Search This Blog

Wednesday, October 14, 2015


ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் விவசாயிகள் 

மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு குடிபெயர்தல் என்பது பெரும்பாலும் பஞ்சம் தலைவிரித்து ஆடும் காலங்களில் நடைபெறும். ஆனால், மித மிஞ்சிய மனிதனின் ஆசை கூட குடிபெயர வைக்கிறது. இந்தியாவிலேயே விவசாயத்தில் செழுமையும் தன்னிறைவும் கொண்ட மாநிலம் பஞ்சாப் தான். அந்த மாநில விவசாயிகள்தான் தங்களின் விளைநிலத்தை விற்றுவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவிற்கு சென்று குடியேறுகிறார்கள். இதன் பின்னணியில் செழுமைதான் இருக்கிறது. பஞ்சாப்பில் விளைநிலங்களின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது. ஒரு ஏக்கர் விளைநிலம் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் போட்டி போட்டு இந்த நிலத்தை வாங்குகிறார்கள். அவற்றை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். அதிக லாபம் கிடைப்பதால் விளைநிலத்தை விற்பனை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் சென்று விவசாயிகள் குடியேறி விடுகிறார்கள். ஆஸ்திரேலியா இந்தியாவை விட மூன்று மடங்கு பரப்பளவில் பெரியது. இந்தியாவின் மக்கள் தொகை 128 கோடி என்றால் அங்கு 2.40 கோடிதான். அங்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. இதில் 85 சதவீத விளைநிலங்கள் பயிரிடப்படாமல் சும்மா கிடக்கின்றன. அங்கிருக்கும் விவசாயிகள் 500, 1000 ஏக்கர் நிலங்களை வைத்து பிரமாண்டமாக விவசாயத்தை செய்து வருகிறார்கள். அங்கு நிலங்களின் விலையும் மிகக் குறைவு. பஞ்சாப்பில் 5 ஏக்கர் நிலத்தை விற்றால் போதும் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கிவிடலாம். இந்தியாவில் இருந்து சென்று ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினால் உடனே அந்த நாட்டு அரசு அங்கேயே வாழ்வதற்கான குடியுரிமையை வழங்குகிறது. பஞ்சாப்பில் விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதிலும் பெரும் பிரச்சினை இருக்கிறது. சரி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்றால் அவர்களின் நிலம் எல்லாம் சிறிது சிறிதாக இருக்கிறது. அதனால் இயந்திர வேளாண்மையும் ஏற்றதாக இல்லை. இதுவும் அவர்கள் வெளியேற ஒரு காரணம். ஆஸ்திரேலியாவில் நிலங்கள் எல்லாம் மிக மிகப் பெரியவை. அங்கு இயந்திரம் இல்லாமல் விவசாயம் என்பதே கிடையாது. விதைப்பது முதல் அறுப்பது வரை எல்லாமே இயந்திரங்கள் இல்லாமல் நடைபெறுவதில்லை. பண்ணை இயந்திரங்களை வைத்தே எல்லா வேலைகளையும் முடித்து விடலாம். காய்கறி, பழவகைகள் பயிரிட ஏற்றதாக அந்த மண் இருக்கிறது. ஆஸ்திரேலியா விவசாயத்திற்கு ஏற்ற தேசம். விவசாயம் மட்டுமல்லாமல் அதன் உபதொழிலான பால் பண்ணை வைத்து ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரீஸின் போன்ற உயர்ரக பசுக்களை வளர்க்கவும் ஏற்ற இடம். பஞ்சாபிகள் ஏற்கனவே கடுமையான உழைப்பாளிகள். கேட்கவா வேண்டும்? தங்களின் சொந்த நிலங்களை விற்று விட்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்கிறார்கள். (15.10.2015)

No comments:

Post a Comment