Search This Blog

Friday, February 12, 2016


இசை ஜாம்பவான் பீத்தோவான் 

மேற்கத்திய இசையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்டவர் பீத்தோவான். இவரது சிம்பொனி இசை இன்றைக்கும் ஒரு பிரமாண்டம் தான். அவரது பெருமை பல ஆண்டுகள் கடந்தும் குறையாமல் இருக்கிறது. ‘நிழல்கள்‘ படத்தில் வரும் ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது‘ பாடல் கூட பீத்தோவானின் சிம்போனியை தழுவி உருவாக்கப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பீத்தோவானின் வாழ்க்கையை மூன்று கட்டமாக பிரிக்கிறார்கள். முதல் கட்டம் 1770 முதல் 1802 வரை. இரண்டாவது கட்டம் 1803 முதல் 1814 வரை, மூன்றாவது கட்டம் 1815 முதல் 1827 வரை. இதில் இரண்டாவது கட்டம் தொடங்கும் போது இவருடைய காதுகள் கேட்கும் சக்தியை இழந்தன. அதன்பின்தான் இவர் இசையில் உலகப் புகழ் பெற்றார். இதுவோர் அரிய நிகழ்வு.

பீத்தோவானின் முழுப் பெயர் லூத்விக் வான் பீத்தோவான். இவருடைய தந்தை ஜோகன்வான் பீத்தோவான். தாய் மரியா மேக்டலீனா கேவிரிச். பீத்தோவான் 1770-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு இசை கற்றுக் கொடுத்த முதல் குரு இவருடைய தந்தை தான். பீத்தோவானின் இசை வாழ்க்கையில் ‘வியன்னா‘ நகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. 1787-ல் அங்கு சென்ற பின்தான் அவர் பல இசை மேதைகளை சந்தித்தார். ஹய்டனும் மொசார்ட்டும் அதில் முக்கியமானவர்கள். 1787-ல் அவருடைய தாயும், 1792-ல் தந்தையும் மறைந்தனர். 1796-ல் டின்விட்டஸ் என்ற காது நோயால் அவதிப்பட்டார். 1801-ல் முழுமையாக கேட்கும் திறனை இழந்தார்.

1803-ல் இவரை உயிருக்கு உயிராய் காதலித்த கில்லிட்டா வேறொருவரை மணந்தார். அதன்பின் ஜோசபின் டெய்ம் என்ற பெண் மீது காதல் கொண்டார். அவரும் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்வேறு விதமான மன உளைச்சலுக்கு ஆளானார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளானார். ஆனால், அவற்றையெல்லாம் மீறி சாதித்தது இவரது தனிச் சிறப்பு. இவர் ஒன்பது முறை சிம்பொனிக்கு இசை அமைத்தவர். 12 வகையான ‘அக்கெஷனல்‘ இசையையும், 32 பியானோ சொனாட்டுகளையும் எழுதியுள்ளார். 10 வகையான பியானோ, வயலின் இசைக் குறிப்புகளை உருவாக்கியுள்ளார். சிறந்த பியானோ இசைக்கலைஞராக, இசை நடத்துனராக, இசைக் கச்சேரிகளில் கொடி கட்டிப் பறந்தார், பீத்தோவான்.  இசையையே வாழ்க்கையாக கொண்ட பீத்தோவான் 1827 மார்ச் 26-ல் காலமானார். இவரது இசையை இன்னமும் இசை உலகம் போற்றி வருகிறது. இவர் தன் காதலிக்கு எழுதிய கடிதங்களை பல அருங்காட்சியகங்கள் பாதுகாத்து வருகின்றன. 1949-ல் ‘எரோயக்கா‘ என்ற படமும், 1962ல் ‘தி மேக்னிபிசியன்ட் ரெபல்‘ என்ற படமும், 1994-ல் ‘இம்மார்ட்டல் பிளான்க்‘ என்ற படமும் பீத்தோவான் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை ஆகும்.  செவிகளை இனிமைப்படுத்தும் சிம்பொனி இசையை உருவாக்கியவர் ஒரு கேட்கும் திறனற்ற ஒருவர் என்பது உலகின் மிகப் பெரிய அதிசயமே!

முதல் இரட்டை வேட படம்

இரட்டை வேடத்தில் ஒரு நடிகர் நடிப்பது இன்றைக்கும் கூட வியப்பான விஷயம் தான். சம்பந்தப்பட்ட நடிகருக்கு மட்டுமல்லாது, அவருடைய ரசிகர்களுக்கும் அது இரட்டிப்பு சந்தோஷம் தரும் ஒன்று.

இரட்டை வேடத்தில் நடிக்காத நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அனேகமாக அனைத்து நடிகர்களுமே இரட்டை வேடத்தில் நடித்தவர்கள் தான். இந்த இரட்டை வேடப் படம் முதன் முதலில் வந்தது 1940-ல். இப்போது போல் கிராபிக்ஸ், டெக்னிக் என்று எதுவுமே இல்லாத அந்த காலத்தில் பிலிமின் ஒருபகுதியை மறைத்து, அதில் நடிகரின் ஒரு வேடத்தை எடுத்துக் கொள்வார்கள். அதற்கு எதிரே மீண்டும் அதே நடிகரை மற்றொரு வேடத்தில் நடிக்க வைத்து பிலிமின் மற்றொரு பகுதியை மறைத்து எடுப்பார்கள்.

இரட்டை வேட படத்தில், இரட்டை வேடமும் ஒரே பிரேமில் வரும் காட்சிகளை படமாக்குவது கேமராமேனுக்கு சவாலான வேலை. இன்று பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டதால், ஒரு நடிகர் எத்தனை வேடம் ஏற்று நடித்தாலும் அத்தனையையும் ஒரே பிரேமில் சுலபமாக காட்டிவிட முடியும்.

1940-ல் புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ‘தி மேன் இன் த அயர்ன் மாஸ்க்‘ என்ற நாவலின் கதையை மையமாக வைத்து பி.யு.சின்னப்பாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து உருவாக்கிய படம்தான் ‘உத்தம புத்திரன்‘. இதே கதையை அப்படியே 1958-ல் சிவாஜிகணேசனை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து அதே பெயரையும் வைத்து மீண்டும் ஒரு உத்தம புத்திரனை வெளியிட்டார்கள். இதுதான் சிவாஜிக்கு முதல் இரட்டை வேட படம்.

மன்னர் குலத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாய்மாமன் சதியால் பிரிக்கப்பட்டு ஒருவன் நல்லவனாகவும், மற்றொருவன் கெட்டவனாகவும் மாறி, இறுதியில் நல்லவன் முடிசூட்டிக் கொள்வதுதான் கதை. இதுவொரு சாகா வரம் பெற்ற கதை என்றும் சொல்லலாம்.

சிவாஜி நடித்த உத்தமபுத்திரனை காலத்தை வென்ற படம் என்று சொல்லலாம். விக்கிரமன், பார்த்திபன் என இரட்டை வேடங்களில் அவர் அசத்தியிருப்பார். அதிலும், “யாரடி நீ மோகினி“ பாடலும், அதில் சிவாஜியின் கைதட்டலுடன் கூடிய நடனமும் இன்றும் மறக்க முடியாதவை. 

பி.யு.சின்னப்பாவின் உத்தம புத்திரனில் தொடங்கி சிவாஜியின் உத்தம புத்திரன், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப்பிள்ளை, கமல்ஹாசனின் ‘தூங்காதே தம்பி தூங்காதே‘, ரஜினியின் ராஜாதி ராஜா என்று ஏகப்பட்ட படங்கள் இதே பாணியில் வந்துவிட்டன. ஆனாலும் இந்த கதை திகட்டாத கதையாகத்தான் உலக அரங்கில் இன்றும் இருக்கிறது.

Thursday, February 11, 2016


முதல் இயற்கை வேளாண் மாநிலம், சிக்கிம் 
 10/02/2016

ஒரு மாநிலமே அதன் முழு விவசாயத்தையும் இயற்கை முறைக்கு திருப்பி இருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அந்த மாநிலத்தின் பெயர் சிக்கிம். இந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். என்னதான் அரசியலில் அவர் ஜாம்பவனாக இருந்தாலும், ஐந்து முறை தொடர்ச்சியாக மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர் மனதின் ஓரத்தில் விவசாயம் என்ற உன்னதம் உறங்காமல் விழிப்போடு இருந்து கொண்டே இருந்தது.  விவசாயத்தை விஷமாக மாற்றும் இன்றைய நவீன விவசாயத்தில் இருந்து மாற்று விவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கனவு கண்டார். அந்த விவசாயம் இயற்கை முறையில் தான் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். அவர் தனது விருப்பத்தை 2003-ம் ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் சிக்கிம் இனி ஒரு ‘ஆர்கானிக் ஸ்டேட்‘ என்றார்.  அதன்படி மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டன. ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு‘ என்ற வாரியம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து முதலில் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டி இருந்தது. அதற்காக தொடர்ந்து ஒரு பக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை தந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.

அத்தனை நிலங்களையும் இயற்கை வேளாண்மைக்கு மாற்ற, நிறைய இயற்கை உரங்கள் தேவை. அந்த அளவிற்கு மாநிலத்தில் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனை சரி செய்வதற்கு, மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களையும், 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களையும் அரசு உருவாக்கியது. இயற்கை உரங்களை தயாரிக்க தாராளமாக மானியங்களை மாநில அரசு தந்தது. இயற்கை உரம் தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் சொல்லிக் கொடுத்தது. அதோடு நின்றுவிடவில்லை, ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்‘ என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. அந்த கிராமங்களில் எல்லாம் இயற்கை வேளாண்மை முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்த கிராமங்களை ‘பயோ வில்லேஜ்‘ அதாவது ‘உயிர் கிராமங்கள்‘ என்று அழைத்தார்கள். இவ்வாறான தொடர் அதிரடி நடவடிக்கையால் 2009-ம் ஆண்டு இறுதியில் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறின.  அப்போது மற்றுறோர் அறிவிப்பையும் பவன்குமார் வெளியிட்டார். இனி சிக்கிம் மாநிலத்துக்கு ரசாயன உரக் கோட்டா வேண்டாம். அதற்கான மத்திய அரசின் மானியமும் வேண்டாம் என்றார். மாநிலத்தில் ரசாயன உரத்துக்கான அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு விட்டன. எப்படிப்பட்ட உன்னத திட்டங்களும் அதனை தொடர்வதற்கான ஆராய்ச்சிகளும், ஆய்வு முறைகளும் இல்லாததால் பலன் தராமல் தோல்வி அடைந்துவிடுகிறது. இதை கச்சிதமாக புரிந்து கொண்ட சிக்கிம் அரசு ‘சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் பார் ஆர்கானிக் பார்மிங்‘ என்ற இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியது. அதன் மூலம் சிக்கல்கள் அவ்வப்போது தீர்த்துவைக்கப்பட்டன.

இத்தனை ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் செய்ததால் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலம், நஞ்சில்லா விளைநிலங்கள் கொண்ட விவசாய பூமியாக மாறியது.  ஆரம்பத்தில் ஏகப்பட்ட சிரமங்களை  சந்தித்தாலும் நாட்கள் செல்லச் செல்ல சிக்கிம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை புரிந்து கொண்டார்கள். இன்றைக்கு சிக்கிமில் விளைவிக்கப்படும் விளை பொருட்களை வாங்க  உலக நாடுகள் தவம் கிடக்கின்றன. இவ்வாறாக, சிக்கிம் மாநிலம், நாட்டின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Monday, February 8, 2016

பிப்ரவரி ரஷ்ய புரட்சி 
 

 ரஷியாவில் ஜார் மன்னர்கள் நீண்ட நெடுங்காலமாக கொடுங்கோலாட்சி புரிந்து வந்தனர். 1900-ம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புரட்சி வெடிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் முதல் உலகப்போர் தொடங்கியது. உடனே கொடுங்கோலாட்சியை தளர்த்திக் கொண்டு மக்களை போரில் பங்கேற்க அழைத்தார் அப்போதைய ஜார் மன்னர்.  போர் முடிந்ததும் தனது கொடூர முகத்தை மீண்டும் காட்டினார். 1917-ல் தொழிலாளர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். எங்கும் வேலை நிறுத்தம், போராட்டம் என உழைப்பாளர்களின் எதிர்ப்பு கிளம்பியது. விளாடிமிர் லெனின் தலைமை தாங்கிய இந்த புரட்சிக்கு ‘பிப்ரவரி புரட்சி‘ என்று பெயர்.   கலகக்காரர்கள் மீது ரஷிய ராணுவத்தை ஏவி விட்டார் அப்போதைய ஜார் மன்னர் நிக்கோலஸ். ஆனால், எதிர்பாராதவிதமாக ராணுவத்தின் பெரும் பகுதி புரட்சியாளர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டன.  ஜார் மன்னரை தூக்கி எறிந்துவிட்டு, ‘ரஷியன் புரொவிஷனல் கவர்ன்மெண்ட்‘ என்ற பெயரில் இளவரசர் ஒருவரும் கம்யூனிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். லெனின் வலது கையாக செயல்பட்ட ட்ராட்ஸ்கி கைது செய்யப்பட்டார். மறுபடியும் புரட்சி தொடங்கியது. இதற்கு ‘அக்டோபர் புரட்சி‘ என்று பெயர்.  இடைக்கால ஆட்சி தொடங்கிய 8 மாதங்களில் இதுவும் சரிப்படாது என்று அதையும் தூக்கி எறிந்து லெனின் ஆதரவு சக்திகளான போல்ஷவிக்குகள் ரஷியாவை உழைப்பாளர்களே ஆட்சி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.  ஜார் மன்னர்களின் ஆட்சியை மறுபடி கொண்டுவர நினைத்த ரஷிய முதலாளிகள், வெண்படை என்ற பெயரில் சண்டை இட்டார்கள். ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை கொண்டிருந்த செங்கொடி படை, அதை எதிர்த்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் போரிட்டது.  வெண்படைக்கு வெளிநாட்டு ராணுவங்களின் ஆதரவு இருந்தும் கூட செம்படை வெண்படையை தோற்கடித்தது. இந்த செம்படைதான் பிறகு ரஷிய ராணுவமாக உருவெடுத்தது. ஒரு மாபெரும் மக்கள் புரட்சியால் மாபெரும் கம்யூனிஸ்டு தேசமாக மலர்ந்த சோவியத் யூனியன், பரிதாமாக சிதறுண்ட வரலாறும் உண்டு.

Sunday, February 7, 2016


ரத்தப்பணம் 
(24/01/2016)

கருப்புப் பணம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒயிட் மணி என்ற வெள்ளைப் பணம் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தப் பணம் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா..?  இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்வோம். ரத்தப் பணம் என்பது கேங் ஸ்டார்கள் மொழியில் இருக்கிறது. இந்த  ரத்தப்பணத்திற்கு இடத்திற்கு தகுந்தபடி பல பெயர்கள் இருக்கின்றன. திய்யா, கிஸாஸ், எரிக்பைன், காலனாஸ், விரா, க்லொசிஸ்னா, மிமைசின், ஸீர், வியர்கில்ட் இவையெல்லாம் ரத்தப் பணத்தின்  மாற்றுப் பெயர்கள்.  தவறாக யாரையாவது கொலை செய்துவிட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுக்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்குத்தான் இத்தனை பெயர்கள்.

இயேசு நாதரை காட்டிக்கொடுத்து 30 வெள்ளிக்காசுகளை வாங்கினான், யூதாஸ். இயேசு சிலுவையில் அறையப்பட்டப் பின்பு, அவன் தன் தவறை உணர்ந்து குற்ற உணர்வு தாளாமல் வாங்கிய காசுகளை திருப்பிக் கொடுத்தான். அப்போது ஆட்சியாளர்கள் இந்த பணத்தை மீண்டும் கஜானாவில் வைக்க முடியாது. இது ரத்தத்துக்கு கிடைத்த விலை என்று சொன்னார்களாம். அப்போது தோன்றியதுதான் ‘பிளட் மணி’ என்ற வார்த்தை. அதாவது ரத்தத்துக்கு ஈடாக கொடுக்கும் பணம்.

ஜெர்மனியில் ‘வியர்கில்ட்’ என்ற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ‘வியர்’ என்றல் மனிதன். ‘கில்ட்’ என்றால் பணம். ஒவ்வொரு மனித உயிருக்கும் அவர்கள் ஒரு விலையை நிர்ணயித்து இருக்கிறார்கள். அதன்படி தொழிலாளி உயிருக்கு விலை குறைவு. அரசனின் உயிர் என்றால் விலை அதிகம். அடிமைகளாக வாங்கப்பட்ட மனிதர்களை கொல்ல யாரும், யாருக்கும் பணம் தர வேண்டியதில்லை. இஷ்டம் போல் அவர்களை கொல்லலாம்.

இது மட்டுமில்லாமல், சில நேரங்களில் ‘உயிருக்கு உயிர்’ என்ற நடைமுறையும் இருந்தது. அதன்படி குடும்பத்தின் ஆண் வாரிசை யாராவது கொன்று விட்டால், கொன்றவரின் குடும்பத்தில் இருந்து ஒரு ஆண் வாரிசை தத்தெடுத்து தங்கள் குடும்பத்துக்குள் சேர்த்துக் கொள்வார்கள்.

தேவாலயத்திலோ, அரண்மனையிலோ ஒருவர் கொலை செய்யப்பட்டால், இந்த நஷ்டஈட்டு முறை எதுவும் செல்லாது. அவர்களுக்கு நேரடியாக மரண தண்டனை தான்.

ராக்கெட்டில் வலம் வந்த முதல் உயிரினம்
 (25/01/2016)

விஞ்ஞானிகள் முதன் முதலில் செய்யும் எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சி முடிவையும் விலங்குகள் மூலமே நிகழ்த்துகிறார்கள். அதன்படி விண்வெளியில்  மனிதன் தன் பிரயாணத்தை தொடங்குவதற்கு முன்பு நாயை ராக்கெட்டில் அனுப்பி ஆராய்ச்சி செய்தனர்.  அந்த வகையில் லைக்கா என்ற இரண்டு வயது நிரம்பிய பெண் நாய் தான் முதன் முதலில் பூமியை சுற்றிவந்து ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது.

1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ஸ்புட்னிக் என்ற ஒரு விண்கலம் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் தான் லைக்கா பயணம் செய்தது. விண்வெளியில் பயணம் செய்யும் போது என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் என்பதை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வந்தார்கள். விண்ணில் இருக்கும் எடையில்லாத பகுதியில் பிரயாணம் செய்யும் விண்வெளி வீரருக்கு ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் குழம்பி இருந்தனர். 

அதற்காக ரஷிய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் லைக்கா என்ற நாயை விண்கலத்தில் அனுப்பி வைத்தனர். அந்த விண்கலத்தில் ஒரு குறுகலான இடத்தில் இருந்த இருக்கையோடு பெல்ட் கொண்டு அந்த நாய் இணைக்கப்பட்டு இருந்தது.  நாயின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், மனநிலை போன்ற விவரங்கள் உடனடியாக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தன. இதற்காக நாயின் உடலில் பல எலக்ட்ரானிக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் அந்த நாய்க்கான உணவு குறித்த நேரத்தில் திரவ வடிவில் கொடுக்கப்பட்டது. லைக்கா ஆரோக்கியமாக இருந்து வருகிறது. எடையில்லாத பகுதியில் பிரயாணம் செய்யும் போது அதனுடைய உடல் நிலையில் எந்த  மாற்றமும் தென்படவில்லை என்பன போன்ற மருத்துவ அறிக்கைகளை ரஷிய  நாட்டு விஞ்ஞானிகள் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் அந்த நாயை விண்வெளியில் இருந்து உயிருடன் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அன்றைய நாளில் விண்வெளியில் சுற்றி வரும் விண்கலத்தில் இருந்து எந்த ஒரு பொருளையும் பூமிக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை. விண்கலத்தில் இருந்த சிறிதளவு ஆக்சிஜனை அந்த நாய் சுவாசித்து முடித்த பிறகு அது மூச்சு விட முடியாமல் இறந்து விட போகிறது என்பது தெரிந்தும் அதை பற்றி ரஷியா கவலைப்படவில்லை.

இதற்காக ரஷியாவுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. ஒரு வாரத்திற்கு பிறகு கொஞ்சம் கூட கவலைப்படாமல் மிகவும் அமைதியாக லைக்கா இறந்து விட்டது என்று சுருக்கமாக ரஷியா ஒரு அறிக்கை வெளியிட்டது. லைக்கா மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துங்கள் என்று பல நாடுகளை பத்திரிக்கைகள் கேட்டுக்கொண்டன. விண்வெளியை பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்து விட்டு தன் உயிரை அர்ப்பணித்த லைக்கா பாராட்டுக்குரியது.


மழைநீர் சேகரிப்பின் தந்தை  
(26/01/2016)

பொதுவாக தமிழகத்தில் மழைக்காலத்தில் மட்டுமே  நீர் நிறைந்து ஓடும் ஆறுகள் இருந்தன. அன்றைய மன்னர்கள் அதை வைத்து தான் விவசாய பணிகளை வழி வகை செய்தனர். குடிநீரையும் மக்களுக்கு பகிர்ந்து அளித்து வந்தனர். மக்கள் அனைவருக்கும் உணவளிப்பது மன்னனின் தலையாய கடமை. அதனால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாக வேண்டிய பொறுப்பு எல்லா மன்னர்களுக்குமே இருந்தது. அதில் இருந்து தவறினால் புலவர்கள் கேவலமாக, பாடியே கொன்று விடுவார்கள். பழிச்சொல்லுக்கு அஞ்சியவர்கள் அன்றைய மன்னர்கள். அதற்காகவே நீரை சேமிக்கும் உத்தியை மன்னர்கள் மாய்ந்து, மாய்ந்து செய்தார்கள்.

அத்தகைய மன்னர்களில் முதன்மையானவர் ‘இருப்பைக்குடி கிழவன்’ என்ற சிற்றரசன். இவரை நீரியியல் நிபுணர், நீரியியல் பொறியாளர், நீரியியல் வல்லுனர், நீரியியல் விஞ்ஞானி என்று எந்த பெயர் கொண்டு அழைத்தாலும், அது அவரது நீர் நிபுணத்துவத்துக்கு குறைவான சொல்லாகவே இருக்கும். அந்த அளவு நீர் ஞானம் கொண்ட ஒரு மன்னன். இவர் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆட்சிக்கு கட்டுப்பட்டிருந்த ‘இருஞ்சோணாடு’ என்ற பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர். இன்றைய சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடு அது. வறண்ட நிலப்பரப்பை அதிகம் கொண்ட தனது நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவு மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவில், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நீர் பாசனத்திற்காகவே செலவழித்த மன்னன். தனது நாடு மட்டுமல்லாமல் பாண்டிய நாடு முழுவதும் ஏரிகளை உருவாக்கிய பெருமை இந்த மன்னனையே சேரும். வைகை நதிக்கரையில் பல கண்மாய்களை உருவாக்கி அவற்றுக்கு நீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களை வடிவமைத்து தந்த தொழில்நுட்ப பொறியாளர் இந்தக் கிழவன் தான். இன்றைக்கு பெரிதாக பேசப்படும் ‘வாட்டர் ஹார்வெஸ்டிங்’ என்ற ‘நீர் அறுவடை’ அதாவது மழைநீர் சேமிப்பை சுமார் 1,200 வருடங்களுக்கு முன்பே செயல்படுத்திக் காட்டிய முன்னோடி. கி.பி.815 முதல் கி.பி.890 வரையிலான காலக்கட்டத்திலேயே இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலாக பயன்படுத்தியவர் இவர்தான். அதனால் இவரை ‘மழைநீர் சேகரிப்பின் தந்தை’ என்று சொல்வார்கள். மழைநீரை கொஞ்சம் கூட வீணாக்காமல் அதை அப்படியே ஓரிடத்தில் சேர்த்துவைத்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதில் கில்லாடி. மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.

