Search This Blog

Monday, April 4, 2016

பீர் தயாரிக்க ஒரு பல்கலைக்கழகம் 05/04/2016

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் அவரவருக்கு பிடித்த பாடத்திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவில் போட்டி போட்டுக் கொண்டு சேருவார்கள்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் ‘எடித்கோவன் பல்கலைக்கழகம்‘. இது பீர் தயாரிக்க கற்றுத்தருகிறது. ‘கம்பெனிகளில் தயாரித்து வரும் பீர்களில் வர்த்தக நோக்கம் நிறைய இருக்கும். நீங்கள் நினைப்பது போல் அது தரமானதாக இருக்காது. தரமான பீர் வேண்டுமானால் அதை நீங்கள் தான் சொந்தமாக தயாரிக்க வேண்டும். அதை தயாரிக்க நாங்கள் சொல்லித்தருகிறோம். இப்படி நீங்கள் தயாரிக்கும் பீரை அக்கம் பக்கத்திலும் விற்பனை செய்து சம்பாதிக்கலாம் ‘என்கிறார்கள், இந்தப் பல்கலைக்கழகத்தினர். இவர்கள் பீர் தயாரிப்பில் இளநிலைப் பட்டத்தை கொடுக்கிறார்கள்.

முதுகலை பட்டம் வேண்டும் என்பவர்களுக்கு பிரிட்டனில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் ‘நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்‘. இது பீர் தயாரிப்பில் மாஸ்டர் டிகிரியைக் கொடுக்கிறது. பள்ளிப்படிப்பில் உணவு அறிவியல் பாடம் எடுத்தவர்களுக்குத்தான் இங்கு இடம் கிடைக்கும். அடிப்படை அறிவும், ஆர்வமும் இருந்தால் எந்தவித நன்கொடையும் வாங்காமலேயே கல்லூரியில் இடம் கொடுத்து விடுகிறார்கள்.

மதுவில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. அப்படியிருக்க பீருக்கு மட்டும் அப்படியென்ன தனி முக்கியத்துவம் என்று கேட்பவர்களுக்கு, உலகில் அதிகமான மக்களால் விரும்பி அருந்தப்படும் மதுபானம் பீர்தானாம். கிட்டத்தட்ட கி.மு.9000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பீர் குடிக்க கற்றுக்கொண்டான். எகிப்து, மெசபடோமியாவில் ஆதிகாலத்திலேயே பீரை தயாரித்து இருக்கிறார்கள்.  ஒயினுக்கு மதம் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருக்கிறது. புனித நூல்களில் கூட ஒயின் ஒரு சிறப்பான பானமாக சொல்லப்படுகிறது. அதனால் அதனை வீட்டில் தயாரித்துக் கொண்டாலும், ஒயின் தயாரிக்க கற்றுக் கொடுத்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால், பீரின் நிலைமை அப்படியில்லை. நீண்ட நெடிய வரலாறு இதற்கு இருந்தால் கூட பீர் தயாரிக்க கற்றுக்கொடுப்பதை தொடர்ந்து எதிர்த்தே வருகிறார்கள்.

இப்போது எதிர்ப்பையும் மீறி கற்றுத்தர பல்கலைக்கழகங்கள் முன்வந்துவிட்டன. இங்கு பீரின் வரலாறு, தயாரிப்பு முறை அனைத்தும் தியரி பாடங்கள். பார்லி, ஹாப்ஸ், ஈஸ்ட், தண்ணீர் இந்த நான்கின் கூட்டுக்கலவை தான் பீர். முதலில் தண்ணீரில் பார்லியை மசிய வைக்க வேண்டும். அதன்பின் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின்பு ஈஸ்ட் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக ஹாப்ஸ் என்ற தாவர வகையை சேர்த்தால் பீர் தயார். இவையெல்லாம் எந்த விதத்தில் எப்படி சேர்க்க வேண்டும் என்பதுதான் பாடமே.  இவற்றையெல்லாம் படித்து மார்க் எடுத்த பின் பிராக்டிக்கல் வகுப்பில் நல்ல பீரை தயாரித்து கொடுக்க வேண்டும். கச்சிதமாக தயாரித்த பீர் நன்றாக நுரைக்கும். பீரை ஓரிரு நாளில் தயாரித்துவிட முடியாது. தயாரித்த பீரை கொஞ்ச நாட்கள் அப்படியே விட்டு வைத்து பார்வையிடுகிறார்கள். பீர் நன்றாக இருந்தால் பிராக்டிக்கலில் முழு மதிப்பெண்களை அள்ளலாம். அதேநேரம், பீர் தயாரிக்கும் வகுப்பில் மாணவர்கள் பீர் குடிக்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment