Search This Blog

Monday, July 6, 2015


பிறப்பு விகிதமும், பிரச்சினைகளும்

மக்கள் தொகை கணக்கில் பிறப்பு விகிதம் அதிகரிக்கத் தொடங்கியதும், மக்கள் தொகை அதிகரிப்பும் அதன் சமூக பொருளாதார விளைவுகள் பற்றிய உலகளாவிய கவலையும், கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன. அமெரிக்க கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகை 2012 மார்ச் 12-ல் 700 கோடியை கடந்தது. மேலும் 2050-க்குள் இது 900 கோடியை கடக்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. அதேவேளையில் ஐரோப்பிய நாடுகளும் சிங்கப்பூர் போன்ற மக்கள் தொகை குறைந்த நாடுகளும் மேலும் மக்கள் தொகை குறைவதை எண்ணி கவலை அடைகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் தாமஸ் ராபர்ட் மால்தொஸ், மக்கள்தொகை பெருக்கத்தால் உணவுத்தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிவித்தார். அதன்பின்பு பல நாடுகளில் பிறப்பு கட்டுப்பாடு திட்டங்கள் முழு அளவில் செயல்படத் தொடங்கின. இதன் விளைவாக 1970-களில் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் பலவகையான குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் விற்பனைக்கு வந்தன. இதில் தீவிரமாக ஆர்வம் காட்டிய பல ஐரோப்பிய, கிழக்காசிய நாடுகள் தற்போது அதன் விளைவுகளை சந்தித்து வருகின்றன. 2001-ல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் படி 40 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 65 நாடுகளில் பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சிறிய நாடான சிங்கப்பூர், குறைந்த பிறப்பு விகிதத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளானது. சிங்கப்பூரில் 2009-ல் 1.22 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2010-ல் 1.16 ஆக குறைந்தது. சிங்கப்பூர் தான் பிறப்பு விகிதத்தில் கடைசியாக இருக்கும் நாடு. மக்கள் தொகை அதிகரிப்பைப் போல, குறைவதும் பெரிய பிரச்சினையே. குழந்தை பிறப்பு குறைந்ததால் சிங்கப்பூரில் இப்போது வயதான மக்களே அதிக அளவில் இருக்கிறார்கள். இதை சரிக்கட்ட சிங்கப்பூர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இளம் தம்பதிகளை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கப்படுத்துகின்றன. மாறாக, சீனாவும், இந்தியாவும் குழந்தை பிறப்பை குறைக்கும் விதமாக குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகின்றன.

உடம்புக்கு வேண்டாத உணவு

மனிதனை விட ஓரறிவு குறைவாக இருக்கும் விலங்குகள் நம்மை விட சாப்பாட்டு விஷயத்தில் புத்திசாலிகள். எலி, பூனை போன்ற விலங்குகள் என்னதான் கொலைப் பசியாக இருந்தாலும், உணவை உடனே சாப்பிட்டு விடாது, முதலில் முகர்ந்து பார்க்கும். சரியான ஆபத்தில்லாத உணவு என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே சாப்பிடும். ஆனால் மனிதன் அப்படியில்லை, கிடைத்ததை எல்லாம் சாப்பிடும் ரகம். அப்படி சாப்பிட்ட உணவை வயிறு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், உடனே வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி எடுத்து விடுகிறோம். இது ஒரு வியாதி கிடையாது. வியாதி வருவதற்கான முன்னெச்சரிக்கை. வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாக்கள் அல்லது கெமிக்கல் புகுந்து விட்டது என்பதை தெரிவிக்கும் எச்சரிக்கை செயல். வாந்தி எடுக்கும் போது நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்றால் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவோ, தேவையற்ற கெமிக்கலோ வயிற்றின் இரைப்பைக்குள் நுழைந்துவிட்டால் அதனை உடனே கண்டுபிடிப்பது இரைப்பை சுவர்களில் உள்ள உணர்வு செல்கள்தான். இதுதான் நரம்புகள் மூலமாக மூளைக்குத் தகவலைத் தெரிவிக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு செல்லும் நரம்புக்கு ‘வேகஸ்‘ என்று பெயர். மூளைக்கு தகவல் கிடைத்ததும், மூளை கட்டளை பிறப்பிக்கிறது. அதன்படி ஒத்துக்கொள்ளாத உணவை சிறுகுடல் ஒன்றரையடி மேல் நோக்கி தள்ளிவிடுகிறது. அது வாந்தியாக வெளியே வந்து விடுகிறது. சிறுகுடலில் இருக்கும் சிறு பகுதிகள் அத்தனையும் சேர்ந்து சுருங்கி இரைப்பைக்குள் இருக்கும் தகாத உணவை வாயின் வழியாக வெளியே தள்ளியாக வேண்டும். அதற்கு ஜீரண மண்டலம் மட்டுமல்லாமல், அதற்கு சம்பந்தமே இல்லாத சிறுகுடலைச் சுற்றியிருக்கும் தசைகள் கூட சுருங்கி உணவை வெளியே தள்ளுவதற்கு உதவி செய்கின்றன. தேவையில்லாத உணவை வெளியே தள்ளுவதற்காக வாந்தி எடுப்பது என்றாலும் கூட, இது ஒரு தடவை மட்டும் நடந்தால் தப்பில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளிலே நாலைந்து முறைக்கு மேல் வாந்தி எடுத்தால் அது ஆபத்து. தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் உடலிலிருக்கும் நீரின் அளவு குறைந்து போய்விடும். இதனால் ரத்த அழுத்தமும் குறைந்துவிடும். உடம்பிற்கு ஆபத்து வந்துள்ளது என்பதை முதல் அறிக்கையாக வெளியிடுவது இந்த அறிகுறிகள்.

Sunday, July 5, 2015


யானைகளின் வினோதப் பழக்கம்

நமக்கு பிடித்தமான உயிரினங்களில் ஒன்று யானை. பொதுவாக 90 முதல் 200 ஆண்டுகள் வரை யானைகள் உயிர் வாழக் கூடியது. சில யானைகளின் தந்தங்கள் சுமார் 90 கிலோ எடை வரை இருக்கும். கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் வரை வளரும். யானைக்கு இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் நன்றாக நீரில் நீந்தும். நாலரை மீட்டர் ஆழத்திலும் நீந்தி செல்லும். மனிதன் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் யானையாலும் இருக்க முடியும். யானை மூச்சு விடுவது தும்பிக்கையால் தான் என்றாலும் வாசனை அறிவது வாயினால்தான். யானைக்கு வாசனை அறியும் நரம்புகள் அங்குதான் இருக்கின்றன. துதிக்கையால் பெரிய மரத்தையும் சாய்த்துவிடும் வலுவான தசைகளை பெற்று இருக்கிறது. யானைகளிடம் விசித்திரமான பழக்கங்கள் உள்ளன. காட்டில் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சண்டையின் போது களைப்பாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும். சிறிது நேரம் மேயும், தண்ணீர் குடிக்கும். பின்பு மீண்டும் சண்டையைத் தொடரும். இப்படியே பல நாட்கள் நீடிக்கும். ஆசிய யானைகள் படுத்து புரள்வது உண்டு. ஆப்பிரிக்க யானைகளோ எப்போதும் படுப்பதில்லை. நிற்று கொண்டேதான் தூங்கும். யானை என்று படுக்கிறதோ அன்று அதன் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். யானைப் படுத்தால் அது மரணப்படுக்கை தான். யானை மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ஓடும். எல்லா யானைகளுமே கிட்டப்பார்வை உடையவை. தொலைவில் உள்ள காட்சிகளை பார்க்கமுடியாது. யானை பன்றி இனத்தை சேர்ந்தது. முதலில் தோன்றிய யானை பன்றி அளவே இருந்ததாம். ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து, பின்பு துதிக்கையாக வளர்ந்ததாம். இலங்கையில் உள்ள யானைகளில் ஆண் யானை, பெண் யானை ஆகிய இரண்டுக்குமே தந்தங்கள் கிடையாது. யானைக்கு துதிக்கை பலமானது என்றாலும், அதில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அவ்வளவுதான். அது குணப்படுத்த முடியாத அளவுக்கு சென்று, கட்டுக்கடங்காமல் பெரிதாகி விடும். யானையின் உடலில், துதிக்கை எட்டாத இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஒரு குச்சியை பிடித்து சொரிந்து கொள்ளும். யானையால் மற்ற விலங்குகளைப் போல் நான்கு கால்களால் தாண்ட முடியாது. நன்றாக பழகிய யானை, பாகன் சொல்லும் சில வார்த்தைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 2, 2015


கொலையாளி ரோபோ 

மனிதர்களுக்கு உதவிகரமாக இருந்து வரும் ரோபோ, முதன் முதலாக மனிதனை கொலை செய்திருப்பது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெர்மனியின் பானடால் பகுதியில் பிரபல கார் நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கார்களின் உதிரிப்பாகங்களை ஒன்றிணைக்கும் பிரிவில், தொழிலாளர்களுக்கு உதவியாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல பணிகள் நடந்து வந்தன. அப்போது மிகப்பெரிய எந்திரங்களை கையாளும் பிரிவில் இயங்கி வந்த ரோபோ ஒன்று திடீரென, அங்கிருந்த ஒரு 22 வயது ஊழியரை கவ்விப்பிடித்து அருகில் இருந்த உலோக தகட்டின் மீது வைத்து நசுக்கியது. இதில் அந்த ஊழியர் பரிதாபமாக இறந்து போனார். இது அருகில் இருந்த ஊழியர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவையற்ற உதிரி பாகங்களை எடுத்து நசுக்கும் அந்த ரோபோ, மனித தவறினாலேயே ஊழியரை கொன்றுவிட்டது என்றும் இதற்காக யார் மீது வழக்கு போடுவது என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். (02.072015)


நெப்போலியனின் மர்ம மரணம்

மாவீரன் என்ற வார்த்தையை சொன்ன மாத்திரத்தில் பலர் நினைவுக்கும் வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய மாவீரர்களில் நெப்போலியனும் ஒருவர். உலகையே தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த அந்த மாவீரனின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே இன்ன மும் இருக்கிறது. ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி நெப்போலியன் எப்படி இறந்தார் என்பதுதான். இப்படி கேள்வி கேட்பதற்கு காரணமும் இருக்கிறது. மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தை குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச்சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த ஒரு வீரன் தானாகவே நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்றால் நம்பமுடியவில்லை என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். நெப்போலியன் கடைசியாக இருந்த தனிமைச் சிறையில் என்ன நடந்தது என்பதை அறிய யாருக்கும் எந்த ஆவணமும் அப்போது கிடைக்கவில்லை. கி.பி.1816 முதல் 1821-ம் ஆண்டு வரை அதாவது அவர் இறக்கும் வரை உதிர்ந்த முடிகள் ஆய்வுக்கு கிடைத்தன. ஆய்வின் முடிவில் அந்த முடிகளில் ஆர்கானிக் அமிலம் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரோக்கியமான ஒரு மனிதனின் முடியில் ஆர்கானிக் அளவு சோதனையில் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு இருப்பதில்லை. அதனால் நெப்போலியனின் மரணத்துக்கு காரணம் விஷமாக இருக்கலாம் என்று கண்டுபிடித்தார்கள். விஷம் கலந்த காற்றை சுவாசித்ததால், நெப்போலியன் மரணம் அடைந்ததாக லக்ஸம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் வென்னிங் அறிவித்தார். பின் நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறையை ஆய்வு செய்ததில் மேலும் இரண்டு ஆதாரங்கள் கிடைத்தன. ஒன்று அங்கிருந்த ஓவியம். இரண்டு அந்த அறையின் சுவரை அலங்கரித்த வால்பேப்பர்கள். இவை இரண்டிலும் மெல்லக் கொல்லும் விஷம் பூசப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வண்ணமாக பயன்படுத்தி இருந்தனர். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால் விஷம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசித்து சுவாசித்து இறந்து விட்டார் என்று ஒரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வால் பேப்பரை ஓட்டும் பசையில் விஷத்தை கலந்திருந்ததால், பசி தாங்க முடியாத நெப்போலியன் அந்த வால் பேப்பரை கிழித்து தின்றதால் இறந்தார் என்று ஒரு தரப்பும் அறிவித்தது. இன்னும் முழுமையான தீர்வுக்கு வர முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் சரித்திரத்தை புரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

என்ன மனம் இது..?

