Search This Blog

Wednesday, April 20, 2016


டைனமைட்டை கண்டுபிடித்த நோபல் 16/04/2016

‘டைனமைட்‘ என்பது ஒரு வெடிமருந்து. இதை கண்டுபிடிப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே துப்பாக்கிகளுக்கான வெடிமருந்து புழக்கத்தில் வந்துவிட்டது. ஆனாலும் ரசாயனத்துறை பெரிய அளவில் வளர்ச்சியடையாததால், துப்பாக்கி வெடி மருந்துகளை விட சக்தி வாய்ந்த ஆயுதத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளை ஒவ்வொரு நாட்டு ராணுவமும் நிர்ப்பந்தித்து வந்தது.

விஞ்ஞானிகளும் பல வெடிமருந்துகளை கண்டுபிடித்தார்கள். ஆனால், அவற்றில் எதுவுமே பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. மேலும் யுத்தங்களுக்கு மட்டுமில்லாமல், நிலக்கரி சுரங்கங்கள் தோண்டவும் வெடிமருந்து கட்டாயமாக தேவைப்பட்டது. இதற்கான ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் 1867-ல் டைனமைட்டை கண்டுபிடித்தார்.

இவர் கண்டுபிடித்த வெடிமருந்தை விட மற்ற விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வெடிமருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. ஆனால், உலகம் அவற்றை நிராகரித்து விட்டு டைனமைட்டை மட்டும் ஏற்றுக்கொண்டது. அதற்கு ஒரேயொரு காரணம், நோபல் கண்டுபிடித்த டைனமைட் மிகவும் பாதுகாப்பானது என்பதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

நோபலின் டைனமைட்டுக்கு ஏகப்பட்ட தேவை இருந்தது. மிக அதிகமாகவும் தயாரிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஒரு தொழிற்சாலையை நிறுவினார். உலகின் நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் நோபலிடம் டைனமைட் கேட்டு வரிசையில் நின்றன. 1875-ல் டைனமைட்டின் உற்பத்தி 3 ஆயிரம் டன் வரை உயர்ந்தது. இதனால் நோபல் ஐரோப்பாவின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இடம் பெற்றார்.

டைனமைட்டைத் தொடர்ந்து ஜெலட்டினையும் கண்டுபிடித்தார். இதனால் அவரது புகழ் பெரும் அளவில் பரவி, பணம் எந்த வகையில் வருகிறது என்று தெரியாத அளவிற்கு, அவரது வீட்டின் முன்பு கொட்டியது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் குவிய ஆரம்பித்தது. மற்றவர்களாக இருந்தால் இன்னும் எப்படி சம்பாதிப்பது என்று யோசித்திருப்பார்கள். ஆனால், நோபலுக்கு சந்தோஷம் இல்லை. மாறாக, கவலைப்படத் தொடங்கினார்.

டைனமைட் கண்டுபிடிக்கும் போது தனது சகோதரன் உடல் கருகி இறந்தது போல், தான் கண்டுபிடித்த டைனமைட் எத்தனை ஆயிரம் உயிர்களைக் குடிக்குமோ என்று பயந்தார். நோபலுக்கு திருமணம் நடைபெறவில்லை. அவருக்கு நண்பர்களும் கிடையாது. கடவுள் நம்பிக்கையும் இல்லை. கடைசி காலத்தில் தன் ஆதங்கத்தை சொல்லி அழக்கூட ஆளில்லாமல் தனிமையில் தவித்தார். ‘பிறந்த அந்த நிமிடமே தான் இறந்திருக்கக் கூடாதா..?‘ என்று விரக்தியில் அழுதார்.

வருங்கால சந்ததிக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு அவரை குத்தி எடுத்தது. டைனமைட்டை கையில் எடுத்துக்கொண்டு உலக நாடுகள் போர் செய்தால் இந்த பூமி தாங்காது. அதனால், உலக நாடுகள் எப்படி ஒற்றுமையாக வாழலாம் என்று அவரே ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார்.

டைனமைட்டை ஏற்றுக்கொண்ட உலகநாடுகள், நோபலின் இந்த திட்டத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. மனம் வெறுத்துப்போன நோபல், தனது பெயரிலே ஒரு அறக்கட்டளையைத் தோற்றுவித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் அதற்கு எழுதி வைத்துவிட்டு அனாதை போல் இறந்து போனார். அவரது பெயரால்தான் நோபல் பரிசு வருடந்தோறும் பல்வேறு துறைகளில், சாதனை படைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment