Search This Blog

Sunday, February 28, 2016


வியக்க வைக்கும் எறும்புகள் 29/02/2016

எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை குலையாமல் போவதைப் பார்த்திருக்கலாம். இந்த வரிசைக்கு காரணம் வாசனைதான். முன்னாள் போகும் எறும்பு ஒருவித வாசனையை தரையில் அல்லது சுவரில் விட்டுச் செல்கிறது. பின்னால் வரும் எறும்புகள் அந்த வாசனையை முகர்ந்து கொண்டே ஒரே வரிசையாக செல்கின்றன.

எறும்புகள் வரிசையாக செல்வதை நீங்கள் பார்த்தால் அவற்றின் பாதையில் ஒரு இடைவெளி கிடைத்தால் அல்லது அந்த இடத்தை தேய்த்து விட்டால், அப்போது அங்கு வரும் எறும்புகள் சற்று தடுமாறும். முன்னால் சென்ற எறும்பு விட்டுச் சென்ற அதற்கு வாசனை கிடைக்காமல் போவதுதான் இதற்கு காரணம்.

எறும்புகளுக்கு கண் உண்டு. ஆனாலும் வாசனையை வைத்துதான் வரிசையாக செல்கின்றன. அவற்றை போன்று ஒழுங்கான உயிரினத்தைப் பார்ப்பது கடினம். எல்லாமே மிகவும் சிநேகிதமாக இருக்கக்கூடியவை. எறும்புகள் தங்கள் கூட்டுக்குள் பூச்சிகளை கட்டிப்போட்டு வளர்க்கின்றன. சில எறும்புகள் மற்ற எறும்புகளின் கூட்டுக்குள் சென்று அங்கிருக்கும் எறும்புகளை கடத்தி வந்து அடிமைகளாக வைத்துக் கொள்கின்றன. அவற்றிலும் ஆக்கிரமிப்பு உண்டு.

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா எறும்பு வகைகள், ராணுவ அதிகாரிகள் வியக்கும்படி, தங்களது படைகளை படு எச்சரிக்கையுடன் நடத்திச் செல்கின்றன. அவைகளில் முன்னணிப்படை, பக்கவாட்டுப் படை, ஒற்றர்கள் எல்லாம் உண்டு. உணவை கச்சிதமாக அடுக்கி வைக்க சின்னக்குச்சி, இலை நுனி போன்றவற்றை ஆயுதமாக உபயோகிக்கும் எறும்புகளும் உண்டு. இவை எல்லாமே கூட்டமாக இருக்கும் போதுதான். தனி எறும்பு என்று பார்த்தால் ஒன்றுக்கும் பயன்படாத பூஜ்யம்தான்.

எறும்புகளில் ஆயிரம் வகைகள் உள்ளன. பாலைவனத்திலும் எறும்புகள் உண்டு. கடற்கரையில், மலைச்சாரலில், காட்டில் என்று எல்லா இடத்திலும் (எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர) இருக்கின்றன. 20 அடி உயரத்துக்கு புற்றுகள் கட்டும் எறும்புகளும் உண்டு.

பறக்கும் சைக்கிள் 28/02/2016

பெரிய நகரங்களில் வாகனங்களில் செல்வது சாகசம் நிறைந்த ஒன்றாக மாறி வருகிறது. சைக்கிளில் செல்வது கூட முடியாத ஒன்றாக உள்ளது. போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் அந்த நேரத்தில், அப்படியே பறந்து போனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும்.

அப்படியொரு எண்ணம்தான் லேரிநீல் என்பவருக்கு தோன்றியது. அதன் விளைவாக பறக்கும் சைக்கிளை கண்டுபிடிக்க அவர் விரும்பினார். டெக்சாஸ் மாநிலத்தின் அரோரோ பகுதியை சேர்ந்த இவரது விடாமுயற்சியில் உருவானது தான் பறக்கும் சைக்கிள்.

இந்த சைக்கிளை தயாரிக்க லேரிநீலுக்கு பல வருடங்கள் தேவைப்பட்டன. ஏகப்பட்ட தடைகளை கடக்க வேண்டியிருந்தது. இடையில் கண்டுபிடிப்பு நின்றுவிடுமோ என்று கூட பயந்தார். ஆனாலும் எதற்கும் கலங்காமல், தளராத மனதுடன் போராடி இறுதியில் கண்டுபிடித்துவிட்டார்.

பறக்கும் சைக்கிளை தரையிறக்கிய பின், அதன் இறக்கைகளை மடக்கி சாலைகளில் சாதாரணமாக செல்வதற்கு ஏற்ப மாற்றுவதுதான் மிகவும் கடினமாக இருந்தது. இந்த பறக்கும் சைக்கிளுக்கு ‘சூப்பர் ஸ்கை சைக்கிள்‘ என்று பெயர் வைத்தார்.

இதன் பவர் 582 சிசி. இது 68 அங்குலம் நீளமுள்ள இருக்கைகளை கொண்டுள்ளது. மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இதை இறக்குவதற்கு 20 அடி நீளம் கொண்ட சமதளம் இருந்தால் போதும். அதிக பட்ச வேகம் மணிக்கு 104 கி.மீ. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 5 மணி நேரம் பறக்கலாம். இதன் விலை 46 ஆயிரம் பவுண்ட். இந்திய மதிப்பில் ரூ.37 லட்சத்து 49 ஆயிரத்து 750.

இந்த சூப்பர் ஸ்கை சைக்கிளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. இதை ஓட்டுவதற்கு விமான பைலட் லைசென்சும், தரையில் ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்சும் வேண்டும். ‘பட்டர்பிளை ஏர் கிராப்ட்‘ என்ற நிறுவனம் இதன் தயாரிப்பு உரிமையை பெற்றுள்ளது. இதை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான பேட்டன்ட் உரிமையை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்த சூப்பர் ஸ்கை சைக்கிள் வேண்டும் என்று இப்போதே பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. எல்லைப் பாதுகாப்பு படைக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் டெக்சாஸ் மாகாண ராணுவம் இந்த சைக்கிளுக்கு நிறைய ஆர்டர் கொடுத்துள்ளது.

வசதி  படைத்தவர்களுக்கு மானியங்கள்  தேவையா? 29/02/2016


எந்தவொரு அரசாங்கத்துக்கும், பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிச்செல்லும்போதும், பட்ஜெட்டை தயாரிக்கும்போதும், ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ்வது பொருளாதார ஆய்வறிக்கையாகும். அந்த வகையில், நாட்டில் உள்ள அனைத்து நிலைமைகளையும் நன்கு ஆராய்ந்து, “நீங்கள் இப்படி சென்றால்தான் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடமுடியும், அந்த திசைநோக்கி செல்லமுடியும்” என்ற ஒரு நல்ல பாதையை பொருளாதார ஆய்வறிக்கை காட்டும். தற்சமயம் இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக தமிழரான அரவிந்த்  சுப்பிர மணியன் இருக்கிறார். அவர் தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை, பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். இந்த ஆய்வறிக்கையில், வருகிற ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் மக்களின் வாங்கும் திறன் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, இந்தியாவில் 30 சதவீதம் பேர்களை ஏழைகள் என்றும், 70 சதவீதம் பேர்களை வசதியுள்ளவர்கள் என்றும் பிரித்துள்ளது. இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறையை 3.9 சதவீதத்துக்குள் நிச்சயமாக வைத்துக்கொள்ளமுடியும் என்று கூறி, தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைகளையும், எதிர்காலத்தில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பதும் வரைபடம்போல காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், தேர்தல் நேரங்களில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, நாட்டின் வளர்ச்சிகளை மறைக்கும் வகையில், இலவசங்களையும், மானியங்களையும் அள்ளித்தருகிறோம் என்று கூறுவார்கள். ஆனால், பொருளாதார நிபுணர்கள், மானியங்களும், இலவசங்களும் குறைவாக இருக்கும் நிலையில்தான் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். எல்லோரும் சுற்றிச்சுற்றி சொன்ன கருத்தை, பொருளாதார ஆய்வறிக்கை பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டது. மானியங் களை முழுமையாக ரத்து செய்யச்சொல்லவில்லை. நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாய்வதுபோல, ஏழைகளுக்கான மானியங்கள், வசதிபடைத்தவர்களுக்கும் செல்லும் நிலைமையை சுட்டிக்காட்டி
இருக்கிறார்கள். மண்எண்ணெய், ரெயில்வே, மின்சாரம், சமையல் கியாஸ் சிலிண்டர், தங்கம், விமான பெட்ரோல், சிறுசேமிப்பு திட்டங்களுக்காக வசதிபடைத்தவர்களுக்கும் அளிக்கப்படும் மானியங்கள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கிறது. அவர்களுக்கு இந்த மானியத்தை தாராளமாக கொடுப்பதை நிறுத்தினால், அந்தத்தொகை மிச்சமாகி, ஏழைகளுக்காக செலவழிக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறுசேமிப்புக்கு அளிக்கப்படும் ஊக்க செலவுகளை நிறுத்தவேண்டும் என்று கூறுவது, இப்போதுள்ள சூழ்நிலையில் சரியாக இருக்குமா?. வருங்கால வைப்பு நிதி மற்றும் வரியில்லாத சேமிப்பு பத்திரங்கள் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களில் பணத்தை திரும்பப்பெறும்போது, அந்த தொகையை வரிக்கு உட்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போதே .25 சதவீத வட்டி பல சேமிப்பு திட்டங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டால், சிறுசேமிப்பு மீது ஆர்வம் மிகவும் குறைந்துவிடும்.

சமையல் கியாஸ் பொருத்தமட்டில், தற்போது 180 ரூபாய் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்குவதற்கு பதிலாக, மானியத்தோடு கூடிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். சமீபத்தில் நடந்த மற்றொரு ஆய்வில், சமையல் கியாசுக்காக கொடுக்கப்படும் மானியத்தில் 40 சதவீத பரமஏழைகள், 13 சதவீதத்தைத்தான் பெறுகிறார்கள். அதற்குமேல் உள்ள 60 சதவீதம் பேர்கள்தான் 85 சதவீதத்தை பெறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல, இந்தியாவில் தற்போது வருமானவரி கட்டுபவர்கள் 5.5 சதவீதம்தான். மற்ற பல நாடுகளைவிட, இந்தியாவில்தான் வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் அதிகம்பேர் வருமானவரி கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்புக்குரியதாகும். மொத்தத்தில், நாட்டின் வளர்ச்சிக்கான பல பரிந்துரைகள் இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாராளுமன்றத்தில் இதை முழுமையாக விவாதித்து, உரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும்.

Saturday, February 27, 2016


தட்டைப்பாதங்கள் தரும் வேதனை 26/02/2016

மனிதனின் பாதங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உடல் வலிமை உள்ளவர்களை சேர்த்துக்கொள்ளும் ராணுவம் கூட தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தடி போடுகிறது. ஏன்?

பிறந்த குழந்தையின் பாதத்தை தொட்டுப்பாருங்கள். அதன் வடிவம் தட்டையாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் 2 வயது வரை இந்த தட்டைப் பாதம் நீடிக்கும். 7 வயதுக்குள் 95 சதவீத குழந்தைகளுக்கு கீழ் பாதத்தின் நடுப்பகுதி உள்பக்கமாக வளையத் தொடங்கும்.  நம் அனைவரின் பாதங்களும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை. பல வடிவங்களில், பல அளவுகளில் காணப்படும். சொல்லப்போனால் ஒருவரின் வலது பாதத்துக்கும் இடது பாதத்துக்கும் இடையே கூட ஓரளவு வித்தியாசம் இருக்கிறது. சிலருக்கு நிற்கும் போது மட்டும் உடலின் எடை பாதத்தில் விழுவதால் பாதம் சற்று தட்டையாகத் தோன்றும். அவர்களே உட்கார்ந்தாலோ படுத்தாலோ பாதத்தின் நடுப்பகுதி சமத்தாக உட்புறம் வளைந்து நார்மலாகி விடும். இது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுள்ள தட்டைப் பாதம். பாதத்தின் இயல்பான வடிவத்தைக் காக்கும் தசைநார்கள் தொய்ந்து போயிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.

தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தினசரி வேலைகளில் பிரச்சினை இருக்காது. அவசரமாக ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கொள்வதில் கூட சிரமம் இருக்காது. ஆனால், நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்த்தால் பாதத்தில் குடைச்சல் ஏற்படும். தவிர ஓட்டப்பந்தய வீரராக வருவது கடினம். இதனால்தான் ராணுவத்தில் இவர்களுக்கு வேலை தருவதில்லை.

தட்டைப்பாதத்தில் எந்த வேதனையும் இல்லையென்றால் இது குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அதுபோலவே லேசான வலி அவ்வப்போது ஏற்பட்டு சரியானாலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சிக்கலைத் தரக்கூடிய தட்டைப்பாத வகையும் உண்டு. அதை இறுகிய தட்டைப்பாதம் என்கிறார்கள். இவர்களுக்கு பின் பாதத்துக்கும், நடுப்பாதத்துக்கும் இடையே உள்ள எலும்புகள் பிறப்பிலேயே இணைந்து ஒருவித எலும்புப் பாலம் போல் ஆகிவிடும். அங்கு நெகிழ்வுத் தன்மை குறைந்து அதன் காரணமாகவும் தட்டைப்பாதம் உண்டாகலாம். தட்டைப் பாதம் கொண்டவர்களுக்கு அதிக வலி ஏற்பட்டால் அதற்கென்று இருக்கும் காலணிகளை அணிந்து கொள்ளலாம். அதிலும் பயன் கிடைக்காவிட்டால் பாதத்தின் வெளிப்புறமும் உள்புறமும் அசைவை குறைக்கும் வகையில் ஆபரேஷன் செய்வதே நல்லது. இதையும் 15 வயதுக்கு மேல் செய்வதே சிறந்தது. அப்போதுதான் பாதம் முழு வளர்ச்சியடைந்திருக்கும்.

Friday, February 26, 2016


சாதுர்யம் நிறைந்த சர்ச்சில் 26/02/2016

சாகசம், சாதுர்யம், சாமர்த்தியம், வீரம், துணிச்சல் என்ற அத்தனை திறமைகளோடும் இரண்டாம் உலகப் போரை சந்தித்து இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தவர் தான், வின்ஸ்டன் சர்ச்சில். போர்க்களத்தில் நாட்டை வழிநடத்த சர்ச்சிலை விட சிறந்த பிரதமர் கிடையாது என்று புகழ்கின்றனர், இங்கிலாந்து மக்கள்.

1945-ம் ஆண்டு பிரதமராக இருந்த சர்ச்சிலின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. போரைக் கடந்து வந்த இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் தேர்தல் நடந்தது. இங்கிலாந்தின் ராணுவ வீரர்களை கிளர்ந்தெழச் செய்த சர்ச்சிலின் பேச்சுத்திறன், வாக்காளர்களை கவருவதற்கு பயன்படவில்லை. ஆம், சர்ச்சிலை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சியினர் பெரும் வெற்றி பெற்றனர்.

“போர் நடக்கும் போது பிரதமராக இருக்க சர்ச்சிலை தவிர தகுதியானவர் யாருமே கிடையாது. ஆனால், போரின் இடிபாடுகளில் இருந்து நாட்டை மீட்டு சீரமைக்கும் பணி என்பது முற்றிலும் மாறுபட்டது. அதற்கு சர்ச்சில் பொருத்தமானவர் இல்லை“ என்று மக்கள் முடிவு கட்டிவிட்டனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவரான அவர், அடுத்த தேர்தலில் (1951) வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகி விட்டார்.

சர்ச்சிலுக்கு சில சென்டிமெண்டுகள் இருந்தன. அவர் தனது கைத்தடியை எப்போதும் கூடவே வைத்திருப்பார். ஒருமுறை மறந்து வைத்துவிட்டுப் போன போது அவரது கார் விபத்துக்குள்ளானது. அதன்பின் கைத்தடி மீதான சென்டிமெண்ட் இன்னும் அதிகமானது.

