Search This Blog

Sunday, February 7, 2016


யானைகளும் தமிழர்களும்  

உலகம் முழுவதிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல விலங்குகளையே பயன்படுத்தினர். பாலைவனங்களில் ஒட்டகங்கள் போக்குவரத்துக்கு பயன்பட்டன. சில இடங்களில் கழுதைகள் பயன்பட்டிருக்கின்றன.  தமிழர்களை பொறுத்த அளவில் பழந்தமிழர்கள் யானைகளை அதிகம் பயன்படுத்தியதாக பழமையான நூல்களில் காணப்படுகிறது. தமிழர்கள் ஏறிச்செல்லவும், போரிடவும் யானைகளை பழக்கப்படுத்தி வைத்திருந்தனர். யானைகளை பிடிக்க அவை செல்லும் வழியில் பெரிய குழிகளை வெட்டினர். அந்த குழிகளை அடையாளம் காணமுடியாத வகையில் இலை, தழைகளால், கழிகளால் மறைத்து விடுவார்கள். இதனை அறியாத யானைகள் அந்த வழியில் வரும் போது குழிகளில் விழுந்து விடும். குழிகளில் விழுந்த யானைகளை பிடித்து பழக்கி பயன்படுத்தினர். சில பெரிய யானைகள் இவ்வாறு குழிகளில் விழும் போது தந்தத்தை கொண்டு மண்ணை சரித்து தப்பி விடும்.  குழிகளில் விழுந்து தப்ப இயலாத யானைகளை பிடித்து வந்து யானைப்பாகர்கள் பழக்குவர். அவர்கள் கையில் இருக்கும் அங்குசம் கொண்டு யானைகளை அடக்குவார்கள். யானைகளுக்கு கட்டளையிட அதற்கென்று தனி மொழி ஒன்றும் பாகர்களிடம் புழக்கத்தில் இருந்தது. யானைகளை பெரிய கல் தூண்களில் கட்டி வைப்பார்கள். அதற்கு கட்டுத்தறி என்று பெயர். யானைக்கு கரும்பும், நெல்லும், சோற்றுக்கவளமும் உணவாக அளித்தனர். நெய்ச்சோறும் அவ்வப்போது உணவாக அளிப்பார்கள். யானைகள் மீது ஏறிச்செல்லும் போது யானைகளை அழகுபடுத்தி அவற்றின் மீது அமர்ந்து செல்வர். யானையின் நெற்றியில் இருந்து துதிக்கை வரை பொன்னால் செய்த முகப்பட்டத்தை அணிவித்திருப்பர். யானையின் கழுத்திலும் மாலைகளை அணிவித்தனர். தந்தத்தின் முனையில் பொன்னால் செய்த பூண் அணிவித்திருப்பார்கள். இதற்கு கிம்புரி என்று பெயர்.  பொதுவாக, அரசர்கள் யானையின் மீது ஏறி நகரை வலம் வருவர். பெண்களும் கூட யானையின் மீது அமர்ந்து பயணிப்பர். மன்னர்கள் அதிக அளவில் யானைகளை வளர்த்து பழக்கப்படுத்தி வைத்திருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. சேரமன்னர்களில் ஒருவனுக்கு பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற பெயர் இருந்தது. தங்களிடம் பரிசு பெற புலவர்களுக்கு யானைகளையும் பரிசாக அளிக்கும் பழக்கம் மன்னர்களிடம் இருந்தது. உலக அளவில் சோழமன்னர்களிடம் மட்டுமே ஆயிரக்கணக்கில் யானைகளை கொண்ட படைகள் இருந்ததாக அறிய முடிகிறது.  மனித இனம் இன்றும் கண்டு பிரமிக்கும் யானையை சர்வளசாதாரணமாகப் பிடித்து பழக்கி அவற்றை பயன்படுத்தியது தமிழர்களின் மிகச்சிறந்த பராக்கிரமத்திற்கு உதாரணம். எந்த அளவுக்கு விலங்குகள் தங்களுக்கு பயன்பட்டனவோ, அதே அளவுக்கு அந்த விலங்குகளுக்கு தகுந்த மரியாதையும், உயர்வான பராமரிப்பையும் கொடுத்து அவற்றை தங்களது குடும்பத்தில்  உறுப்பினராக உயர்த்தி வைக்கும் அளவுக்கு தமிழர்கள் இருந்ததமைக்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

ஏழை நாடுகள்  (30.01.2016)

பத்து வருடங்களுக்கு முன் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. உலக அளவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் மூன்றில் ஒருவர் இந்தியராக இருந்தார். இந்த தகவலை உலக வங்கி தெரிவித்தது. ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக அது கணித்தது.  அந்த கணக்குப்படி 46 கோடி பேர் இந்தியாவில் வறுமையில் வாழ்வதாக உலக வங்கி தெரிவித்தது. இது உலக அளவிலான ஏழை மக்களில் 33 சதவீதமாகும். அதன்படி உலகில் வறுமையில் வாடுவோர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர். இந்த நிலை இன்று மாறி விட்டது.  இந்தியாவில் 96 கோடி மக்கள் வருமானம் இன்றைக்கும் 2.5 டாலருக்கும் குறைவாக உள்ளது.  ஆனாலும் ஏழை நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் பெயர் வரவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்.  உலக அளவில் வறுமையில் முதலிடத்தில் இருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ:-  முதலிடத்தில் மால்வி என்ற தென்கிழக்கு ஆப்பிரிக்க  நாடு இருக்கிறது. அதற்கடுத்து, இரண்டாம் இடத்தில் புரூண்டி உள்ளது. மூன்றாம் இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு இருக்கிறது. நான்காம் இடத்தில் நைஜெர் நாடு உள்ளது. ஐந்தாம் இடத்தில் லைபீரியா நாடும், ஆறாம் இடத்தில் மடகாஸ்கரும், ஏழாம் இடத்தில் காங்கோ நாடும், எட்டாம் இடத்தில் காம்பியாவும், ஒன்பதாம் இடத்தில் எத்தியோப்பியாவும், பத்தாம் இடத்தில் கினியா நாடும் உள்ளன.

 வானில் ஓர் அதிசயம் (31/01/2016)

 வானில் அவ்வப்போது ஏதாவது சுவாரஸ்யமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அப்படியொரு மாற்றம் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அது விண்வெளியில் நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்த்து ரசிப்பவர்களுக்கு  அரிய விருந்தை படைத்துக்கொண்டிருக்கிறது.  இந்த அதிசயம் வருகிற (பிப்ரவரி) 20-ந்தேதி வரை நீடிக்கும். இது ஒரு அபூர்வ விஷயமாகும். ஆம், ஐந்து கோள்கள் அதிகாலை வானில் வரிசையாக ஒரே நேரத்தில், சாதாரணமாக, தொலை நோக்கி இல்லாமல் பார்ப்பவர்களுக்குக் தெரியும்.  இவை புதன், வெள்ளி, செவ்வாய், சனி, வியாழன் (குரு) ஆகிய கிரகங்கள் (கோள்கள்) 10 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், இது போன்று வரிசையாக அணிவகுத்து ஒரே நேரத்தில் காணும் விதமாக வரும் இந்த கிரகங்களின் அணிவகுப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  இந்தக் காட்சி ஜனவரி 27-ல் தொடங்கி விட்டது.  பிப்ரவரி 20 வரை இது தெரியும். புதன் கிரகம் இந்தக் காலகட்டத்தின் இறுதியில் சற்று மங்கலாகத் தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். பொழுது புலர்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு இந்த அதிசயத்தை பார்த்து ரசிக்கலாம். இந்த ஐந்து கோள்களும், அவற்றின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, சூரியனின் தோற்றப்பாதை என்று அறியப்படும் திசையில் அணிவகுப்பதால் இந்த விஷயம் நடைமுறையில் சாத்தியமாகிறது.  இது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே ஒரே வரிசையில் அணிவகுப்பதைத்தான் குறிக்கிறது. இதே போன்றதொரு அணிவகுப்பு வருகிற ஆகஸ்டு 13-ந்தேதியிலிருந்து 19-ந்தேதி வரை மீண்டும் நடக்கும்.அந்த சமயத்தில் இந்த அணிவகுப்பு அந்தி சாயும் நேரத்தில் நடைபெறும். அப்போது பூமியின் தென்பாதியில் வசிக்கும் மக்கள் மட்டும் இதை நன்றாகப் பார்க்க முடியும். கடந்த முறை இதே போன்ற தொரு அணிவகுப்பு டிசம்பர் 2004-ல் இருந்து ஜனவரி 2005 வரை நடந்தது.  இப்போது மீண்டும் வானில் தோன்றியிருக்கும் இந்த அதிசயத்தை நாமும் கண்டு களிப்போம்.

