Search This Blog

Saturday, March 12, 2016


எழுத்துக்களின் உருவாக்கம் 07/03/2016

பேச்சு வழக்கை மொழி என்று கூறினர். அந்த மொழியைத் தொடர்ந்து எழுத்து உருவானது. எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

கி.மு. 4000 ஆண்டிலேயே களிமண்ணை பேப்பர் போல் பயன்படுத்தி, அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்டவணைகள் போன்றவை எழுதப்பட்டன. போகப் போக பேசுகிற மொழியை பிரித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

காகிதம் என்று ஒன்று இல்லாத காரணத்தால் ஈரக் களிமண்ணை பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன்  ஈரக் களிமண்ணை அதன் மீது வைத்து பேக்கிங் செய்து விடுவார்கள். அதை உடைத்து விடாமல் மிக ஜாக்கிரதையாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பெற்றுக்கொண்டவர் பார்சலை லேசாக தட்டி உதிர்த்தால் போதும். உள்ளே உள்ள விஷயத்தை படிக்கலாம்.

ஆயிரக்கணக்கான குறியீடுகளை வேகமாக களிமண்ணில் எழுத கல்வியறிவு அதிகமாக தேவைப்பட்டதால், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சட்டம், மருத்துவம், அரசியல் போன்ற விஷயங்களை எழுதுவதற்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்படியாக எழுத்து என்பது முழு வடிவம் பெற 800 ஆண்டுகள் பிடித்தன. மொழி, மனிதனின் கைவசப்பட்டவுடன், அடுத்த கட்டமாக இலக்கியம் பிறந்தது. கி.மு.2000 ஆண்டில் பாபிலோனியர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவை தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழமொழிகளைக்கூட பாபிலோனியர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடமாக இருந்து இருக்க வேண்டும். ஒரு களிமண் குறிப்பில் அழகு நிலையங்கள் இருந்தால், அங்கே கிசுகிசுவும் கூடவே இருக்கும் என்கிற பழமொழி ஒரு கல்வெட்டில் கிடைத்து இருக்கிறது. இன்றளவும் பின்பற்றப்படும் ‘வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது‘ என்ற பழமொழியும் களிமண் குறிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நத்தை  வேகத்தில்  நகரும்  ரெயில்வே  திட்டங்கள் 07/03/2016

ஆங்கிலேயர், இந்தியாவை ஆண்ட நேரத்தில், அவர்கள் தந்த அருட்கொடை ஒன்று என்றால், அது  ரெயில்வே பாதைதான். 1853-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பயணிகள் ரெயில் மும்பையிலிருந்து தானேக்கு ஓடியது. ஆனால், அதற்கு முன்பே, இந்தியாவில் 1935-ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து செங்குன்றம் வரை பரிசோதனைமுறையில் ரெயில்பாதை அமைக்கப்பட்டு, இந்தியாவின் முதல் சரக்குரெயில் இந்த பாதையில்தான் ஓடியது. இவ்வளவு பெருமை படைத்த தமிழ்நாட்டில், ரெயில்வே திட்டங்களை பொறுத்தமட்டில் பெரிய அளவில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படாதது மிகவும் வருந்தத்தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மீட்டர் கேஜ்’ ரெயில்பாதை போட்டிருந்தார்கள், அதை அகல ரெயில்பாதை அதாவது, ‘பிராட் கேஜ்’ ஆக மாற்றும் திட்டங்கள் கூட இன்னும் முழுமையடையாதது, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதோ? என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வரை அகல ரெயில்பாதை போடும் பணிகூட மெல்லமெல்ல நகர்ந்து, 2008-ம் ஆண்டுதான் போக்குவரத்து தொடங்கியது. ரெயில் பயணத்தில் ‘‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரெயிலே’’ என்று மலைப்பாதையில் பயணம் செய்யும் சுகமே தனிசுகம்தான் என்று சொல்வார்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை ஒரு ரெயில்பாதை இருக்கிறது. அதுபோல, தென்மாவட்டங்களில் செங்கோட்டை-கொல்லம் இடையே 49.38 கி.மீ. தூரத்தில் செல்லும் பயணம் மேற்கு தொடர்ச்சிமலையில் எழில் கொஞ்சும் பசுமை காடுகளுக்கு நடுவே செல்லும்போது ரம்மியமாக இருக்கும். வழியில் 5 இடங்களில் மலைகளை குடைந்து குகைகள் வழியாக செல்ல வேண்டியதிருக்கும். இந்த ரெயில் பாதையில்தான் சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் ‘கொல்லம் மெயில்’ ஓடிக் கொண்டிருந்தது. இந்த கொல்லம் மெயில் 1904-ம் ஆண்டிலிருந்து ஓடிக் கொண்டிருந்தது. விருதுநகரிலிருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் இந்த ரெயிலில் செல்வதற்கு பயணிகளிடையே மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுபோல, திருச்செந்தூர்-நெல்லை-தென்காசி வழியாக இந்த பாதையில் சென்ற ‘மீட்டர் கேஜ்’ ரெயில்கள் சபரிமலை பக்தர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் பெரும் இணைப்பாக முன்பு இருந்தது.

