Search This Blog

Monday, March 14, 2016


வேகமாகப் பரவும்  வெடிகுண்டு- கள்ளத்துப்பாக்கி  கலாசாரம் 11/03/2016

தமிழ்நாடு காலம்காலமாக அமைதி பூங்காவாக திகழ்ந்து வந்தது. பெரும்பாலும் தமிழர்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. வயல்களில், காடுகளில், ஏன் பல நிறுவனங்களில் காவல் பணியில் உள்ளவர்கள்கூட ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். துப்பாக்கி என்பது எல்லோராலும் நிச்சயமாக வாங்கமுடியாது. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு கண்டிப்பாக லைசென்சு வாங்கவேண்டும். இந்த லைசென்சை பெறுவது எளிதல்ல. மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பம் அனுப்பினால், ‘இவருக்கு எதற்கு துப்பாக்கி?, அது இவருக்கு தேவைதானா?’ என்றெல்லாம் துருவி, துருவி விசாரணை நடத்தித்தான் கொடுப்பார்கள். அதுவும் இப்போது காடுகளில்  வேட்டை யாடமுடியாது என்ற நிச்சயமான நிலை வந்தபிறகு, துப்பாக்கி மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்துவிட்டது.

அந்தக்காலங்களில்  சில   நேரங்களில்   சமூகவிரோதிகளால் அரிவாள், கத்தி பயன்படுத்தப்படுவது உண்டு. ஆனால், அதெல்லாம் அபூர்வமாக இருந்தது. இந்த நிலையெல்லாம் இப்போது மாறி, தமிழ்நாட்டுக்குள் கள்ளத்துப்பாக்கி, வெடிகுண்டு கலாசாரம் நுழைந்தது, பெரிதும் கவலையளிக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் இருகோஷ்டியினருக்கிடையே மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருக்கும் கொலைகளின் தொடர்ச்சியாக, ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டியை தீர்த்துக்கட்ட ஒரு காரிலும், 5 மோட்டார் சைக்கிள்களிலும் வந்து, அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தி, அரிவாளால் தாக்கி, 2 பேரை படுகொலை செய்திருக்கிறார்கள். ஒருவர் தலையை துண்டித்து எடுத்துச்சென்று  வெகுதூரம்   கொண்டுசென்று  போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். இதுபோல, தலைநகராம் சென்னையிலேயே கள்ளத்துப்பாக்கி விற்பனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கையில் அரிவாள், கத்தியை வைத்துக்கொண்ட குண்டர்கள், இப்போது ஹைடெக்குக்கு மாறி, .22 எம்எம், அல்லது 9 எம்எம் ரக கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இவர்களுக்கு இந்த துப்பாக்கிகளெல்லாம் வெளிமாநிலங்களிலிருந்து கிடைக்கிறது. சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், வெளிமாநிலங்களில் இருந்து ரூ.5 ஆயிரத்துக்கு வாங்கிவந்து, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரிலேயே இப்படி சர்வசாதாரணமாக துப்பாக்கி விற்பனை நடக்கும்போது, மற்ற இடங்களில் எப்படி இருக்கும்? என்று எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இத்தகைய கைத்துப்பாக்கிகள் மேற்குவங்காளம், பீகார் மாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாகவும், லாரிகளிலும் கடத்தப்பட்டுவருவது போலீஸ் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிச்சயமாக இது அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவங்களாகும். விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள்   அட்டகாசத்தை    ஒழிக்க   வெடிகுண்டுகளை   பயன் படுத்தத்தொடங்கி, இப்போது மனித  உயிர்களை  பறிக்க பயன்படுத்துவது வரை வந்துவிட்டது. தேர்தலையொட்டி, சோதனைச்சாவடிகள் வைத்திருக்கிறோம், போலீசாரின் கண்ணில் இருந்து எதுவும் தப்பமுடியாது என்று கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெடிகுண்டுகளோடு தைரியமாக காரில் வந்துகொண்டிருந்த நிலையில், போலீசார் இன்னும் கண்காணிப்புடன்  செயல் படவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. தென்மாவட்டங்கள் முழுவதும் வன்முறையில் ஈடுபடுவதற்கு வெடிகுண்டுகளை பயன்படுத்தும் மோசமான கலாசாரம் வளர்ந்து வருகிறது. எந்த ஊர் என்றாலும், தென்மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வடமாவட்டங்களில் தோட்டக்காவலுக்கும் வெடிகுண்டுகள் வைத்திருக்கும் பழக்கம் வந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் வெடிகுண்டுகள் தாராளமாக கிடைப்பது ஒருபக்கம் கவலையளித்தாலும், கள்ளத்துப்பாக்கி நடமாட்டமும் இருப்பது வேதனையளிக்கத்தக்க வகையில் இருக்கிறது. <p></p>காவல்துறையும், குறிப்பாக கியூ பிராஞ்ச் போலீசாரும் இதில் இனி தீவிரமாக தங்கள் பணிகளை முடுக்கிவிட்டு, வெடிகுண்டு கலாசாரம், கள்ளத்துப்பாக்கி கலாசாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று ஆராய்ந்து, இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களிடம் அடிக்கடி சோதனை நடத்தவேண்டும். யாரிடமாவது வெடிகுண்டு கைப்பற்றப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்பட்டால்தான், மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். முளையிலேயே இந்த வெடிகுண்டு, கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை கிள்ளி எறிந்தால்தான், வேகமாக வளர்ந்து நிலைமை மோசமாவதற்குள் தடுக்கமுடியும்.
துளசி மகிமை 10/03/2016

கல்லீரலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவு எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்புக்கு இயற்கை மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன. கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளை. அதேபோன்று துளசியும் நலல மருந்து. துளசி இலை, ஏலக்காய், சுக்கு சேர்த்து நசுக்கி 1 தம்ளர் நீரில் கலந்து காய்ச்சி, அரை தம்ளராக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கல்லீரல் பாதிப்புகள் அகலும். துளசி கஷாயம், ஆஸ்துமா வராமலும், வளர விடாமலும் தடுக்கும்.

கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமாகச் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.
வாரத்துக்கு  ஒருநாள்  கைத்தறி  அல்லது  கதர் 10/03/2016

“சின்னச்சின்ன இழை பின்னி, பின்னிவரும் சித்திரக்கைத்தறி சேலையடி, நம்ம தென்நாட்டில் எந்நாளும் கொண்டாடும் சேலையடி” என்று ‘புதையல்’ என்ற படத்துக்காக கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1957-ல் எழுதிய பாடல் இன்றளவும் கைத்தறி வாரவிழாக்களில் பாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கைத்தறி நெசவாளர்கள், கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் தங்கள் உடல் உழைப்பில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த தயாரிக்கும் கைத்தறி, கதர்துணிகளை அணிவதன் மூலம், கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் இந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் பசிப்பிணியை போக்க உதவமுடியும். இந்த நெசவாளர்களின் இன்னல்களைப் போக்கும் விதமாகத்தான், மறைந்த அண்ணா தன் தோளில் கைத்தறி துணிகளைச் சுமந்துகொண்டு, காஞ்சீபுரம் நகரில் வீதிவீதியாகச் சென்று விற்றார். பெருந்தலைவர் காமராஜர் முதல் அனைத்து தேசிய தலைவர்களும் கதர் தவிர வேறு எந்த துணியும் எந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தியது இல்லை. இன்றும் காங்கிரஸ் என்றால் கதர் துணியை அணிவதுதான் ஒரு அடையாளமாக இருக்கிறது.

பா.ஜ.க.வைப் பொருத்தமட்டிலும் பல தலைவர்கள் கதர், கைத்தறி துணிகளையே அணிந்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி கைத்தறி தொழிலுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். என்றாலும், நாகரீக உலகில் இப்போது கைத்தறி, கதர்துணிகளை அணிபவர்கள், விரும்புபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதால், இந்த தொழில்கள் நசிந்துபோய்விட்டது. இந்த தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கு வேறுவேலை எதுவும் செய்யத்தெரியாது. அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்ட மத்திய அரசாங்கத்தில் பணியாற்றும் 42 லட்சம் ஊழியர்களையும், வாரத்துக்கு ஒருநாள், அதாவது வாரக்கடைசியில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் அணியச்சொல்லலாமா?, அல்லது விருப்பப்பட்டவர்களை மட்டுமாவது அணியச்சொல்லலாமா? என்று மத்திய அரசாங்கம் பரிசீலித்துக்கொண்டு இருக்கிறது.

நாடு முழுவதும் கதர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு உதவும் வகையில், காதி தொழிலை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக மத்திய அரசாங்க ஊழியர்கள் கைகொடுக்க காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம், மத்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு ஆடை வாங்கினால்போதும் விற்பனைபெருகும். ஒருமுறை அணிந்து பார்த்தால் உடலுக்கு இதமாகவும், மனதுக்கு மகிழ்வாகவும் இருக்கும். ஏற்கனவே பல மத்திய அரசாங்க அலுவலகங்களில் மேஜைவிரிப்பு போன்ற துணிவகைகளை கதர்துறையிலேயே வாங்குகிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கதர் நெசவாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே, கதரும் வேண்டும், கைத்தறி துணியும் வேண்டும் என்றவகையில், இரு தொழில்களையும் வளர்க்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில், மத்திய அரசாங்கத்தோடு விட்டுவிடாமல், அடுத்து ஆட்சிக்குவரும் தமிழக அரசும் கைத்தறி, கதர்தொழிலை வளர்க்க இதுபோன்ற முயற்சிகளை அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் ஊழியர்கள், பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கைத்தறி வாரவிழாவின்போது, அப்போது கலெக்டராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவர் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த் ஆகியோர் அந்த ஒருவாரமும் கைத்தறி வேட்டி, சட்டை, சேலை அணிந்து அனைத்து இடங்களுக்கும் வந்ததால், மக்களும் அதை பின்பற்றி அங்கு கைத்தறி விற்பனை அதிகரித்தது. அதுபோல, அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருநாளாவது இந்த ஆடைகளை அணியவேண்டும். ஆனால், கதர், கைத்தறி ஆடைகள் இன்றைய நாகரீக உலகுக்கு ஏற்றவகையில் புதிய டிசைன்கள், புதிய ரகங்களில் இல்லையே என்ற குறை நியாயமான குறையாக இருக்கிறது. அந்த குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கதர், கைத்தறி தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறமுடியும், வருமானமும் ஈட்டமுடியும் என்ற நிலையை உருவாக்கமுடியும், கிராமப் பொருளாதாரமும் வலுவடையும்.


உலகில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை 09/03/2016

மருத்துவம் பெரிதாக முன்னேறாத அந்தக் காலத்தில், எல்லாவகை நோய்களுக்கும் உள் மருந்து மட்டுமே தரப்பட்டது. உடலின் வெளியில் ஏற்படும் காயங்கள், கட்டிகள் போன்றவற்றிற்கும் உள் மருந்தே கொடுக்கப்பட்டது. சூரணம், லேகியம் தான் உள் மருந்து. கட்டிகள் போன்ற வியாதிகள் அகற்றப்படாமல் மருந்து மூலம் குணமாகிவிடும் என்றே நம்பப்பட்டது. இந்த கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தனர்.

அறுவை சிகிச்சை முறைகள் 16-ம் நூற்றாண்டில் தொடங்கின. முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு நோயாளியின் நுனி நாக்கில் இருந்த சிறு கட்டி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். உலகில் முதன்முதலாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட கருவிகள் ஒரு எரியும் மெழுகுவர்த்தி, குறடு ஒன்று, வலி மிகுதியால் நோயாளி துள்ளி விழாமல் அழுத்திப் பிடித்துக்கொள்ள இரண்டு பேர் இருந்தனர். இவர்களை வைத்துதான் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்பு விஞ்ஞான வளர்ச்சியால் மருத்துவம் படிப்படியாக முன்னேறியது. அறுவை சிகிச்சையிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நடந்த அறுவை சிகிச்சையை சொல்லலாம். இது மிகச் சிறந்த கடினமான அறுவை சிகிச்சை என்று உலகமே ஒத்துக்கொண்டது.