ஒரே ஒரு  மாணவிக்காக   ஓடும் ரெயில்

ஒரு தேசத்தின் அரசாங்கம் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும்? எப்படி உதவ வேண்டும் என்பதில் வளர்ந்த நாடுகள் மிகக் கவனமாக உள்ளன. அந்த நாடுகள் எப்போதும், அந்த நாட்டு மக்களுக்காகவே செயல்படுகிறது. அதிலும் ஜப்பான் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அப்படி ஒன்றுதான் ஒரேஒரு பள்ளி மாணவிக்காக ஒரு ரெயில் இயங்குவது. நமது ஊரில் பள்ளி நிர்வாகம் கூட ஒரு மாணவிக்காக ஒரு ஆட்டோவை கூட இயக்காது. ஆனால், ஜப்பான் ஒரு மாணவிக்காக மட்டும் தினமும் 80 கி.மீ. தொலைவுக்கு ஒரு ரெயிலை இயக்கி வருகிறது. காணா என்ற அந்த மாணவி பள்ளி இறுதி வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஜப்பானின் வடக்கு தீவில் உள்ள ஹொக்காடியொ என்ற கிராமத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ரெயில் மூலம் சென்று வருகிறார். இந்த தீவுக்கு இப்போது படகு போக்குவரத்து அதிகம் இருப்பதால் ரெயிலை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த ரெயில் தடத்தை 2012-ல் மூடிவிட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அப்போதுதான் இந்த கிராமத்தில் உள்ள ‘காமிஷிரதகி’ ரெயில் நிலையத்தில் இருந்து ‘ஷின்அசகவா’ ரெயில் நிலையம் வரை ஒரேஒரு மாணவி மட்டும் தினமும் பயணம் செய்வது தெரிய வந்தது. உடனே தனது மூடுவிழாவை தள்ளிப் போட்டது நிர்வாகம்.

அதோடு நின்று விடாமல் மாணவியின் பள்ளி நேரத்துக்கு ஏற்றபடி ரெயிலின் நேரத்தையும் மாற்றி அமைத்தது. முதலில் 50 கி.மீ. வரை சென்று வந்த மாணவி மேற்படிப்புக்காக வேறு பள்ளியில் சேர்ந்தார். உடனே ரெயில் நிர்வாகமும், அந்த பள்ளி இருக்கும் ஊர் வரை ரெயிலை நீடித்து இயக்கியது. அதாவது, 30 கி.மீ. கூடுதலாக, இப்போது இந்த ரெயில் ஒரு மாணவிக்காக 80 கி.மீ. தொலைவு சென்று வருகிறது. ஜப்பான் ரெயில் தடங்கள் நமது ரெயில் தடங்கள் போல் இல்லை. வருடத்தில் 6 மாதங்கள் பனித்துகள்கள் கொட்டி ரெயில் தண்டவாளத்தை இரண்டடி உயரத்திற்கு மூடிவிடும்.  தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பனித்துகள்களை அகற்ற வேண்டும். இந்த ஒரு மாணவி பயணிப்பதற்காக தினமும் 300-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் இந்த 80 கி.மீ. பாதையில் உழைக்கிறார்கள்.

மாணவியின் படிப்பு வரும் மார்ச் மாதம் 26-ந்தேதியுடன் முடிவடைகிறது. அன்று தான் இந்த ரெயிலின் கடைசி ஓட்டம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரேஒரு மாணவிக்காக இத்தனை பெரிய உழைப்பைத் தரும் ஜப்பானை பாராட்டாமல் இருக்க முடியாது.

