Search This Blog

Thursday, October 15, 2015


முதல் திரை முத்தம்
இந்திய சினிமாவின் தந்தை என்று கொண்டாடப்படும் தாதா சாகேப் பால்கே எடுத்த ‘ராஜா ஹரிச்சந்திரா‘ (1913) படம் தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள்தான். அன்று பெண்கள் சினிமாவில் நடிக்க முன்வராததால் பெண்கள் வேடத்திலும் ஆண்களே நடித்தனர். முதன் முதலாக இந்திய சினிமாவில் பெண்கள் நடிக்கத் தொடங்கியது 1914-ல். தாதாசாகேப் பால்கேயின் இரண்டாவது படமான ‘மோகினி பஸ்மசூர்‘ என்ற படத்தில் துர்காபாயும், அவருடைய மகள் கமலாபாய் கோகலேவும் நடித்தனர். பெண்களை திரையில் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். 

முதன் முதலாக அதிக நாட்கள் ஓடி வெற்றிப் படம் என்று வசூலில் சாதனை புரிந்த படம் ‘லங்கா தகன்‘ (1921). இந்த படம் மும்பை நகரில் கிர்காம் என்ற இடத்தில் இருந்த ‘வெஸ்ட் எண்டு‘ என்ற தியேட்டரில் 23 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது. 

தடை செய்யப்பட்ட முதல் இந்திய சினிமா ‘பகத் விதூர்‘ (1921). படத்தின் தயாரிப்பாளரே மகாத்மா காந்தி வேடத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக இந்த படம் தடை செய்யப்பட்டது. ஆனாலும் ஒருசில மாநிலங்களில் இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக ஓடியது. 

இந்திய சினிமாவில் முதல் தணிக்கைக்குழு (சென்சார் போர்டு) 1920-ல் பாம்பே, கல்கத்தா, மதராஸ், ரங்கூன் (இன்றைய மியான்மர்) ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டது. 1927-ல் லாகூரில் மேலும் ஒரு திரைப்பட தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. சமூகத்தை நையாண்டி செய்த முதல் படம், 1921-ல் வங்க மொழியில் வெளியான ‘பிலேத் போராட்‘ என்பது. இந்த படம் காதலையும், கிழக்கத்திய, மேற்கத்திய முரண்பாடுகளையும் திறம்படச் சொன்னது. 

இந்தியாவின் முதல் சரித்திர படம் 1923-ல் வெளியான ‘சிங்காகாத்‘ என்ற படம் தான். இந்தப் படம் மராட்டிய சக்கரவர்த்தி சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘தேவதாஸ்‘ திரைப்படம் இந்தியாவின் பல மொழிகளில் 12 முறை படமாக்கப்பட்டிருக்கிறது. முதல் தேவதாஸ் 1928-ல் வெளிவந்தது. அதேபோல் முதல் மொகலாய வரலாற்றுப் படம் 1923-ல் ‘நூர்ஜகான்‘ என்ற பெயரில் வந்தது. 

இந்திய சினிமாவில் முதல் முத்தக் காட்சி 1933-ல் வெளிவந்த ‘கர்மா‘ படத்தில் இடம் பெற்றது. பிரிட்டிஷ் இந்தியாவில் சினிமா முத்தத்திற்கு தடையில்லை. அதனால் மான்ஷு ராய், தேவிகா ராணி ஆகிய இருவரும் தொடர்ந்து நான்கு நிமிடங்கள் முத்தமிட்டுக் கொண்டது தான் இந்தியாவின் முதல் திரை முத்தம். 

இந்தியாவின் முதல் கவர்ச்சி நடிகை இத்தாலியைச் சேர்ந்த நடிகை சினோரின்னா மனெல்லி என்ற பெண்தான். இவர் 1922-ல் நடித்த ‘பதிபக்தி‘ படத்தில் உடல் பாகங்கள் எல்லாம் வெளியே தெரியும் வண்ணம் மிக மெல்லிய ஆடை அணிந்து ஆடிய நடனக் காட்சியை மீண்டும் மீண்டும் தணிக்கை செய்தனர். முதல் கவர்ச்சியே அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment