Search This Blog

Sunday, September 13, 2015


உடலளவில் ஆண், பெண் வேறுபாடு
பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு உடை, தலைமுடி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட மாறுபடுகிறது. உடலைப் பொருத்தவரை பிறப்புறுப்புகள், மார்பகம் போன்றவை முக்கியமான வித்தியாசங்கள். இவை எல்லாம் நமது பார்வைக்கு தெரியும் வெளிப்படையான வேறுபாடுகள். ஆனால் இவற்றையெல்லாம் விட ஆணுக்கும், பெண்ணுக்குமான உடல் வித்தியாசங்கள் ஏராளமாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் பட்டியல் போடுகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். 

ஆணைவிட பெண்ணின் இடுப்புப் பகுதி மிகப் பெரிதாக இருக்கும். இது குழந்தைப் பிறப்புக்காக இயற்கை ஏற்படுத்திய வடிவம். ஆணின் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர்க்கப்படுகிறது. அதனாலே ஆணுக்கு தொந்தி உருவாகிறது. பெண்ணுக்கு இப்படி அதிகமாக சேரும் கொழுப்பு வயிற்றில் சேமிக்கப்படுவதில்லை. அதனால்தான் பெண்களுக்கு தொந்தி இருப்பதில்லை. அப்படியென்றால் அந்த கொழுப்பு எங்கு சேர்க்கப்படுகிறது என்றால், தொடையிலும் இடுப்பின் பின்பகுதியிலும் சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஆண்களின் தொடையைவிட பெண்களின் தொடை பெரியதாக தெரிகிறது. 

இதுபோக உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லின் தோற்றமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு காரணம் குரோமோசோம்கள் இடையே உள்ள வித்தியாசம் என்கிறார்கள், மருத்துவர்கள். அதேபோல் பெண்களின் ரத்தத்தில் ஆண்களின் ரத்தத்தில் உள்ளதைவிட நீரின் அளவு அதிகம் இருக்கும். இதனால் பெண்களுக்கு 20 சதவீத சிவப்பணுக்கள் குறைவாகவே இருக்கும். பெண்கள் அடிக்கடி ரத்தச்சோகை பாதிப்புக்கு ஆளாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

 ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் தான் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன. அது குறையும் போது ஆக்சிஜனும் குறைகிறது. இந்த காரணத்தினால் தான் வெப்பம் மிகுந்த இடங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் பெண்கள் மயங்கி விழுகிறார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு நுரையீரல் சிறியதாகவே இருக்கும். பெண் நுரையீரலைவிட ஆணின் நுரையீரல் 30 சதவீதம் பெரியதாக இருக்கும். அதனால் நுரையீரல் கொள்ளளவும் அதிகமாக இருக்கும். வெளியூர் பயணங்களிலும் திருவிழா கூட்டத்திலும் பெண்கள் சோர்ந்து போவதற்கு இதுதான் காரணம். 

உற்சாகம் என்ற விஷயத்தில் பெண்கள், ஆண்களை விஞ்சி நிற்கிறார்கள். இந்த உற்சாகத்திற்கு காரணம் பெண்களிடம் காணப்படும் தனி ஹார்மோனின் சக்திதான் என்கிறார்கள். நோய் என்று எடுத்துக் கொண்டாலும் கூட பெண்களை விட ஆண்களே அதிகம் மரணமடைகிறார்கள். மார்பக புற்றுநோய், பெண்ணின் பிறப்புறுப்பு நோய், கர்ப்பப்பை கட்டி போன்ற நோய்களைத் தவிர மற்ற அனைத்து நோய்களும் ஆண்களுக்கே வருகின்றன. 

வெயிலை அதிகமாக பெண்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆண்கள் அதிகமான வெயிலில் சோர்ந்து போய்விடுவார்கள். இதற்கு காரணம் பெண்களின் உடலில் உள்ள வளர்சிதை மாற்றம்தான். வயிறு, கல்லீரல், குடல்வால் போன்ற உறுப்புகள் ஆண்களைவிட பெண்களுக்கு பெரியதாக இருக்கும். முரட்டுத்தனம் என்பதை எடுத்துக் கொண்டால் ஆண்களின் முரட்டுத்தனம் பெண்களைவிட 50 சதவீதம் கூடுதலாக இருக்கும். 

ஆண்களைவிட பெண்களின் இதயம் எப்போதும் வேகமாகத் துடிக்கும். சராசரியாக ஆண்களுக்கு நிமிடத்திற்கு 72 முறை இதயம் துடிக்கிறது என்றால் பெண்களுக்கு 80 முறை துடிக்கிறது. ஆண்களின் பற்களைவிட பெண்களுக்கு பற்கள் விரைவாகவே விழுந்துவிடும். பொக்கைவாய் தாத்தாக்களைவிட, பொக்கைவாய் பாட்டிகளே அதிகம். 

ஆணைவிட பெண்ணுக்கு தலை, தண்டுவடம், கால்கள் முதலியவை மிகச் சிறியவை. இப்படி பல விஷயங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாகவே இருக்கின்றன.
விமான கழிவறையில் உல்லாசத்தில் ஈடுபட்ட தம்பதி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு நார்வே விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. 2 மணி நேர பயணமாக அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, ஒரு தம்பதி விமான கழிவறைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கேயே உல்லாசத்தில் ஈடுபட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தினர். இதை விமான பணிப்பெண் ஒருவர் பார்த்து விட்டார். சிறிது நேரத்தில் கழிவறையை விட்டு வெளியே வந்த அந்த தம்பதி, எதுவும் நடக்காதது போல தங்கள் இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். அப்போது அந்த பணிப்பெண் விமானத்தின் நடுவில் வந்து, ‘விமான கழிவறையில் துணிச்சல் காட்டிய தம்பதிக்கு மகிழ்ச்சியான இனப்பெருக்கம் அமைய எங்கள் வாழ்த்துக்கள்’ என்று கூறினார் இதைக்கேட்ட சக பயணிகள் திகைப்படைந்தனர். பின்னர் அவர்களும் தங்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். எனினும் அந்த செயலில் ஈடுபட்ட தம்பதி யார்? என கடைசி வரை அவர்களுக்கு தெரியவில்லை. விமான பணிப்பெண்களும் அதை வெளிப்படுத்தவில்லை. (14.09.2015)

ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவருக்கு சிறை 

அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி, கடந்த ஜூன் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஓரின ஜோடிகள், தங்கள் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் பெற்று வருகின்றனர். ஆனால் கெண்டகி மாகாணத்துக்கு உட்பட்ட ரோவன் மாவட்ட அதிகாரி கிம் டேவிஸ் என்ற பெண்மணி, ஓரின ஜோடிகளுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க மறுத்து வந்தார். ஓரினச்சேர்க்கை திருமணம், ஒரு பாவம் என்று தான் நம்புவதாக கூறி வந்த அவர், தொடர்ந்து ஓரின ஜோடிகளை அலைக்கழித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட கிம் டேவிஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் 5 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள அவர், விரைவில் பணியில் சேர உள்ளார். எனினும் இனியாவது அவர் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சான்றிதழ் வழங்குவாரா? என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