இவர் செய்த இன்னொரு பிரமாண்டம், ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு சென்று அங்கும் ஏரிகளை உருவாக்கியதுதான். புவியீர்ப்பு விசைக்கு எதிராக எப்படி நீரை மேலேற்றினார் என்ற விவரம் கிடைக்கவில்லை. ஆனாலும் நீர் மேலாண்மையில் சாதனை மன்னர் இவர் என்பதில் சந்தேகமில்லை. இந்த செயல்முறையால் அதுவரை நீரைக் காணாமல் இருந்த வறட்சிப் பகுதிகள் எல்லாம் செழிக்கத் தொடங்கின. கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி,  திருநாராயணன் ஏரி, பெருங்குளம் என்று இன்றும் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஏரிகள் அனைத்தையும் அவர் உருவாக்கியதுதான். தற்போது தென் மாவட்டங்களில் ஓரளவு விவசாயம் நடைபெறுகிறது என்றால் அதற்கு  இருப்பைக்குடி கிழவன் அன்று ஏற்படுத்தித் தந்த நீர்நிலைகள் தான் பெரும் காரணம்.


கணித சக்கரவர்த்தி
27/01/2016

அலுவலக வரவு, செலவு கணக்குகளை 12 மணி நேரம் கடுமையாக போராடி பார்த்து முடித்தார் அந்த நடுத்தர வயது மனிதர். வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த அவரது குழந்தை 5 நிமிடத்தில் அந்த கணக்கை பார்த்து தவறுகளை திருத்தியது.  குழந்தையின் இந்த புத்திசாலித்தனத்தை தந்தையால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கோ கடுங்கோபம். ‘ஒருநாள் முழுக்க ராத்திரி பகல் விழித்து இருந்து நான் பார்த்த கணக்கை நீ 5 நிமிடத்தில் சரி செய்து விட்டாயா..?’ என்று கேட்டார்.  ‘அதுக்கெல்லாம் குறுக்கு வழி இருக்கப்பா! வேணும்னா, நான் திருத்தியதை நீங்க மறுபடியும் சரிபாருங்க!’ என்றது குழந்தை. மீண்டும் அந்த தந்தை மணிக்கணக்காக உட்கார்ந்து அந்த கணக்கை சரி பார்த்தார். குழந்தை சொன்னதுதான் சரியாக இருந்தது.  இப்படி பெரிய நிறுவனத்தின் கணக்கையே திருத்திய அந்த குழந்தையின் வயது 3 மட்டுமே. பிறவி மேதையான அந்த குழந்தைதான் பின்னாளில் பெரிய பெரிய கணித முறைகளை உருவாக்கிய கால் பிரெட்ரிக் காஸ் என்பதாகும்.  எண் கணிதம், அறிவியல் ஆய்வுகள், ஜியோமெட்ரி, பூமியின் மேற்பரப்பு, கணக்கியல், வானவியல், காந்தவியல், ஒளியியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்து, பிரமிப்பூட்டும் முடிவுகளை கண்டறிந்து, உலகுக்கு சொன்ன ஒரு அசாதாரண மனிதர்தான் காஸ்.

நடக்கக்கூட அறியாத குழந்தையாய் இருக்கும் போதே இவரது கணித ஞானம் பெரிய மேதைகளையே திக்குமுக்காடச் செய்தது. கணித உலகில் பல சமன்பாடுகளை உருவாக்கி, சிரமமின்றி கணிதத்தை எளிதாக்கியதால் இவரை கணிதமேதைகளின் சக்கரவர்த்தி என்று அழைக்கிறார்கள். கி.பி. 1777ல் பிறந்த காஸ், இளமைப் பருவத்தை அடையும் முன்பே, எண் கணிதத்துக்கான முழு அஸ்திவாரத்தை வடிவமைத்து முடித்து இருந்தார். இந்த கண்டுபிடிப்பின் ஒரு பகுதிதான் வட்டச்சுற்று. இதற்கு கடிகார நேரக் கணக்கீட்டினையே உதாரணமாக சொல்லலாம்.

ஒருநாள் என்பது 24 மணி நேரம், 00 முதல் 23 வரை கொண்டது. 00 என்பது நடுஇரவு. இம்முறையில் 19 என்பது மாலை 7 மணியை குறிக்கும். ஆனால், இதனை கடந்து 8 மணி நேரம் கழித்து மணி என்னவாகி இருக்கும் என்று கேட்டால் 19 + 8 = 27 என்று சொல்ல முடியாது. ஏனென்றால் 00 முதல் 23 வரையான வட்டச்சுற்று உடைந்து முடிவது 23ல். ஆக 19க்கு பிறகு 8 மணி நேரம் கடந்தால் வருவது அதிகாலை 3 மணி என கணக்கிட வேண்டும். இப்படி வட்டச்சுற்றை கணித்தவர் காஸ் தான்.  1801-ல் கணித முறையினை ஆழமாக விளக்கி ஒரு புத்தகம் எழுதினார் காஸ். பாளினாமியல் சமன்பாடுகளுக்கு பலமுறையில் விடை அடையாளம் என்ற கட்டுரையை பற்பல உதாரணங்களுடன் சமன்பாடுகளை எழுதினார். அந்த புத்தகத்தை படித்து கணித உலகமே வாய் பிளந்து நின்றது. ஒவ்வொரு முடிவும் ஆதாரமானவை.  எப்படி இவருக்குள் தினம் தினம் இப்படி கணித வழிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என வியந்தது உலகம். 1809-ல் விண் பொருட்களின் இயக்கம் என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இதுதான் இன்று நாம் விண்ணில் செலுத்தும் செயற்கைகோள்களுக்கு அடிப்படை ஆதாரம். இதன் மூலம் தான் செல்போன் இயக்கத்துக்கும் வழிகள் பிறந்தன.  மனித சக்தியால் ஆகாது என்று சொல்லும் அளவுக்கு ஆழமான கணித திறமைக் கொண்டிருந்த காஸ். தனி ஒரு மனிதனாக ரகசியமாக செய்தார். தனக்கென ஒரு சிஷ்யனை உருவாக்கிக் கொள்ளமால் விட்டுவிட்டார். அப்படி ஒருவரை உருவாக்கி இருந்தால் கணிதத்துறை இன்னும் பிரமாண்டமான பல முடிவுகளை கண்டறிந்து இருக்கும்.

வானிலையின் மிகப்பெரிய மாற்றங்கள்
 28/01/2016

நாம் அறிந்து கொள்ளும் வானிலை முன்னறிவிப்பு எல்லாவற்றையும் இன்சாட் 1பி செயற்கைக் கொள் மூலமே தெரிந்து கொள்கிறோம். இன்சாட் 1பி செயற்கைக்கோள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வானிலை மற்றும் மழைக்கான சூழ்நிலை பற்றி தரை நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக்கொண்டே இருக்கும். புயல் பற்றிய எச்சரிக்கைகளை இப்போது நாம் கேட்கிறோமே, அந்த எச்சரிக்கை செய்யும் வழக்கம் முதன்முதலில் 1886-ல் தொடங்கியது.

செயற்கைக் கோள்கள் பொதுவாக 650 - 1500 கிலோ மீட்டர் உயரத்தில் நீண்ட வட்டத்தில் சுற்றி வருகின்றன. பொதுவாக இவை ஒரு தடவை பூமியைச் சுற்றி வர 100 நிமிடங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஒரு நாளில் சுமார் 14½ முறை சுற்றுவதாக கணக்கிட்டு உள்ளனர்

1974-ம் ஆண்டு ஏப்ரல் 3, 4-ந் தேதிகளில் மட்டும் அமெரிக்காவின் 12 மாநிலங்களில், சுமார் 148 முறை சூறைக் காற்று அடித்து கதி கலங்க வைத்துள்ளது. இந்தியாவில் தற்போது 20 கிலோ மீட்டர் உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்க இயலும்.

மின்னல் அடிக்கும்போது குடை பிடித்து நடப்பது விபத்தில் முடியும். கடும் மழையில் காருக்குள் அமர்ந்திருப்பது மிக பாதுகாப்பானது ஆகும். மேலும் சூறைக்காற்றை வங்காளிகள் ‘பைசாகி பேரழிவு‘ என்றும் மற்ற வட நாட்டினர் ‘யானையின் தும்பிக்கை‘ எனவும் அழைக்கின்றனர்.

சென்னையில் பதிவான மிகக் குறைந்த வெப்பம் 15.6 டிகிரி செல்சியஸ். இது 1969-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி பதிவானது. இன்று உலகம் முழுவதும் சுமார் 12,500 வானிலை ஆராய்ச்சி மையங்கள் கணினி மூலம் இயக்கப்பட்டு, தட்பவெப்ப தகவல்கள் வெளியிடப்படுகின்றன. கீழ்மட்ட அளவில் காணப்படும் கருமேகங்களை ‘நிப்போ ஸ்ட்ராட்டஸ்’ என அழைக்கின்றனர். இவை 10 முதல் 15 நிமிடம் வரை மழை தரும் சக்தி படைத்தவை.

விமானம் 30 ஆயிரம் அடிக்கு மேல் பறக்கும்போதுதான் நகருவதே தெரியாமல் செல்லும். 1935-ம் வருடம் ஜனவரி 16-ந்தேதி அன்று குளிரினால் டெல்லி, போபால் போன்ற இடங்களில் வெப்பம் 0.6 டிகிரி செல்சியசுக்கு இறங்கி விட்டது. இவையெல்லாம் வானிலையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்கள் ஆகும்.

ஓர்  இனத்துக்காக  எழுதிய  நாவல் (01/02/2016)

சமூகத்தின் மீது கொண்ட கோபம், விருப்பு, வெறுப்பு என்ற பல்வேறு கோணங்களை வைத்து நாவல் எழுதப்படுவது வழக்கம். இனத்தை காப்பாற்றுவதற்காக ஒரு நாவல் படைக்கப்பட்டது என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.

அந்த நாவலின் பெயர் ‘ரிசுரெஷன்’. அதாவது ‘உயிர்த்தெழுதல்’. எழுதியவர் லியோ டால்ஸ்டாய். ரஷியாவில் வாழ்ந்த டுகோபார்ஸ் இனத்தை காப்பாற்றுவதற்காக இந்த நாவலை அவர் எழுதினார்.மொத்தம் 12 ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட 40 ஆயிரம் மக்கள் மட்டுமே அந்த இனத்தில் இருந்தனர். இடையர்களும், விவசாயிகளும் சேர்ந்து உருவாக்கிய இனம் இது. இவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அகிம்சையை இவர்களிடம் இருந்துதான் மகாத்மா காந்தி கற்றுக் கொண்டார்.

இவர்கள் ராணுவத்தை விரும்பவில்லை. எதற்குமே அரசாங்கத்தை நம்புவதில்லை. அதனால் இவர்கள் அரசுக்கு வரியும் கட்டுவதில்லை. ராணுவத்திலும் சேருவதில்லை. இதனால் அவர்களை ரஷிய அரசு பலவிதத்தில் கொடுமைப்படுத்தியது. டுகோபார்ஸ் இனத்தவர் எந்த கொடுமைகளையும் எதிர்ப்பு காட்டாமல் ஏற்றுக்கொள்வது அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அவர்களை சிறையில் தள்ளியது. அதையும் அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள். கடைசியாக கனடா நாடு இவர்களை தனது நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 6 ஆயிரம் மைல்கள் கொண்ட பசிபிக் கடலை கடந்து செல்வதற்கு அவர்களிடம் பணம் இல்லை.

அந்த பணத்தை பெறுவதற்காக லியோ டால்ஸ்டாய் எழுதியதுதான் ‘உயிர்த்தெழுதல்’ என்ற நாவல். இதன் ராயல்டி பணத்தை வைத்துதான் அவர்களை கனடா நாட்டிற்கு கப்பலேற்றி அனுப்பினார். 2,300 டுகோபார்ஸ் இனத்தவர்கள் முதல் கப்பலில் பயணித்தார்கள். பாதி கடலைக் கடந்தபின் ஒரு குழந்தைக்கு அம்மை நோய் வந்துவிட்டது. அதனால், அந்த கப்பல் பாதியிலேயே திரும்பிவிட்டது.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் எழுதி வாரம் வாரம் அத்தியாயத்தை வெளியிட்டார். ரஷிய மக்கள் ஆர்வத்தோடு அந்த நாவலை படித்தனர். மொத்தம் 17 ஆயிரம் ரூபிள் தந்து அந்த மக்கள் இடம் பெயர உதவினார், லியோ டால்ஸ்டாய். தான் நேசித்த மக்களை காப்பாற்ற ஒரு எழுத்தாளர் எழுதிய ஒரே நாவல் இதுதான். இந்த உதவியை மறக்காத அந்த இன மக்கள் டால்ஸ்டாயை தங்களின் குல தெய்வமாகவே வணங்குகிறார்கள்.