அழிக்க முடியாத மெமரி கார்டு 

மெமரி கார்டு, பென்-டிரைவ் போன்ற இரண்டாம் தர சேமிப்பகங்களில், நாம் சேமித்து வைக்கும் எந்த சேமிப்பையும் முழுமையாக அழிக்க முடியாது. இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை. இதில் நாம் சேமிக்கும் தகவல் எல்லாமே 0 மற்றும் 1 என்ற முறையிலேயே சேமிக்கப்படுகிறது. இப்படி சேமிக்கும் தகவல் எதுவுமே எப்போதும் அழிவதேயில்லை. அதை எப்போது வேண்டுமானாலும் ‘ரெக்கவர்‘ செய்து பெறலாம். அது சமீபத்தில் சேமித்த தகவல் மட்டுமல்ல, பல மாதங்களுக்கு முன் சேமித்த தகவல்களையும் திரும்ப பெறமுடியும்.  இதனால்தான் சிலரின் அந்தரங்கம் வெளியே இணையத்தில் வந்துவிடுகிறது. மெமரி கார்டு அல்லது பென்டிரைவ்களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணினியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும், அவர்களிடம் இருக்கும் மென்பொருள் துணையோடு அந்த கணினியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும். இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணினியின் திரையில் தெரியாது.  கணினி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்டு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்பார்கள். என்னதான் நாம் மெமரி கார்டில்  இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக ரெக்கவர் செய்து கொடுக்க பல மென்பொருள்கள் வந்துவிட்டன. நாம் திரையை பார்த்துக்கொண்டு தான் இருப்போம். ஆனால் நமது மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்று வரை உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும், உங்கள் மெமரி கார்டு வைரஸால் பாதிக்கப்பட்டால், சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம். வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க வேண்டுமானால் கணினியின் ‘ஸ்டார்ட்’  பொத்தானை ‘ரைட் கிளிக்’ செய்து, ‘எக்ஸ்ப்ளோர்’ என்பதை சொடுக்கி வரும் திரையில், இடதுபக்கத்தில் ‘மெமரி கார்டு‘க்கான டிரைவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து, நம் கணினியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி செய்து முடித்த பின் மெமரி கார்டை ‘பார்மட்’ செய்து பயன்படுத்தலாம். மெமரி கார்டை யாரிடமும் கொடுக்காமல் இருப்பதே நமது தகவல்களுக்கு பாதுகாப்பு.

உலகில் இரண்டாவது தானியம் தினை

தினையை நாம் சிறுதானியம் என்ற வகையில் சேர்க்கிறோம். ஆங்கிலத்தில் இதனை மைனர் மில்லட் என்று அழைக்கிறார்கள். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பலவகையாக பிரிக்கிறார்கள். தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும்போது அது நரியின் வால் போல் தெரிவதால் வெள்ளையர்கள் அப்படியொரு பெயரை வைத்துவிட்டார்கள்.

தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினை உற்பத்தியில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் கி.மு.6000 காலக்கட்டத்திலேயே சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்போதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படும் தானியம் தினை தான். தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. தேனும் தினை மாவும் முருகனுக்கு பிடித்த உணவாக புராணங்களில் சொல்லப்படுகிறது. இது காய்ச்சலைப் போக்குகிறது. பசியை தூண்டி விடுகிறது.

நம் முன்னோர்களின் உணவுகளாக அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியன இருந்தன. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் பயன்பாடு குறைந்து, கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம். இதனால் இன்று உடல் வலுவிழந்து நோயின் பாதிப்புக்கு ஆளாகிறது.

இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினைமாவுமே உணவாக இருந்தன. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இப்போது மீண்டும் திணை உணவின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. தினை ஆரோக்கியத்திற்கு நல்லது.
முதல் திரைப்படம் 

இன்றைக்கு திரைப்படங்கள் கோடியில் புரளும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. இதன் ஆரம்பக்காலம் மிக விசித்திரமானது. லூமியர் சகோதரர்கள் சினிமாவை கண்டுபிடித்த பின் அதனை உலகின் பல பாகங்களுக்கும் கொண்டு சென்றனர். அப்படி 1897-ல் எம்.எட்வர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர் சென்னை பாரிமுனையில் இரண்டு படங்களை திரையிட்டார். இந்த இரண்டு படங்களும் ஒரு சில நிமிடங்கள்தான் ஓடும்.

‘தி அரைவல் ஆப் தி ட்ரைன்‘, ‘லீவிங் தி பேக்டரி‘ என்ற இந்த இரண்டு படங்கள்தான் முதன் முதலாக அசையும் படமாக எடுக்கப்பட்டன. அவை விக்டோரியா பப்ளிக் ஹாலில் திரையிடப்பட்டது. இன்றைக்கும் இந்த இடம் சென்னை ரிப்பன் பில்டிங் அருகில் உள்ளது. மக்கள் இந்தப் படங்களை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். <p></p>அப்போது பல இடங்களில் பயாஸ்கோப் என்ற பெயரில் கையில் எடுத்துச் செல்லும் கருவி மூலம் சினிமா காட்டும் முறையும் பிரபலமானது. இதற்கு மின்சாரம் தேவையில்லை. லைசென்ஸ் தேவையில்லை. மக்னீசியத்தை வைத்து படம் காட்டினார்கள்.

ஒரு நிமிட படம், அதுவும் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியது.  இதன் அடுத்த பரிணாமமாக நடிகர்களை வைத்து படங்களை எடுக்கத் தொடங்கினார்கள். அப்படி உலகின் முதன் முதலாக நடிகர்களை வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் ‘வாட்டரிங் தி கார்டனர்‘.

