Search This Blog

Tuesday, March 22, 2016


தாய்ப்பாலின் மகத்துவம் 19/03/2016

உலகம் முழுவதும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் தாய்மார்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த தயக்கம் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைவாக இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணமாக இருப்பது தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான்.

இந்த நம்பிக்கை இப்போது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் தாய்மார்களை அதிக அளவு தொற்றிக்கொண்டுள்ளது. 37 சதவீத குழந்தைகளுக்குத் தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பால் புகட்டப்படாத குழந்தைகளுக்கு இயற்கையாக தாய்ப்பால் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. இது போக தாய்ப்பால் உடல் பருமன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், அலர்ஜி, பல் சொத்தை போன்ற நோய்கள் வராமல் குழந்தைகளை பாதுகாப்பதில் மிக முக்கிய பணியாற்றுகிறது.

குழந்தைகளைப் போலவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கரு உருவாகாமல் தடுக்கலாம்.

குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுக்காததால் உலகம் முழுவதும் 5 வயதிற்கு உள்பட்ட 8 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் வருடந்தோறும் இறக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் தாய்ப்பால் கிடைக்காமல் இறக்கின்றன என்கிறது உலகப் புகழ் பெற்ற ‘லேன்செட்‘ மருத்துவ இதழ். இந்த இதழ், தாய்ப்பால் தொடர்பாக இந்தியாவில் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வு முடிவில், “இந்தியாவில் தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், வருடந்தோறும் நிகழும் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகளின் மரணத்தை தடுக்கலாம். 36 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதை தடுக்கலாம். 34 லட்சம் குழந்தைகளுக்கு நிமோனியா வராமல் பாதுகாக்கலாம். மார்பக புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் இறக்கும் 7 ஆயிரம் பெண்களை காப்பாற்றலாம். இந்த நோய்களுக்காக செலவிடப்படும் ரூ.4 ஆயிரத்து 300 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தாய்ப்பால் கொடுப்பதன்மூலம் குழந்தைகளின் மரணத்தை தடுப்பது ஒவ்வொரு தாயின் கையிலும் உள்ளது.

Monday, March 21, 2016


அழி ய லா மா அடை யா ளம்?
மார்ச் 21, 2016 திங்கட்கிழமை 
 
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த புலி சுட் டுக் கொல் லப் பட் டுள்ள விஷ யத் தில் பல ருக் கும் வருத் தம் தான். ஆட் கொல்லி புலி அது; கடித்து குதற வந்த புலியை தற் காப் புக் காக சுட் டோம் என் கி றது வனத் து றை யும், போலீ சும். உணவு தேடி திரி யும் புலியை துப் பாக் கி யால் அடக்க நினைப் பது நியா யமா என இன் னொரு தரப் பி னர் ேகட் கின் ற னர்.
இந் தி யா வில் புலி கள் எண் ணிக்கை வேக மாக குறைந்து வரு வ தாக மத் திய அரசு தெரி வித் துள் ளது. தமி ழ கத் தில் 2 ஆண் டில் 24 புலிகள் இறந் துள் ளன. இதில் 10 புலி கள் விஷம் வைத்து கொல் லப் பட் டன. கடந்த ஆண் டில் 6 புலி யும், நடப் பாண் டில் இது வரை 3 புலி யும் இறந் துள் ளன. புலி கொலை யின் பின் ன ணி யில் மனித உயிர் பாது காப்பு பிர தா ன மாக கூறப் ப டு கி றது. கடந்த 11ம் தேதி ஜார்க் கண்ட் மாநி லத்தை சேர்ந்த தொழி லாளி மது வோ ரான் என் ப வர் நீல கிரி கூட லூர் அரு கே யுள்ள ேதவர் சோ லை யில் புலி யால் ெகால் லப் பட் டார். இந்த சம் ப வத் தின் தொடர்ச் சி யாக 8 வய தான, 200 கிலோ எடை கொண்ட ஆண் பு லியை போலீ சார் சுட்டு கொன் ற னர். இந்த புலி யின் இடது கால் காயத் து டன் நடக்க முடி யா மல் சுற் றி யது என் பது கவ னத் தில் கொள்ள வேண் டிய முக் கிய விஷ யம்.
புலி கள் சாதா ர ண மாக தாங் கள் வாழு மி டங் களை விட்டு வெளியே வரு வ தில்லை. கடந்த சில ஆண் டாக புலி கள் எண் ணிக்கை அதி க ரித்து விட வில்லை. இந் திய வரை பட பரப் ப ள வில் ஒப் பி டு கை யில் இந்த எண் ணிக்கை குறை வு தான். புலி கள் இப் ப கு தியை விட்டு வெளியே வரா மல் இருக்க நீல கிரி முது மலை புலி கள் சர ணா லய வடக் குப் புற வெளிச் சுற்று பகு தியை அதி க ரிக்க வேண் டும் என்ற அர சா ணை யும் பிறப் பிக் கப் பட் டது. எல் லையை விரி வு ப டுத் தும் போது பொக் கா பு ரம், மசி னக் குடி போன் ற வை யும் இந்த எல் லைக் குள் வந் து வி டும். வன விலங் கு கள் வாழ் வி டம் அதி க மா கி வி டும். ஆனால் ஏனோ பின் னர் செயல் ப டுத் தப் ப ட வில்லை.
இது போல் கூட லூர் அருகே தேவர் சோலை ஒரு கா லத் தில் மழைக் கா டு க ளாக இருந் தது. ஆனால் தேயிலை தோட் டம் மற் றும் வணிக பயன் பாடு அதி க மா ன தால் இது தன் தன் மையை இழந்து விட் டது. எல்லை விரி வு ப டுத் தி யி ருந் தாலோ, வணிக மயம் குறைந் தி ருந் தாலோ விலங் கு கள் எல் லையை விட்டு வெளியே வந் தி ருக்க வாய்ப் பில்லை. மற் றொன்று விவ சா யி கள் தங் கள் ஆடு, மாடு களை புலி, சிறுத்தை போன்ற வன விலங் கு கள் அடித் துக் கொல் லும் போது அவற் றுக்கு உரிய இழப் பீடு அர சி டம் இருந்து கிடைப் ப தில் சிக் கல் நீடிப் ப தால், விஷம் வைத்து கொல் கின் ற னர். அடித் துக் கொன்ற இறைச் சியை புலி மீண் டும் வந்து உண் ணும் போது பலி யாகி விடு கி றது. இது போன்ற சம் ப வங் க ளும் தடுக் கப் பட வேண் டும்.
வேட் டை யா டும் தன் மையை இழக் கும் அல் லது வய தான விலங் கு கள் வனப் ப கு தியை விட்டு வெளியே வரு கின் றன. சில சம யம் மற் றொரு வனப் ப கு தி யில் இருந்து கொண் டு வ ரப் ப டும் விலங் கு க ளும் அங் கி ருக் கும் விலங் கு க ளால் அடித்து விரட் டப் ப டு வ தும் உண்டு. வனப் ப குதி இடம் சுருங் கி வி டு வ தால் வெளியே வரும் விலங் கு கள் ஆட் கொல் லி யாக மாறு கின் றன. பொது வாக இவ் வாறு ஊருக் குள் வரும் கொடிய விலங் கு கள் மயக்க தோட்டா செலுத் தி தான் பிடிக் கப் ப டும். ஆனால் கொல் லப் பட் டுள் ளது.
புலி பிடிக்க ஏனோ தானோ முயற்சிகளை தான் இன் னும் வனத்துறையும், டைகர் ஸ்கு வார் டும் செய்து வரு கி றது. புலியை பிடிக்க டைகர் ஸ்கு வார்டு போலீ சார் பாது காப்பு கவச ஆடை அணி யா மல் ஆடு பிடிப் பது போல் சென் றது சர்ச்சை ஏற் ப டுத் தி யுள் ளது. பெண் புலி யின் சிறு நீர் வைத் தும், மயக்க ஊசி செலுத் தி யும் வனத் து றை யி னர் செய்த முயற்சி பலிக் காத நிலை யில், மக் க ளின் கோபம் தணிக்க வேட்டை நடத் தப் பட் டி ருக் க லாம் என கூறப் ப டு கி றது.
வனப் ப கு தியை விரி வு ப டுத் து வது ஒன்றே நிரந் தர தீர்வாக அமை யும். வடக்கே முது மலை வனப் ப கு தியை விரி வு ப டுத் தி விட் டால் விலங் கு க ளின் வாழ் விட பரப் ப ளவு அதி க ரித்து, அதற் கேற்ப அவை யும் இடம் மா றி வி டும். மனி தர் க ளுக் கும் தொல் லை கள் இருக் காது. புலி களை காக்க முயற் சிக் கா மல் அழிக்க ஆயு தங் களை தூக் கி னால் தேசிய விலங் கான புலியை புகைப் ப டத் தில் மட்டுமே காணும் அவல நிலை முடி யும்.