முதலில் கொல்லம் வரை ஓடிய இந்த ரெயில், 1918 முதல் கொல்லம்-திருவனந்தபுரம் வரை ஓடத்தொடங்கியது. இந்த ரெயில்தான் ‘மீட்டர் கேஜ்’ ரெயிலில் முதலாவதாக குளுமை வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளையும், முதல் வகுப்பு ரெயில் பெட்டிகளையும் இணைத்துக் கொண்டு ஓடிய ரெயில் என்று பெயர் பெற்றது. இந்த ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக ஆக்குவதற்கு 2000-ம் ஆண்டிலிருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எவ்வளவோ ரெயில் பாதை திட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த ரெயில் பாதைத்திட்டம் மட்டும் நத்தை வேகத்தில் நகர்கிறதே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருந்தது. இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பாதையில் ரெயில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ‘பெட்டர் லேட் தேன் நெவர்’, தாமதமானாலும் பரவாயில்லை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆக, இனி சென்னையையும், கேரள தலைநகராம் திருவனந்தபுரத்தையும் இணைப்பதற்கு 3 வழிகளில் ரெயிலில் போக முடியும். ஏறத்தாழ 50 கி.மீ. ‘மீட்டர் கேஜை’ அகல ரெயில் பாதையாக்க 16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. இதுபோல, மதுரையிலிருந்து போடி வரை சென்று கொண்டிருந்த 86 கி.மீ. ‘மீட்டர் கேஜ்’ ரெயில்பாதையை, அகல ரெயில்பாதையாக்குகிறோம் என்று சொல்லி, 2010-ல் ரெயில்களை நிறுத்தி தண்டவாளங்களை பிடுங்கி விட்டு, அகல ரெயில் பாதையாக்கும் பணிகளும் நகராமல் இருக்கிறது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ரெயிலையே மறந்து விட்ட சூழ்நிலை இருக்கிறது. இதுபோல, தமிழ்நாட்டில் அறிவித்தும், நிறைவேற்றப்படாமலும் அல்லது போதிய நிதி ஒதுக்காமல் சுணங்கிக் கொண்டிருக்கும் வகையிலும், நிறைய திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு, எல்லா திட்டங்களையும் மாட்டுவண்டி வேகத்தில் இல்லாமல், உண்மையான ரெயில்வேகத்தில் நிறைவேற்ற எல்லாதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உடல் பருமனால் ஏற்படும் வியாதிகள் 06/03/2016

இன்றைக்கு உலகம் முழுக்க எல்லா நாடுகளிலுமே குண்டான மனிதர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். நல்ல உடல் நலமும், மனநலமும் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம்.உடல் உழைப்புக்கு அடுத்தபடியாக, அதிகமாக உண்பது உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. இந்த இரண்டு காரணங்களும் ஒன்று சேரும் போது,  உண்ணும் உணவு கொழுப்பாக மாறி, உடலில் தேங்கி உடல் பருமனை அதிகரிக்கிறது. உடல் பருமனை பொதுவாக ‘பி.எம்.ஐ.‘ என்ற குறியீட்டால் குறிப்பது வழக்கம். சாதாரண ஒரு மனிதனின் பி.எம்.ஐ. 18-க்கும் 24-க்கும் இடையில் இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான உடல். பி.எம்.ஐ. 25-க்கு மேல் போனால் அதிக உடல் எடை உடையவர் என்றும், பி.எம்.ஐ. 35-க்கு  மேல் இருந்தால் மிக அதிக உடல் எடை, பருமன் உடையவர் என்றும் பிரிக்கிறார்கள்.இதுதவிர வேறு காரணங்களும் உண்டு. மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும் கட்டி, அட்ரீனல் கணையத்தில் ஏற்படும் கட்டிகள், தைராய்டு சுரப்பியால் ஏற்படும் குறைபாடு, குறிப்பிட்ட சில வியாதிகளுக்காக தொடர்ந்து எடுக்கும் சில மருந்துகள் இவற்றால் உடல் எடையும், பருமனும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். சில நேரங்களில் எந்த பரிசோதனையிலும் கண்டுபிடிக்க கூட முடியாமல் போகலாம். உடல் எடை, பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சினைகள் வரலாம். அதில் முக்கியமாக இளம் வயதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் ஆகிவை சம்பந்தப்பட்ட வியாதிகள், உடலை தாங்கும் மூட்டில் ஏற்படும் தேய்மானம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிப்பதோடு, அதனால் ஏற்படும் வியாதிகளால் பல பிரச்சினைகள் வரலாம். எனவே உடல் பருமன் உடையவர்களுக்கு எடையுடன் சேர்த்து, மற்ற வியாதிகளுக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது.பொதுவாக பி.எம்.ஐ. 35 உடன் சர்க்கரை போன்ற வியாதிகள் இருந்தால் அவர்களுக்கு சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இரைப்பை மாற்றுப்பாதை, இரைப்பையின் கொள்ளளவை குறைக்கும் அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி மூலம் செய்யப்படுகின்றன. இந்த வகை சிகிச்சைகளுக்கு பின் அதிகபட்ச எடை குறைவதோடு, எப்போதும் எடை அதிகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொசு, யாரை கடிக்காது? 05/03/2016

உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. அது நமக்குத் தரும் தொல்லைகள் சொல்லி மாளாது. 2.5 மில்லி கிராம் மட்டுமே எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47 உள்ளனவாம்.3 ஆயிரம் வகை கொசுக்கள் இருந்தாலும், 80 வகை கொசுக்கள் மட்டுமே நம் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று பெரும் பாலான நாடுகளில் அறிவிக்கப் பட்டது கொசு தான். ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளையே அது உணவாக உட்கொள்கிறது. கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்  பெண் கொசுதான்.அதேபோல், கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கின்றன. காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜென்கள், கொசுக்களை கவருகின்றன. பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே. அதேநேரம் ‘வைட்டமின் பி‘ கொசுவின் எதிரி. இந்த வைட்டமின் பி சத்து உடலில் அதிகமாக இருப்பவர்களை கொசு நெருங்குவதில்லை.கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் ரசாயனம் அலெத்ரின் சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருளாகக் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற கேடுகளை உண்டாக்குகின்றன. உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவிக் கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில பூச்சிகளும் நம்மை கடிக்காது.

இனி மக்கள்தான் எஜமானர்கள் - சட்டசபை தேர்தல் 05/03/2016

தமிழகத்தின் 15-வது சட்டசபையை உருவாக்குவதற்கான தேர்தல் தேதி மே 16 என்றும், ஓட்டு எண்ணிக்கை 19-ந் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதே தேதிதான் கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியாகும். தமிழகத்தில் முதல் சட்டசபை 1952-ம் ஆண்டு முதல் 1957 வரையிலும், 2-வது சட்டசபை 1957 முதல் 1962 வரையிலும், 3-வது சட்டசபை 1962 முதல் 1967 வரையிலும் இயங்கியது. இந்த மூன்று சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்து ஆட்சியை அமைத்தது. 4-வது சட்டசபை தேர்தல் 1967-ம் ஆண்டு நடந்தது. இதில் மறைந்த அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது. இடையில் அவர் மறைந்தவுடன் கருணாநிதி முதல்-அமைச்சரானார். ஆனால், இந்த சட்டமன்றம் 5 ஆண்டுகள் முழுமையாக இயங்காமல், அவர்களாலேயே 1971-ல் கலைக்கப்பட்டது. மீண்டும் 5-வது சட்டசபை 1971 முதல் 1976 வரை தி.மு.க.வின் பெரும்பான்மையோடு இயங்கியது. நெருக்கடிநிலை பிரகடன நேரத்தில் அந்த சட்டசபையும் கலைக்கப்பட்டது. அடுத்து 1977-ம் ஆண்டு நடந்த 6-வது சட்டசபை தேர்தலில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1980-ம் ஆண்டு அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.

7-வது சட்டசபை தேர்தல் 1980-ல் நடந்து 1984 வரை அ.தி.மு.க.வின் பெரும்பான்மையோடு இயங்கியது. 1985-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைப்பெற்று வந்தநேரத்திலே 8-வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. அந்த தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தவுடன், 1988 தொடக்கத்தில் கலைந்தது. 1989-ம் ஆண்டு 9-வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 1991-ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தது. 1991-ம் ஆண்டு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 10-வது சட்டசபைக்கான தேர்தல் 1991-ம் ஆண்டு நடந்து அதில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த சட்டமன்றம் முழுமையாக 5 ஆண்டுகள் இயங்கியது. 1996-ம் ஆண்டில் 11-வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 2001-ம் ஆண்டுவரை பதவியில் இருந்தது. மீண்டும் 2001-ம் ஆண்டு நடந்த 12-வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

அடுத்து 2006-ம் ஆண்டில் 13-வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க. வெற்றிபெற்று 2011 வரை கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் 2011-ம்  ஆண்டு  14-வது  சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 15-வது சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நேற்று முதல் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துவிட்டன. புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவோ, செயல்படுத்தப்படுவோ கூடாது. தற்போது அனைத்து கட்சிகளின் பார்வையும் மே 16-ந் தேதியை நோக்கித்தான் இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்தான் எஜமானர்கள். தமிழ்நாட்டில் 162 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இதுபோல, இளைஞர்களின் ஓட்டும் கணிசமாக இருக்கிறது. பொதுவாக ஆண்களின் ஓட்டு பரவலாக பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பெண்களின் ஓட்டும், இளைஞர் சமுதாயத்தின் ஓட்டும் பெரும்பாலும் ஒருபக்கமாக சாயும் என்பதால், இவர்களை குறிவைத்தே தேர்தல் அறிக்கைகளும் பிரசாரங்களும் இருக்கும். பிரசாரங்களில் அனல் பறக்கட்டும். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்களைக்கொண்ட ஆக்ரோஷங்கள் வேண்டாம், மாணவர்களின் தேர்வு நேரம் என்பதால், அவர்களுக்கு இடைஞ்சல் செய்யும் வகையில் ஆர்ப்பாட்ட பிரசாரம் வேண்டாம் என்பதே அரசியல் கட்சிகளுக்கு பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோளாகும். இந்த தேர்தலில் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்று எல்லா அணிகளும் சொல்கிறார்கள். ஆனால், யார் ஆட்சி அமைத்தாலும், அது புதிய வரலாறு, புதிய சாதனையாகத்தான் இருக்கும்.

தேசபக்தி  வளரட்டும் 01/03/2016

“தாயிற் சிறந்த கோவில் இல்லை” என்பது காலம்காலமாக போற்றி வணங்கும் நிதர்சன உண்மையாகும். தாய்ப்பாசத்துக்கு ஈடு இணையே கிடையாது. அதுபோல, தாயைப்போற்றி வணங்கவேண்டும் என்பது யாரும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லாத ஒரு உணர்வாகும். தாயைப் பழித்தவனை எந்த ஒரு இந்தியனும் விடவேமாட்டான். அந்த வகையில், நாம் பிறந்த இந்த நாட்டை தாய்க்கு இணையாகவே நாட்டுப்பற்று உள்ள ஒவ்வொருவரும் கருதுகிறார்கள். அதனால்தான், இந்திய நாட்டை தாய் நாடு என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட அழைக்கிறான். தான் பிறந்த நாட்டை தாய் நாடாகக் கருதுவதால்தான், நாட்டை ‘பாரத மாதா’ என்று வணங்குகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலேயே பிறந்துவிட்டு, நாட்டுக்கு விரோதமாக செயல்படும் போக்கு ஆங்காங்கு முளைவிட்டுக்கொண்டு இருக்கிறது. நாட்டுக்கு விரோதமாக, நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலைச் செய்தவர்களை, செயற்கரிய செயலைச் செய்தவர்களாக, அவர்கள் புகழ்பாடும் செயலைச்செய்யும் போக்கு வளர்ந்துவருவது கவலைக்குரியது. எடுத்துக்காட்டாக, பாராளுமன்றத்தைக் குண்டுவீசி தகர்க்க முயன்ற சதிகாரன் தூக்கிலிடப்பட்ட நாளையே, நினைவில் போற்றத்தக்க நாளாக ஒரு பல்கலைக்கழகத்திலேயே கொண்டாடினார்கள் என்றும், தேசவிரோத கோஷங்களை எழுப்பினார்கள் என்றும் பலத்த விமர்சனங்கள் கூறப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்த ஒருவரை, மாணவர்களே அதுவும் பல்கலைக்கழகத்திலேயே கொண்டாடலாமா? என்று ஒருபக்கம் பலத்த எதிர்ப்பு கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, இந்த நாட்டுக்கு சொந்தமான காஷ்மீரை எப்படியும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற ஆக்ரோஷத்தில், பாகிஸ்தான் எல்லையில் போரிட்டு வருகிறது. மேலும், இந்தியாவுக்குள் பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளை அலை அலையாய் அனுப்பி, பல வன்முறைச்செயல்களை அரங்கேற்றுகிறது. எந்த காஷ்மீரைக் காப்பாற்ற எண்ணற்ற ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்களோ, அந்த காஷ்மீரில் சமீபத்தில் இளைஞர்கள் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் பாகிஸ்தான் கொடிகளை கையில் ஏந்தியிருக்கிறார்கள் என்ற தகவலும், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களைக் கிளப்பினார்கள் என்ற தகவலும், நாட்டுப்பற்று மிக்க நல்லோர் ஒவ்வொருவரின் ரத்தத்தையும் கொதிக்க வைக்கிறது. இந்த நிலையில், இந்த நாட்டு சுதந்திரத்துக்காக நமது முன்னோர்கள் எந்த அளவு ரத்தத்தைச் சிந்தி தியாகங்கள் செய்தார்கள் என்பதையும், தேசபக்தியையும் அனைவரிடையேயும் குறிப்பாக, மாணவர் சமுதாயத்தினரிடையேயும் புகட்டுவது இன்றியமையாததாகிவிட்டது. இதற்கு ஒரு நல்ல தொடக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி செய்துவிட்டார். இந்தியாவில் 46 மத்திய பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் தினமும் 207 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் எல்லோருக்கும் நன்றாக தெரியும் வகையிலும், பெருமைசேர்க்கும் வகையிலும் தேசியக்கோடியை ஏற்றவேண்டும் என்றும், இதுபோல அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களிலும் தினமும் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த முயற்சி மாணவர்களிடையே வலிமையான இந்தியா, ஒற்றுமையான இந்தியா என்ற வகையில் தேசபக்தியை வளர்க்கும். தேசியக்கொடியை ஏற்றும்போதும், அதைப்பார்க்கும்போதும் தானாடாவிட்டாலும், தன் தசை ஆடும் என்பதுபோல, தன்னையறியாமல் ஒவ்வொருவருக்கும் தாய்நாட்டின் மீது பக்தி ஏற்படும். இந்த நல்ல முயற்சியை மத்திய பல்கலைக்கழகங்களோடு விட்டுவிடக்கூடாது. நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்தவேண்டும்.

பிஞ்சு மனதில் விதைக்கப்படும் தேசபக்தி, அவர்கள் வளரும்போது அசைக்கமுடியாத ஆலமரம் போல ஆழமாக வேரூன்றி இருக்கும். தேசியக்கொடி ஏற்றுவதோடு நின்றுவிடாமல், பாடத்திட்டங்களிலும் தேசபக்தியை உருவாக்கும் வகையில் பாடங்களைச் சேர்க்கவேண்டும். நிச்சயமாக இது கல்வி நிறுவன வளாகங்களில் தேசவிரோத சக்திகளின் நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்கும். கல்வி நிறுவனங்களோடு விட்டுவிடாமல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடியை தினமும் ஏற்றவேண்டும்.

குறையும் உணவு உற்பத்தி 04/03/2016


உலகம் முழுவதும் மாறிவரும் பருவநிலை மாறுபாட்டினால் உணவு உற்பத்தி 18 சதவீதமாக குறையும் வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களான டேவிட் லெக்கிளாரி, மைக்கேல் ஓபர்ஸ்டீனர் ஆகியோர் உலக அளவிலான சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாசு காரணமாக, பருவநிலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஒருசில இடங்களில் பருவ மழை பொய்த்துவிட்டது. மற்ற இடங்களில் காலம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சாலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஏராளமான மரங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வான் மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து வருகிறது. மக்களும், மரங்களும் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனின் அளவும் குறைந்துவிட்டது. இதனால் அந்தந்த நாடுகளின் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுபோக மீதமுள்ள நீர்நிலைகளும் மாசுபட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்கு, அந்தந்த நாடுகளுக்கு நீர்ப்பாசனத்துக்கும், சேமிப்பதற்கும் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் 25 சதவீதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட வேண்டும். தகுந்த காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், வரும் 2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 18 சதவிகிதத்துக்கும் அதிகமான உணவு உற்பத்தி குறையும் வாய்ப்பு உள்ளது. இது தான் அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம்.

வனத்துறை  கற்றுத்தரும்  பாடம் 04/03/2016

தமிழக வனத்துறைக்கு 161 ஆண்டுகால பாரம்பரியம் உண்டு. 1855-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் எச்.எப்.சி. கிளஹார்னுக்கு தாவரவியலில் இருந்த நிகரற்ற திறமையைக் கண்டு அப்போது இருந்த கவர்னர் ஹாரிஸ் பிரபு, டாக்டர் கிளஹார்னை அழைத்து, அரசுக்கு தனியாக ஒரு வனத்துறையை உருவாக்கும் பொறுப்பை கையில் கொடுத்தார். அதை திறம்பட செய்தவர் டாக்டர் கிளஹார்ன். 1869 வரை அவர்தான் வனத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றினார். அவருக்குப்பின் ஏராளமான அதிகாரிகள் குறிப்பாக, ஆனைமலையில் ஹுகோ வுட் போன்ற அதிகாரிகளின் அளப்பரிய பணியினால்தான், தமிழக வனத்துறை செழித்து வளர்ந்தோங்கியது. தற்போது தமிழக வனத்துறை தலைவரான முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் என்.கிருஷ்ணகுமார் தலைமையில், உயர் அதிகாரிகளான வி.கணேசன், ராஜீவ் கே.ஸ்ரீவத்சவா ஆகியோரை ஆசிரியர் குழுவாகக்கொண்ட ஒரு குழு, ஆங்கிலத்தில் ‘ஹால் ஆப் பேம்’ அதாவது, ‘புகழ் பெற்றவர்கள் மண்டபம்’ என்று ஒரு நூலை உருவாக்கி உள்ளனர். இந்த நூலில், டாக்டர் கிளஹார்ன் முதற்கொண்டு சமீபகாலம்வரையில் தமிழக வனத்துறையை மேம்பட உருவாக்கும் பணியில் இருந்த பிராண்டிஸ், பெட்டோம், லாட்ஜ், கவுலி பிரவுன், கேம்பிள், ஹுகோ வுட், பிஷர், சி.ஆர்.ரங்கநாதன், வி.எஸ்.கிருஷ்ணசாமி, சி.ஏ.ஆர்.பத்ரன், டி.ஜெயதேவ், கே.ஆண்டியப்பன், கே.வெங்கட கிருஷ்ணன், டி.அச்சயா, எம்.ஏ.பாட்ஷா, எஸ்.கொண்டாஸ், ஜே.வில்சன், எஸ்.சங்கரமூர்த்தி, எஸ்.சண்முகசுந்தரம், வி.கிருஷ்ணமூர்த்தி, எம்.கிருஷ்ணன், ரிச்சர்டு ராட்கிளிப், இ.ஆர்.சி.டேவிதார், கே.எம்.மாத்யூ ஆகிய 25 தன்னலமற்ற சேவை புரிந்தவர்களின் செயல்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஹுகோ வுட் ஆனைமலையில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். தமிழ்நாட்டில் தேக்குமரங்கள் செழிப்பாக ஓங்கி வளர்ந்து உயர்ந்து நின்றுகொண்டிருப்பதற்கு இவர்தான் மூலகாரணம். தினமும் காலையில் நடைபயணத்தின்போது தன் கால்சட்டையின் 2 பைகளின் நிறைய தேக்கு விதைகளை போட்டுக்கொண்டு காடுகளுக்குள் சென்று வாக்கிங் ஸ்டிக்கை வைத்து ஒரு குத்து குத்தி ஒரு விதையை போட்டு மூடிவிட்டு செல்வாராம். அவ்வாறு அவர் உருவாக்கிய காட்டில்தான் தனது கல்லறை இருக்கவேண்டும் என்று விரும்பிய அவரது விருப்பத்துக்கேற்ப, 1933-ம் ஆண்டு அவர் காலமானவுடன், அவர் வளர்த்த காடுகளுக்குள்ளேயே அவரது உடல் புதைக்கப்பட்டு இன்றளவும் கல்லறை இருக்கிறது. ‘என்னை நீங்கள் பார்க்க விரும்பினால், தயவு செய்து சுற்றிப்பாருங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது. சுற்றிப்பார்த்தால் அவர் வளர்த்த காடுகள்தான் இருக்கின்றன. இன்றும் வனத்துறையில் புதிதாக வேலையில் சேருபவர்கள் எல்லோரையும் ஹுகோ வுட் கல்லறைக்கு அழைத்துச்சென்று காட்டுகிறார்கள். வனத்துறையில் இந்த 25 பேர்களைபோல, தமிழக அரசில் 36 துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் இந்த 25 பேர்களைபோல சிறப்பாக பணியாற்றியவர்கள் பலர் இருப்பார்கள். காவல்துறையை எடுத்துக்கொண்டால், மறைந்த போலீஸ் உயர்அதிகாரிகள் பராங்குச நாயுடு, ராஜரத்தினம், தேவசகாயம், ஸ்டிரேசி, எப்.வி.அருள், எஸ்.ஸ்ரீபால், இப்போது சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்று புகழ்பெற்ற விஜயகுமார் என்று எவ்வளவோ அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். புதிதாக பயிற்சிபெறும் போலீசார் முதல் அதிகாரிகள்வரை உள்ள அனைவருக்கும், பணியில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற அதிகாரிகள் சிக்கலான சமயங்களில் அதை எப்படி சமாளித்து பணியை திறம்பட ஆற்றினார்கள் என்பதை விளக்கும் நூல் வெளியிடப்பட்டால், சிறந்த வழிகாட்டியாக இருக்கும். ஆனால், வனத்துறைபோல ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடாமல், தமிழிலும் வெளியிட்டால், கடைநிலை ஊழியர்களுக்கும், நிச்சயமாக அவர்களுக்கு முன்னால் பணியாற்றிய சீரிய பணிகளை அந்த துறைக்காக ஆற்றியவர்களின் அனுபவங்களை பாடங்களாக புரியவைக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள 13 லட்சத்து 98 ஆயிரத்து 798 அரசு ஊழியர்களுக்கும், ஒவ்வொரு துறையிலும் அந்த துறையை மேன்மையாக வைத்திருக்க உதவியவர்களின் தியாகங்களை, சீரிய பணிகளை கற்றுக்கொடுக்க வனத்துறை வழிகாட்டிவிட்டது. மற்றவர்களும் பின்பற்றவேண்டும்.

Tuesday, March 1, 2016


விரல் நுனியின் மகத்துவம் 01/03/2016

 மனிதனுக்கு விரல் நுனியின் மகத்துவம் தெரிவதில்லை. விரல் நுனியை மிக சாதரணமாக நினைக்கிறார்கள். ஆனால், அந்த விரல் நுனியை மட்டுமே நம்பி தினமும் பல காரியங்களை நாம் செய்து வருகிறோம். முக்கியமாக பார்வையற்றவர்கள், அரிசியா? உமியா? என்று தொட்டுப் பார்த்து கண்டுபிடிப்பது, விரல் நுனியில் உள்ள அடர்த்தியான கொழுப்பு அறைகள் நிரம்பிய திசுக்களும், அவற்றை போர்த்தியுள்ள பிரத்யேகமான தோலும் சேர்ந்து தான் இவற்றை செய்கின்றன.

விரல் முனை எலும்பு நகத்தின் நுனி வரை நீளுவதில்லை. கிட்டத்தட்ட நகத்தின் பாதி பகுதியில் அது நின்று விடுகிறது. அந்த எலும்புக்கு மேல் பகுதியில் தான் குஷன் போன்ற திசுக்கள் உள்ளன. இவற்றின் தனித்தன்மையால் தான் நாம் வேகமாக ரூபாய் நோட்டுகளை எண்ண முடிகிறது. கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மீட்ட முடிகிறது.

நாம் வளர, வளர, நம் விரல் நுனியின் செயல் திறனும் வளர்ந்து கொண்டே இருக்கும். சிறுவயதில் சாக்பீஸ் கொண்டு எழுதும் போது, எவ்வளவு முறை சாக்பீஸை உடைத்திருப்போம். ஆனால், பெரியவர்களாக ஆன பிறகு சாக்பீசால் சரளமாக தொடர்ந்து எழுத முடிகிறதே..! அது எப்படி?

விரல் நுனியின் செயல் திறன் வளர்ச்சியால், திறமை வளர்ந்தாலும் விரல் நுனியின் உருவம் பெரிதாவதில்லை. அப்படி பெரிதாகவும் கூடாது. அதிகம் புகைப்பவர்கள், மது அருந்துபவர்களின் விரல் நுனிகள் திடீரென்று பெரிதாவது இயல்பு. அதேபோல் கல்லீரல் கோளாறுகளால் விரல் நுனிகள் அசாதாரணமாக பெரிதாவது உண்டு.  ஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தவைதான். இவற்றில் மிக அதிகமான ரத்த ஓட்டம் உண்டு. அதனால்தான் ரத்த பரிசோதனைக்கு பல நேரங்களில் விரல் நுனியில் இருந்தே ரத்தம் எடுக்கிறார்கள். தவிர உணர்வு நரம்புகளும் இங்கு குவிந்துள்ளன.

கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் மிகவும் அதிக அளவில் உணர்சிகளை மூளைக்கு அனுப்பும் சக்தி கொண்டவை. கண்களை மூடிக்கொண்டு நாணயத்தின் ஒரு பக்கத்தை விரல் நுனியால் தடவிப் பார்த்து அது பூவா, தலையா என்று சரியாக் சொல்ல முடிவது இதனால்தான்.

விரல் நுனியில் துருப் பிடித்த ஊசியோ, முள்ளோ குத்தி விட்டால் ‘செப்டிக்‘ ஆகி ஒரு பழுத்த இலந்தம் பழம் போல் ஆகி விடுகிறது. அத்துடன் விண்ணென்று தெறிக்கும் வலியும் சேர்ந்து கொள்ளும். இதை அகற்ற உடனடியாக ஆன்டிசெப்டிக் மருந்துகளை அளித்து, பிறகு சிறிய அறுவை சிகிச்சை மூலம் அங்குள்ள சீழை வெளியேற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் விரல் நுனி தனது உருவத்தையும், மெத்தென்ற தன்மையையும் இழக்க நேரிடும். எனவே விரல் நுனி இன்றியமையாதது என்பது புரிகிறதல்லவா!

ராசிகளை கண்டறிந்தவர்கள் 02/03/2016

எகிப்தின் ஒரு பகுதியாக இருந்தது, அஸ்சிரிய பேரரசு. அதனை வீழ்ச்சியுறச் செய்த நெபோபோலேசர் கி.மு.625-ல் தமது ஆட்சிப் பகுதியை பாபிலோனிய அரசாக அறிவித்துக் கொண்டார். பின்னர் பாபிலோனியா என்ற பெயர் மாறி ‘கால்டியா‘ என்று அழைக்கப்பட்டது. நெபோபோலேசருக்குப் பின் அவருடைய மகன் நெப்யூசட்னெசர் மன்னரானார்.

பாபிலோனிய ஆட்சியில் மிகப் புகழ் பெற்ற காலகட்டம் இவருடையதுதான். இவர் மீடிய இளவரசியை மணந்து மீடிய அரசை நட்பாக்கிக் கொண்டார். இதன்மூலம் வடஎல்லை,  பாதுகாப்பு மிக்கதாக ஆனது. அவர் கார்க்கிமிஷ் போரில் எகிப்தையும் அதன் ஆதரவாளர்களையும் தோற்கடித்தார். ஜெருசலேமை சூறையாடி யூதர்கள் பலரை சிறைபிடித்தார். இவரது ஆளுகையில் யூப்ரடீஸ் பள்ளத்தாக்கு, சிரியா, பாலஸ்தீனம் முதலியவை உட்பட்டிருந்தன.

இவர் சிறந்த போர் வீரர் மட்டுமல்ல பல வியக்கவைக்கும் கட்டிடங்களையும் கட்டினார். இவர் காலத்தில் களிமண்ணே கட்டிடப் பொருளாக இருந்தது. அதைக் கொண்டே மிகப்பெரிய கட்டிடங்களை கட்டினார். அரண்மனை மாடிகளில் அழகிய தோட்டங்களை அமைத்தார். உலகில் முதல் மாடித் தோட்டத்தை அமைத்தவர் இவர்தான்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தோட்டங்கள் போல் காணப்படும். அதனால் இதை பாபிலோனிய தொங்கும் தோட்டம் என்று அழைத்தார்கள். பண்டைய ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

அறிவியலிலும், மருத்துவத்திலும், ஜோதிடத்திலும் கால்டியர்கள் வல்லவர்களாக இருந்தனர். 12 ராசி சக்கரங்களை அமைத்தவர்கள் இவர்கள்தான் என்கிறது வரலாறு. நட்சத்திரங்களால் பூலோக வாசிகளின் வாழ்க்கை பாதிக்கிறது என்று நம்பினர். கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுக் கூறினர்.

நெப்யூசட்னெசருக்குப் பின் வாரிசு பிரச்சினை எழுந்தது. சுயநலப் பிறப்புகள் ஒன்று கூடி உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். இறுதியில் நபெனிடஸ் என்ற அறிஞர் மன்னராக்கப்பட்டார். இவர் அரச விவகாரங்களில் அக்கறை செலுத்தவில்லை. கி.மு. 539-ல் பாரசீக பேரரசர் சையாஸ் பாபிலோனியாவை கைப்பற்றி பாரசீகத்துடன் இணைத்துக் கொண்டார்.