Search This Blog

Thursday, May 5, 2016


விலங்குகளின் நுட்பம் 05/05/2016

விலங்குகள், பறவைகள் போன்ற சில உயிரினங்களுக்கு மிக நுட்பமான நுண்ணுணர்வுகள் இருக்கின்றன. இத்தாலி நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலத்த சேதம் விளைந்தது. இதை முன் கூட்டியே அறிந்திருந்தன, சில வீட்டு விலங்குகள். நிலப்பிளவு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே நடக்கப்போகும் விபரீதத்தை அந்த உயிரினங்கள் தெரிந்து கொண்டன. அதோடு நிற்காமல் அவை அந்த இடத்தை விட்டு வெளியேறி பத்திரமான இடத்திற்கு சென்று விட்டன.

விசுவாசம் கொண்ட ஒரு நாய் மட்டும் தனது எஜமானரை விட்டுப் போக மனமில்லாமல் அவருக்கு துணையாக அங்கேயே நின்றது. அப்போதும் அது சும்மா இருக்கவில்லை. இரவு, பகல் பாராமல் குரைத்துக்கொண்டே இருந்தது. தனது எஜமானுக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை அது அறிவித்துக் கொண்டே இருந்தது.

ஆனால், அந்த எஜமானர் அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர் அந்த நாய்க்கு வெறி பிடித்து விட்டதாகவே கருதினார். பொழுது விடிந்தது. நிலம் லேசாக நடுங்கத் தொடங்கியது. அந்த நடுக்கம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து பெரிதாக ஆடியது.

அது நில நடுக்கம்தான் என்று உணர்வதற்குள் நிலம் பிளவு படத் தொடங்கியது. அந்த எஜமானர் அவசரம், அவசரமாக அங்கிருந்து ஓடத்தொடங்கினார். அதற்குள் நிலம் பிளந்து பூமிக்குள் விழுந்தார். நன்றியுள்ள நாய் முன் கூட்டியே இந்த இயற்கை சீற்றத்தை அறிவித்தும், அதைப் பற்றி முன்பே தெரிந்திருந்தும் எஜமான் மீது இருந்த விசுவாசத்தால் அவருடன் சேர்ந்து அதுவும் பூமிக்குள் விழுந்து உயிரை விட்டது.

பூகம்பம் பூமியின் மேற்பகுதியை அடைவதற்கு முன்பே பூமியின் வெகு ஆழத்தில் அதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கி விடும். அப்போது அது பயங்கரமான சத்தத்தை ஏற்படுத்தும். அந்த மிகப் பெரும் ஒலி மனித காதுகளுக்கு கேட்காது. மனிதனின் காதுகள் ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலிகளை மட்டுமே கேட்க முடியும். இந்த பூகம்ப ஒலி வித்தியாசமானது என்பதால் மனிதனுக்கு அந்த சத்தம் கேட்கவே கேட்காது. ஆனால் விலங்குகளின் காதுகளுக்கு இந்த ஒலி நன்றாக கேட்கும்.

இதனால்தான் பூகம்பத்தின் போது நாய், பூனை மற்றும் சில பறவைகள் தப்பித்து விடுகின்றன. மனிதர்களுக்கு அந்த சத்தம் கேட்காததால் அதை அறிந்து கொள்ள முடியாமல் உயிரை விடுகிறார்கள்.

No comments:

Post a Comment