Search This Blog

Friday, April 22, 2016

சர்ச்சைக்குரிய கோகினூர்  வைரம் 23/04/2016

உச்சநீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை கையில் எடுத்து இருக்கிறது. ஆனால், தற்போது மிகவும் வியக்கத்தக்க ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடந்துவருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு, இப்போது இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் ஜொலித்துக்கொண்டு இருக்கும் கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒரு வழக்கு போடப்பட்டு அது நிலுவையில் உள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாறைக்கொண்ட இந்த கோகினூர் வைரம்தான் உலகிலேயே பழமையானதாகவும், புகழ்மிக்கதாகவும் கருதப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இந்த வைரத்துக்கு கோகினூர் என்று பெயரிடப்படவில்லை. பின் நாட்களில்தான் கோகினூர் அதாவது, ஒளி மலை என்று பெயரிடப்பட்டது.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இடைக்காலத்தில் இப்போதுள்ள ஆந்திர மாநிலம் கொல்லூர் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்த வைரம் பலருடைய கைகளுக்கு மாறி மாறி சென்றிருக்கிறது. 1304-ம் ஆண்டு மார்வா மன்னர் கைக்கு வந்திருக்கிறது. 1306-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தி இலக்கியத்தில் இந்த வைரத்தை சொந்தமாக வைத்திருப்பவன் உலகத்தையே சொந்தமாக்கிக்கொள்வான். ஆனால், அதன் அனைத்து துரதிருஷ்டத்தையும் அனுபவிப்பான், தண்டனையில் இருந்து தப்ப கடவுள் அல்லது பெண்கள் மாத்திரமே அணியலாம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி, பாபர், அவுரங்கசீப் என்று பலர் கைக்கு மாறியது. இறுதியில் பாபர் பரம்பரையை சேர்ந்த சுல்தான் முகமது கையில் இருந்த நேரத்தில் 1739-ல் பாரசீக தளபதி நாதிர்ஷா முகாலய பேரரசரோடு போரிட்டு இந்த வைரத்தை பாரசீகத்துக்கு எடுத்துச்சென்றார். அவர்தான் இந்த 186 கேரட் வைரத்துக்கு கோகினூர் என்று பெயரிட்டார். அவர் கொலை செய்யப்பட்டபிறகு இந்த கோகினூர் வைரத்தை, அவருடைய பேரன் ஷா ஷுஜா எடுத்துக்கொண்டுவந்து பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்குக்கு பரிசாக கொடுத்தார். 1813-ல் சீக்கிய போரின்போது உதவியதற்காக ரஞ்சித்சிங் மன்னரின் மகன் துலீப் மகாராஜா கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிசாக அளித்தார்.

கோகினூர் வைரம் விக்டோரியா மகாராணியிடம் 1850-ல் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகுதான் விக்டோரியா மகாராணி தன் கிரீடத்தில் அந்த வைரத்தை பதித்து அணியத்தொடங்கினார். அவர் எழுதியுள்ள ஒரு உயிலில், ‘கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் ராணிகளால் மட்டுமே அணியவேண்டும். அப்படி ஒருவேளை ராஜா ஆளுகையில் இருந்தால், அவரது மனைவிதான் அந்த வைரத்தை வைத்திருக்கவேண்டும்’ என்று எழுதியுள்ளார். இப்படி ஆண்களுக்கு சாபத்தையும், பெண்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் கோகினூர் வைரத்தை திரும்பப்பெறவேண்டும் என்ற வகையில், உச்சநீதிமன்றத்தில் இப்போது ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வைரத்தை லாகூரில் இருந்துதான் எடுத்துச்சென்றிருக்கிறார்கள். ஆகவே, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானோடு தொடர்புள்ளதால் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தலீபான்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைரத்தின் கதையை பார்த்தால், இது இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு சென்றதுபோல தெரியவில்லை. பரிசாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. 1936-ல் பண்டித நேருவே அப்படித்தான் சொல்லியிருக்கிறார். மேலும், கோகினூர் மட்டுமல்ல, பாரீஸ், போலந்து, வியன்னா, ரஷ்யா, அமெரிக்கா, ஈரான் போன்ற பல நாடுகளில் இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட வைரங்கள் இருக்கின்றன. எனவே, இதை ஒரு பிரச்சினையாக்காமல் விட்டுவிடுவதே நல்லது. இதை நாம் கேட்கத் தொடங்கினால், ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது விட்டுச்சென்ற பலபொருட்களை அவர்களும் திரும்பகேட்கும் நிலைமை உருவாகும். எனவே, இதில் ராஜ்யஉறவுகளை எல்லாம் மனதில்வைத்து முடிவெடுப்பதே சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment