Search This Blog

Wednesday, July 29, 2015


5 பேருக்கு 697 ஆண்டு சிறை 
11 பெண்கள் படுகொலை
 
மெக்சிகோ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு 

  மெக்சிகோ, ஜூலை.30- மெக்சிகோவில் சிகுவாகுவா என்ற மாகாணத்தில் 1990-ம் ஆண்டில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் படுகொலை செய்யப்பட்டு வந்துள்ளனர். இந்த கொலைகள் எல்லாம் ஒரே மாதிரியாக அமைந்தது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அங்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ஜூவரெஸ் நகரில் 11 பெண்களை ஒருவர் பின் ஒருவராக படுகொலை செய்ததாக 5 பேர் பிடிபட்டனர். அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுவரை இல்லாத சாதனை அளவாக அவர்களுக்கு தலா 697 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இது தொடர்பாக அரசு வக்கீல் அலுவலகம் கருத்து தெரிவிக்கையில், “இந்த குறிப்பிட்ட வழக்கில் குற்றவாளிகள், பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி பின்னர் கொன்றுள்ளனர்” என்றார். 30/07/2015

ஆலமரம்
ஆலமரம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் இருந்து வருகிறது. குறிப்பாக, இமய மலைச்சாரல் காடுகளிலும், இந்திய தீபகற்பத்தின் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களிலும், ஆலயங்களின் அருகிலும், ஆறுகளின் கரை ஓரங்களிலும் காணப்படுகிறது. 

கிராமங்களில் பெருமளவு ஆலமரங்கள் வளர்கின்றன. பரந்து விரிந்து நிழல் தருவதால் கிராம மக்கள் கூடும் இடமாகவும், கிராம வாணிபம் நடைபெறும் இடமாகவும், கால்நடைகளின் உறைவிடமாகவும், கிராம சங்கங்களின் கூட்டம் நடத்தும் இடமாகவும் ஆலமரங்கள் திகழ்கின்றன. இந்திய நாட்டின் வெப்ப பகுதிகளில் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆலமரங்களை நடுகிறார்கள். இந்த மரத்திற்கு ஆங்கிலத்தில் பன்யான் ட்ரீ என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெர்சியா வளைகுடாவில் பனியாக்கள் எனப்படும் வியாபாரிகள் இறைவணக்கத்திற்காகவும், வியாபாரத்துக்காகவும் இந்த மரத்தின் அடியில் அடிக்கடி கூடுவார்கள். எனவே அந்த மரத்துக்கு ஆங்கிலேயர்கள் பனியாக்களின் பெயரையே அந்த மரத்துக்கு வைத்து விட்டார்கள். 

ஆல மரங்களை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் இவை தொடர்ந்து பல மீட்டர் அளவுக்கு அகலமாக விழுதுகள் விட்டுச் செல்லக் கூடியவை. பொதுவாக பல சந்தர்ப்பங்களால் ஆல மரங்கள் முழுமையாக வளர முடிவதில்லை. பல இடங்களில் குழந்தைகள் ஆல மரத்தின் விழுதுகளை ஊஞ்சலாக உபயோகிப்பதால் விழுதுகளும், வேர்களும் சேதம் அடைகின்றன. அதனால் அவை நிலத்தினை வந்து அடைவதில்லை. சில இடங்களில் கால்நடைகள் தங்களின் உணவாக ஆல மரத்தில் இருந்து கீழே தொங்கும் இளம் விழுதுகளை உண்கின்றன. இதனாலும் அந்த விழுதுகள் பூமியை வந்து அடைய முடியாமல் தடுக்கப்படுகின்றன.

 சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீதையில் ஆல மரத்தின் பெருமை கூறப்பட்டிருக்கிறது. எவ்வளவுதான் தடுத்தாலும் ஆல மரங்களின் பழங்களை பறவைகள் விரும்பி உண்பதால் அவை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு நாட்டில் விதைகள் பரவி மரங்கள் மீண்டும், மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஆல மரத்துக்கு அழிவில்லை என்கிறார்கள்.

Tuesday, July 28, 2015


சென்னையில் ஓடிய ஆறுகள்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று சென்னையை இரண்டாகப் பிரிக்கும் கூவம் ஆறு. மற்றொன்று தென் சென்னையில் ஓடும் அடையாறு. இந்த அடையாற்றின் கரையில் தான் முதல் கர்நாடகப் போர் நடைபெற்றது. 

கூவம் ஆறு, செம்பரம்பாக்கம் ஏரியில் உற்பத்தியாகிறது. கிட்டத்தட்ட 32 கி.மீ. துரத்திற்கு ஒரு வாய்கால் போல ஓடி வரும் கூவம். அதன்பின் அகன்ற ஆறாக ஓடி வருகிறது. காடுவெட்டி உள்ள திருவேற்காட்டில் இதை பழம்பாலாறு என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்ட நதி இது என்றால் இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். கூவம் ஆறு கோயம்பேடு பகுதியில் சென்னைக்குள் நுழைந்து சேப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. விவசாயத்திற்கு பயன்பட்ட சமயத்தில் சுத்தமான நீர் இந்த கூவத்தில் ஓடியது. மக்கள் இதில் குளித்து இருக்கிறார்கள். கோமலீஸ்வரன் பேட்டை அருகே இது வடக்கு நோக்கி பாய்கிறது. இப்படி வடக்கு நோக்கி பாய்வதை உத்தரவானி என்று அழைக்கிறார்கள். வடக்கு நோக்கிப் பாயும் நதியை புண்ணிய நதி என்பார்கள். அந்த வகையில் கூவமும் புண்ணிய நதியாக இருந்தது. இப்படி சிறந்து விளங்கிய கூவம் ஆறு, இன்று கழிவு நீர் நிறைந்து ஓடும் சாக்கடையாக மாறி இருக்கிறது. சென்னை மாநகரில் மட்டும் கூவம் நதியின் குறுக்கே 10 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 

கூவத்தின் மொத்த நீளம் 48 கி.மீ. வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்து ஏரிகள் நிரம்பும் பொழுது கூவத்தில் அதிகமாக நீர் பாயும். கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வருகிறது. கூவம் போலவே சென்னையில் ஓடும் மற்றொரு ஆறு அடையாறு. இது காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர், கூடுவாஞ்சேரி, எரித்தாங்களில் உற்பத்தியாகிறது. இது அனகாபுத்தூர் வழியாக ஓடி ஈக்காட்டுத்தாங்கல் அருகே சென்னைக்குள் நுழைகிறது. அதன்பின் சைதாபேட்டை, கிண்டி வழியாக சென்று அடையாறு அருகே கடலில் கலக்கிறது. சென்னை நகரில் அடையாறு மீது 4 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆறிலும் ஒரு காலத்தில் சுத்தமான நீரே ஓடியது. மக்களுக்கும் பயன்பட்டது. 

இன்றைக்கும் கூட அடையாறு சென்னைக்குள் நுழையும் வரை சுத்தமான நீராகவே இருக்கிறது. சென்னையில் நுழைந்தவுடன் அதில் சாக்காடை நீர் கலந்து விடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாகவே சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளும் சென்னைவாசிகளை பிராணயாமம் செய்ய வைக்கிறது. இந்த ஆறுகளை அழகுபடுத்த அவ்வப்போது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிவதுதான் வேதனை.

Monday, July 27, 2015


பட்டு பிறந்த வரலாறு
பட்டு சேலைக்கு மயங்காத பெண்களே இல்லை எனலாம். காஞ்சிப் பட்டு, பனாரஸ் பட்டு, பெல்ஜியம் பட்டு என்று ஏகப்பட்ட பட்டு சேலைகள் மங்கையரின் கனவுகளில் தொந்தரவு செய்கின்றன. இந்த பட்டு பிறந்த கதை மிக சுவாரசியமானது. 

 சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் பட்டு உற்பத்தி செய்ய கற்று இருந்தனர். சீன நாட்டு அரசி ஷீலிங்ஷீ ஒரு நாள் கை கழுவும் போது, நீர்த் தொட்டியின் அருகில் இருந்த செடியில் பட்டுப் புழுக்கூடு தொங்குவதை பார்த்தாள். 