வேறு சாதி பெண்ணை திருமணம் செய்ததால் மகனை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
கோபி, ஜூன்.30- வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் மகனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. காதல் திருமணம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. அவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 40). இவர்களுடைய மகன் செல்வராஜ் (20). இவர் கொளப்பலூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். செல்வராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் பெற்றோரை சம்மதிக்கவைத்து அவர்களுடைய வீட்டிலேயே மாடி அறையில் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். செல்வராஜ் காதலித்து திருமணம் செய்த பெண் வேறு சாதியை சேர்ந்தவர். அதனால் ராஜம்மாள் மகன் மீது தாங்கமுடியாத ஆத்திரத்திலேயே இருந்ததாக தெரிகிறது. ஆயுள் தண்டனை மகன் திருமணம் செய்துகொண்ட 5-வது நாள் அதிகாலையில் வீட்டின் மாடி அறையில் செல்வராஜ் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது ஆத்திரத்துடன் இருந்த ராஜம்மாள், கையில் பெரிய கல்லை தூக்கிக்கொண்டு சென்று, பெற்ற மகன் என்றும் பாராமல் அவரின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் செல்வராஜ் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பெற்ற மகனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்ற ராஜம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ராஜம்மாள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வானிலை மாற்றங்கள் 

வானிலை முன்னறிவிப்பு எல்லாமே இன்சாட் 1பி செயற்கைகோள் மூலமே தெரிந்து கொள்கிறோம். இன்சாட் 1பி செயற்கைகோள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வானிலை மற்றும் மழைக்கான சூழ்நிலை பற்றி தரை நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கும். செயற்கைகோள்கள் பொதுவாக 650 முதல் 1500 கி.மீ. உயரத்தில் நீண்ட வட்டத்தில் சுற்றி வருகின்றன. பொதுவாக இவை ஒரு தடவை பூமியைச் சுற்றி வர 100 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளில் சுமார் 14½ முறை சுற்றுவதாக கணக்கிட்டுள்ளனர். 1974-ம் ஆண்டு ஏப்ரல் 3, 4 தேதிகளில் மட்டும் அமெரிக்காவின் 12 மாநிலங்களில், சுமார் 148 சூறைக்காற்றுகள் வீசி கதி கலங்கடித்துள்ளன. இந்தியாவில் தற்போது 20 கி.மீ. உயரம் வரை காற்றைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்க இயலும். சென்னையில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த வெப்பம் 15.6 டிகிரி செல்சியஸ். இது 1969-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி பதிவானது. இன்று உலகம் முழுவதும் சுமார் 12,500 வானிலை ஆராய்ச்சி மையங்கள் கணினி மூலம் இயக்கப்பட்டு, தட்பவெப்ப தகவல்கள் வெளியிடப்படுகின்றன. கீழ்மட்ட அளவில் காணப்படும் கருமேகங்களை நிப்போ ஸ்ட்ராட்டஸ் என அழைக்கின்றனர். இவை 10 முதல் 15 நிமிடம் மழை பெய்யும் சக்தி படைத்தவை. டெல்லி, போபால் போன்ற இடங்களில் வெப்பம், 1935-ம் ஆண்டு ஜனவரி 16 அன்று குளிரினால் 0.6 டிகிரி செல்சியசுக்கு இறங்கிவிட்டது. இவையெல்லாம் வானிலையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம். வானிலை மாற்றத்தால் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. தற்போது புயல் பற்றிய எச்சரிக்கைகளை பல்வேறு விதமாக அறிகிறோம். இந்த எச்சரிக்கை அறிவிப்பு முறை முதன்முதலில் 1886-ல் தொடங்கியது. வானிலை சீராக இருக்கும் விதத்தில் விமானம் 30,000 அடிக்கு மேல் பறக்கும் போது நகருவதே தெரியாமல் இருக்கும். மழைக்கு இடையே மின்னலடிக்கும் போது குடை பிடித்து நடப்பது விபத்தில் முடியும். கடும் மழையில் காருக்குள் அமர்ந்திருப்பது பாதுகாப்பானது என்று கூறப்படுவதுண்டு. சூறைக்காற்றை வங்காளிகள் ‘பைசாகி பேரழிவு’ என்றும், மற்ற வட நாட்டினர் ‘யானையின் தும்பிக்கை’ எனவும் அழைக்கின்றனர்.