இரண்டாம் உலகப்போரில் பங்கெடுப்பு, இரண்டு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்து ராஜதந்திர வித்தைகளை செய்தது, உலக சரித்திரத்தை திசை திருப்பியது என்று வாழ்நாள் முழுவதும் பரபரப்பாக இருந்தாலும், சர்ச்சில் தனக்கென்று நேரம் ஒதுக்கிக்கொண்டு தன்னுடைய கலை ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய ‘தி செகண்ட் வோர்ல்ட் வார்‘ புத்தகம் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது. சர்ச்சில் மிகச் சிறந்த ஓவியரும் கூட.

சர்ச்சிலின் கடைசி காலத்தில் ஒருவர், ‘மரணம் என்றால் உங்களுக்கு பயமா?‘ என்று அவரிடம் கேட்டார். அதற்கு சர்ச்சில் ‘நான் என்னுடைய தயாரிப்பாளரை (கடவுள்) நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் தயாரா என்று தெரியவில்லை‘ என்று பதில் அளித்தார். 1965 ஜனவரி 25-ல் தனது 90-வது வயதில் சர்ச்சில் மறைந்தார்.

Thursday, February 25, 2016


நிறங்கள் மூலம் சிகிச்சை 25/02/16


நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு ‘கிரோமோதெரபி‘ என்று பெயர். இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை.

ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு. இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது.

2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி. 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தை பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர்.

சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், நீல நிறம் தொண்டைப் பகுதியையும் இண்டிகோ நிறம் சருமத்தையும் ஊதா நிறம் தலைப் பகுதியையும் காப்பதாக இந்த மருத்துவமுறை சொல்கிறது.

‘டிஸ்லெக்சியா‘ போன்ற கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள். ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள். இதனை அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள், ஆய்வாளர்கள்.

வைர எரிகற்கள் 24/02/2016

வானம் ஒரு பிடிபடாத மர்மம். விண்ணில் இருந்து அவ்வப்போது ஏதாவது ஒன்று பூமியில் வந்து விழுகிறது. அது என்னவென்று சுதாரிப்பதற்குள், எல்லாவற்றையும் எரித்து விடுகிறது. அப்படித்தான், 1908 ஜூன் 30-ந்தேதி ஒரு சம்பவம் நடந்தது.  ரஷியாவின் மத்திய சைபீரியா பகுதியான துங்கஸ்காவில் அதிகாலை நேரத்தில் வானத்தில் இருந்து ராட்சத தீக்கோளம் பூமியை நோக்கி மிக வேகமாக வந்தது. அது விழுந்து வெடித்தபோது, நூற்றுக்கணக்கான மைல் தொலைவுக்கு சத்தம் கேட்டது.  அதன் தாக்கத்தால் இரண்டாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த மரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இதனால் ஏற்பட்ட பயங்கர அதிர்வு பூமியை இரண்டு முறை சுற்றி வந்தது. இது நடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும்கூட, வானத்தில் பரவியிருந்த நெருப்புத் துகள்களால் இரவு-பகல் என்ற வேறுபாடின்றி வெளிச்சம் நிறைந்திருந்தது.

அந்த வெளிச்சத்தில் துங்கஸ்காவில் இருந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லண்டனில் இரவில் பேப்பர் படிக்க முடிந்தது. இந்த சம்பவத்தைத்தான் விஞ்ஞானிகள் ‘துங்கஸ்கா நிகழ்ச்சி‘ என்று அழைக்கிறார்கள்.

இது எதனால் ஏற்பட்டது என்று உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், தான் தெரிந்தது அதுவொரு வால் நட்சத்திரத்தின் பகுதி என்பது. கிரகங்களுக்கு நடுவே சிறியதும், பெரியதுமாக ஏகப்பட்ட வால் நட்சத்திரங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.  சிறியது என்பது தூசு அளவு இருக்கும். பெரியது என்பது இலங்கை தீவு அளவு இருக்கும். துங்கஸ்காவில் விழுந்த எரிகல் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவு இருந்தது. மணிக்கு 70 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வந்து பூமி மீது மோதியிருக்கிறது.  எரிகற்கள் என்பது வானச்சத்திரங்களில் இருந்து விழும் துண்டுகள் தான். ஒரு இரவுக்கு 10 எரிகற்கள் வரை பூமியில் விழுகின்றன. இதுவரை விழுந்த எரிகற்களில் மிகப் பெரியது 9 அடி நீளம் கொண்டது. பெரும்பாலும் எரிகற்கள் பூமியின் பாதையில் காற்றுமண்டலத்தில் நுழைந்ததும் வெப்பத்தால் எரியத்தொடங்கி விடுகின்றன.

சுமார் 100 கி.மீ. உயரத்திலேயே அவை சாம்பலாகிவிடுகின்றன. சாம்பலாவதற்குள் பூமியை வந்தடையும் கற்கள் பெரும்பாலும் கடலில்தான் விழுகின்றன. இதற்கு காரணம் பூமியின் பெரும்பகுதி கடலாக இருப்பதுதான்.  எரிகற்களில் இரண்டு வகை உள்ளன. அவை உலோக எரிகற்கள், வைரம் கலந்த எரிகற்கள். இதில் உலோக எரிகற்கள் நிக்கல், இரும்பு கலவையுடன் கூடியது. பூமியில் விழும் எரிகற்களில்  சில சமயம் வைரக்கற்களாக கொட்டவும் வாய்ப்பு உண்டு. கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால், எரிகற்கள் அப்படியல்ல. அவை கிரகங்களில் மோதி அங்கேயே தங்கி விடுகின்றன.  எரிகற்களில் இருந்து நமது பூமியை காப்பாற்றுவது நமது காற்றுமண்டலம்தான். அது மட்டும் இல்லாவிட்டால் பூமியெங்கும் பள்ளங்களாகவும், எரிகல் பாறைகளாகவும் இருக்கும். ஒவ்வொரு கல் விழும்போதும் ஏராளமான உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும். இவையெல்லாம் நடைபெறாமல் காற்றுமண்டலம் தான் நம்மை காப்பாற்றுகிறது. அது நமது அதிர்ஷ்டம்தான். 

உள்ளாட்சி  அமைப்புகளில் 50  சதவீத  பெண்  பிரதிநிதிகள் 24/02/2016

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று பிறந்தநாள். 68 வயது முடிந்து 69-வது வயது பிறக்கும் இந்த நன்னாளில், எல்லோரும் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள். எப்போதுமே தனது திட்டங்களில் பெண்களை மையப்படுத்தும் ஜெயலலிதா, இந்த பிறந்தநாளுக்கு 4 நாட்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் ஒரு மசோதாவை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றி, தாய்க்குலத்துக்கு தன் பிறந்தநாள் பரிசை அளித்துவிட்டார்.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் மேயர்கள், 919 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுபோல, 124 நகராட்சிகளிலும் தலைவர்கள், 3,613 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 528 பேரூராட்சிகள் இருக்கின்றன. இங்கும் தலைவர்களும், 8,238 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுபோல, 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் தலைவர்களும், 99,333 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுதவிர, மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் என்று மொத்தம் 1,32,883 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இந்த அமைப்புகளுக்கெல்லாம் அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது. அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இருந்தாலும், 40 சதவீதத்துக்குமேல் பெண்கள் வெற்றிபெற்று உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை அலங்கரித்தனர். இப்போது 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்தன்மூலம், பெண்மைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு பெரிய பெருமையை அளித்துள்ளார்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதில், ஆண்களும், பெண்களும் ஏறத்தாழ சரிசம எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும். 1,000 ஆண்களுக்கு 996 பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 50 சதவீதத்தை பெண்கள் நெருங்கிவிட்டார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அளித்திருப்பது நிச்சயமாக வரவேற்புக்குரியதாகும். மத்திய அரசாங்கம் நாடுமுழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றவகையில், ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர பரிசீலித்து கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் மெதுவாக கொண்டுவாருங்கள், நாங்கள் அதற்கு முன்பே 50 சதவீத இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டுவருகிறோம் என்ற வகையில், தமிழ்நாடு செயல்பட்டிருப்பது நிச்சயமாகவே பெருமைக்குரியதாகும்.

சில மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்தான் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கிராமப்பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது நிச்சயமாகவே பெருமைக்குரியதுதான். ‘‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற பாரதியின் கனவு, தமிழ்நாட்டில் நனவாகிவிட்டது.

பெண்கள் தங்களுக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, பொதுவாழ்க்கையில் நுழைவதற்கு வாசலாக இருக்கும், இந்த அமைப்புகளில் இந்த தேர்தல்களில் பங்கேற்று, அவர்களின் ஒப்பற்ற சேவைமூலம் தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கவேண்டும். பொதுமக்களோடு நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள அவர்களின் நிறைகுறைகளைக் கேட்டு, அவர்களுக்கு சேவைசெய்ய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் பெரிதும் உதவும் என்பதால், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வமுடையவர்கள் அனைவரும், அக்டோபர் மாதத்தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள இப்பொழுதே மக்கள் பணியில் ஈடுபடவேண்டும்.

Tuesday, February 23, 2016

மனதை பாதிக்கும் கொடூரங்கள்

 ஒரு கொடூர சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? இயற்கை பேரிடர், விபத்து போன்ற சம்பவங்களை நேரில் பார்ப்பவர்களின் மன அதிர்ச்சியை க்ரோ மேடெல் என்பவர் கண்டறிந்து கூறியிருக்கிறார். 1995-ம் ஆண்டில் ரவண்டா நாட்டில் நடந்த கலவரத்தின் போது நடந்த படுகொலைகளை அந்த நாட்டை சேர்ந்த 95 சதவீத குழந்தைகள் நேரில் பார்த்தார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தங்களின் தாயும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை நேரில் பார்த்தார்கள். நிறைய குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் கத்தியால் குத்தப்பட்டோ அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டோ கொல்லப்பட்டார்கள். அங்கு வாழ்ந்த குழந்தைகள் மற்றவர்களை போன்று தாங்களும் சாகத்தான் வேண்டியிருக்கும் என்று முடிவெடுத்து மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 80 சதவீத குழந்தைகள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள அடர்த்தியாக மண்டிக்கிடந்த புதர்களிலும், குன்றுகளிலும் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். உண்ண உணவில்லாமல் பட்டினி கிடந்தார்கள். திறந்த வெளியில் கடுங்குளிரில் அவதிப்பட்டார்கள். பல குழந்தைகள் 8 வாரம் வரை இப்படி வாழ்ந்தார்கள். ரவண்டா நாட்டில் குழந்தைகள் படித்து வந்த பல பள்ளிகள் குண்டுகளால் தகர்க்கப்பட்டன. தங்களுடைய நண்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்த குழந்தைகள் நேரில் கண்டார்கள். நண்பர்கள் பலர் காணமல் போனார்கள். பல  குழந்தைகள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றார்கள். இந்த குழந்தைகள் வாழ்ந்து வந்த பல வீடுகள் எரித்து தரைமட்டமாக்கப்பட்டன. எரிந்து கொண்டிருக்கும் வீடுகளுக்குள் குழந்தைகள் உட்பட பலர் தள்ளப்பட்டு கொல்லப்பட்டதை குழந்தைகள் நேரில் கண்டனர். 10 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களை கடத்தி சென்று, அவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி கொடுத்து அவர்களை யுத்த களத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்த குழந்தைகள் ‘வாழ வேண்டும்‘ என்ற ஆர்வத்தையே இழந்து விட்டிருந்தார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சிகள் இவர்களை ஒரு ஜடப்பொருளாக மாற்றியிருந்தன. இவர்கள் விளையாடுவதையும், சிரிப்பதையும் அறவே மறந்து விட்டு அழுது வந்தார்கள். சில சமயங்களில் பழிவாங்க வேண்டுமென்ற வெறி இவர்களை ஆட்கொண்டது. இவர்களில் பலர் சமூக விரோதிகளாக உருவெடுத்தார்கள் என்பது தனிக்கதை.

இவர்களுக்கு  என்ன  நியாயம்? - மும்பை குண்டு வெடிப்பு (22/02/2016)

இந்தியாவை மட்டுமல்ல, உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் மும்பை நகரில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி முதல் 4 நாட்கள் நடந்தன. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அனுப்பிய 10 தீவிரவாதிகள், மும்பை நகருக்குள் புகுந்து 12 இடங்களில் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசியும், துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் 166 மக்களை கொன்றனர். இவர்களில் கடமை தவறாத துணிச்சல்மிக்க போலீஸ் அதிகாரிகள், காவலர்களும் அடங்கும். 308 அப்பாவி மக்கள் காயமும் அடைந்தனர். இந்த 10 தீவிரவாதிகளில் 9 பேர்களை உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய போலீசாரும், ராணுவத்தினரும் சுட்டுக்கொன்றுவிட்டனர். சதிகாரர்களில் ஒருவனான அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்குப்பிறகு தூக்கிலிடப்பட்டான். இந்த கொடூரசம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான இடங்களை கண்டறிந்து, தீவிரவாதிகளுக்கு துப்பு சொன்னதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான டேவிட் ஹெட்லியை, அமெரிக்க உளவு நிறுவனம் 2009-ம் ஆண்டு கைது செய்தது. அவருக்கு அமெரிக்க கோர்ட்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, தற்போது அமெரிக்க சிறையில் அடைத்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிவிட்ட ஹெட்லி, அமெரிக்க சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு சாட்சி அளித்து வருகிறார். இந்த சாட்சியத்தில் அவர் மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்களை அளித்ததோடு மட்டுமல்லாமல், குஜராத் மாநில முதல்-மந்திரியாக நரேந்திர மோடியும், உள்துறை மந்திரியாக அமித் ஷாவும் இருந்த நேரத்தில், 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி குஜராத்தில் ஆமதாபாத் அருகே நடந்த ஒரு என்கவுண்ட்டர் வழக்கில் ஒரு முக்கியமான சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவலைத்தந்துள்ளார். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கலவரத்துக்கு பழிவாங்குவதற்காக வந்ததாக மும்பையை அடுத்த மும்பிராவைச்சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பரான ஜாவீது ஷேக் என்று சொல்லப்படும் பிரானேஷ் பிள்ளை, பாகிஸ்தானை சேர்ந்த அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோஹர் ஆகியோரை குஜராத் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நரேந்திர மோடியைக் கொல்வதற்காக வந்தவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது போலி என்கவுண்ட்டர் என்று டி.ஐ.ஜி. வன்சாரா உள்பட ஜி.எல்.சிங்கால், பி.பி.பாண்டே என்று 8 போலீஸ் அதிகாரிகளை குற்றம்சாட்டி இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தபிறகு, குஜராத் ஐகோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த உயர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இப்போது ஹெட்லி, கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப்படையை சேர்ந்தவர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தான் புலன் விசாரணை நடவடிக்கையில் உள்ள முன்னாள் உளவுப்பிரிவு சிறப்பு இயக்குனர் ராஜேந்திர குமாரும் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் சொல்லிவந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து மீண்டும் ஒரு பாரபட்சமற்ற புலன்விசாரணை நடத்தி யார் சொல்வது உண்மை என்பதை கண்டறிய வேண்டும். ஒருவேளை ஹெட்லி சொல்வது உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சிறையில் இருந்ததற்கும், அவர்களின் பணிப்பாதிப்புக்கும் என்ன நியாயம் கிடைக்கப்போகிறது?. நரேந்திர மோடி, அமித் ஷா மீது அரசியல் ரீதியாக சொன்ன பழிச்சொற்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கப்போகிறது?, இனி எந்த வழக்கு என்றாலும், ஆழமாக விசாரணை நடத்தவேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துவிடலாம். ஆனால், ஒரு நிரபராதி அநியாயமாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது.