Search This Blog

Monday, August 31, 2015


மூட நம்பிக்கை மலைத்தொடர்
உலகில் பல்வேறு மர்ம சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான விடைகள் மட்டும் சில நேரங்களில் கிடைப்பதில்லை. அதனால் பல்வேறு சம்பவங்கள் மூடநம்பிக்கையால் தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு இடம்தான் அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மூடநம்பிக்கை மலைத்தொடர். இதை சுற்றி நிகழும் சம்பவங்கள் எப்போதும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கின்றன. இந்த மலைத்தொடரை ஜக்கப் வால்ட்ஸ் என்பவர் 1800-ல் கண்டுபிடித்தார். அங்கு அவருக்கு ஒரு பெரிய தங்கப் புதையல் இருந்த இடம் தெரிந்ததாகவும், அதை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். கடைசியாக அவர் நோயால் மரணப் படுக்கையில் கிடந்தபோது, அவருடைய நெருங்கிய நண்பரிடம், புதையல் ரகசியத்தை சொன்னாராம். அந்த நண்பர் அதை வேறு சிலரிடம் சொல்ல, அவர்களில், ஒருவர் அவரை கொன்றுவிட்டார். இதனால், அந்த புதையல் எங்கே இருக்கிறது என்ற சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதையல் இருக்கும் கதை காட்டுத்தீயைப் போல பல இடங்களுக்கும் பரவியது. அப்போது புதையலை தேடிச் சென்றவர்களில் பாதிக்கு மேல் திரும்பி வரவில்லை. அவர்கள் மர்மமான முறையில் இறந்து போனார்கள்!. திரும்பி வந்தவர்கள் புதையலை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு வந்ததாக கூறினர். மேலும் அவர்கள் மலைத்தொடரில் புதையலுக்குப் பதில், தங்களுக்கு முன்பு அங்கு சென்றவர்களின் எலும்புக் கூடுகளைத்தான் கண்டார்களாம். அதைப்பற்றி பலவித கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அதனால் அந்த பகுதி மர்மப் பிரதேசமாக மாறியது. மேலும் சிலர் அங்கு ‘டார்டும்ஸ்‘ என்ற குள்ளமான மனிதர்கள் வாழ்வதாகவும், அவர்கள் தான் புதையலை காப்பதாகவும் கூறினார்கள். இதனால் அந்தப் பகுதி மேலும் மர்ம முடிச்சுகள் நிறைந்த பகுதியாக மாறியது. இன்னும் சிலர் அங்கு ‘ஏலியன்ஸ்‘ என்ற வேற்றுக்கிரக மனிதர்கள் வந்து செல்வதாகவும், ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். இன்னும் சிலரோ அந்த இடத்தில் மலைகளுக்கு நடுவே மிகச் சிறிய இடுக்குகள் இருக்கின்றன என்றும், அது நரகத்தின் நுழைவுவாசல் என்றும் அங்கிருந்த மதகுருமார்கள் ஒரு கட்டுக் கதையை கட்டிவிட்டதால், அந்த பகுதியில் திகில் பற்றி எரிந்தது. மக்கள் அந்தப் பக்கம் போகவே பயந்தனர். ஆனால், விஞ்ஞானிகள் வேறு விதமாக கூறுகிறார்கள். மலைத்தொடரில் எப்போதும் வெப்பம் 115 முதல் 125 பாரன்ஹீட் வரை கொதித்துக்கொண்டிருக்கும். இங்கு நீர்நிலைகள் எதுவும் இல்லை. மழை பெய்தாலும் உடனே நீர் வழிந்தோடி வற்றிவிடும். இந்த மலைத் தொடர் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. பல குறுகிய குகைகளும் நிறைய உள்ளன. மிகக் குறுகலான இந்த மலை இடுக்குகளில் நுழைந்து வெளிவரமுடியாமல் மாட்டிக்கொண்டும், நீர் இன்றியும் பலர் இறந்திருக்கிறார்கள் என்கின்றனர். ஆனாலும் மனிதனுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆசை விடவில்லை. உயிர் போனாலும் பரவாயில்லை. புதையலை அடைந்தே தீருவோம் என்று இன்னும் பலர் அங்கு சென்று கொண்டே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திரும்புவதே இல்லை.

ஒரே நாளில் 97 லிட்டர் பால் தந்த பசு
பசு என்பது பெண் மாட்¬யும், காளை என்பது ஆண் மாட்டையும், இவற்றின் குட்டியை கன்று என்றும் அழைக்கிறார்கள். பசு மாட்டால் உயரமான படிகளில் ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. இறங்குவதற்கு வசதியாக அதன் கால் அமைப்பு இல்லை. அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காததால் அதனால் மேலிருந்து கீழே படிகள் மூலம் இறங்க முடியாது. பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 முதல் 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்கிறது. ஒரு நாளில் 10 முதல் 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும். சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணத்தை கொடுக்கும். ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் இரை உண்ணவும், 7 முதல் 8 மணி நேரம் அதனை அசை போடவும் பசுவுக்கு நேரம் தேவை. அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 முதல் 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது. ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 லிட்டர் சிறு நீரும், 15 முதல் 20 கிலோ சாணத்தையும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இதன் அளவு இன்னும் அதிகரிக்கும். பசு மாடு நாள் ஒன்றுக்கு சுமார் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கக் கூடியது. மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகிறது. பசு மாட்டின் வயிற்றில், உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன. மாட்டின் கண்கள், முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது. பசு மாட்டின் நுகரும் உணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 முதல் 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும். பால் கறக்கும் பசு மாடு ஒரு நாளுக்கு சுமார் 40 முதல் 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுத்துகிறது.. பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி பாரன்ஹீட். உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால். 
உலகிலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 லிட்டர் பாலைச் சுரந்தது. ஒரே நாளில் 97 லிட்டர் பாலைச் சுரந்து உலக சாதனை படைத்த மாட்டின் பெயர் உர்பே ஆகும். இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும். இப்படி பசுவைப் பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன.

வயிற்றுப்போக்கை தடுக்க வழிகள்
குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது வயிற்றுப் போக்கு. இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் எனும் கிருமிகளால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலம் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நா வறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குடன் தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், சிறுநீர் அற்றுப் போதல், குழிவிழுந்த கண்கள், வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தான கட்டம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள்.வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு எந்த காரணம் கொண்டும் உணவு கொடுப்பதை நிறுத்தக்கூடாது. ஏனெனில் இது குழந்தையை மேலும் சோர்வடையச் செய்துவிடும். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடரலாம். வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு கெட்டியான உணவுகளை நிறுத்திவிட்டு நீர் ஆகாரமாக கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும். இதன்மூலம் இழந்த நீர் சத்தை குழந்தைகளால் பெற முடியும். வயிற்றுப்போக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும். உப்புக் கரைசல் பாக்கெட் கடைகளில் விற்கிறது. அதனை வீட்டிலேயே தயாரித்தும் கொடுக்கலாம். ஒரு டம்ளர் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்கரையும் கலந்து கொடுக்க நீர்ச்சத்து சமநிலையை அடையும். உணவு உண்ணும் குழந்தைகளுக்கு இளநீர், மோர், தயிர், அரிசிக் கஞ்சி போன்றவை கொடுப்பது நல்லது. வயிற்றுப்போக்கு இருக்கும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிப்பார்கள். இதனை தடுக்கக் கூடாது. இதற்காக அதிக அளவு தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதனை பெற்றோர் உதாசீனப்படுத்தக்கூடாது உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விடுத்து கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடல் தட்டுதல் என மூட நம்பிக்கையோடு செயல்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

செவித்திறனை பாதிக்கும் ‘ஹெட்போன்’ இசை
மொபைல் என்ற நவீனம் வந்த பின், ஹெட்போன் மூலம் பாடல் கேட்பது தாறுமாறாக வளர்ந்து இருக்கிறது. பஸ், ரெயில், இரைச்சல் மிகுந்த போக்குவரத்து நெரிசலில், அதிக சத்தத்தில் ஹெட்போனில் பாடல் கேட்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அருகில் சென்றால் அந்த ஹெட்போனையும் மீறி பாடல்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும். இப்படி காதுக்குள் இசை கேட்பவர்களுக்கு, காது பாதிக்கப்பட்டால், மீண்டும் கேட்கும் சக்தியை பெறவே முடியாது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு டினைடஸ் என்று மருத்துவப் பெயர். இந்த நோய் வந்துவிட்டால், சுற்றுப்புறம் சத்தமின்றி அமைதியாக இருந்தாலும், நம் காதுக்குள் மட்டும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். இது சில சமயம் மென்மையாகவும், பல நேரங்களில் தாங்கமுடியாத அளவுக்கு அதிக ஒலியுடனும் கேட்கும். இந்த டினைடஸ் வந்துவிட்டால், காதுக்குள் மணி அடிப்பது போலவோ, கடல் அலையைப் போன்ற சத்தமோ, காதுக்குள் காற்று அடைத்துக் கொண்டது போலவோ, சலசலவென்று தண்ணீர் ஓடுவது போலவோ அல்லது இனம் புரியாத ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சில நிமிடங்களே இதன் தாக்கம் இருக்கும். பின்னர் காணாமல் போகும். பல ஆண்டுகளாக இதில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுபவர்களும் உண்டு. இதில் அகநிலைக் காது இரைச்சல், புறநிலைக் காது இரைச்சல் என வேறுபட்ட நிலைகள் உள்ளன.இவை வருவதற்கு முதுமை, அதீத சத்தம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, இதய நோய்கள், மத்திய நரம்பு மண்டல நோய்கள், தசைநார் கூட்டு செயற்பாட்டுக் கோளாறுகள், கர்ப்பப்பை, வாய், முதுகெலும்பு நோய்கள், வளர்சிதை மற்றும் சிறுநீரக நோய்கள், கழுத்து நரம்புகளின் ரத்த ஓட்ட மாற்றங்கள், காதில் உள்ள கட்டிகள் போன்றவை காரணங்களாக கருதப்படுகின்றன. இவை எதுவுமே இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு ஹெட்போன் இசையால் இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் உதட்டு அசைவை கவனித்துத்தான் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது தேவையா? இசையை ரசிக்க நினைப்பவர்கள், இரைச்சல் உள்ள இடங்களில் அதை கேட்காதீர்கள். இரவு நேரத்தில் அமைதியான இடத்தில் மிகக் குறைந்த சத்தத்தில் ஹெட்போனில் இசையை கேளுங்கள். அதுவும் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே ஹெட்போன் இசையை தவிர்ப்போம். காதுகளைக் காப்போம்!
22.08.2014

ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு
பணம் இன்றைய உலகை ஆளும் மிக முக்கிய பொருள். பணம் வருவதற்கு முன்பு பண்டமாற்று முறையில் வர்த்தகம் நடந்தது. இது ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. உலோக நாணயங்கள் 2400 வருடங்களுக்கு முன்பு உபயோகத்தில் வந்தன. அதன் நவீன வடிவம் தான் இன்றைய ரூபாய் நோட்டுகள். ரூபாய் நோட்டு கசங்கி இருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அல்லது கறைகள் படிந்திருந்தாலோ அதன் மதிப்பை அது இழப்பதில்லை. எந்த நிலையில் இருந்தாலும் அதன் மதிப்பு மாறுவதில்லை. நமது மக்கள் தான் செல்லாது என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் வாங்குபவர்கள் அதிக லாபம் பெறுகிறார்கள். அவர்கள் குறைந்த பணத்தைக் கொடுத்து, வங்கியில் முழுத் தொகையையும் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எந்த பணமும் எந்த நிலையிலும் அதன் மதிப்பை இழப்பதில்லை என்று. வட இந்தியாவில், பல இடங்களில் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலும் முகம் சுழிக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் தான் கொஞ்சம் கசங்கியிருந்தாலும் செல்லாது என்று சொல்லிவிடுகிறார்கள். சரி, இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா? குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அதிக செலவும், மதிப்பு அதிகம் கொண்ட நோட்டுகள் அச்சடிக்க குறைந்த செலவும் ஆகிறது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.1.14 செலவாகிறது. அதனால்தான் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்கள். (இப்போது மீண்டும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்). அதேநேரம் ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 48 பைசா மட்டுமே செலவாகிறது. பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 96 பைசாவும், இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 46 பைசாவும், ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 81 பைசாவும், நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 79 பைசாவும், 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க 3 ரூபாய் 58 பைசாவும், ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க 4 ரூபாய் 6 பைசாவும் செலவாகின்றன. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், 100 ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட, 50 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு அதிகம். ரூபாய் நோட்டுகள் கிழிவதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. ஒரு நாட்டில் எந்த அளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒரு நாடு அதன் விருப்பத்திற்கு ஏற்ப நோட்டை அச்சடித்துவிட முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், பணம், நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதன்படியே ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடிக்க முடியும். அந்தக் கட்டுப்பாடு மட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு நாடும் அதன் இஷ்டத்துக்கு பணத்தை அச்சடித்து வெளிவிட்டு விடும்.

புதிய 7 அதிசயங்கள் உருவான விதம்
உலகின் ஏழு அதிசயங்களாக போற்றப்பட்டவை எல்லாம் பழைய அதிசயங்களாகவே இருந்தன. அவற்றில் பல அழிந்து விட்டன. இதனால் புதிய உலக அதிசயங்கைளை பட்டியல்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்பினர். ஹீரோடோடஸ் (கி.மு 484, கி.மு.425) மற்றும் காலிமாசஸ் (கி.மு. 305, கி.மு.240) காலத்தை நோக்கி பின்சென்றால், கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை, அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். இவற்றில் கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ போன்ற பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன. நியூ 7 ஒண்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின்படி, சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநரும், விமான பைலட்டுமான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999-ல் தொடங்கினார். இந்த திட்டத்தின் இணைய தளம் 2001-ல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் 700 அமெரிக்க டாலர்கள் அளித்தார். இந்தப் புதிய அதிசய பட்டியலுக்கான பட்டியலில் ஒரு இடம் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அந்த அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், அவை இன்னும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும் என்று பல விதிகளை வகுத்தார். அதன்படி நவம்பர் 24, 2005 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. அதன்பின்னர், ஜனவரி 1, 2006-ல் இந்த பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்பின்னர் அந்தப் பட்டியலும் பரிசீலிக்கப்பட்டது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த “நியூ-7 ஒண்டர்ஸ் தகுதியாளர்” என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு இறுதித்தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது, சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மகாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈபிள் கோபுரம் உள்ளிட்டவற்றையும் அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகளுடன் வெளியிடப்பட்டது.

நெல்லிக்கனி தரும் நன்மைகள்
மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் நெல்லிக்கனியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையானது. நெல்லியின் மருத்துவ குணங்கள் வேறு பழங்களில் இல்லையென்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் அதிகம். மனிதனை இளமையாக வைத்துக்கொள்ள முக்கியமானதாக சொல்லப்படும் காயகல்பத்தில் நெல்லி தான் பிரதான பொருள். மேலும் இது தாது விருத்திக்கும், தலை முடி டானிக்காகவும் பயன்படுகிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. அதனால் கண்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு மேன்மையான ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்தால் அந்த நீர் தூய்மையான குடிநீராக மாறிவிடும். 100 கிராம் நெல்லிச்சாற்றில் 82 சதவீதம் நீரும், 0.5 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 14 சதவீதம் மாவுப்பொருளும், 3,5 சதவீதம் நார்ச்சத்தும், 50 யூனிட் அளவு கால்சியமும், 20 யூனிட் பாஸ்பரசும், 1.2 யூனிட் இரும்பும், 600 யூனிட் வைட்டமின் ‘சி’யும் உள்ளன. இது பல் நோய், அஜீரணம், மூட்டு வலி ஆகியவற்றை குறைக்கிறது. அருமையான கண் பார்வையை தரும். நீண்ட ஆயுளுக்கு தினமும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும். பசியின்மை விலகி நல்ல பசியை உணர வைக்கும். மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் போன்றவை குணமாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் ‘சி’ குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி, என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு. பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு அதிகம் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுயன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. ஆக, நெல்லியை தினமும் சாப்பிடுவதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம்.

மிரட்டும் மலேரியா
சமீபத்திய புள்ளி விவரப்படி மலேரியாவின் தாக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. ‘பிளாஸ்மோடியா’ என்னும் ஓரணு உயிரிதான் இந்த நோயை உண்டாக்குகின்றது. ரத்தத்தில் நுழையும் இந்த ஓரணு உயிரிகள் குறுகிய நேரத்துக்குள் மனிதனின் ஈரலை அடைந்துவிடும். அது ஈரல் செல்லுக்குள் புகுந்தாலே போதும். அது பலமிக்கதாக மாறி, புகுந்த உயிரணுவைப் பிளந்து வெளியே வந்து ரத்தத்துடன் கலந்து விடும். பிளாஸ்மோடியா எனும் நுண்ணுயிர் இனத்தின் நான்கு வகைகள் மட்டுமே மலேரியா நோயை உண்டாக்கும் திறன் கொண்டவை. அந்த நான்கு வகைகளிலும் ‘பிளாஸ்மோடியா பல்சிபறம்‘ என்னும் வகையே மூளையைத் தாக்கும் தன்மை கொண்டது. மலேரியாவால் ஏற்படும் இறப்புகளில் 90 சதவீதம் பிளாஸ்மோடியா பல்சிபறம் ஏற்படுத்துபவைதான். இந்த உயிரி மனித ரத்தத்தில் கலந்தால் மட்டுமே மலேரியா காய்ச்சலை உருவாக்க முடியும். இந்தநோய் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் நோயல்ல. எனவே, பிளாஸ்மோடியா ஓரணு உயிரிகள் நம் உடலில் சென்றால் மட்டுமே நோய் உண்டாகும். கொசுக்களில் 400 வகைகள் இருந்தாலும் 30 வகையான கொசுக்கள் மட்டுமே இந்த ஓரணு உயிரியை எடுத்துச் செல்லக் கூடியவை. பல நாடுகளில் குழந்தைகள் 5 வயது முடிவடைவதற்குள்ளாகவே இவை தாக்கி கொன்று விடுகின்றன. இந்த கொசுக்கள் மோப்பம் பிடித்து ஒருவர் தோலை துளைத்து அதன் மறுபுறத்திலுள்ள ரத்தக் குழாயைத் துளைத்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. அப்படி அவை உறிஞ்சும் ரத்தம் உறைவதைத் தடுக்க ஒருவகை திரவத்தை தம் எச்சிலுடன் கலந்து உள் அனுப்பும். அந்த திரவத்தில் ஏற்கனவே வேறு ஒருவரின் உடலை துளைத்தபோது புகுந்த மலேரியா ஓரணு உயிரிகள் இருந்தால் புதியவரின் ரத்தத்துடன் கலந்து நோயை உருவாக்கி விடும். தொடக்கத்தில் கூறியதுபோல் மலேரியா குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். காலமாற்றத்தால் இந்த கொசுக்கள் குறைந்து, சிறிது காலம் கழித்து மீண்டும் வீரியமுடன் உயிர் பெற்று மிரட்டினால் என்ன ஆகுமோ என்பது தான் அவர்களது அச்சம். இப்போதுள்ள பயம் என்னவென்றால் திரும்ப மலேரியா பெருகினால், அது தற்போது கொஞ்சம் கூட நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத இன்றைய குழந்தைகளை பெருமளவு பாதிக்கும். ஒரு சுனாமி போல் வந்து மொத்த குழந்தைகளையும் கொன்று அழித்துவிடும் என்பதே ஆய்வாளர்களின் எதிர்கால கவலை.

புத்திசாலி யானைகள்
யானைகள் புத்திசாலிகள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதை நிரூபிப்பது போல் இந்த ஆய்வு உள்ளது. ஒரு யானை, தான் கேட்கும் மனிதர்களின் குரலை வைத்தே அவர்கள் ஆணா, பெண்ணா, வயதானவர்களா, சிறுவர்களா என்பதை கண்டறிந்து விடுமாம். அது மட்டுமல்ல அந்த குரலுக்கு சொந்தமானவர்களின் இனக்குழுமத்தையும்கூட அடையாளம் காணும் திறமை யானைகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க காட்டு யானைகள் மத்தியில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் விவரங்கள் ‘ப்ரோசீடிங்க்ஸ் ஆப் த நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்‘ என்கிற அறிவியல் இதழில் வந்துள்ளன. இந்த ஆய்வுகளை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கேரன் மெக்கம்ப், கிரேமி ஷானன் ஆகியோர் நடத்தினர். ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கும் அந்தநாட்டில் மாடு மேய்க்கும் ‘மாசாய்‘ இன மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது உண்டு. மாசாய் இனமக்கள் யானைகளை வன்முறையாக அடித்து விரட்டுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள். ஆனால் அதே ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘கம்பா‘ இன மக்கள் விவசாயிகள். இவர்களுக்கும், காட்டு யானைகளுக்கும் மோதல்கள் வந்தாலும், இந்த இன மக்கள் பெரும்பாலும் காட்டு யானைகளை கொல்வதில்லை. இந்த பின்னணியில், பரிசோதனையில் இறங்கிய சசெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாசாய் மற்றும் கம்பா இனங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் குரல்களை தனித்தனியாக பதிவு செய்தார்கள். ‘அதோ பாரு, அங்க பாரு! யானைகள் கூட்டம் ஒண்ணு வருது பாரு!‘ என்று இவர்கள் சொல்லுவதை தனித்தனியாக ஒலிப்பதிவு செய்தனர்.இந்த குரல்களை தனியாக வடிவமைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி ஆப்பிரிக்க காட்டு யானைகள் இருக்கும் இடத்தில் அவற்றின் காதில் விழும் விதமாக சத்தமாக ஒலிபரப்பினர். இதில் மாசாய் இன ஆண்களின் குரல்களை கேட்டவுடன், காட்டு யானைகள் எல்லாம் விரைவாக தத்தம் குடும்ப குழுக்களாக ஒன்றுகூடி தம்மை தாக்கவரும் எதிரியிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் செயல்பாடுகளையும், சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தின. இதுதவிர ஒருவித கலவர நிலையில் யானைகள் இருந்தன, இதேபோல் கம்பா இன ஆண்களின் குரலை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பினர். அதைக்கேட்ட யானைகள் முன்பைப் போல கலவரப்படவில்லை. எச்சரிக்கை ஒலியை மட்டும் விடுத்து, கவனத்துடன் மேய்ந்து கொண்டிருந்தது. இதன் மூலம் யானைகளுக்கும் மனிதர்களின் குரலை கண்டறியும் சக்தி உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.