 1978-ல் மே மாதம் கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவர்களால் 30 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. இது என்ன பெரிய விஷயமா என்று கேட்பவர்களுக்கு, அந்தக் கட்டியின் எடை 90 கிலோ என்பது தான் பதில். இந்தக் கட்டியை உடைத்த போது அதில் இருந்து 74 லிட்டர் நீர் வெளியேறியது. பின்பு 18 கிலோ எடை கொண்ட சதைப் பிண்டமாக அந்தக் கட்டி இருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன்பு 172 கிலோ எடையிருந்த அந்த பெண் சிகிச்சை முடிந்ததும் 82 கிலோவாக எடை குறைந்தார். ஏழு மருத்துவர்களால் செய்யப்பட்ட, இந்த அறுவை சிகிச்சை தான் உலகிலேயே பெரியது என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகளுக்கு பொம்மை வேண்டாம் 08/03/2016

குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும், பல மாடல்களிலும் ஏராளமான பொம்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாமும் தொடர்ந்து இத்தகைய பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

குழந்தைகள் விளையாடும் இந்த பொம்மைகள் பி.வி.சி. என்று சொல்லப்படுகிற ‘பாலிவினைல் குளோரைடு’ என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பாட்டில், நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் போது கடிப்பதற்காக கொடுக்கப்படும் சிறு விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் இந்த பொருளால் தயாரிக்கப்படுபவைதான்.

பி.வி.சி. என்பது சாதாரணமாக வளையும் தன்மை கொண்ட பொருள் கிடையாது. அதனால், இந்த பி.வி.சி.யை வளைப்பதற்காக இதனுடன் பதாளேட் பிளாஸ்டிசைசர் என்கிற ஒரு பொருளை சேர்கிறார்கள். இது சேரும் போது பிவிசி வளையும் தன்மை பெறுகிறது. இப்படியாக வளையும் தன்மைக் கொண்ட வினைல் பொருட்கள் பல ஆண்டுகளாக உடையாமலும் வண்ணம் மாறாமலும் இருக்கும்.

வளைப்பதற்காக சேர்க்கப்படும் பதாளேட்  என்ற பொருள் விளையாட்டுப் பொருட்களின் எடையில் பாதியளவு கலந்திருக்கும். இது பிவிசியுடன் வேதி முறையில் இணைக்கப்படுகிறது. பதாளேட் பொருட்களை குழந்தைகள் வாயில் கடித்து விளையாடினால் அது கசிந்து வாய்க்குள் போகும். பிளாஸ்டிசைசர் குழந்தைகளின் எச்சிலில் கரையக்கூடியது.

இப்படி கரைந்த பிளாஸ்டிசைசர்கள் ரத்தம், நுரையீரல், கல்லீரல் ஆகிய இடங்களில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது என்னை மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது. இவை தரும் தீமைகள் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் மனித உடலில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புண்களை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. மேலும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சினையை ஏற்படுத்தும். விந்து உருவாவதில் இடையூறு செய்யும். கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இடங்களில் கேன்சரையும், மோனோநியூக்கிளியர் செல்லுக்கேமியாவையும் உருவாக்குவதாக தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தீமைகளை கருதி அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து பிவிசி மூலம் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பெரும் கெடுதல் தருகிற வினைல் மற்றும் பிளாஸ்டிசைசர் உபயோகப்படுத்துவதை தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன. கூடுமானவரை நாம் நமது குழந்தைகளுக்கு பிவிசி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது.

Saturday, March 12, 2016


கடல்வழி சுற்றுலா 08/03/2016

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்பார்கள். ஆனால், நிச்சயிக்கப்படும் திருமணங்கள் எங்கு, எப்படி நடக்கும் என்பதை, அவரவர்தான் முடிவுசெய்கிறார்கள். இப்போதைய இளைஞர்கள் தங்கள் திருமணம் வித்தியாசமான முறையில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகாயத்தில் பறந்துசெல்லும் பலூன்களில் அமர்ந்து, மேகக்கூட்டங்களிடையே திருமணம் செய்வதை சிலர் சாதனையாக நினைக்கிறார்கள். வடநாடுகளில் திருமணம் நடந்தவுடன், மணமக்கள் ஹெலிகாப்டரில் பறந்து மணமகன் வீட்டிற்கோ, மணமகள் வீட்டிற்கோ செல்வதை கவுரவமாக நினைக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தமட்டில், வெளிநாடுகளைப்போல, கடலில் மிதந்துகொண்டிருக்கும் கப்பலில் திருமணம் செய்வது நிறைய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. ஏனெனில், வெளிநாடுகளில் இத்தகைய சாகச திருமணங்கள் அதிலும் குறிப்பாக, கடலில் செல்லும் படகுகளிலும், கப்பல்களிலும் நடக்கும் திருமணங்கள் நமது இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ‘அந்தநாள் என்று வருமோ’ என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு, நிச்சயமாக முடியும் என்ற நம்பிக்கையை மத்திய கப்பல் துறை அமைச்சகமும், கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரியும் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துமகா சமுத்திரத்திலோ, வங்காள விரிகுடாவிலோ, அரபிக்கடலிலோ செல்லும் சொகுசு கப்பலில் திருமணங்கள் நடத்தும் வசதியை உருவாக்கலாம். அந்த கப்பலிலேயே விருந்துக்கான வசதி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னையிலிருந்து, இதுபோல மும்பைக்கு ஒரு சொகுசுகப்பலை விட்டு, அந்த கப்பலில் இதற்கான வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்த தனியார் கப்பல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று நிதின் கட்காரியே அறிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தமட்டில், 7 ஆயிரத்து 500 கி.மீட்டர் நீளத்திற்கு கடற்கரை இருக்கிறது. இதில் 7-ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதாவது, ஆயிரத்து 76 கி.மீ. நீளகடற்கரை தமிழ்நாட்டில் இருக்கிறது. எண்ணூர், சென்னை, தூத்துக்குடி ஆகிய மூன்று பெரிய துறைமுகங்களும், 7 சிறிய துறைமுகங்களும் மற்றும் 10 தனியார் முதலீட்டு துறைமுகங்களும் இருந்தாலும், கடல்வழி போக்குவரத்தையோ, சொகுசு கப்பல் சுற்றுலாவையோ, வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் கடல்வழி சாகச விளையாட்டுகளையோ, கடல்வழி சுற்றுலாவையோ இன்னும் சுற்றுலாத்துறை மேம்படுத்தவில்லை. துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூட அங்குள்ள சொகுசு படகுகளுக்கு இரவு உணவுக்காக சென்றால், கடலில் மிதந்து கொண்டே பொழுதுபோக்குக்காக பாடல்-நடனங்களையும் பார்க்கமுடியும், நல்ல உணவுகளையும் உண்ணமுடியும் என்ற வகையில், அங்குபோவது கட்டாயம் என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

அண்டை மாநிலமான கேரளாவில் கூட தற்போது தண்ணீரில் இறங்கும் கடல் விமானத்தை வெகு விரைவில் அறிமுகப்படுத்தவதற்கான முயற்சிகள் நடக்கிறது. விமானத்தளம் போன்று இந்த கடல் விமானம் வந்து இறங்க தண்ணீர் தளமாக ஒரு இடம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, ஏற்கனவே கொச்சிக்கும் - லட்சத்தீவுக்கும் இடையே இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டில் இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், சுற்றுலாத்துறை அதை சரியாக பயன்படுத்தவில்லை என்ற ஒரு நிலை இருக்கிறது. தேர்தல் முடிந்து அடுத்து ஆட்சிக்குவரும் அரசு, இதில் தீவிர கவனம் செலுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், கடல்வழி விளையாட்டுகள், சொகுசு கப்பல்கள், பயண கப்பல்கள், துபாய் போல மிதக்கும் ஓட்டல்கள் என்று பல கடல்வழி சுற்றுலா வசதிகளுக்கான முயற்சிகளை ஆராய்ந்து அறிமுகப்படுத்த வேண்டும். சுற்றுலா என்பது பண்பாட்டு பரிமாற்றம் என்பது மட்டுமல்லாமல், அரசுக்கும் அதிக அளவில் வருமானம் ஈட்டித்தரும் என்பதால், தமிழக அரசின் சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை, சிறு துறைமுகங்கள் துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். இதுபோன்ற சுபகாரியங்களை நடத்தும் சிறிய கப்பல்களை தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் விடலாமே!.

எழுத்துக்களின் உருவாக்கம் 07/03/2016

பேச்சு வழக்கை மொழி என்று கூறினர். அந்த மொழியைத் தொடர்ந்து எழுத்து உருவானது. எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

கி.மு. 4000 ஆண்டிலேயே களிமண்ணை பேப்பர் போல் பயன்படுத்தி, அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்டவணைகள் போன்றவை எழுதப்பட்டன. போகப் போக பேசுகிற மொழியை பிரித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

காகிதம் என்று ஒன்று இல்லாத காரணத்தால் ஈரக் களிமண்ணை பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன்  ஈரக் களிமண்ணை அதன் மீது வைத்து பேக்கிங் செய்து விடுவார்கள். அதை உடைத்து விடாமல் மிக ஜாக்கிரதையாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பெற்றுக்கொண்டவர் பார்சலை லேசாக தட்டி உதிர்த்தால் போதும். உள்ளே உள்ள விஷயத்தை படிக்கலாம்.

ஆயிரக்கணக்கான குறியீடுகளை வேகமாக களிமண்ணில் எழுத கல்வியறிவு அதிகமாக தேவைப்பட்டதால், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சட்டம், மருத்துவம், அரசியல் போன்ற விஷயங்களை எழுதுவதற்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்படியாக எழுத்து என்பது முழு வடிவம் பெற 800 ஆண்டுகள் பிடித்தன. மொழி, மனிதனின் கைவசப்பட்டவுடன், அடுத்த கட்டமாக இலக்கியம் பிறந்தது. கி.மு.2000 ஆண்டில் பாபிலோனியர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவை தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழமொழிகளைக்கூட பாபிலோனியர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடமாக இருந்து இருக்க வேண்டும். ஒரு களிமண் குறிப்பில் அழகு நிலையங்கள் இருந்தால், அங்கே கிசுகிசுவும் கூடவே இருக்கும் என்கிற பழமொழி ஒரு கல்வெட்டில் கிடைத்து இருக்கிறது. இன்றளவும் பின்பற்றப்படும் ‘வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது‘ என்ற பழமொழியும் களிமண் குறிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நத்தை  வேகத்தில்  நகரும்  ரெயில்வே  திட்டங்கள் 07/03/2016

ஆங்கிலேயர், இந்தியாவை ஆண்ட நேரத்தில், அவர்கள் தந்த அருட்கொடை ஒன்று என்றால், அது  ரெயில்வே பாதைதான். 1853-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பயணிகள் ரெயில் மும்பையிலிருந்து தானேக்கு ஓடியது. ஆனால், அதற்கு முன்பே, இந்தியாவில் 1935-ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து செங்குன்றம் வரை பரிசோதனைமுறையில் ரெயில்பாதை அமைக்கப்பட்டு, இந்தியாவின் முதல் சரக்குரெயில் இந்த பாதையில்தான் ஓடியது. இவ்வளவு பெருமை படைத்த தமிழ்நாட்டில், ரெயில்வே திட்டங்களை பொறுத்தமட்டில் பெரிய அளவில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படாதது மிகவும் வருந்தத்தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மீட்டர் கேஜ்’ ரெயில்பாதை போட்டிருந்தார்கள், அதை அகல ரெயில்பாதை அதாவது, ‘பிராட் கேஜ்’ ஆக மாற்றும் திட்டங்கள் கூட இன்னும் முழுமையடையாதது, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதோ? என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வரை அகல ரெயில்பாதை போடும் பணிகூட மெல்லமெல்ல நகர்ந்து, 2008-ம் ஆண்டுதான் போக்குவரத்து தொடங்கியது. ரெயில் பயணத்தில் ‘‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரெயிலே’’ என்று மலைப்பாதையில் பயணம் செய்யும் சுகமே தனிசுகம்தான் என்று சொல்வார்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை ஒரு ரெயில்பாதை இருக்கிறது. அதுபோல, தென்மாவட்டங்களில் செங்கோட்டை-கொல்லம் இடையே 49.38 கி.மீ. தூரத்தில் செல்லும் பயணம் மேற்கு தொடர்ச்சிமலையில் எழில் கொஞ்சும் பசுமை காடுகளுக்கு நடுவே செல்லும்போது ரம்மியமாக இருக்கும். வழியில் 5 இடங்களில் மலைகளை குடைந்து குகைகள் வழியாக செல்ல வேண்டியதிருக்கும். இந்த ரெயில் பாதையில்தான் சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் ‘கொல்லம் மெயில்’ ஓடிக் கொண்டிருந்தது. இந்த கொல்லம் மெயில் 1904-ம் ஆண்டிலிருந்து ஓடிக் கொண்டிருந்தது. விருதுநகரிலிருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் இந்த ரெயிலில் செல்வதற்கு பயணிகளிடையே மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுபோல, திருச்செந்தூர்-நெல்லை-தென்காசி வழியாக இந்த பாதையில் சென்ற ‘மீட்டர் கேஜ்’ ரெயில்கள் சபரிமலை பக்தர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் பெரும் இணைப்பாக முன்பு இருந்தது.

முதலில் கொல்லம் வரை ஓடிய இந்த ரெயில், 1918 முதல் கொல்லம்-திருவனந்தபுரம் வரை ஓடத்தொடங்கியது. இந்த ரெயில்தான் ‘மீட்டர் கேஜ்’ ரெயிலில் முதலாவதாக குளுமை வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளையும், முதல் வகுப்பு ரெயில் பெட்டிகளையும் இணைத்துக் கொண்டு ஓடிய ரெயில் என்று பெயர் பெற்றது. இந்த ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக ஆக்குவதற்கு 2000-ம் ஆண்டிலிருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எவ்வளவோ ரெயில் பாதை திட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த ரெயில் பாதைத்திட்டம் மட்டும் நத்தை வேகத்தில் நகர்கிறதே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருந்தது. இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பாதையில் ரெயில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ‘பெட்டர் லேட் தேன் நெவர்’, தாமதமானாலும் பரவாயில்லை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆக, இனி சென்னையையும், கேரள தலைநகராம் திருவனந்தபுரத்தையும் இணைப்பதற்கு 3 வழிகளில் ரெயிலில் போக முடியும். ஏறத்தாழ 50 கி.மீ. ‘மீட்டர் கேஜை’ அகல ரெயில் பாதையாக்க 16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. இதுபோல, மதுரையிலிருந்து போடி வரை சென்று கொண்டிருந்த 86 கி.மீ. ‘மீட்டர் கேஜ்’ ரெயில்பாதையை, அகல ரெயில்பாதையாக்குகிறோம் என்று சொல்லி, 2010-ல் ரெயில்களை நிறுத்தி தண்டவாளங்களை பிடுங்கி விட்டு, அகல ரெயில் பாதையாக்கும் பணிகளும் நகராமல் இருக்கிறது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ரெயிலையே மறந்து விட்ட சூழ்நிலை இருக்கிறது. இதுபோல, தமிழ்நாட்டில் அறிவித்தும், நிறைவேற்றப்படாமலும் அல்லது போதிய நிதி ஒதுக்காமல் சுணங்கிக் கொண்டிருக்கும் வகையிலும், நிறைய திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு, எல்லா திட்டங்களையும் மாட்டுவண்டி வேகத்தில் இல்லாமல், உண்மையான ரெயில்வேகத்தில் நிறைவேற்ற எல்லாதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உடல் பருமனால் ஏற்படும் வியாதிகள் 06/03/2016

இன்றைக்கு உலகம் முழுக்க எல்லா நாடுகளிலுமே குண்டான மனிதர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். நல்ல உடல் நலமும், மனநலமும் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம்.உடல் உழைப்புக்கு அடுத்தபடியாக, அதிகமாக உண்பது உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. இந்த இரண்டு காரணங்களும் ஒன்று சேரும் போது,  உண்ணும் உணவு கொழுப்பாக மாறி, உடலில் தேங்கி உடல் பருமனை அதிகரிக்கிறது. உடல் பருமனை பொதுவாக ‘பி.எம்.ஐ.‘ என்ற குறியீட்டால் குறிப்பது வழக்கம். சாதாரண ஒரு மனிதனின் பி.எம்.ஐ. 18-க்கும் 24-க்கும் இடையில் இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான உடல். பி.எம்.ஐ. 25-க்கு மேல் போனால் அதிக உடல் எடை உடையவர் என்றும், பி.எம்.ஐ. 35-க்கு  மேல் இருந்தால் மிக அதிக உடல் எடை, பருமன் உடையவர் என்றும் பிரிக்கிறார்கள்.இதுதவிர வேறு காரணங்களும் உண்டு. மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும் கட்டி, அட்ரீனல் கணையத்தில் ஏற்படும் கட்டிகள், தைராய்டு சுரப்பியால் ஏற்படும் குறைபாடு, குறிப்பிட்ட சில வியாதிகளுக்காக தொடர்ந்து எடுக்கும் சில மருந்துகள் இவற்றால் உடல் எடையும், பருமனும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். சில நேரங்களில் எந்த பரிசோதனையிலும் கண்டுபிடிக்க கூட முடியாமல் போகலாம். உடல் எடை, பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சினைகள் வரலாம். அதில் முக்கியமாக இளம் வயதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் ஆகிவை சம்பந்தப்பட்ட வியாதிகள், உடலை தாங்கும் மூட்டில் ஏற்படும் தேய்மானம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிப்பதோடு, அதனால் ஏற்படும் வியாதிகளால் பல பிரச்சினைகள் வரலாம். எனவே உடல் பருமன் உடையவர்களுக்கு எடையுடன் சேர்த்து, மற்ற வியாதிகளுக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது.பொதுவாக பி.எம்.ஐ. 35 உடன் சர்க்கரை போன்ற வியாதிகள் இருந்தால் அவர்களுக்கு சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இரைப்பை மாற்றுப்பாதை, இரைப்பையின் கொள்ளளவை குறைக்கும் அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி மூலம் செய்யப்படுகின்றன. இந்த வகை சிகிச்சைகளுக்கு பின் அதிகபட்ச எடை குறைவதோடு, எப்போதும் எடை அதிகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொசு, யாரை கடிக்காது? 05/03/2016

உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. அது நமக்குத் தரும் தொல்லைகள் சொல்லி மாளாது. 2.5 மில்லி கிராம் மட்டுமே எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47 உள்ளனவாம்.3 ஆயிரம் வகை கொசுக்கள் இருந்தாலும், 80 வகை கொசுக்கள் மட்டுமே நம் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று பெரும் பாலான நாடுகளில் அறிவிக்கப் பட்டது கொசு தான். ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளையே அது உணவாக உட்கொள்கிறது. கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்  பெண் கொசுதான்.அதேபோல், கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கின்றன. காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜென்கள், கொசுக்களை கவருகின்றன. பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே. அதேநேரம் ‘வைட்டமின் பி‘ கொசுவின் எதிரி. இந்த வைட்டமின் பி சத்து உடலில் அதிகமாக இருப்பவர்களை கொசு நெருங்குவதில்லை.கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் ரசாயனம் அலெத்ரின் சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருளாகக் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற கேடுகளை உண்டாக்குகின்றன. உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவிக் கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில பூச்சிகளும் நம்மை கடிக்காது.