Search This Blog

Wednesday, October 14, 2015


சரியானதை செய்தால் வெற்றி (கன்பூசியஸ்)
சீனாவில் மன்னர்களின் ஆதிக்கத்தால் மக்கள் கடும் சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த காலம். மேலும் அதிக வரி விதிக்கப்பட்டதால் மக்கள் வறுமையில் வாடினர். அப்போது தோன்றியவர்தான் கன்பூசியஸ் என்ற தத்துவஞானி. 

‘அதிக வரியும், அதிகமான தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதைவிட்டு பரம்பரை மட்டுமே கொடுக்கும் தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் தர முடியாவிட்டால் அவர்கள் ஆட்சியில் நீடிக்கும் உரிமை அற்றவர்கள்’ என்று கூறி ஒரு அரசன் எப்படி நடக்க வேண்டும் என்று வகுத்துச் சொன்னவர் அவர். 

இவரின் உருக்கமான பேச்சைக் கேட்டு மக்கள் மாபெரும் கூட்டமாக திரண்டனர். இப்படி மக்கள் பேராதரவு பெற்ற ஒருவரை கைது செய்தால் நாடு முழுக்க கலவரம் நடக்கும் என்பதை முன்கூட்டிய தீர்மானித்த அந்த அரசன். கன்பூசியசை சட்டத்துறை அமைச்சராக நியமித்தான். அவருக்கென்று வேலை ஆட்கள், பெரிய மாளிகை, மனதை நிறைத்த சம்பளம். இவற்றையெல்லாம் கொடுத்து, புதிய சட்டங்களை இயற்றும் படி மன்னன் கூறினான். அவரும் இரவு, பகல் பாராமல் உழைத்து, மக்கள் நலனுக்காக புதிது, புதிதான சட்டங்களை இயற்றினார். அதை எல்லாம் மன்னரிடம் ஒப்படைத்தார். 

 வெகுகாலம் கடந்தும் கன்பூசியஸ் எழுதிக்கொடுத்த ஒரு சட்டம் கூட அமல் படுத்தப்படவில்லை. சற்று தாமதமாக இந்த பதவியினால் எந்த ஒரு பயனும் ஏற்படாது என்பதை உணர்ந்த கன்பூசியஸ் பதவியில் இருந்து விலகினார். ‘ஒரு செல்வந்தானாக வாழாமல், ஏன் பிச்சைக்காரன் போல் வாழ ஆசைப்படுகிறீர்கள்?’ என்று மன்னன் கோபத்தோடு கேட்டான். ‘’எது வசதியானதோ அதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என்று என் மனம் என்னை தொந்தரவு செய்கிறது’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார் 

கன்பூசியஸ். சிறு வயதிலேயே பழைய இலக்கியங்கள், அரசியல் சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து முடித்தார். அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதையும் தனது தனிப்பெரும் குணமாக வளர்த்து கொண்டார். இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார். மதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்லவில்லை என்பதால், அவற்றை புறக்கணித்தார். 

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார். பல நாடுகள் அவரைத் தங்கள் எல்லைக்குள்ளேஅனுமதிக்காமல் விரட்டி அடித்தன. 

‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு என்ற ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்‘ என மனிதர்களின் துன்பங்களுக்குத் தீர்வு சொன்னார். 

அதைப்போலவே மனிதர்கள் வெற்றி பெறுவதற்கும் கன்பூசியஸ் ஒரு சூத்திரம் சொல்லிக் கொடுத்துள்ளார். அது, ‘மனிதர்கள் எப்போதும் எளிதான செயல்களை செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது எப்போதும் சரியல்ல. வெற்றி பெற வேண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள், எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்றவர், இதை தன் வாழ்நாள் முழுதும் கடைபிடித்தார்.

No comments:

Post a Comment