Search This Blog

Monday, May 16, 2016



வஞ்சிக்கப்பட்ட இனத்தின் பெண் முகம் 17/05/2016

மே.சி.ஜெமிசன் என்பவருக்கு கருப்பினத்தில் இருந்து விண்வெளிக்குப் போன முதல் பெண் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.  வஞ்சிக்கப்பட்ட இனத்தின் வளர்ச்சிக்கான பெண்முகம் என்று இவரை உலகம் கொண்டாடுகிறது. எண்பதுகளின் பிற்பகுதியில் அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஒன்று வானத்தில் பறப்பதற்கு பதிலாக பசிபிக் கடலில் விழுந்தது. நாசாவிற்கு அது கவுரவப் பிரச்சினை. உடனே அடுத்த விண்கலத்தை ஏவ தயாரானது. அதற்காக 2000 விண்ணப்பங்களிலிருந்து வடிகட்டி, வடிகட்டி குறைவான நபர்களை விண்ணில் பறப்பதற்கான பயிற்சிக்கு தேர்ந்தெடுத்தது.  1987-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெமிசனுக்கு அடுத்த ஐந்தாண்டுகள் அதுவே வாழ்க்கையானது. இத்தனைக்கும், நாசாவிற்கு வருவதற்கு முன்பு வரை ஜெமிசன் ஒரு மருத்துவர். ஸ்டான்போர்டிலும், கார்னல் பல்கலைக்கழகத்திலும் படித்து பொது மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் வானம், விண்மீன்கள், விண்வெளி என பால்ய காலத்து கனவு அவரை துரத்தியது. துணிந்து நாசாவுக்கு விண்ணப்பித்தார். முதல் ஆண்டு தேர்வாகாமல் நிராகரிக்கப்பட்டார். சோர்ந்துவிடாமல், அடுத்த ஆண்டு விண்ணப்பித்ததில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பின சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்  அவர். அப்போதும் விண்வெளிக்கு போவது நிச்சயமில்லை. நாசா எப்போதும் மூன்று அடுக்குகளாகத்தான் ஆட்களை தேர்ந்தெடுக்கும். விண்கலம் ஏவும் நேரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சரியான பேக்-அப் தேவை என்பதற்காக, எப்போதும் ரிசர்வில் ஆட்கள் இருப்பார்கள். ஜெமிசனுக்கு, அவர் படித்த மருத்துவர் பட்டம் காப்பாற்றியது.

விண்கலத்தில் புவியீர்ப்பு விசையில்லாத போது மனிதர்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள், பாதிப்புகள் உண்டாகின்றன என்பதை துல்லியமாக அருகிலிருந்து கணிக்க வேண்டும். அந்த வாய்ப்பு மருத்துவரான ஜெமிசனுக்கு செப். 12, 1992-ல் கிடைத்தது. எண்டவர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தில் ஜெமிசனையும் சேர்த்து ஆறு நபர்கள் பயணிக்க முடிவாயிற்று. ஜெமிசன் விண்வெளி வீரர்களுக்கான உடையை மாட்டினார். எண்டவரில் எட்டு நாட்கள், 190 மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தார். எட்டு நாட்கள் கழித்து செப்டம்பர் 20-ந் தேதி அனைவரும் பூமிக்கு திரும்பினார்கள். பூமியில் காலடி வைத்த அந்த நொடியில் இருந்து கருப்பினத்தவர்களின் வரலாறு மாறியது.

No comments:

Post a Comment