Search This Blog

Thursday, June 25, 2015



தொல்லியல் களம்

தொல்லியல் முறைகள் மூலம் ஆய்வு செய்யப்படக் கூடியதும், கடந்த கால நடவடிக்கைகளுக்கான சான்றுகளை உள்ளடக்கியதுமான ஓர் இடத்தை அல்லது ஒரு தொகுதி இடங்களைக் குறிப்பது, தொல்லியல் களம் ஆகும். இது தொல்லியல் பதிவுகளின் ஒரு பகுதியாகவும் அமைகிறது. இங்கே கடந்தகாலம் என்று குறிப்பிடுவது, வரலாற்றுக்கு முந்திய காலம், வரலாற்றுக் காலம், அல்லது தற்காலமாக இருக்கலாம். இது தவிர, ஆய்வுசெய்யப்படும் காலப் பகுதியையும், பயன்படுத்தும் கோட்பாட்டு அணுகுமுறையையும் பொறுத்துக் களம் ஒன்றின் வரைவிலக்கணம் மற்றும் புவியியல் எல்லைகள் பெரிதும் வேறுபடக்கூடும். புதையல்கள், புதைகுழிகள் போன்றவை காணப்படும் இடங்களும் இதில் அடங்கும். பொதுவாகத் தொல்லியல் களமொன்றின் எல்லைகளை வரையறுப்பது மிகவும் கடினமானது. ஒரு களம் சில சமயங்களில் ஒரு குடியிருப்பைக் குறிப்பதாக இருக்கக்கூடும், ஆனால் தொல்லியலாளர் இதனைச்சுற்றி மனித நடவடிக்கைகள் இருந்திருக்கக் கூடிய இடங்களின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும். பண்பாட்டு வள மேலாண்மை என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்படும் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட தொல்லியல் தொடர்பில், களத்தை, வளர்ச்சிக்காகக் குறித்த எல்லைகளுக்குள் அடக்கவேண்டியதாக இருக்கும். இது சில சமயங்களில் வசதியாகவோ அல்லது வசதி இல்லாமலோ இருக்கலாம். இவ்வாறான வேளைகளிலும், குறிப்பிட்ட சான்றுகள் காணப்படும் இடத்தின் எல்லைக்கு வெளியேயும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தொல்பொருட்கள் அல்லது தொல்லியல் அம்சங்கள் இருப்பதைக் கொண்டே களங்களை அடையாளம் காணுதல் மரபு. அடுப்புகள், கட்டிடங்கள் போன்றவை பொதுவான தொல்லியல் எச்சங்களாகும். மனித நடவடிக்கைகளினால் விளைந்த ஆனால் வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்படாத எலும்புகள், செதில்கள், விதைகள் போன்ற உயிரியல் பொருட்கள், உயிரெச்சங்கள் முதலியனவும் தொல்லியல் களங்களில் பொதுவாகக் காணப்படுவை. பழையகற்காலம், இடைக்கற்காலம் போன்றவற்றில், சிறிய செதுக்கப்பட்ட கல்கூட ஆய்வுக்கு உரியதாக இருக்கும். நிலத்தோற்றத் தொல்லியல், தனித்தனியான மனித நடவடிக்கைகளைப் பரந்த சூழலில் பின்னணியிலேயே நோக்குகிறது. இது, களங்களின் வரையறுக்கப்பட்ட எல்லை என்னும் கருத்துருவை மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், நிலவியல்சார் தொல்லியலாளர்களும், சூழலியல்சார் தொல்லியலாளர்களும், மனித நடவடிக்கைகளுடன் தொடர்பற்ற ஆனால், ஒரு தொடர்ச்சியான இயற்கையான நிலவியல் அல்லது கரிமப் படிவுகளை ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதக் கூடும்.

No comments:

Post a Comment