Search This Blog

Friday, April 22, 2016


அடுத்த இரண்டு ஆண்டுகளில்
இந்தியாவில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும்
ஆய்வறிக்கையில் தகவல் 

சுதானுகா கோசல் கொல்கத்தா 23/04/2016

இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2018-ஆம் ஆண்டிற்குள்), 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும் என அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்

அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில், 2018-ஆம் ஆண்டில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும். தற்போது இந்தியா ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுகளை உருவாக்கி வருகிறது.

எட்டு பெரிய நகரங்களில் மும்பையில் மின்னணு கழிவுகள் அதிகமாக உள்ளது. அங்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.20 லட்சம் டன் கழிவுகள் உருவாகிறது. அடுத்து டெல்லி - என்.சி.ஆர். பகுதி 98 ஆயிரம் டன், பெங்களூரு 92 ஆயிரம் டன் கழிவுகளை வெளியிடுகின்றன. சென்னை (67,000 டன்), கொல்கத்தா (55,000 டன்), அகமதாபாத் (36,000 டன்), ஐதராபாத் (32,000 டன்) மற்றும் பூனா (26,000 டன்) ஆகிய நகரங்களும் மின்னணு கழிவுகளை குவிக்கின்றன.

மறுசுழற்சி

இந்தியாவில் உருவாகும் மொத்த மின்னணு கழிவுகளில் 2.5 சதவீதம் மட்டுமே நாட்டில் உள்ள குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களின் உடல் நலம் கெடுகிறது. 95 சதவீதத்திற்கும் மேலான மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, அவற்றை பிரித்து கையாளும் பணிகளில் பல்வேறு அமைப்பு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து நம் நாட்டில் போதிய அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகள் இல்லை.

கம்ப்யூட்டர் 

மின்னணு கழிவுகளில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்களின் பங்கு அதிகபட்சமாக 70 சதவீத அளவிற்கு உள்ளது. அடுத்து, தொலைத்தொடர்பு சாதனங்கள் (12 சதவீதம்), மின்சார உபகரணங்கள் (8 சதவீதம்) மற்றும் மருத்துவ கருவிகள் (7 சதவீதம்) இருக்கின்றன. இவை தவிர, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது.

ஒட்டுமொத்த அளவில், மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சாலைகளின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. அதே சமயம், வீடுகளில் உருவாகும் மின் கழிவுகளின் பங்கு 15 சதவீதமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளிவரும் மின்னணு கழிவுகளில் டெலிவிஷன், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவை மிக அதிக பங்கினைக் கொண்டுள்ள நிலையில், கம்ப்யூட்டர்களின் பங்கு 20 சதவீதமாகவும், மொபைல்போன்களின் பங்கு 2 சதவீதமாகவும் இருக்கிறது.

பாதிப்புகள்

கம்ப்யூட்டர், டி.வி., மொபைல்போன் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றில் நச்சுத்தன்மை  இருப்பதால்,  மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதன் காரணமாக, தலைவலி, வாந்தி, மயக்கம், மற்றும் கண்வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் குடல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment