Search This Blog

Friday, May 6, 2016


ஏழைகள்  ரெயில்  எப்போது? 07/05/2016

மக்களின் அன்றாட வாழ்வில் போக்குவரத்து என்பது மிக இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். தினமும் தொழிலோ, படிப்போ, மருத்துவமோ, அல்லது சொந்த காரணங்களுக்காகவோ ரெயில் பயணம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஆங்கிலேயர் இந்த நாட்டுக்கு செய்த நன்மை ஒன்று உண்டென்றால், அது நிச்சயமாக ரெயில் போக்குவரத்துதான் என்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது. நாடு முழுவதிலும் 12 ஆயிரத்து 617 ரெயில்கள், 2 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. 7 ஆயிரத்து 172 ரெயில் நிலையங்கள் இவர்களை ரெயிலில் ஏறவும், இறங்கவும் வைக்கிறது.

பயணிகள் ரெயில்களை பொறுத்தமட்டில், தென்னக ரெயில்வே பயணிகள்தான், ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம்செய்வது மட்டுமல்லாமல், பதிவுசெய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுக்கும் பயணிகள் ஒருபோதும் பதிவுசெய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் ஏறுவதில்லை என்பது, வடமாநிலங்களுக்கு ரெயில்களில் பயணம்செய்யும் ஒவ்வொரு பயணியின் அனுபவமாகும். ஆனால், புதிய ரெயில்கள் விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் தென்னக ரெயில்வேவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே என்பது எல்லோருடைய ஆதங்கம் ஆகும். ரெயில் பயணம் என்பது வசதி படைத்தவர்களைவிட, சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கே அத்தியாவசிய தேவையாகும். ஆனால், ரெயில்வே நிர்வாகம் சில வழித்தடங்களில் ஓடும் ரெயில்களில் அதிக கூட்டநெரிசலோ, அல்லது ஏராளமான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலையிலோ, அவர்களுக்கெல்லாம் வசதியாக கூடுதலாக சிறப்பு ரெயில்களை விடவேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாகும். ஆனால், இப்போது ரெயில்வே நிர்வாகம் இத்தகைய நேரங்களில் விடும் சிறப்பு சுவிதா ரெயில்களின் கட்டணம் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது.

சாதாரண ரெயில் கட்டணங்களைவிட, மும்மடங்கு கட்டணம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றால், தூங்கும் வசதிகொண்ட பெட்டிக்கு ரூ.315 கொடுத்து டிக்கெட் எடுக்கவேண்டும். ஆனால், சுவிதா ரெயிலில் டிக்கெட் எடுத்தால் ரூ.1,135 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் இவ்வளவு தொகை கொடுத்து பயணம் செய்யமுடியுமா? என்று கேட்டபோது, சுவிதா சிறப்பு ரெயில்களில் மொத்த இருக்கைகளின் முதல் 20 சதவீத இடங்கள் முன்பதிவுக்கு 415 ரூபாய்தான் வசூலிக்கிறோம். அதன்பிறகு ஒவ்வொரு 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத கட்டணம் உயரும். இந்த வகையில் அடுத்த 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டின் விலை 525 ரூபாய், அதற்கடுத்த 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டின் விலை 775 ரூபாய், 4-வது 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுக்கு 995 ரூபாய், கடைசி 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுக்குதான், 1,135 ரூபாய் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள். இதேபோலதான் 3-வது வகுப்பு தூங்கும் வசதிகொண்ட குளிர்சாதன பெட்டிக்கு சாதாரண ரெயிலில் 810 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக, இந்த ரெயிலில் 3,185 ரூபாயும், 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு சாதாரண ரெயிலில் 1,140 ரூபாய், இந்த ரெயிலில் 4,470 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக, பயணிகளின் பணத்தை கறப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே பட்ஜெட்டில் ஏற்கனவே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் என்ற ஏழைகள் ரெயில் அதாவது, முழுக்கமுழுக்க பதிவு செய்யப்படாத ‘அன்ரிசர்வ்டு’ ரெயில்வே பெட்டிக்கொண்ட சூப்பர் பாஸ்ட் ரெயில்களை விடும் அறிவிப்புகளை தென்னக ரெயில்வேயில் விரைவில் அறிமுகப்படுத்தவேண்டும். இதுபோல, தொலைதூர ரெயில்களில் 2 முதல் 4 வரை பதிவு செய்யப்படாத கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பையும் தென்னக ரெயில்வேயில் விரைவில் நிறைவேற்றப்படவேண்டும். இந்த அந்தியோதயா என்ற ஏழைகளின் ரெயிலையும், தீனதயாளு ரெயில் பெட்டிகளையும் விரைவில் அறிமுகப்படுத்தினால்தான், சாதாரண ஏழை, எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியுமே தவிர, சுவிதா ரெயிலால் அல்ல.

No comments:

Post a Comment