செவ்வாய் கிரகத்துக்கு குடிபோகலாம் 

தொடக்கத்தில் மனிதன் ஊர்விட்டு ஊர் குடியேறினான். சிறிது காலம் கழித்து மாநிலம் விட்டு மாநிலம் குடியேறினான். அதற்குபின் நாடு விட்டு நாடு. இப்போது அவன் நாட்டமெல்லாம் பூமியை விட்டு வேறு எங்காவது போகலாமா? என்பதுதான். அப்படி பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு கூட்டிப் போவதற்காகவே ‘மார்ஸ் ஒன்’ என்ற நிறுவனம் தயாராக இருக்கிறது. நெதர்லாந்தில் இருக்கும் இந்த நிறுவனத்தில் ஒரு சிறுதொகையை கட்டிவிட்டு காத்திருந்தால் போதும். 2024-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துப் போவார்கள். அப்படி அங்கு போவோர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அவர்கள் நிரந்தரமாக செவ்வாயில் குடியேற வேண்டியதுதான். இப்படி செவ்வாயில் நிரந்தரமாக குடியேறுவதற்காக 2,02,586 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களில் 660 பேரை மட்டும் தேர்வு செய்து அடுத்தச் சுற்றுக்கு தேர்வு செய்தது அந்த நிறுவனம். அவர்களையும் வடிகட்டி 100 பேரை தேர்வு செய்துள்ளது. அந்த 100 பேரில் நால்வரை மட்டும் முதல்கட்ட பயணத்துக்கு அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த நால்வரும் 7 வருட பயிற்சிக்குப் பின் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். செவ்வாய்க்குப் போனால் கடைசி வரை அங்கேயே இருக்க வேண்டியது தான். இந்த பயணத்துக்கு மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளார்கள். இவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே தங்குவதற்கு வசதியாக ஆளில்லா விண்கலங்கள் மூலம் குடில்கள் எடுத்துச் சென்று அமைப்பார்கள். செவ்வாயில் நமது பூமியைப் போல் ஆறு, குளம், மரம், செடி, கொடி எதுவும் இருக்காது. இவர்கள் தங்கி இருக்கும் குடில்களுக்கு அருகே காய்கறி பயிரிடுவதற்கான இடம் இருக்கும். அதில் விளைவித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அங்கு தங்குபவர்களை பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப குடிகளுக்குள் டிவி கேமராக்கள் இருக்கும். முதல் குழுவில் இருக்கும் நான்கு பேர்களில் இரண்டு பேர் ஆண்கள். இருவர் பெண்கள். இவர்களின் வயது 18 முதல் 40 வரை. இவர்கள் எந்த நிலைமையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு வாழ முடியும். இந்த நால்வரும் 7 மாதம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைவார்கள். இப்படி இவர்கள் பயணம் செய்யும் நிகழ்ச்சிகளையும் அவர்களின் பேட்டிகளையும் ஒளிபரப்புவதற்கான உரிமை ஏலம் மூலம் விடப்பட்டு பெரும் பணம் திரட்டப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. செவ்வாயில் மனிதனுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் இல்லை. கடுங்குளிர் வேறு. புழுதிப் புயல் ஏற்பட்டால் பல மாதங்களுக்கு நீடிக்கும். அதில் இருந்து தப்ப முடியாது. அங்கு நிலவும் கதிர்வீச்சால் காய்கறிகளை பயிர் செய்வதும் சிரமமே. தண்ணீரும் போதிய அளவு அங்கு கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் அவர்கள் பூமியில் இருந்து செல்லும் விண்கலன்கலையே நம்பி இருக்க வேண்டும். நிலைமை இப்படி இருக்க மரணத்துக்கான ஒருவழிப் பாதைபோல் செவ்வாயில் மனிதர்களை இறக்கிவிட்டு வருவது நியாயமில்லை என்ற கருத்தும் எழாமல் இல்லை. சந்திரனுக்கு மனிதன் சென்று திரும்புவது போல செவ்வாய்க்கும் சென்று திரும்பலாமே என்றால் அது முடியாது என்கிறது விஞ்ஞானம். நிலவின் தூரம் பூமியில் இருந்து 4 லட்சம் கி.மீ. மூன்று நாள் பயணத்தில் சென்று சேரலாம். நிலவு சிறிய கோள் என்பதால் அங்கு ஈர்ப்பு விசையும் குறைவு. அதனால் சிறிய விண்கலங்களில் மனிதன் சென்று வந்து விடலாம். செவ்வாயின் கதையோ வேறு. அது பெரிய கிரகம். தூரமோ 20 கோடி கி.மீ. 7 மாதங்கள் பயணிக்க வேண்டும். அதிகமான ஈர்ப்பு சக்திக் கொண்டது. அதற்கு பெரிய விண்கலங்கள் வேண்டும். அவ்வளவு பெரிய விண்கலங்களை ராக்கெட்டால் சுமந்து செல்ல முடியாது. அப்படியே சென்றாலும், செவ்வாயில் இறங்கிய அந்த விண்கலங்களை மீண்டும் பூமி நோக்கி செலுத்த பெரிய ராக்கெட் ஏவுதளம் வேண்டும். அதெல்லாம் இப்போதைய தொழில்நுட்பத்தில் நடக்கவே முடியாத உண்மைகள். வருங்காலத்தில் வேண்டுமானால் நடக்கலாம். அதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன. அதனால் செவ்வாய் பயணத்துக்கு தடை வரலாம் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Sunday, September 6, 2015


ஆண்-பெண் குரல் வித்தியாசம்
உயிரினங்கள் அனைத்திலும் பேசும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு குரல் இருந்தாலும் அதில் ஒலியை மட்டுமே எழுப்ப முடியும். மனிதனால் மட்டுமே பேச முடியும். மனிதனின் இந்த பேசும் அமைப்புக்கு காரணமாக இருப்பது பேசும் பெட்டி. இது மனிதனை தவிர, இன்னொரு உயிரினத்திற்கும் இருக்கிறது என்றால் அது கிளிக்கு மட்டும்தான். இதன் பேசும் பெட்டி கிட்டத்தட்ட மனிதனின் பேசும் பெட்டியில் 50 சதவீதம் உள்ளது. அதனால்தான் கிளிகள், மனிதனைப் போல் தெளிவாகப் பேசமுடியா விட்டாலும் சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்தால் அந்த வார்த்தை களை மட்டும் பேசுகின்றன. ஆண், பெண் குரல் வித்தியாசம் நான்கு வயதுக்கு மேல்தான் தோன்றத் தொடங்குகிறது. இது லேசான மாற்றத்துடன் 12 வயது வரை தொடர்கிறது. அதன்பின் அதில் விஸ்வரூப மாற்றம் ஏற்படுகிறது. ஆணுக்கு கரகரப்பான குரலும், பெண்ணுக்கு இனிமையான குரலும் தோன்றுகின்றன. இந்த குரல் இனிமை பெண்ணுக்கு 50 வயது வரை பெரிதாக மாறுவதில்லை. அதன்பின் அந்த குரலில் பெண்மையின் மென்மை போய் கரகரப்பு சேர்ந்து விடுகிறது. மனிதனை பேச வைப்பது குரல் நாண்கள் என்று சொல்லப் படுகிற தசை மடிப்புகள்தான். இந்த குரல் நாண்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், பேச முயலும் போது விரைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று, நாம் பேசும் போது திரும்பி வந்து விறைப்பாக இருக்கும் குரல் நாண்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது. குரல் நாண் என்பது ஆணுக்கு 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை நீளம் இருக்கும். இதுவே பெண்ணுக்கு 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. நீளம் இருக்கும். இந்த குரல் நாண்கள் சத்தத்தை உண்டாக்க ஒரு வினாடிக்கு ஆணுக்கு 120 முதல் 130 முறையும், பெண்ணுக்கு 200 முதல் 220 முறையும், குழந்தைகளுக்கு 300 முதல் 310 முறையும் அதிர்கின்றன. இந்த அதிர்வுதான் பேச்சாக வெளிப்படுகிறது. அறுபது வயதுக்கு மேல் ஆண், பெண் இருபாலரின் குரல் நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளத் தொடங்கி விடும். அதனால் அவர்கள் குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகின்றன. இதனால்தான் வயதான சிலரால் தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் போய்விடுகிறது. எந்த வயதிலும் குரல் நாண் தளர்ச்சியடையாமல் மனிதனால் காக்க முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மதுவும், புகைபிடித்தலும், குரல் நாணை நேரடியாக பாதிக்கும் என்கிறார்கள். மேலும், மாசு படிந்த காற்றை சுவாசிப்பதும் குரலைப் பாதிக்குமாம். தண்ணீர் நிறைய குடித்து எப்போதும் குரல் நாணை ஈரமாக வைத்திருப்பவர்களின் குரல் எந்த வயதிலும் இனிமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இவற்றை கடைப்பிடித்து நாமும் நமது குரலை இனிமையாக வைத்துக் கொள்வோம்.

Saturday, September 5, 2015

இவர்கள் ஆசிரியர்களா ..?

செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தில் வெளிவந்துள்ள செய்திகள் இவை.

ஆசிரியரின் தவறான செயலால் சிக்கல் 

இங்கிலாந்தில் பிரிஸ்டல் என்ற இடத்தில் கிளிட்டன் என்ற கல்லூரி இருக்கிறது. இங்கு ஆசிரியராக இருந்தவர் ஜேனதன் தாம்சன் கிளவர் (வயது 53). இவர் தான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அங்கு படித்த மாணவிகளின் குளியல் அறை காட்சிகளை ரகசியமாக படம் எடுத்துள்ளார். தற்போது இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வினோதம் என்றால் அவர் எதோ சபலத் தில் ஒருமுறை மட்டும் இந்த தவறை செய்யவில்லை. ஏறத்தாழ 16 ஆண்டுகளாக 120 மாணவிகளின் குளியல் காட்சிகளை அவர் ரகசியமாக படம் எடுத்துள்ளார். படம் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் 12-முதல் 17-வயது வரை உடையவர்கள். மொத்தம் 2 ஆயிரத்து 500 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய வீடியோ பதிவுகள் அவரிடம் இருந்தன. 



ரூ.100 திருட்டு போனதாக புகார் எதிரொலி
12 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனை
செய்த தலைமை ஆசிரியை
பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்
பெங்களூரு, செப்.5- கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் பகுதியில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜெயலட்சுமியம்மா என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி, தான் வைத்திருந்த 100 ரூபாய் திருட்டு போய் விட்டதாக தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மாவிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், அந்த மாணவியின் வகுப்புக்கு சென்று, வகுப்பறையில் இருந்த 29 மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனாலும் யார் பணத்தை எடுத்தார்கள் என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மா, 12 மாணவிகளின் புத்தகப் பை மற்றும் இருப்பிடத்தில் சோதனையிட்டார். அங்கும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த வகுப்பறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை உள்புறமாக தாழிட்டு, அந்த 12 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பணம் கிடைக்கவில்லை. ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதால் மனமுடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை விசாரித்த மாநில கல்வி துறை அதிகாரி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆவி உலகம்
லண்டனில் இருக்கும் “சொசைட்டி பார் சைக்கிள் ரிசர்ச்” என்ற இயக்கம் 17,000 பேரிடம் பேயைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேள்விகேட்டு கடிதம் அனுப்பியது. அவர்களில் 10 சதவீதம் பேர் பேயைப் பார்த்ததாக சொல்லி யிருக்கிறார்கள். அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பார்த்திருக்கிறார்களாம். இத்தனைப் பேர் பேயைப் பார்த்திருப்பது சாதாரண விஷயமில்லை என்று கூறுகிறது, அந்த அமைப்பு. சரி, இப்படி தூணிலும், துரும்பிலும் நிறைந்திருக்கும் ஆவிகள் நம் முன் தோன்றினால் அவற்றை எப்படி விரட்டுவது? முதலில் ஆவிகளைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. பயந்தால்தான் ஆபத்து என்கிறார், பல அனுபவங்களைப் பெற்ற ஆவி ஆராய்ச்சியாளர் பாய்ன், 

இவரும் ஒரு பெண் தான். இவருக்கு ஆவிகள் என்றால் அலாதியான பிரியம். எங்காவது ஆவிகள் நடமாடுவதாக கேள்விப்பட்டால் பெட்டி-படுக்கையோடு அங்கே ஆஜராகி, அதைப் பற்றி ஆராயத்தொடங்கி விடுவார். அவர் தனது ஆராய்ச்சி மூலம் பெற்ற அனுபவங்களையும், ஆவிகளிடம் எக்குதப்பாக நாம் மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிக்க வேண்டும், ஆவிகளை எப்படி விரட்ட வேண்டும் என்றும் விலாவாரியாக சொல்கிறார். ஆவிகளில் நான்கு வகை இருக்கிறதாம். ஒருவர் மரணமே அடைந்திருக்க மாட்டார். ஆனால் வெகு தொலைவில் உள்ள மற்றொருவர் கண்ணுக்கு அந்த ஆவி தெரியும். இது முதல்வகை ஆவி. 

இரண்டாவது வகை, பாசப் பிணைப்போடு சம்பந்தப்பட்டது. ஒருவர் மரணிக்கும் தருவாயில் அவருக்கு வேண்டியவர்கள் முன்பு தோன்றுவது. அல்லது இறந்த உடனே தோன்றுவது. 

மூன்றாவது வகை தான் நாம் அடிக்கடி கேள்விப்படும் சாதாரண ஆவிகள். இவை இறந்து பல நாட்கள் ஆகியிருக்கும். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தோன்றும். நாம் கொஞ்சம் பயந்த ஆள் என்றால் நம்மை அதிகமாக பயமுறுத்தும். 

 நான்காவது வகை ஆவிதான் நமது சினிமாக்காரர்களுக்கு பிடித்த ஆவி. பேய்ப் படங்கள் எல்லாவற்றிலும் இந்த ஆவிகள்தான் வந்து நம்மை பயமுறுத்தும். இவை பழம்பெரும் ஆவிகள். இவை எப்போதும் ஒரே இடத்தில் இருக்கும். பாழடைந்த வீடுகள், பழைய கோட்டைகள் போன்ற இடங்கள்தான் இவற்றின் புகலிடம். இந்த ஆவிகள் நூற்றாண்டுகளுக்கு மேல் அங்கு தங்கியிருக்குமாம். 

மனிதர்களில், பயப்படும் மனிதனைத்தான் மற்றவர்கள் மேலும் மிரட்டி பயமுறுத்துவார்கள். தைரியமானவர்களிடம் அதே மனிதர்கள் பணிந்து போவார்கள். இதே லாஜிக்தான் ஆவிகளுக்கும். பயந்தால் அது மேலும் நம்மை பயமுறுத்தும். 

நாம் பயப்படும்போது நமது உடலில் இருந்து ஒரு சக்தி வெளிப்படுகிறது. அந்த சக்தியைத்தான் ஆவிகள் உபயோகப்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலான மனிதர்கள் பயத்தில்தான் இறந்து போயிருக்கிறார்களே தவிர, ஆவி தாக்கியதால் அல்ல என்கிறார், பாய்ன். 

ஆவிகள் எதிரே வந்தால் அவற்றை கொஞ்சம் அலட்சியப் படுத்துங்கள். கண்டுகொள்ளாதீர்கள். நம்மை தொடர்ந்து வரும் நாயை விரட்டுவது போல பலமான சைகை மூலம் ‘போ’ என்று விரட்டுங்கள். உங்கள் பயத்தின் மூலம் உங்கள் சக்தியை எடுத்து ஆவிகளை ரீசார்ஜ் செய்து கொள்ள அனுமதித்து விடாதீர்கள். உங்கள் துணிவு ஆவியை அங்கிருந்து நகர்ந்து போக வைத்துவிடும். அடுத்த முறை ஆவி வந்தால் இப்படி செய்து பாருங்களேன்! என்கிறார், பாய்ன்.

Friday, September 4, 2015


காரீயம்
செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்‘ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். 

அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது. 

எப்படி என்கிறீர்களா? செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணையை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். . 

காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். 

நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு, இவை வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவை கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். 

 முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான். அதனால்தான் மேகி நூடுல்சுக்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்து, தடை செய்யப்பட்டது.

கரும்பு ஒரு கசப்பான வரலாறு 

       இன்று உலகம் முழுக்கவே கரும்பு பெரும் விவசாய விளைபொருளாக இருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. கரும்புச்சாறு தந்த ருசியில் மயங்கிய மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதி, ‘தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’ என்று கரும்பை வர்ணித்தார். 

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டிலேயே கரும்பில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறையை தெரிந்து வைத்திருந்தார்கள். கி.மு.100-ம் ஆண்டில் இந்த முறை சீனாவுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்தது தான். 

கி.பி. 636-ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. 

இனிப்பான கரும்பிற்குப் பின்னால் ஒரு கசப்பான கண்ணீர்க் கதையும் உண்டு. தெரிந்தோ தெரியாமலோ அடிமைகள் வியாபார உலகில் பெருமளவு உருவாவதற்கு கரும்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஏராளமான கரும்புத்தோட்டங்கள் அப்போது இருந்தன. அவற்றில் குறைந்த கூலியில் வேலை செய்ய அதிகமான ஆட்கள் மிக தேவைப்பட்டார்கள். 

ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக பொருட்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அதற்கு பதிலாக அடிமைகளை பண்டமாற்று முறையில் விலைக்கு வாங்கினார்கள். அந்த அடிமைகள் கரும்புத் தோட்ட முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டார்கள். தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஆடு, மாடுகளைப் போல கேவலமாக நடத்தினர். கி.பி.18-ம் நூற்றாண்டில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய ஒரு வருடத்திற்கு சுமார் 50 ஆயிரம் அடிமைகள் இங்கிலாந்து கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். 

இப்படி அடிமைகள் பெருமளவு உருவாவதற்கு கரும்பு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனிக்கும் கரும்பிற்குப் பின்னால் இருக்கும் இந்த கசப்பான வரலாறு இன்றைய தலைமுறை அறியாதது.

Thursday, September 3, 2015


ராஜநாகம் 

உலகில் கிட்டத்தட்ட 2,900 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 10 செ.மீ. நீளம் கொண்ட ‘நூல்‘ பாம்பு முதல் 28 அடி நீளம் கொண்ட ‘அனகோண்டா‘ பாம்பு வரை வகை வகையாய் இருக்கின்றன. இந்த பாம்பு இனங்களுள், ஒரேயோர் இனம் மட்டும்தான் பறவைகளைப் போல் கூடு கட்டி முட்டை இட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும். அந்த பாம்பினத்தின் பெயர் ராஜநாகம். இந்த வகைப் பாம்புகள் இந்தியா, மலேசியா, தென்சீனா, வியட்நாம் போன்ற நாடுகளிலும், தெற்கு ஆசியப் பகுதிகளிலும், வடக்கு ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றிலும் 200 இனங்கள் உள்ளன. இவை மற்ற பாம்புகளைவிட புத்திசாலிகள். இவற்றின் கண்பார்வை மிகக் கூர்மையானது. 330 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளைக்கூட தெளிவாக பார்க்கமுடியும். இரவிலும் இதன் பார்வை படு தெளிவு. ராஜ நாகம் எப்போதும் மற்ற பாம்புகளையே உணவாக உட்கொள்ளும். அப்படி பாம்புகள் கிடைக்காத போது, ஓணான், அணில், பறவைகள் போன்றவற்றை உண்ணும். ராஜநாகங்களில் ஆண், பெண் இரண்டுமே இணைவதற்கு முன்பு ஒருவிதமான புனுகு வாசனையை வெளிப்படுத்துகின்றன. இதுவே நாகப்பாம்பு என்றால் உளுந்து வாசனை வரும். இந்த வாசனையை வைத்துதான் கிராமப்புறங்களில் பாம்பு இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள். ராஜநாகங்களில் ஆண், பெண் இணைசேர்ந்த பின்பு 2 மாதம் கழித்து பெண் முட்டையிடும். அந்த முட்டைகளை அடைகாப்பதற்காக இலை, செத்தை, மரக்குப்பைகளை சேர்த்து கூடு கட்டும். அதன்பின்பு அடை காக்கும். ஆண் பாம்பு, பெண்ணையும், முட்டைகளையும் பாதுகாக்கும். 60-90 நாட்களில் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கும். அவை 50 செ.மீ. நீளம் இருக்கும். முட்டையில் இருந்து குஞ்சுகள் வந்ததும் தாய் விலகி விடும். குஞ்சுகள் தன்னந்தனியாக சுயமாக வளரும். இந்த குஞ்சுகளின் விஷம் கூட பெரியப் பாம்புகளின் விஷம் போலவே வீரியமாக இருக்கும். ராஜநாகம் சாதாரணமாக 18 அடி நீளம் வளரக்கூடியது. நுனிவாலை மட்டும் தரையில் பதித்து நேராக நிமிர்ந்து 6 அடி உயரத்துக்கு எழுந்து நின்று, மனிதனை ஆட்டம் காண வைக்கும் வல்லமை அதற்கு உண்டு. உலகிலேயே கொடுமையான விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று. 20 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியது. சாதாரணமாக மனிதனைப் பார்த்ததும் பயந்து ஒதுங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. சீண்டினால் நேருக்கு நேராக எதிர்த்து தாக்கும் தன்மைக் கொண்டது. இது ஒருமுறை கடித்தால் 7 மி.லி. விஷத்தை செலுத்தும். அது 20 மனிதர்களைக் கொல்ல போதுமானது. ஒரு யானையையும் கொல்லும். விஷம் நேரடியாக மைய நரம்பு மண்டலத்தை தாக்கும். முதலில் கண் பார்வை மங்கும், தலை சுற்றி பக்கவாதம் ஏற்படும். இதய ரத்தக் குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். மூச்சுத் திணறி மரணம் சம்பவிக்கும். ராஜநாகம் கடித்தால் அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை உயிர் இருக்கும். இது கடித்தவர்களில் 80 சதவீதம் பேர் மரணத்தையே தழுவியிருக்கிறார்கள். அத்தனை கொடிய விஷம் கொண்டது இது.