இந்த படத்தின் கதை இன்றைக்கும் கூட அதிகமான படங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. வயதான தோட்டக்காரர் ஒருவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார், அங்கே அவருக்கு தெரியாமல் நுழையும் ஒரு குறும்புக்கார சிறுவன் தண்ணீர் பாய்ச்சும் குழாயை மிதிக்கவும், தண்ணீர் நின்றுவிடும். தண்ணீர் வரவில்லை என அந்த தோட்டக்காரர், குழாயை தனது முகம் அருகே வைத்துப் பார்க்கும் போது, சிறுவன் குழாய் மீதிருந்து காலை எடுத்து விடுவான். அப்போது தண்ணீர் ‘குபுக்‘ கென தோட்டக்காரர் முகத்தில் அடிக்கும். இதில் கோபமடையும் அவர் அந்த  சிறுவனை அடிக்க துரத்திக்கொண்டு ஓடுவார். இது தான் முதல் நகைச்சுவைப் படமாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி முதல் முதலாக ரசிப்புத் தன்மையுடன் ‘வாட்டரிங் தி கார்டனர்‘ என்றும் தலைப்பிடப்பட்டது.
பற்பசை டியூபில் உள்ள கோடுகள்

நாம் பயன்படுத்தும் பற்பசை டியூப்பின் அடிப்பாகத்தில் பட்டையாக பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் கோடு இருக்கும். இந்த கோடு எதை குறிக்கிறது தெரியுமா..?  பச்சைநிறக் கோடு அந்த பற்பசை இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதையும், நீலநிறக் கோடு இயற்கையான மூலப்பொருட்கள் 75 சதவீதம், செயற்கையான மூலப் பொருட்கள் 25 சதவீதம் கலந்து தயாரிக்கப்பட்ட பற்பசை என்பதையும், சிவப்புக் கோடு செயற்கையான மூலப்பொருட்கள் 75 சதவீதம் இயற்கையான மூலப்பொருட்கள் 25 சதவீதம் கலந்து உருவாக்கப்பட்டது என்பதையும் குறிக்கும். இதுவே கருப்பு நிறம் என்றால் முழுவதும் செயற்கையான ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.  ஆனால் இதில் உண்மை இல்லை. உள்ளிருக்கும் பொருட்களில் எந்த வகையான பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை பாக்கெட் மேல் இருக்கும் பட்டியலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இதற்கு தனியாக ரகசிய கோடு ஒன்று கொடுக்க வேண்டியதில்லை.  அப்படியென்றால் இந்த கோடுகள் எதை குறிக்கின்றன? அது தயாரிப்பு மற்றும் பேக்கிங் சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கிறது. நீளமாக வரும் டியூப்பை எங்கு 'கட்' செய்ய வேண்டும்? அதில் எவ்வளவு பற்பசையை நிரப்ப வேண்டும்? எந்த இடத்தில் மடித்து, அதில் தயாரிப்பு தேதியை குறிப்பிட வேண்டும்? என்பன போன்ற விவரங்கள் அந்த கோடுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும்.  இந்த கோடுகளை அதிவேகத்தில் செல்லும் இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரானிக் கண்கள் பார்த்துவிடும். அந்த கோடுகளின் அளவு தடிமன், நிறம் ஆகியவற்றைக் கொண்டு அதற்கான பேக்கிங் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதற்கான தொழில்நுட்ப குறியீடுதான் நிறத்தினாலான இந்த கோடுகள்.

Saturday, February 6, 2016


சங்கு கல் மண்டபம்


இன்றைக்கு செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. ரமணன் இருக்கிறார் மழையைப் பற்றி சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை. மழையையும், வறட்சியையும் கணிக்க முடிந்த மனிதனால் ஆற்றில் மளமளவென்று உயரும் வெள்ளத்தை கணிக்க முடியவில்லை. ஒரு வெள்ளம் பல உயிர்களை காவு வாங்கிவிடும். 

ஒவ்வொரு வெள்ளத்திலும் சொந்த பந்தங்களை இழந்த நம் முன்னோர்கள் உயிரிழப்பை தடுக்க ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். அதுதான் ‘சங்கு கல்மண்டபம்‘. தலைமை கிராமத்தின் அருகில் ஆற்றின் மையத்தில் இந்த கல்மண்டபத்தை அமைத்திருப்பார்கள். இந்த மண்டபம் மூன்று பக்கமும் திறந்த அமைப்புடன் இருக்கும். ஆற்றின் நீர் வரும் பகுதியில் மட்டும் கல் சுவர் ஒன்றை எழுப்பியிருப்பார்கள். இந்த சுவரின் வெளிப்பகுதியில் உச்சியில் ஒரு பிரமாண்டமான சங்கு பதித்திருப்பார்கள். இது ஆற்றங்கரை உயரத்துக்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த சங்கு மட்டத்திற்கு நீர் உயர்ந்துவிட்டால் அடுத்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்துவிடும்.  இதில்தான் ஒரு அருமையான தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள். வழக்கமான நீர் மட்டத்தைவிட ஆற்றின் நீர் மட்டம் உயருகிறது என்றால் இந்த சங்கு ஒலிக்கத் துவங்கும். நதி நீரின் வேகமும் உயரமும் கூடும்போது அது ஒருவிதமான காற்றழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த காற்றழுத்தம் கூடக்கூட சங்கின் ஒலியும் கூடிக்கொண்டே வரும்.  இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. உடனே தாய்க் கிராமம் சுறுசுறுப்பு அடையும். தனது கட்டுப்பாட்டில் வெள்ளம் வரக்கூடிய அபாயம் உள்ள ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளம் வருகிறது என்ற செய்தியை அறிவிக்கும்.  

நீரின் வேகத்தை வைத்து எத்தனை மணி நேரத்தில் ஆற்று வெள்ளம் கரையைக் கடந்து ஊருக்குள் புகும் என்பதை சங்கு ஒலிக்கத் தொடங்கியதுமே கணித்துவிடுவார்கள். அதற்குள் ஊர்மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுவார்கள். 

இப்படி எதிர்பாராத வெள்ளம் வந்துவிட்டால் தங்குவதற்கென்றே உயரமான பகுதியில் ஒரு கோவில் கட்டி அங்கு ஒரு மண்டபம் அமைத்திருப்பார்கள். அந்த கோவில் மண்டபத்தில் ஊர்மக்கள் அனைவரும் தங்கிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக கட்டியிருப்பார்கள். வெள்ளம் வடியும் வரை கிராமத்தின் சார்பாக அனைவருக்கும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள்.  சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர்மட்டமும் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆற்றங்கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று பொருள். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.  நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத்துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். நீர் வடியும்போது உக்கிரமமாக ஒலிக்கும் சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். 

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. தாமிரபரணி போன்ற ஒருசில நதிகளில் வெகு அபூர்வமாக இந்த சங்கு கல்மண்டபங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை.  சிறுவயதில் ஆற்றுக்கு நடுவே இத்தகைய மண்டபங்களை பார்க்கும்போது தேவையில்லாமல் எதற்கு ஆற்றுக்கு நடுவே மண்டபத்தை கட்டி வைத்திருக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு. இப்போதுதான் தெரிகிறது அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய உன்னதங்கள் என்று.  நம் முன்னோர்கள் எதையும் தேவையில்லாமல் ஏற்படுத்தவில்லை. நாம்தான் அவற்றை தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டோம்.

Thursday, February 4, 2016


உலகில் இரண்டாவது தானியம் தினை 

தினையை நாம் சிறுதானியம் என்ற வகையில் சேர்க்கிறோம். ஆங்கிலத்தில் இதனை மைனர் மில்லட் என்று அழைக்கிறார்கள். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பலவகையாக பிரிக்கிறார்கள். தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும்போது அது நரியின் வால் போல் தெரிவதால் வெள்ளையர்கள் அப்படியொரு பெயரை வைத்துவிட்டார்கள். தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினை உற்பத்தியில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் கி.மு.6000 காலக்கட்டத்திலேயே சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படும் தானியம் தினை தான். தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. தேனும் தினை மாவும் முருகனுக்கு பிடித்த உணவாக புராணங்களில் சொல்லப்படுகிறது. இது காய்ச்சலைப் போக்குகிறது. பசியை தூண்டி விடுகிறது.  நம் முன்னோர்களின் உணவுகளாக அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியன இருந்தன. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் பயன்பாடு குறைந்து, கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம். இதனால் இன்று உடல் வலுவிழந்து நோயின் பாதிப்புக்கு ஆளாகிறது. இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினைமாவுமே உணவாக இருந்தன. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இப்போது மீண்டும் திணை உணவின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. தினை ஆரோக்கியத்திற்கு நல்லது.