உடனே அதை எடுத்து தொட்டியில் போட்டு வைத்தாள். மறுநாள் காலை அந்த தொட்டியை பார்த்த போது, அதில் இருந்த நீரில் மெல்லிய நூலிழைகள் இருப்பதைக் பார்த்தாள். நூலின் ஒரு முனையை பிடித்து இழுத்த போது, அது தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இந்த நூலைக் கொண்டு ஆடைகளைத் தயாரிக்கலாம் என்று அரசி கூறினாள். 

இதையடுத்து பட்டுத் துணியின் மவுசு, வண்ணத்துப் பூச்சியாக சிறகடித்து உலகம் முழுவதும் பறந்தது. பல நூற்றாண்டுகள் வரை சீனர்கள் பட்டுத் தயாரிப்பை படுரகசியமாக வைத்திருந்தனர். இந்தப் பட்டுத் துணியை வாங்குவதற்காக பல நாட்டினரும் சீனாவுக்கு சென்றனர். இறுதியில் மூன்றாம் நூற்றாண்டில் ஜப்பானியர்களுக்கு பட்டின் ரகசியம் பிடிபட்டது. அவர்களும் வெகு நாட்கள் அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். 

கி.பி.550-ல் பைஸண்டிய நாட்டின் அரசன் ஜஸ்டினியன் பட்டு ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக, தனது ஒற்றர்கள் இருவரை மதகுருமார்கள் வேடத்தில் சீனாவிற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் மூங்கில் குழாயினுள் பட்டுப் புழு முட்டைகளை சேகரித்து ரகசியமாக சீனாவில் இருந்து கொண்டு வந்தனர். அதன் பின்பு பட்டுப்புழு வளர்ப்பு பெருகி, பட்டுநூல் உற்பத்தி செய்யும் கலை உலகெங்கும் பரவியது. 

தற்போது சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின், ரஷியா, இத்தாலி ஆகிய நாடுகள் பட்டு உற்பத்திக்காக பட்டுப் புழுவை வளர்க்கின்றன. பெண் பட்டுப் பூச்சி, முசுக் கொட்டை செடியின் இலைகளில் 500 முட்டைகளை இடும். 10 நாட்களில் முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். நோயுள்ள புழுக்களை எடுத்துவிட்டு ஆரோக்கியமான புழுக்களை வளர்க்கின்றனர். 

 இந்தப் பட்டுப் புழுக்களின் வாயின் அடியிலுள்ள துவாரம் வழியாக வரும் இழையே பட்டு. 25 நாட்களில் பட்டுப் புழு வளர்ச்சியடைந்தால் அதற்கு இறக்கை முளைத்து கூட்டைப் பிளந்து கொண்டு வண்ணத்துப் பூச்சியாகப் பறந்துவிடும். இப்படி பூச்சி வெளிவந்து விட்டால் நூல் ஒரே இழையாக நூற்க பயனற்றதாக ஆகிவிடும். அதானால்தான், பூச்சி வெளிவரும் முன்பே அதை வெந்நீரில் போட்டுக் கொன்றுவிடுகிறார்கள். 

ஒரு பட்டுப் புழுவில் இருந்து, அதன் எடையில் ஐந்தில் ஒரு பங்கு பட்டு கிடைக்கும். இந்த பட்டு 500 முதல் 1300 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பட்டு நூல் அதே கனம் கொண்ட உருக்குக் கம்பி போல் உறுதியானது. அழகையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் வைத்து பார்த்தால் உலகிலேயே மிகவும் தரமான மேன்மையான பட்டு இத்தாலிய நாட்டுப் பட்டுதான்.

Saturday, July 25, 2015


ஆசியாவின் முதல் தேசிய பூங்கா
நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் பலரை உருவாக்கும் பயிற்சி மையங்கள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளன. இந்த மாநிலம் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. இங்கு தான், இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான ஜிம் கார்பெட் பூங்கா உள்ளது. இது 1936-ல் தொடங்கப்பட்டது. அப்போது இந்த பூங்காவின் பெயர் ஹெய்லி தேசிய பூங்கா. இங்கு தான் முதன்முதலில் புலிகளை பாதுகாக்கும் மையம் தொடங்கப்பட்டது. அரிய வகை விலங்கினமான பெங்கால் டைகர்ஸ் என்று சொல்லப்படும் வங்காளப் புலிகள் இந்த பூங்காவில் மட்டுமே அதிக அளவு காணப்படுகின்றன. இந்த பூங்கா 201 மைல் பரப்பளவு கொண்டது. இதில் 73 சதவீதம் வனப்பகுதியாகும். 10 சதவீதம் பசும்புல் தரையை கொண்டது. இங்கு மரங்களில் வாழும் 110 உயிரினங்களும், 50 வகையான பாலூட்டிகளும், 580 வகையான பறவை இனங்களும், 25 அரியவகை உயிரினங்களும் உள்ளன. இந்த பூங்கா உருவாக்கப்படுவதற்கு முன்பு இந்த பகுதி தெஹ்ரி கார்வால் என்ற மன்னரின் ஆட்சிப்பகுதியாக இருந்தது. போக்சாஸ் என்ற பழங்குடி மக்கள் இந்த பகுதியில் குடியேறி பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். ஆனால் 1860-களில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது இவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வனப்பகுதியை பாதுகாப்பதில் பெரும் முயற்சி எடுத்தவர் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரிட்டிஷ் அதிகாரி மேஜர் ரம்சே ஆவார். அவர் தான் முதன் முதலில் இந்த வனப்பகுதியை பாதுகாக்க, 1868-ல் வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதியை கொண்டு வந்தார். பின்னர் 1879-ல் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1900-ல் இந்த வனப்பகுதியில் ஒரு தேசிய பூங்கா உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் நிர்வாகம் 1907-ல் தனது முயற்சியை தொடங்கியது. 1930-ல் இந்த பகுதி பிரிட்டிஷ் அலுவலர் ஜிம்கார்பெட் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதைய கவர்னர் மால்கம் ஹெய்லி பெயரில் 125 மைல் பரப்பளவில் தேசிய பூங்காவாக 1936-ல் உருவாக்கப்பட்டது. ஆசியாவின் முதல் தேசிய பூங்காவும் இது தான். இந்த வனப்பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, வீட்டு உபயோகத்துக்கான மரங்கள் வெட்டுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 2-ம் உலகப்போரின் போது இந்த பூங்காவில் விலங்குகளை வேட்டையாடி, கடத்தி செல்வதும், அளவுக்கதிகமாக மரங்கள் வெட்டுவதும் நிகழ்ந்தது. பின்னர் இந்த பூங்கா 1955-ல் ராம்கங்கா தேசிய பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மறுபடியும் 1956-ல் கார்பெட் தேசிய பூங்காவாக பெயர் மாற்றம் பெற்றது. இந்த பெயர் பூங்காவை உருவாக்கிய ஜிம் கார்பெட் நினைவாக வைக்கப்பட்டது. வங்கப்புலிகள் தான் இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். அதற்கு அடுத்த இடத்தை யானைகள் பிடித்துள்ளன. இவை இரண்டும் அதிக அளவில் காணப்படுவது இந்தியாவில் இந்த ஜிம் கார்பெட் பூங்காவில் மட்டுமே. 1993- முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்ற காலாமாகும். இங்கு ஜீப், டிரக் ஆகியவற்றில் பூங்காவை சுற்றிப்பார்க்கலாம். வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் ஒரே அவசர எண்
எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து விடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம். இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கணினி மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை. அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 1800180551 என்று அனைத்திற்கும் ஒரு எண் உண்டு. இவற்றை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது. இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது வெகு சுலபமாக உள்ளது. அங்கு ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண்கள் தான் 911, 112. இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவி மையத்திற்கோ சென்றடையும் படி அமைத்திருக்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தில் 911, 112 என்ற எண்களை டயல் செய்தால் தானாக அவசர எண் 100க்கு சென்று சேருவது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால்கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள். செல்போன்களில் பேசினால் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட் லாக் ஆகியிருந்தால் கூட 1, 2, 9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, சிம் கார்டே இல்லாமல் இருந்தாலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்யமுடியும். எனவே, உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.

Thursday, July 23, 2015


அறுவடைத் திருவிழா
உணவுப் பயிர்கள் அறுவடை செய்யும் போது நடத்தப்படும் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. அறுவடை செய்யும் போது பயிர்களில் உள்ள ஆவி கோபமடையும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த கோபத்தை குறைக்க அவற்றுக்கு படையல் செலுத்த வேண்டும் என்பது ஆதியில் இருந்து வரும் நம்பிக்கைகளில் ஒன்று. இதன் அடிப்படையில் தான் அறுவடைத் திருவிழாக்கள் இன்றைக்கும் நடத்தப்படுகின்றன. 

கிரேக்க, ரோம், எகிப்திய, எபிரேய கலாச்சாரங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழாக்களை கொண்டாடியிருக்கின்றனர். கொரியாவில் ‘சூசாக்‘ எனும் பெயரிலும், ஜப்பானியர்கள் ‘டோரினோய்ச்சி‘ என்ற பெயரிலும் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். 

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமையும், சீனாவில் ஆகஸ்ட் நிலா விழா என்ற பெயரிலும் அறுவடைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. வியட்நாமில் ‘தெட் திரங்‘ எனும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் 15-ம் நாளில் நடத்தப்படுகிறது. இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் 15-வது நாள் சக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த விழாவை கிறிஸ்தவர்களும் கொண்டாடி வருகிறார்கள். 

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் 3 நாட்கள் விழா நடைபெறுகிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இந்த விழாவில் இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்பு பரிசுகளாக கருதப்பட்டு பெருமைப்படுத்தப்படுகின்றனர். ரோமானியர்கள் அக்டோபர் 4-ம் நாள் செரிலியா எனும் விழாவை கொண்டாடுகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுகின்றன. 

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவில் ஜூன் மாதம் 2-ம் நாள் அறுவடை நாள் விழா நடத்தப்படுகிறது. தமிழர்களின் பொங்கல் விழாவும் அறுவடைத்திருநாள் தான். 

இவ்வாறு உலகமெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள், இயற்கையோடு மனிதனுக்கு உள்ள தொடர்பையும், இறைவனோடும் சக உயிர்களுடனும் மனிதன் கொள்கிற உறவையும் வெளிப்படுத்துவதாக திகழ்கின்றன.

நியூட்ரானை கண்டறிந்த ஜூலியட்
ஜூலியட் கியூரி என்ற பெண் விஞ்ஞானி தான் நியூட்ரானை கண்டுபிடித்தவர். கியூரி என்ற பெயரை கேட்டவுடனே எல்லோருக்கும் மேரி கியூரிதான் நினைவுக்கு வரும். அந்த மேரி கியூரியின் மகள்தான் ஜூலியட் கியூரி. பொதுவாக விஞ்ஞானிகளின் குழந்தைகள் விஞ்ஞானிகளாக வருவதில்லை. அந்த சித்தாந்தத்தில் விதிவிலக்கானவர் ஜூலியட். இவரின் முழுப்பெயர் ஐரீன் கியூரி ஜூலியட். 1897 செப்டம்பர் 12-ல் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற பெற்றோரின் குழந்தை என்பதை மறந்து, கடுமையாக உழைத்து படித்தார், ஜூலியட். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் முடித்த கையோடு, முதல் உலகப் போரின் போது ஒரு செவிலியராகவும் வானிலை கருவியில் சிக்னல்களை அனுப்புபவராகவும் வேலைக்கு சேர்ந்தார். அதன்பின்பு ஆல்பா கதிர்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். 1926-ல் தன்னுடன் பணிபுரிந்த பெட்ரிக்கை மணந்து ஹெலன், பியரி என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆறு வருடங்களாக பல்வேறு ஆய்வுகள் நடத்தினர். அதன் பலனாக செயற்கை கதிர்வீச்சை கண்டுபிடித்தனர். சீராக இருக்கும் தனிமங்கள், சீரற்றவையாக கலைக்கப்பட்டால், செயற்கை கதிர்வீச்சை பெற முடியும் என்பதை இருவரும் இணைந்தே கண்டுபிடித்தனர். இன்று புதிய வகை தானியங்கள், மருத்துவம், உணவு பகுத்தல் போன்ற பல துறைகளுக்கு அணுக்கதிர்வீச்சை பயன்படுத்தவும் இந்த கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதற்காக இந்த தம்பதியருக்கு 1935-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்படி நோபல் பரிசு பெற்றவர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வது குறைவு. செல்லும் இடமெல்லாம் பாராட்டு, விருந்து, உபசரிப்பு, புகழ் போன்றவற்றால் காலத்தை கழித்து விடுவார்கள். ஆனால் ஜூலியட் கியூரி அப்படி செய்யவில்லை. தனது ஆய்வுகளை தொடர்ந்தார். அணுவின் நேர்மின் துகள்களாக புரோட்டானும், எதிர்மின் துகள்களாக எலக்ட்ரானும் இருப்பது போல் மின் தன்மையற்ற நியூட்ரான் இருப்பதையும், அணுப்பிளவு போல், அணு இணைப்பும் ஏராளமான சக்தியை வெளிப்படுத்தும் என்பதை 1938-ல் அவர் கண்டுபிடித்தார். அடுத்த ஆண்டே இரண்டாவது உலகப் போர் தொடங்கி விட்டது. இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டால் அரசு அதை யுத்தத்திற்கு பயன்படுத்தும் என்று கருதி தனது கண்டுபிடிப்புகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து, போர் முடிந்தபின் வெளியிட்டார். அதோடு யுத்தம் முடிந்ததும் ரேடியம் கல்வியகத்தின் இயக்குனராக ஜூலியட் கியூரி நியமிக்கப்பட்டார். 

ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்ட ஜூலியட் கியூரி தாயைப் போலவே கதிர்வீச்சுக்கு ஆளாகி லுக்கேமியா நோயால் தாக்கப்பட்டு 1956 மார்ச் 17ல் இறந்தார். ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகள், மருமகன் என்று அனைவரும் நோபல் பரிசு பெற்றது கியூரி குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான பெருமை.

Monday, July 20, 2015


ஆடை அவிழ்ப்பு தொழிலை பெருமையாக கருதும் ஆண்கள்
அமெரிக்காவில் உள்ள கேளிக்கை விடுதிகளில், ஆடை அவிழ்த்து, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் தொழிலில் பெண்களைப் போல ஆண்களும் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மரன் ஸ்கல் என்பவர் ஒரு ஆய்வு நடத்தினார். இதற்காக அவர் அத்தகைய விடுதி ஒன்றுக்கு 2 ஆண்டுகளாக சென்று வந்தார். அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண்களை பேட்டி கண்டார். அதில், ஆடை அவிழ்ப்புக்கு, பெண்களை விட ஆண்களுக்கு அதிக சம்பளம் அளிக்கப்படுவதை அறிந்தார். பெண்கள், பணத்துக்காக மட்டுமே அந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பதையும், ஆண்களோ, தொடக்கத்தில் பணத்துக்காக ஈடுபட்ட போதிலும், நாளடைவில் அவர்களுக்கு அது ஒரு பெருமையான, பிடித்தமான விஷயமாக ஆகிவிட்டதையும் கண்டறிந்தார். நிர்வாண அழகன்கள் பலர், தங்களது தன்னம்பிக்கை உயர்ந்திருப்பதாக கூறினர். 21/07/2014

இறக்கும் இந்திய குழந்தைகள்
இந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொருத்தவரை நமது நாடு சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இளமை இந்தியாவில் குழந்தைகளின் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்திற்குள் இறந்து போவதாகவும், அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கிறார்கள் என்று சர்வதேச அமைப்பான ‘சேவ் த சில்ரன்’ கூறுகிறது. இந்த மோசமான நிலை, உலக அளவில் நமது நாட்டில் மட்டுமே உள்ளது. வங்காள தேசம் மற்றும் மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த அளவிற்கு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் இந்த வயதுடைய 3.8 குழந்தைகள் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான். உண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன், நமது குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. நம் நாட்டின் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது உலக அளவில் மிக அதிகம் தான். ஐ.நா.வின் கணக்கீடுப்படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. இதில் 33 சதவீதத்தினர் நமது நாட்டில் உள்ளனர். இவற்றில் பெருமளவு போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் தான் உள்ளனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது. 2008-ம் ஆண்டு தகவலின்படி நாட்டில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ சுத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கபடுவதாலும், பொறுப்புணர்வு குறைந்த அரசுமே இதற்கு காரணம் என்கிறது ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு. நாட்டில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இளமையான மக்கள் தொகை நம் நாட்டிற்குக்கு சாதமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.