Search This Blog

Thursday, April 21, 2016


கடலின் ஆழம்  22/04/2016

கடலின் அடியில் என்ன இருக்கிறது என்ற கேள்வி பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. போதாக்குறைக்கு கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில், கடலுக்கு அடியில் பல சுவராசியமான விஷயங்கள் இருப்பதாக எதையோ சொல்லிவைக்க, அவருடைய சிஷ்யர் அலெக்சாண்டர் என்பவர் கண்ணாடி பலூன் மாதிரி ஒன்றை செய்து அதற்குள் உட்கார்ந்து கொண்டு கடலுக்குள் கொஞ்ச தூரம் சென்று பார்த்துவிட்டு வந்தார். அதில் ஒரு பிரமாண்டமான திமிங்கிலத்தை பார்த்ததாக சொன்னார்.

கரையிலிருந்து கடலுக்குள் ஓரிரு மைல் வரை இருக்கும் பகுதியை கண்டங்களின் நிஜ எல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் சராசரி ஆழம் 600 அடி. இதற்கு அப்பால்தான் நிஜ கடல் ஆரம்பமாகிறது. ‘காண்டினெண்டல் ஷெல்ப்‘ என்று சொல்லக்கூடிய கண்டங்களின் எல்லையில் இருப்பது வெறும் 3 சதவீத கடல் தான்.

அதற்கு பின்பு இருக்கும் 97 சதவீத கடல் தான் உண்மையான பிரமாண்டமான கடல். இங்கு ஆழம் என்பது 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பகுதியை ‘அபீஸ்‘ என்று அழைக்கிறார்கள். இதன் உள்ளே பிரமாண்டமான சமவெளிப் பிரதேசம், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத் தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.

கடலுக்குள் சூரிய ஒளிகூட 100 அடி வரைதான் ஊடுருவிப் போக முடியும். அதற்கு கீழே போகப் போக ஒளி மங்கிக் கொண்டே போகும். 1000 அடிக்கு மேல் கும்மிருட்டு தொடங்கிவிடும். இதில் ஆய்வு செய்வது சாதாரண விஷயமில்லை. இருந்தாலும் ஆய்வுகளுக்கு பஞ்சமில்லை.

எந்தவொரு உபகரணமும் இல்லாமல் மூச்சை மட்டும் ‘தம்‘ பிடித்துக்கொண்டு கடலுக்கடியில் 285 அடி ஆழம் வரை போய் வந்திருக்கிறார் ஒருவர். ஒரு கயிற்றில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டி விட்டார்கள். அந்த சிலேட்டுப் பலகை ஒவ்வொன்றிலும் கையெழுத்துப் போட்டுக்கொண்டே சென்றார். 285-வது சிலேட்டில் கையெழுத்திட்ட அந்த மனிதர் சுயநினைவை இழந்தார். இதுதான் மூச்சை அடக்கி கடலுக்குள் மூழ்கிய ரிக்கார்டு.

சுவிட்சர்லாந்தில் பிக்கார்ட் என்பவர் ஒரு நீர்மூழ்கிப் படகு ஒன்றைத் தயாரித்து அதற்கு ‘டிரையஸ்ட்‘ என்று பெயரிட்டார். அந்தப் படகில் உட்கார்ந்து கொண்டு செங்குத்தாக கடலில் இறங்கினார். நான்கு மணி நேரம் தொடர்ந்து இறங்கியும் தரை தட்டவில்லை. கிட்டத்தட்ட 5 மைல் ஆழம் இறங்கியும் அதுவரை தரையை தொடவில்லை.

ஐந்து மணி நேரம் கழித்து ‘தரையை தொட்டுவிட்டேன்‘ என்று வயர்லெஸ்ஸில்  செய்தி அனுப்பினார். பசிபிக் கடலில் அவர் இறங்கிய அந்த இடம் ‘மெரியானா டிரெஞ்ச்‘ என்றழைக்கப்படுகிறது. இதன் ஆழம் சுமார் 35,808 அடி. எவரெஸ்ட் 29,028 அடிதான்.  கடலின் மிக ஆழமான இந்தப் பகுதியில் பிக்கார்ட் 20 நிமிடம் இருந்தார். இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிக மிக ஆழமான இடம் இதுவே!

No comments:

Post a Comment