Search This Blog

Monday, August 31, 2015


‘நிகோட்டின்’ என்னும் நச்சு
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை மீண்டும் மீண்டும் சொன்னாலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு சிகரெட்டில் இருந்து சராசரியாக 1 மில்லிகிராம் அளவு நிகோட்டின் நுரையீரல் வழியாக உடலுக்குள் செல்கிறது. நுரையீரல் உள்சுவர்களில் கோடிக்கணக்கான ‘ஆல்வியோலி’ என்ற நுண்ணிய காற்றுப் பைகள் உள்ளன. இதன் மூலமாகவே உடலுக்குள் வாயுப் பரிமாற்றம் நடக்கிறது. இதன் வழியாக ரத்தக்குழாய்களை எட்டும் நிக்கோட்டின் உடனடியாக மூளையை நோக்கி பயணிக்கிறது. ஆல்வியோலி பைகளுக்குள் நிகோட்டின் நுழைந்ததுமே நுரையீரல் வேகமாக செயல்பட்டு சுமார் 80 சதவீத நிகோட்டினை ‘கோட்டிநைன்’, ‘நிகோட்டின் ஆக்சைட்’ என பிரித்து உடலுக்குள் அனுப்புகிறது. (இதில் கோட்டிநைன் நேரடியாக சிறுநீரில் வெளியேறி விடும். நிகோட்டின் ஆக்சைட் பின்னர் ரத்தத்தில் இருந்து சுத்தப்படுத்தப்பட்டு சிறுநீரில் வெளியேறும்.). தொடர்ந்து புகைப்பவர்களுக்கு, ஆல்வியோலி பகுதி அதிக வேலைப்பளுவுடன் இருப்பதால் இவை செயல்திறன் குறைந்து, சில பகுதிகளில் அழிந்தும் போவதுண்டு. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நுரையீரலில் புண்கள் உண்டாகி ‘கேன்சர்’ வரக் கூடும். போதிய அளவு காற்று கிடைக்காததால் இதயமும் பாதிக்கப்படலாம். புகையிலையில் நிகோட்டினைத் தவிர ஆயிரக்கணக்கான மற்ற பொருள்களும் உண்டு. இதில் பல உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. மேலும் புகை, தூசி போன்றவை நுரையீரலுக்கு வரும் குழாய்களில் (ப்ரோன்கஸ்) வந்துவிட்டால் மியூகஸ் எனும் திரவம் இதன் சுவர்களில் சுரந்து அவற்றை ஒட்டிக் கொள்ளச் செய்யும். இதுவே சளியாக வெளியேறுகிறது. அதிக அளவு புகை இந்தக் குழாய்களில் செல்லும் போது தொடர் இருமல் ஏற்படுகிறது. இது தவிர நிகோட்டின், தான் பயணம் செய்யும் ரத்தக்குழாய் களை சுருங்கச் செய்வதும் உண்டு. இதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும், ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் கூடும். எனவே புகைப்பவர்கள் இனியாவது அதை கைவிடும் முடிவுக்கு வரவேண்டும்.

No comments:

Post a Comment