Thursday, March 17, 2016


உணவுக்காக ஒரு வங்கி 18/03/2016

ரத்த வங்கி, தாய்ப்பால் வங்கி என்று பல வங்கிகள், அவை சேகரிக்கும் பொருட்களை இருப்பவர்களிடம் பெற்று தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் ‘ரொட்டி வங்கி‘ என்ற பெயரில் மராட்டிய மாநிலத்தில் அவுரங்காபாத் என்ற இடத்தில் ஒரு வங்கி இயங்கி வருகிறது. பசியால் வாடும் மக்களுக்கு உணவு தருவதற்காக இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

ஜவுளித்தொழில் செய்து வரும் யூசுப் முகதி என்பவர் தான் இதன் நிறுவனர். பசி நிறைந்த மக்கள் ஒரு புறமும், அத்தகைய மக்களுக்கு உதவும் மனநிலையில் இருக்கும் மக்கள் மறுபுறமும் இருப்பதைக் கண்ட யூசுப். இவர்களை இணைக்கும் விதமாக, இந்த வகை வங்கியை ஆரம்பித்தார். காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இந்த வங்கி திறந்திருக்கும்.

பிச்சைக்காரர்களுக்கு இங்கு அனுமதி இல்லை. அவர்களைத் தவிர மற்ற யார் வேண்டுமானாலும் இங்கு வந்து உணவைப் பெற்றுக்கொண்டு போகலாம். பெரும்பாலும் பசியில் வாடும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இந்த வங்கிக்கு வருகிறார்கள்.  இவர்களுக்கு உணவளிக்க விரும்புபவர்கள், இந்த வங்கியில் அன்னதானம் செய்யலாம். அதற்கென்று ஒரு படிவம் தரப்படும். அதில் உணவளிப்பவரின் பெயர், முகவரி ஆகியவற்றைக் கொடுத்து உணவையும் தந்துவிட்டு போகலாம். இந்த பெயர் மற்றும் முகவரி கூட உணவின் தரம் பற்றி சொல்வதற்காகத்தான் வாங்குகிறார்கள்.

சிலர் தினசரி வந்து உணவு தருகிறார்கள். சிலர் எப்போதாவது வந்து தருகிறார்கள். அசைவம், சைவம் என்று எந்த வகை உணவையும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி பெறப்படும் உணவு வகைகள் ரொட்டி வங்கியில் தனி உணவுப் பாக்கெட்டுகளில் அடைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். உணவு என்று பசியோடு  வருபவர்களுக்கு  அதை தருகிறார்கள்.

ஆரம்பத்தில் 250 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியில், இரண்டே வாரங்களில் உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துவிட்டது. உறுப்பினர்கள் டெபாசிட் செய்யும் உணவு மட்டுமில்லாமல், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்தும் உணவை கொண்டு வந்து தருகிறார்கள். தற்போது தினமும் 500 பேர் இங்கு உணவு பெற்று பயனடைகிறார்கள்.

வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு வட்டி கிடைக்கும். ரொட்டி வங்கியில் டெபாசிட் செய்யும் உணவுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று இங்குள்ள உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். அதென்னவோ உண்மைதான்..!

Wednesday, March 16, 2016


‘இலுப்பை’யின் சிறப்புகள் 17/03/2016

இலுப்பை மரத்தில், ‘நெட்டிலை இலுப்பை‘ என்றொரு வகை உண்டு. இது 200 முதல் 400 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. கருமையான, தடிப்பான அடிமரத்தைக் கொண்டது. கடந்த 2,000 ஆண்டுகளாக இது சாலையோரங்களிலும், தோப்புகளிலும், கோவில்களுக்கு அருகிலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

மெதுவாக வளரும் இந்த மரம் மிக அதிக வெப்பநிலை கொண்ட மணற்பாங்கான அல்லது கற்கள் நிறைந்த திறந்தவெளிகளில் காணப்படுகிறது. கோடையில் இலைகள் உதிர்ந்து, புதிய செம்புத்தகடு போன்ற கொழுந்து இலைகள் மிளிரும்.

நெட்டிலை இலுப்பை வேனிற்காலத்தில் பூக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறம் கொண்டவை, மணம் கொண்டவை, கொத்தாகக் காணப்படுபவை. பூவிதழ்கள் தடித்தவை, ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் அமைந்தவை பூக்கள் துளைஉடையனவாக இருக்கின்றன.  மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்பு பூவின் அகவிதழ் தொகுப்பு மரத்தின் உயர்ந்த கிளைகளில் இருந்து காற்றில் சுழன்று, வெண்மைப் பூக்கள் காற்றில் மிகுதியாக வீழ்வது வெண்மையான ஆலங்கட்டி மழை வானில் இருந்து வீழ்வதுபோலத் தோன்றும் பூக்கள் வாடாமல் இருக்கும்போது யானைத் தந்தத்தின் நிறமும், உறுதியும் கொண்டவை. வாடியபின் மீன் தூண்டில் போன்று இருக்கும். இலுப்பையின் அனைத்து உறுப்புகளும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

 மரக்கட்டை விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரப்பட்டைகள் பொருட்களுக்கு சாயமேற்றவும், காய்ச்சல், தோலரிப்பு, புண்கள், வீக்கம்போன்ற நோய்களை நீக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகவும், வலிகள், எலும்புப்பிடிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. குழந்தை ஈன்ற பழங்குடிப்பெண்கள் இலைகளைத் தம்முடைய மார்பகங்களில் கட்டிக்கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்துக்கொண்டனர்.

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பை எண்ணெய் எனப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை“ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ.  இலுப்பைப் பயன்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது அதன் பூக்கள்தான். பூக்களின் தடித்த அகவிதழ்கள் இனிப்புச்சுவை கொண்டிருப்பதால் பழங்குடியினர் இதை சர்க்கரையைப் போன்று பயன்படுத்தினர். இதழ்களை நேரடியாகவோ, உலர்த்தியோ, அரிசியுடன் சமைத்தோ, வெல்லத்துடன் சேர்த்து உருட்டியோ, தேனில் தொட்டோ உண்டனர். பஞ்ச காலத்திலும், பாலை நிலத்திலும் இது ஒரு முக்கிய உணவாகத் திகழ்ந்தது.

வங்கிக்கடன்  வசூல் 17/03/2016

பொதுவாக ஏழைகள் என்றாலும், பணக்காரர்கள் என்றாலும் சரி, தங்களது அத்தியாவசிய, அவசர தேவைகளுக்காக நிதிநிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் வாங்குகிறார்கள். அது விவசாயி என்றாலும் சரி, பெரும் செல்வந்தர் விஜய் மல்லையா என்றாலும் சரி, வங்கிகளில் கடன் கொடுப்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள், விதிகளை ஏற்றுத்தான் கடன் வாங்குகிறார்கள். எனவே, யாராக இருந்தாலும் சரி, கடன் வாங்கும்போது ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், கடனை கண்டிப்பாக திருப்பிக்கட்டவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதை திரும்ப வசூலிப்பதில் மென்மையான அணுகுமுறைகளுக்கு பதிலாக, தேவைக்கு அதிகமாக கெடுபிடி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது.

கடந்தவாரம் தமிழ்நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்த சோழகன்குடிக்காடு கிராமத்தில் டிராக்டர் வாங்குவதற்காக பாலன் என்ற விவசாயி, ‘கோட்டக் மகேந்திரா’ வங்கியிடம் கடன்பெற்றிருக்கிறார். வாங்கியகடன் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 430. இதற்கு 6 தவணைகளில் வட்டியும் சேர்த்து, ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 200 கட்டிவிட்டார். அதன்பிறகும், ‘நீ இன்னும் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 86 கட்டவேண்டும்’ என்று அந்த தனியார் வங்கி நிர்ப்பந்தித்து இருக்கிறது. ‘நெல் அறுவடை முடிந்தவுடன் தந்துவிடுகிறேன்’ என்று அந்த விவசாயி உறுதிமொழி அளித்தும், போலீசாரின் துணையோடு அந்த வங்கி, அவரது டிராக்டரை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், போலீசாரால் அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளது, எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த காயம் ஆறுவதற்கு முன்பே, மற்றொரு சோகசம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த அழகர் என்ற விவசாயி, டிராக்டர் வாங்க ‘சோழமண்டலம் பைனான்ஸ்’ என்ற ஒரு தனியார் நிதிநிறுவனத்திடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி, மாத தவணைகளில் ரூ.5 லட்சத்தை கட்டிவிட்ட நிலையில், மீதி தவணைகளைக்கட்ட தாமதம் ஆனதால், அவரை பொதுமக்கள் முன்னால் தாக்கி, டிராக்டரை பறிமுதல் செய்துவிட்டதால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். ஆக, தனியார் வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களை அரசு ஒழுங்குபடுத்தவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. மேலும், மாநில அரசின் வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், அரசு வங்கிகளிலும் விவசாயிகள் கடன்பெற கடுமையான நிபந்தனைகள், நடைமுறைகள் இருப்பதால்தான், வட்டி அதிகமாக இருந்தாலும், இதுபோல கேட்டதும் கிடைக்கும் தனியார் நிறுவனங்களை விவசாயிகள் நாடுகிறார்கள். எனவே, அரசு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் கடன்பெறும் முறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

இது ஒருபக்கம் இருக்க, பெரும் செல்வந்தரான விஜய்மல்லையா தொடர்ந்து அவரது நிறுவனங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால், 17 வங்கிகளுக்கு ரூ.9,091 கோடியே 40 லட்சம் கட்டவேண்டியதிருக்கிறது. இவர் டெல்லி மேல்-சபை உறுப்பினர். மார்ச் 1-ந் தேதி அவைக்கு வந்திருக்கிறார். இவ்வளவு தொகை கட்டவேண்டிய அவர், எல்லோருக்குமே டிமிக்கி கொடுத்துவிட்டு, மார்ச் 2-ந் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரிடம் இந்த ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேலும் கட்டவேண்டிய பணத்தை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பதுதான் நீதிமன்றம் மட்டுமல்ல, நாடு முழுவதும் கேட்கப்படும் கேள்வியாகும். சாதாரண ஏழை மக்கள் கடன்வாங்கினால் கியாரண்டி, சொத்து அடமானம் கேட்கும் வங்கிகள், இந்த ரூ.9 ஆயிரம் கோடி கடனுக்கும் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றினவா?, வங்கி அதிகாரிகள் ஏழை-எளிய மக்களுக்கு கடன் வழங்கும்போது பயன்படுத்திய அளவுகோலை பயன்படுத்தினார்களா? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். வங்கிக்கடன் வழங்குவதில் எளியோருக்கு ஒரு நீதி, வலியோருக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு கூடாது.

Tuesday, March 15, 2016


தனி மனிதன் உருவாக்கிய காடு 16/03/2016

பழங்குடி இனத்தவர்களுக்கு இயல்பாகவே வனக் காதல் அதிகம். ஜாதவ் பயேங் என்பவருக்கும் அந்த காதல் இருந்தது. அவர்  சிறுவனாக இருந்த போது பிரம்மபுத்திரா நதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மாஜூலி தீவு. பிரம்மபுத்திரா நதியின் மையத்தில் அமைந்து இருக்கும் ‘மாஜூலி’ தீவுதான், உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும். இந்த தீவில் பாம்புகள் மடிந்ததற்கு காரணம் மரங்கள் இல்லாததுதான் என்பதை ஜாதவ் உணர்ந்தார். அப்போது அவரின் வயது 16.

1980-ல் வனத்துறையினர் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் மாவட்டம் ‘கோகிலமுக்‘ என்ற இடத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில் சமூக காடுகளை உருவாக்க முனைந்தார்கள். அந்த திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஜாதவ் மற்ற தொழிலாளர்களோடு இணைந்து மரக்கன்றுகளை நட்டார். வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்கள் அவரவர் ஊருக்கு புறப்பட்டச் சென்று விட்டனர்.  லேசாக துளிர் விட்டு நிற்கும் மரக்கன்றுகளை அப்படியே விட்டு விட்டால், வாடிப்போய்... மரித்துவிடும் என்பதால் அந்த மரங்களைப் பார்த்து பராமரிக்க அனுமதி கேட்டார், ஜாதவ். வனத்துறையும் அனுமதி கொடுத்தது. அதன்பின் ஒருவர் கூட அந்த பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. சமூக காட்டின் மண்ணை வளப்படுத்துவதற்காக ஜாதவ் ஒரு யுக்தியை கையாண்டார். நமது மண்ணை மண்புழுக்கள் வளப்படுத்துவது போல், அசாமில் சிவப்பு நிற எறும்புகள் மண்ணை வளப்படுத்தும் உயிரினம். அதற்காக தனது ஊருக்குச் சென்று சிவப்பு நிற எறும்புகளை பெருமளவில் பிடித்து வந்து, மணல் திட்டில் விட்டார்.

30 வருடங்களாக எந்த பிரதிபலனும், எதிர்பார்க்காமல் தன்னந்தனியாக தனது குடும்பத்தினருடன் இணைந்து காடு வளர்ப்பதற்காக நகர வாழ்க்கையை விட்டு இந்த காட்டில் வாழத்தொடங்கினார். மாஜூலி தீவில் மரங்களால் ஆன சிறு வீட்டை ஏற்படுத்திக் கொண்டார். அதில் அவரின் மனைவி பினிதா பயேங்க். மகன்கள் சஞ்சய், சஞ்ஜீவ் மற்றும் மகள் மூன்முனி ஆகியோருடன் தற்போதும் வாழ்ந்து வருகிறார். தனது வருமானத்திற்காக 50 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். பாலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். காலை 3.30 மணிக்கே எழுந்துவிடும். இவர் மாடுகளிடம் பால் கறந்து விற்ற பின் முழு நேரமும் காட்டைப் பராமரிக்கவே நேரத்தை செலவிட்டார். சிறிய உயிரினம் கூட வாழத் தகுதியற்றதாக இருந்த இந்த மணல் திட்டில், மரங்கள் பெருக பெருக பல உயிரினங்கள் வாழும் இடமாக மாறியது.

பக்கத்து காடுகளில் இருந்து வரும் புலிகள் அவரின் வளர்ப்பு ஆடுகளை உணவாக்கி கொண்டன. அப்படி இருந்தும் தனது காட்டில் விலங்குகள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இப்போது இவரின் காட்டில் 5 புலிகள், 3 காண்டா மிருகங்கள் நிரந்தரமாக வாழ்கின்றன. தனது 17-வது வயதில் தொடங்கி 51 வயது வரை மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவை செய்துள்ள ஜாதவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் இதை எதையும் காதில் வாங்காத ஜாதவ், ‘நான் உருவாக்கிய காட்டை வனத்துறையினர், நன்றாக பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால், நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயாராக உள்ளேன்’ என்கிறார், இந்த சாதனை மனிதர்.

ஒரு அரசாங்கம் செய்யத் தயங்கும் வேலையை தனிமனிதனாக இருந்து சாதித்த ஜாதவ் பயேங்கை வாழ்த்துவோம்.

Monday, March 14, 2016


பணத்தைக் கொண்டுபோகவே  முடியவில்லையே? 15/03/2016

தமிழகத்தில் 15-வது சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ந் தேதி தொடங்குகிறது. ஆனால், இந்த தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 4-ந் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. 4-ந் தேதி முதலே அதாவது, இந்த தேர்தல் தேதியை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. 70 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்ததால், பல விதிகளின் அமலில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில விதிகள் கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன. தேர்தலையொட்டி, ஆங்காங்கு சோதனை நடத்த சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாகனங்களில் செல்பவர்களை மடக்கிப்பிடித்து சோதனை நடத்துகிறார்கள். சோதனையில், யாராவது ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை கொண்டுபோனால், இந்த பறக்கும் படையினரும், கண்காணிப்பு படையினரும் அதற்கும் கணக்கு கேட்கிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் பணம் இருந்தால் ஏ.டி.எம். ரசீதை காட்டுங்கள், இந்த பணம் உங்களுக்கு கிடைத்தற்கான ‘பில்’, அல்லது ‘ரசீதுகள்’, அல்லது ‘ஆதாரங்கள்’ ஏதாவது உள்ளதா?, எதற்காக கொண்டுபோகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். இதுபோல, வங்கிகளோ, நிதிநிறுவனங்களோ பணத்தை எடுத்துக் கொண்டுபோனால் கூட, அதற்கும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்கிறார்கள்.

சில நேரங்களில் அந்த இடத்தில் உடனே ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யமுடியவில்லை என்றால், அந்த பணத்தைக் கைப்பற்றி மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். உடனடியாக மாவட்ட வருவாய் அதிகாரியை அணுகி, இதற்கான அத்தாட்சிகளை தாக்கல் செய்தால்தான், பணத்தை திரும்ப பெறமுடியும். சில நேரங்களில் உரிய அத்தாட்சிகளை தாக்கல்செய்ய சற்று தாமதமானால் அரசு கருவூலத்தில் போய் அந்த பணத்தைக் கட்டிவிடுகிறார்கள். அதன்பிறகு உரிய ஆதாரத்தை காட்டினாலும், பணத்தை திரும்பப்பெற பலநாட்கள் ஆகிவிடும். இந்த பறக்கும்படை சோதனைகளால் நியாயமான வகையில் முக்கியமான செலவுகளுக்காகப் பணம்கொண்டு செல்பவர்களுக்கு மிகவும் சிக்கல் ஏற்படுகிறது.

இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ரூ.50 ஆயிரம் என்பது சாதாரணமாக ஆகும் செலவுகளுக்குத் தேவையான பணம்தான். குடும்பங்களில் திருமணங்களுக்கு 4 பவுன் நகைவாங்கவேண்டுமென்றால் கூட, ரூ.1 லட்சத்துக்குமேல் செலவாகும். இதுபோல, முக்கியமான செலவுகளுக்கு வீட்டிலுள்ள சேமிப்பை எடுத்துக்கொண்டு செல்பவர்களுக்கு உடனடியாக அந்த பணத்துக்கு ஆதாரமாக என்ன ரசீதை காட்டமுடியும்?. மேலும், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், அன்றாடம் விற்பனையாகும் தொகையை வங்கியில் போடுவதில்லை. ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் தொகையை மொத்தமாக கையில் எடுத்துக்கொண்டுதான், மொத்த வியாபாரிகளிடம் போய் சரக்குளை வாங்குவார்கள். அந்த வகையில், ஒரு சிறிய கடையை எடுத்துக்கொண்டாலும், அன்றாடம் சரக்குகளை வாங்க ரூ.50 ஆயிரத்துக்குமேல் எடுத்துச்செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதுபோல, சிறிய தொழில்கள் செய்பவர்களெல்லாம் அவசரமாக பொருட்கள் வாங்க ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டுபோவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. சில தனியார் பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்குக்கூட ரூ.50 ஆயிரத்துக்குமேல் நன்கொடை கொடுக்க பணமாகத்தான் எடுத்துச்செல்ல வேண்டியதிருக்கிறது.

பணம் கொடுத்து ஓட்டுவாங்கும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த நிச்சயமாக இந்த கட்டுப்பாடு தேவைதான். ஆனால், அரசியல் கட்சிகள் கொண்டுசெல்லும் பணத்துக்கும், பொதுமக்களும், வியாபாரிகளும் கொண்டுசெல்லும் பணத்துக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. அது அதிகாரிகளுக்கும் நன்றாகத்தெரியும். தேர்தலில் பண நடமாட்டத்தை தடுக்கிறோம் என்ற பெயரில், பொதுமக்களும், வியாபாரிகளும் இன்னல்களுக்கு ஆளாவது என்பது ஏற்புடையதல்ல. எனவே, தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் பணத்தை கொண்டுபோகிற ஆட்கள் யார்?, என்ன காரணங்களுக்காக கொண்டுபோகிறார்கள்? என்று பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். பொதுமக்களும் கூடுமான வரையில், பணப்பரிமாற்றங்களை வங்கிப்பரிமாற்றங்களாகவே வைத்துக்கொண்டால் எந்த பிரச்சினைக்கும் இடமிருக்காது.

ஸ்கேட்டிங் விளையாட்டில் 6 1/2 வயது சிறுமி சாதனை 14/03/2016
10½ கிலோ மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்தார்

கோவை,மார்ச்.14-
கோவையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் விளையாட்டில் 6½ வயது சிறுமி, 10½ கிலோ மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.

கோவை சிறுமி சாதனை

கோவையை அடுத்த பி.என்.புதூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகள் கே.தர்ஷினி (வயது 6½). இவர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதனை செய்யும் நிகழ்ச்சி, கோவை ரேஸ்கோர்சில் நேற்று காலை நடைபெற்றது. அப்போது அவர், 10½ கிலோ மீட்டர் தூரத்தை, 41.3 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து காஸ்மோ பாலிட்டன் கிளப் வளாகத்தில் சிறுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

விழாவில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன நிர்வாக ஆசிரியரும், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன இந்திய பிரதிநிதியுமான மன்மோகன்ரவாத் கலந்து கொண்டு, சிறுமி கே.தர்ஷினியின் இந்த சாதனை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளது என்று அறிவித்து, அதற்கான சான்றிதழ் வழங்கினார்.

கின்னஸ் சாதனை இலக்கு

இது குறித்து சிறுமி கே.தர்ஷினி கூறியதாவது:-
எல்.கே.ஜி. முதல் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளேன். தற்போது ஸ்கேட்டிங்கில் 10½ கிலோ மீட்டர் தூரத்தை, 41.3 நிமிடங்களில் கடந்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஊக்கம் அளித்து வரும் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றி தெரிவித்து கொள்கிறேன். கின்னஸ் சாதனை நிகழ்த்துவது எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமி கே.தர்ஷினி கணுவாயில் உள்ள யுவபாரதி பப்ளிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஸ்கேட்டிங் மட்டுமின்றி நீச்சல், ஓவியம் வரைவதிலும் திறமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவை முடக்கும் தீவிரவாதம் 14/03/2016

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கில் ஒருவர் உள்ளூர் மற்றும் உலக பாதுகாப்பு காரணமாகவும், தொற்று நோய் காரணமாகவும் தங்களின் சுற்றுலா திட்டங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 2 ஆயிரம் பேர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 77 சதவீதம் பேர் தீவிரவாத செயல்பாடு அதிகம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக குறிப்பிட்டு இருந்தார்கள். அந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் ராணுவ கெடுபிடிகள், சண்டைகள் காரணமாக செல்ல பிடிக்கவில்லை என்று அவர்களில் 59 சதவீத பேர் தெரிவித்து இருந்தார்கள்.   

தொற்று நோய்கள் காரணமாக 46 சதவீத பேரும், தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதில்லை என்று 25 சதவீத பேரும், அரசியல் காரணமாக 25 சதவீத பேரும் சுற்றுலா செல்வதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளாக 62 சதவீத பேர் கூறி இருக்கிறார்கள். 10 சதவீதக்கும் குறைவானவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கும், 20 சதவீதக்கும் குறைவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்ல விரும்புவதாக சொல்லி இருக்கிறார்கள்.

சுற்றுலாவுக்கான திட்டமிடல்களையும், எங்கு செல்வது என்ற முடிவையும் எதன் அடிப்படையில் எடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அங்கீகாரம் பெற்ற பயண ஆலோசகர்கள் தரும் தகவல் அடிப்படையில் 55 சதவீத பேரும், சுற்றுலா பத்திரிகைகள், பயணக் கட்டுரைகள் தரும் தகவல்கள் அடிப்படையில் 36 சதவீத பேரும் முடிவு எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். சுற்றுலா தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து 34 சதவீத பேரும், சமூக வலைதளங்களில் இருந்து 17 சதவீத பேரும் பெறுவதாக கூறி இருக்கிறார்கள்.

