமாகவே முடிகிறது. 

 2002-ம் ஆண்டு பாகிஸ்தான் சிறையில் நபி அகமத் என்ற பெயரில் இருந்த ரவீந்திர கவுசிக் என்ற இந்தியர்தான் அந்த உளவாளி. உளவாளியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு கவுசிக்கின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம். ராஜஸ்தானில் ஸ்ரீ கங்கா நகரைச் சேர்ந்த கவுசிக் படிக்கும் போது ஒரு மோனோ ஆக்டிங் நாடகம் நடத்தினார். அந்த நேரத்தில் தான் 1971 இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பமாகி இருந்தது. அப்போது கவுசிக் தேசப் பக்தியை வலியுறுத்தி நாடகங்களை நடத்தினார். 

இவரது நாடகங்கள் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதோடு கவுசிக்கையும் பிடித்து விட்டது. உயிரே போனாலும் தன் தேசத்தை காட்டிக்கொடுக் காத உளவாளியாக கவுசிக் அதில் நடித்திருப்பதுதான், அதற்கு காரணம். நாடக பாத்திரத்தை உண்மையாக்கினால் என்ன என்று ராணுவ அதிகாரிகள் யோசித்தார்கள். உண்மையாகவே இந்தியாவுக்காக உளவாளி வேலை செய்யவேண்டும் என்று அவரிடம் சொன்ன போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். 

 டெல்லி, அபுதாபி, துபாய் என்று உளவறிந்து விட்டு கடைசியாக பாகிஸ்தான் வந்தார். நபி அகமத் என்ற பெயரில் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ‘பக்கா’ பாகிஸ்தானியாக மாறிய கவுசிக் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கிருந்து பல முக்கிய தகவல்களை இந்திய ராணுவத்துக்கு தெரிவித்தார். 

ஒருமுறை கவுசிக் போலவே பாகிஸ்தானில் உளவாளியாக இருக்கும் மற்றொரு இந்தியரை பாகிஸ்தானை விட்டு பத்திரமாக வெளியேற்றி வைக்க வேண்டும் என்று இவருக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டது. அதை செய்தபோது அந்த உளவாளி எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். ராணுவத்தின் கொடூரமான சித்ரவதையை தாங்க முடியாத அவர் கவுசிக் பற்றிய உண்மையை சொல்ல, கடைசியில் கவுசிக்கும் மாட்டிக்கொண்டார். பாகிஸ்தானில் உள்ள முல்தான் சிறையில் இவர் அனுபவித்த சித்ரவதை கொஞ்ச நஞ்சமல்ல. 18 வருட தொடர் சித்ரவதைக்கு ஆளானார். இந்தியா எதையும் கண்டுகொள்ளவில்லை. 

கடைசியாக அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நான் இதே வேலையை அமெரிக்காவுக்கு செய்திருந்தால் கைது செய்த மூன்றாம் நாளே வெளியே வந்திருப்பேன்.’ என்று மனம் நொந்து அழுது இருக்கிறார். அதற்கடுத்த மூன்றாம் நாளிலேயே அவர் இறந்து விட்டார்.

No comments:

Post a Comment