ஆட்டை சாப்பிடும் தாவரம்

என்ன இது ஆடுதானே தாவரத்தை சாப்பிடும்..! இங்கு ஆட்டை சாப்பிடும் தாவரம் என்று இருக்கிறதே என்கிறீர்களா..? இயற்கையின் வினோதம் இது. ஏற்கனவே வீனஸ் பிளய் ட்ராப், பிட்ஷர் போன்ற தாவரங்கள் சிறு சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. ஆனால், இந்த தாவரங்கள் அந்த வகையில் இல்லை. செம்மறி ஆட்டை சாப்பிடும் தாவரம் என்று விஞ்ஞானிகள் அழைக்கும் தாவரம், புவா சிலன்ஸிஸ் என்பதாகும். இதன் பூர்வீகம் சிலி. இது 10 அடிக்கு மேல் உயரமாக புதர் போல் வளரக்கூடியது. நீண்ட முட்களைக் கொண்டது. இந்த முட்கள்தான் இவற்றை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. ஆனால் இந்த தாவரங்களிடம் இருந்து விலங்குகளை பாதுகாக்க விலங்குகளுக்குத்தான் எந்த ஒரு தற்காப்பு வசதியையும் இயற்கை கொடுக்கவில்லை. மாறாக, இந்த தாவரத்தின் நீண்ட கொக்கி போல் வளைந்து இருக்கும் முட்கள் விலங்குகளை தப்பிக்க முடியாமல் பிடித்துக் கொள்ள பயன்படுகின்றன. செம்மறி ஆடோ அல்லது வேறு எந்த விலங்கோ இந்த புதர் நடுவில் மாட்டிக் கொண்டால் தப்பிக்க முடியாது. அதன் கோரமான முட்கள் உடலைக் கிழிக்கும். அதனையும் மீறி மாட்டிக் கொள்ளும் விலங்குகள் தப்பிக்க முயன்றால் முட்கள் இன்னும் ஆழமாய் உடலுக்குள் பதிந்து, வேறு வழி இல்லாமல் அபயக் குரல் எழுப்பியபடி அந்த விலங்கு இறந்து போக வேண்டியது தான். இறந்துபோன விலங்கின் உயிர்சத்துக்களை அதன் வேர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அதோடு நின்று விடுவதில்லை. இறந்துபோன விலங்குகளின் உடல், மண்ணோடு மக்கி இந்த தாவரத்திற்கு நல்ல உரமாகிறது. அதனால்தான், இதை செம்மறி ஆட்டை சாப்பிடும் தாவரம் என்கிறார்கள். மனிதன் உட்பட எந்த உயிரினமும் இந்த புதருக்குள் மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாது. ஆனாலும் செம்மறி ஆடுகள் இந்த புதரில் அடிக்கடி மாட்டிக் கொண்டு இறந்து போவதால் இப்படியொரு பெயர் வந்திருக்கிறது. விலங்குகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த செடியின் பழங்கள் இனிமையான நறுமணத்தை பரப்புகின்றன. அதன் மணத்தில் மயங்கி புதருக்குள் வரும் விலங்குகள் மாட்டிக் கொண்டு இறந்துவிடுகின்றன. இந்த தாவரத்தை லண்டனில் உள்ள ராயல் தோட்டக்கலை கூடத்தில் வளர்த்து வருகிறார்கள். இதன் அருகே யாரும் போய்விடக் கூடாது என்பதற்காக சுற்றிலும் கண்ணாடி வேலி அமைத்துள்ளார்கள்.

Tuesday, June 30, 2015







எதிரொலி

பெரிய அறையிலோ, கோவில்களிலோ நின்று உரக்க கத்தினால் அந்த ஒலி சுவரில் பட்டு திரும்பி வரும். இதை எதிரொலி என்கிறார்கள். ஒலியானது அலைகளாக மாறி ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பரவுகிறது. ஒலி அலைகள் காற்று, நீர், திடப்பொருள் வழியாகவும் பரவுகின்றன. ஒலியின் திசைவேகம் வினாடிக்கு 340 மீட்டர் ஆகும். நாம் பேசும் போது ஒலி அலைகள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன. இந்த அலைகள் சுவர் அல்லது மற்ற தடைகளை சந்தித்ததும் திரும்பி விடுகின்றன. இவ்வாறு எதிரொலித்து வரும் ஒலியே எதிரொலியாகும். குரல் எழுப்புபவர் இருக்கும் இடத்திலிருந்து குறைந்தது 17 மீட்டர் தொலைவில் தடை இருந்தால் எதிரொலி உண்டாகும். எந்த ஒரு ஒலியும் நமது காதுகளில் 1/10 வினாடி நேரம் நிலைத்திருக்கும். ஆகவே இந்த வினாடியில் வேறெந்த ஒலி காதில் விழுந்தாலும் முன்னர் கேட்ட ஒலி காதில் நிலைத்திருப்பதால் இந்த ஒலியை காது உணராது. ஆகவே ஒலியை தடுக்கும் பொருள் 17 மீட்டருக்கு (55 அடி) தள்ளி இருந்தால் தான், பேசுபவரின் வாயிலிருந்து வெளிவரும் ஒலி 1/10 வினாடி நேரத்தில் தடுக்கும் பொருளை அடைந்து திரும்ப வருவதற்கு சரியாக இருக்கும். அதே நேரத்தில் காது தனது முதல் ஒலியின் பாதிப்பில் இருந்து விடுபட்டு எதிரொலியை கேட்டுணர்கிறது. மரம், சணல், அட்டை, துணி போன்ற பொருட்கள் ஒலியை ஈர்த்துக்கொள்கின்றன. சுவர்கள், பாறை, தண்ணீர் ஆகியவை ஒலியை திருப்பி அனுப்பி விடுகின்றன. இன்றைய காலகட்டங்களில் எதிரொலியை குறைத்து ஒலியை நல்ல முறையில் பரவச்செய்யும் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். இன்றைய தியேட்டர்களும் அரங்குகளும் வட்டவடிவில் மூலைகளைக்கொண்டு அமைக்கிறார்கள். இதனால் ஒலி அலைகள் ஈர்க்கப்படுகின்றன அல்லது சிதறடிக்கப்படுகின்றன. இப்படித்தான் ஒலி கட்டுப்படுத்தப்படுகிறது.

Monday, June 29, 2015



கிரெடிட் கார்டு

வாடிக்கையாளர்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப அவர்களுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டுகளை (கடன் அட்டைகள்) வழங்கி வருகின்றன. இந்த கடன் அட்டை மூலம் நமக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை ஆன்லைன் மூலமாகவோ, கடைகளிலோ பொருளாக வாங்கலாம். குறிப்பிட்ட தொகையை ஏ.டி.எம். மையம் மூலம் பணமாகவும் பெற முடியும். இப்படி கடன் அட்டை மூலம் நாம் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் வங்கியில் செலுத்த வேண்டும். பின்னர் மீண்டும் கடன் அட்டையை பயன்படுத்தி செலவு செய்யலாம். அதில் நாம் பணம் கட்ட தவறும் பட்சத்தில் அதற்கு வங்கிகள் தாமத கட்டணம், பயன்பாடு கட்டணம், உச்ச வரம்பு கட்டணம் என பல்வேறு பெயர்களில் வட்டி மேல் வட்டி போட்டு விடுவார்கள். வங்கிகள் வழங்கும் கடன்களில் மிக அதிகபட்ச வட்டி வசூலிப்பது கிரெடிட் கார்டுகளுக்கு தான். இந்த வட்டி தவிர நுழைவுக் கட்டணம், புதுப்பித்தல், ஆண்டுக் கட்டணம், சேவைக் கட்டணம், சுழலும் கடன் வசதிக்கானக் கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்கள் கிரெடிட் கார்டுகளுக்கு விதிக்கப்படுகின்றன. முழுமையான விவரங்கள் தெரியாமல், வங்கி கொடுக்கிறது என்பதற்காக கிரெடிட் கார்டு பெற்ற பலரும், அதில் உள்ள பணத்தை செலவு செய்து விட்டு மீண்டும் பணம் கட்ட முடியாமல் ஆண்டுக்கணக்கில் வெறும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டு இருப்பவர்கள் பலர். சரியாக வட்டி கட்டாதவர்கள் பற்றிய விவரம் கடன் தகவல் பணியக லிமிடெட் (சிபில்) நிறுவனத்தில் பதிவாகி விடும். அதன்பின் அவர்கள் எந்த வங்கியிலும் எந்த கடனும் வாங்க முடியாது. வீட்டு கடன் உள்பட எந்த கடன் கேட்டாலும், கிரெடிட் கார்டு கடனை அடைத்து விட்டு வாருங்கள் என்று சொல்லி விடுவார்கள். கிரெடிட் கார்டில் ரூ.15 ஆயிரம் செலவு செய்ததற்கு ஒரு ஆண்டு கழித்து பல்வேறு கட்டணங்கள் சேர்த்து வட்டியுடன் ரூ.40 ஆயிரம் வரை செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் மாதம்தோறும் முறையாக, திட்டம் போட்டு செலவு செய்பவர்களுக்கு கிரெடிட் கார்டு ஒரு வரப்பிரசாதம். அதுவே மற்றவர்களுக்கு இது ஒரு ஆபத்தான விஷயம் தான்.