தீவிரவாதம்  காலூன்றக்கூடாது! 14/03/2016

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின்  எண்ணிக்கை       87 லட்சத்தை தாண்டிவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையும் சேர்த்தால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். திறன்சாராத உடல்உழைப்பு வேலைகள் ஓரளவு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் இந்த வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, தமிழ்நாட்டிற்கு வந்து வேலையையும் பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் மாநிலத்தை ஒப்பிடும்போது, இங்கு கிடைக்கும் சம்பளம் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வழங்கும் சம்பளத்தை கருத்தில்கொண்டால், இங்கு அவர்களை வேலையில் அமர்த்துபவர்கள் கொடுக்கும் சம்பளம் தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தைவிட குறைவானது என்பதால், அவர்களையே பெரும்பாலும் வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் எடுத்த ஒரு கணக்குப்படி, தமிழ்நாட்டில் 10 லட்சத்து 67 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில், 27 சதவீதம் பேர் பல்வேறு பொறியியல் தொழிற்கூடங்கள் போன்ற உற்பத்திப்பிரிவுகளில் வேலைபார்க்கிறார்கள். 14 சதவீதம் பேர் ஜவுளி தொழிற்கூடங்களிலும், 11.41 சதவீதம் பேர் கட்டுமான தொழில்களிலும் வேலைபார்க்கிறார்கள். இதுதவிர, ஓட்டல்களில் வேலை பார்ப்போர், காவல்பணியில் ஈடுபடுபவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மேற்குவங்காளம், ஒடிசா, பீகார், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களிலிருந்து வேலைக்கு வருகிறார்கள். இன்றும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்றால், தினமும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு சென்றால் வேலைகிடைக்கும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையை மனதில் வைத்து அலை அலையாய் வருவதைப்பார்க்க முடியும்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில், அரபு நாடுகளில் வேலைக்கு சென்றவர் என்றால், அந்த குடும்பத்துக்கு தனி மவுசு இருப்பதுபோல, வடமாநிலங்களில் உள்ள கிராமங்களில் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு சென்றவர்களின் குடும்பங்களுக்கு தனி மவுசு உள்ளதாக கூறுகின்றனர். இவர்களெல்லாம் யார்?, இவர்களுக்கு என்ன பின்னணி இருக்கிறது?, அங்கு ஏதாவது குற்றவழக்குகளில் ஈடுபட்டு தப்பித்து வந்திருக்கிறார்களா? என்பது போன்ற எந்த விவரமும் யாருக்கும் சரியாக தெரிவதில்லை. சமீபத்தில் சென்னையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரயாதவ் என்ற தீவிரவாதியை ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் தமிழக ‘கியூ’ பிராஞ்சு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.    32   வயதான   இந்த  தீவிரவாதி, 6 மாதங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தில் கண்ணிவெடி வைத்து 7 போலீசார் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவன். ‘மாவோயிஸ்டு’ இயக்கத்தின் மண்டல தளபதியாக செயல்பட்டுவந்தவன். பீகார், சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 17 கொலை வழக்குகள் இவன் மீது இருக்கிறது. சத்தீஷ்கார் மாநிலத்தில் இவனை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநில போலீசார் இந்த தீவிரவாதியை வலைவீசி தேடிவந்தனர். ஆனால், எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு தண்டலத்தில் வடஇந்திய தொழிலாளர்களுடன் பதுங்கியிருந்ததை, கியூ பிராஞ்சு போலீசார் கண்டுபிடித்து கைதுசெய்தது, பெரிய நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் வேரூன்ற திட்டமிட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு தீவிரவாதி தமிழக சட்டமன்ற தேர்தலை சீர்குலைக்கும் திட்டத்துடன் பதுங்கியிருந்தான் என்ற தகவலும் வெளிவருகிறது. அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில், தீவிரவாதம் எந்தவகையிலும் காலூன்றிவிடக்கூடாது. எனவே, தமிழக போலீசார் இந்த விஷயத்தில் மிகத்தீவிரமாக கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிடவேண்டும். வடமாநில சகோதரர்கள் வேலைபார்க்க வருவது சரிதான். வந்தாரை வாழவைப்பதுதான் தமிழ்நாடு. ஆனால், அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் பின்னணி குறித்து ஆராய எந்தெந்த வகையில், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை காவல்துறையும், தமிழக அரசும் தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.