Search This Blog

Thursday, June 25, 2015



டைட்டானிக் கண்காட்சி
 
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி 100 வருடங்களுக்கு மேலாகின்றன. ஆனாலும், இன்றைக்கும் கூட டைட்டானிக் ஒரு ஹாட் சப்ஜெக்ட்தான். 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பிய டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கிப் போனது. டைட்டானிக் போன்றே அதனுடன் சேர்ந்து மூழ்கிய விஷயங்கள் பல. அவற்றை அவ்வப்போது விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும், வெளிக் கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு செய்திதான் டைட்டானிக் நகைகள் பற்றியது. டைடானிக் நகைகள் என்பது கப்பல் மூழ்கிய போது அதில் பயணம் செய்தவர்கள் அணிந்திருந்த நகைகளே. விபத்தில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து ஒவ்வொரு கால கட்டத்திலும் சிறிது சிறிதாக மீட்டெடுக்கப்பட்ட நகைகள் இப்போது உலகின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. ஆர்லான்டாவில் தொடங்கி ப்ளா, லாஸ்வேகாஸ் ஆகிய மூன்று நகரங்களில் இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியை கிலிஞ்சல் ஹோபர் என்ற பெண் ஏற்பாடு செய்துள்ளார். மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடும், அளவுக்கு அதிகமான பொருட் செலவும் இந்த கண்காட்சியை நடத்துவதால் ஏற்படுகிறது என்கிறார், கிலிஞ்சல் ஹோபர். டைட்டானிக் கப்பல் மூழ்கிய நூற்றாண்டு ஆண்டான 2012-ல் ஒரு கண்காட்சி நடத்தியது, உலகத்திற்கு அறிய வைப்பதாக அமைந்தது என்று கூறுகிறார். காலம் கடந்து விட்டால் சோகம் கூட சுவராசியமான ஒன்றாகி விடும். அதற்கு டைட்டானிக் விபத்தும் விதிவிலக்கல்ல.

Tuesday, June 23, 2015


நைல் நதி 

உலகத்தில் உள்ள நதிகளில் மிகவும் நீளமானது ‘நைல்’ நதிதான். உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை இந்த நைல் நதி பாலைவனச்சோலையாக மாற்றுகிறது. இவ்வளவு வறண்ட பிரதேசத்தில் இப்படி ஒரு பெரிய நதி எப்படி இருக்கக்கூடும் என்ற மர்மம் பல காலமாக இருந்து வந்தது? இந்த நதியின் முழு நீளத்தை 1515-ல் கண்டு பிடிக்க தொடங்கி, 1900-ம் வருடம் ஒரு வழியாக முடித்தனர். இந்த நதியின் முக்கியமான கிளைகள் விக்டோரியா, ஆல்பர்ட், டானா என்ற மூன்று ஏரிகளில் இருந்து ஆரம்பமாகின்றன என்றும் கண்டுபிடித்தனர். இந்த ஏரிகள் ஆப்ரிக்காவின் முக்கியமான பகுதிகளில் இருக்கின்றன. நைல் நதியின் ஆரம்ப பகுதியை வெள்ளை நைல் என்று அழைக்கிறார்கள். பெரிய கிளைப்பகுதியை நீல நைல் என்றும் அழைக்கிறார்கள். நைல் நதியின் கரையில் உலகின் மிகப்பெரிய நாகரீகமான எகிப்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நைல் நதியில் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் அதிகமான சேறு பள்ளத்தாக்குகளில் சேருகிறது. இதன் மூலம் வளமாக்கப்பட்ட பகுதிகளில் எகிப்திய மக்கள் வாழ்கிறார்கள். அதனால் தான் எகிப்தை ‘நைல் நதியின் நன்கொடை’ என்று புகழ்கிறார்கள். பிரமிடுகள், அழிந்த புராதன கோவில்களை கடந்து நதி பாய்கிறது. உலகிலுள்ள பெரிய நகரங்களுள் ஒன்றான எகிப்தின் தலை நகரான ‘கெய்ரோ’ வையும் கடந்து பாய்கிறது. நைல் நதியின் முகத்துவாரத்தில் உலகத்திலுள்ள மிகப்பெரிய டெல்டாக்களுள் ஒன்று அமைந்துள்ளது. இந்த டெல்டாக்களில் பாயும் போது நதி சில ஓடைகளாக பிரிந்து விடுகிறது. அங்கே இவை சுமந்து வந்த சேறு படிந்திருக்கிறது. இந்த சேறு கடலில் 3200 கி.மீ. தூரம் வரை செல்கிறது. மூன்று கோடி மக்கள் இந்த நதியை நம்பி உயிர் வாழ்கிறார்கள். மிகப்பழங் காலத்தில், நைல் நதியில் வெள்ளம் வராமல் நின்று போனால், எகிப்தியர்கள் ஓர் அழகிய கன்னிப்பெண்ணை இதில் தள்ளி பலியிடுவது வழக்கமாகும். இன்றும் கூட நதியில் வெள்ளம் வரத் தவறினால் கன்னிப்பெண் போன்ற ஒரு பொம்மையை செய்து ஆற்றில் தள்ளி விடுகிறார்கள். நதியில் நெடுந்தூரம் வரையில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விக்டோரியா நீர் வீழ்ச்சிக்கு வடக்கே 288 கி.மீ வரை ஆற்றின் இரு கரையிலும் யானைகளும், சிங்கங்களும் ஏராளமாக வாழ்கின்றன. நைல் நதியின் மூன்றில் இரண்டு பகுதி ஆவியாகப்போய் விடுகிறது. ‘காலையில் நைல் வறண்டு போனால், மாலையில் எகிப்து மாண்டு போகும்‘ என்பது எகிப்திய பழமொழி. நைல் என்பதை எகிப்தியர்கள் ‘நீல்’ என்று உச்சரிக்கிறார்கள்.

Monday, June 22, 2015



சுற்றுச்சூழல் 

எல்லோருமே சுற்றுச்சூழல் பற்றி விரிவாகப் பேசுகிறோம். சமீபத்தில் தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சீர்கேட்டின் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் ரோமானியர்கள் தான். அவர்கள் தான் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், பிள்ளையார் சுழி போட்டனர். ஆனால் அது விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல் என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள். கி.மு.400க்குப் பின் நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் அந்த மதுவில் காரியம் கலந்த ஒரு ரசாயனத்தை கலந்தனர். இந்த ரசாயனம் மதுவுக்கு ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல் மனநிலை பாதிப்புக்கும் காரணமாகிறது. இந்த மது உடலுக்குள் சென்று எலும்புகளை பெரிதாக பாதித்திருக்கிறது. ரோமப் பேரரசர்களின் எலும்புக்கூடுகள் பலவற்றில் மிக அதிக அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கி.மு.வில் ரோமப் பேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால் கி.பி.யில் நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்து இருக்கிறது. 1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் மன்னர் அஜய்சிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மார்வார் என்ற வனப்பகுதியில் புதிதாக அரண்மனையை அமைக்க நினைத்தார். இதற்காக அங்குள்ள மரங்களை வெட்ட தனது வீரர்களை மன்னர் அனுப்பி வைத்தார். அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பிஷ்ணோய் என்ற இன மக்கள், இயற்கை விரும்பிகள். இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். மரங்களை வெட்ட வந்த வீரர்களைப் பார்த்ததும் பதறிப்போன பிஷ்ணோய் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துப் போனது. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு பிஷ்ணோய் இனத்தவரும் ஒரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். கட்டிப்பிடித்தவர்களை வெட்டி போட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது. 363 மரங்களையும், அவற்றை கட்டிப் பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய பின்புதான், மன்னனின் மனம் லேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று தனது போர் வீரர்களை திரும்பி வர கட்டளையிட்டார். பிஷ்ணோய் மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதல் போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத் தான் இந்த நிகழ்வு ‘சிப்கோ இயக்கம்‘ என்று தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பிரச்சினையை பற்றி ஏதாவது புத்தகம் வந்தால்தான் அந்த நிகழ்வு உண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அர்த்தம். சுற்றுச்சூழல் குறித்து முதல் விழிப்புணர்வு புத்தகம் 1864-ல் அமெரிக்க தத்துவ சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதினார். ‘மேன் அண்டு நேச்சர்‘ என்ற இந்த புத்தகம் தான் சுற்றுச்சூழலின் அவசியத்தையும், அதன் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்பையும் முதன் முதலாக சொன்னது.


சூரியன் உருவாக்கும் வலிப்பு 

சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் 179 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொள்ளும். 1982-ம் ஆண்டு கடைசியாக இந்த நிகழ்வு நடைபெற்றது. அடுத்து 2161-ம் ஆண்டு நிகழும். சூரியனின் ஆயுள் 1000 கோடி ஆண்டுகள். தற்போது 500 கோடி ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உயிரோடு இருக்கும். நாம் வாழும் பூமியை விட சூரியன் 13 லட்சம் மடங்கு பெரியது. சூரிய குடும்பத்தின் மொத்த எடையில் 99 சதவீதத்தை சூரியன் கொண்டுள்ளது. மற்ற எல்லா கோள்களும் சேர்ந்து ஒரு சதவீத எடையை பகிர்ந்து கொள்கின்றன. சூரியன் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனில் ஏகப்பட்ட கரும்புள்ளிகள் உண்டு. இது 11 வருடங்களுக்கு ஒரு முறை மாறும். இது சுழற்சி முறையில் மாறுகிறது. 11 வருடங்கள் கரும்புள்ளிகள் அதிகரிக்கும். அடுத்த 11 வருடங்கள் குறையும். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் எப்போதும் 6000 டிகிரி கெல்வின் வெப்பம் இருக்கும். சில இடங்களில் 4500 டிகிரி கெல்வின் வெப்பம் இருக்கும். இப்படி குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் இடங்களே கரும்புள்ளியாக தெரிகிறது. இந்த கரும் புள்ளிகளில் சிறியது 1500 கி.மீ குறுக்களவு கொண்டதாகும். பெரிய கரும்புள்ளி ஒரு லட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாகவும் உள்ளது. இந்த கரும் புள்ளியில் நமது பூமியைப் போன்ற 5 பூமிகளை உள்ளடக்கி விடலாம். அவ்வளவு பெரியது. சூரியனும் தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது. சூரியனின் மத்திய பாகம் 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதி 34 நாட்களுக்கு ஒருமுறையும் சுற்றுகிறது. இப்படி திருகிக்கொள்வது போல் சூரியன் சுற்றுவதால் தான் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. விண்வெளியில் இருந்துவரும் கதிர்கள் பூமியில் உள்ள நைட்ரஜனை தாக்கும் போது கார்பன் 14 தோன்றுகிறது. கரும் புள்ளி ஏற்படும் போது காந்த சக்தி அதிகமாவதால் பூமியில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. காந்த சக்தி அதிகமாகும் போது காஸ்மிக் கதிர்கள் திசை திரும்பி விடுகின்றன. இதனால் கார்பன் 14 குறைகிறது. இப்படி குறைவதால் தாவரங்கள், பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. நமது ரேடியோ, தொலைக்காட்சிகள் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு மன நோயும் வலிப்பும் ஏற்படலாம். தினமும் சூரியன் ஒளிவீசுவதற்க்கு 39,744 டன் ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து ஹீலியமாக வெளி வருகிறது.

Sunday, April 26, 2015




தலைவலியின் வகைகள்
நமக்கு வரும் தலைவலிகளை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். முதல் வகை சமூக மனவியல் காரணங்களால் வருகிறது. அதாவது மனஅழுத்தம், அயர்ச்சி, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளால் ஏற்படுகிறது. இரண்டாவது வகை உடல் சம்பந்தப்பட்டது. உடல் வகை, மருத்துவ வகை காரணங்களால் வரும் தலைவலி. இது கண்ணில் அதிகப்படி அழுத்தம், பல்வலி, பீனிசம் எனப்படும் மூக்கடைப்பு (சைனஸ்), சில வகை உணவுப்பொருட்கள், மருந்து வகைகளை சாப்பிடும் காரணத்தால், தூக்கமின்மையால், மிகக்குளிர்ந்த நீரில் குளிப்பதால், சினிமா, டி.வி. ஆகியவற்றை அருகில் இருந்து பார்ப்பதால், இப்படி பலவகை காரணங் களினால் இந்த தலைவலி ஏற்படுகிறது. மூன்றாவது வகை சிறிது ஆபத்தான வகையை சேர்ந்தது. யாரோ சுத்தியால் அடித்தது போல வலிக்கும். மூளைக்குள் ஏற்படும் சின்ன ரத்தக்கசிவுகள் தலைவலியாய் தோன்றி, மூளைக்குள் வலியாக வெடிக்கும். இது ‘மெனிஞ்சைட்டிஸ்’ என்ற காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி. ‘என்ஸெபலைட்டிஸ்’ என்கிற மூளைக்குள் வீக்கம் தான் இந்த வகை தலைவலியை உருவாக்கும். தாங்க முடியாத பயங்கரமான தலைவலி இது. பெரும்பாலான தலைவலிகள் முதல் வகையை சேர்ந்தவை. இந்த வகை தலைவலி வருவது நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதைப் பொறுத்தது. அதாவது, எப்படி வாழ்கிறீர்கள்? எவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர்கள், கோபப்படுகிறீர்கள்? எந்த அளவு பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. முதல் வகையில் சேரும் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி மிகவும் ஆய்வு செய்யப்பட்டு, ஏராளமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வகை தலைவலிக்காரர்கள் பெரும்பாலானோருக்கு தலையில் பாகம் பிரித்தது போல் ஒரு பாதியில் மட்டும் வலிக்கும். காலையிலேயே இந்த தலைவலிக்கான எச்சரிக்கை ஏற்பட்டுவிடும். தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு செயல் மந்தமாகி, மாலையில் வாந்தி வருவது போல உணர்வு ஏற்படும். சிலருக்கு கண்ணுக்குள் கலர் கலராக மாடர்ன் ஆர்ட் போல தெரியும். இதெல்லாம் மைக்ரேன் வருவதற்கான அறிகுறி. இந்த ஒற்றைத் தலைவலியை ஒரு விதமான எச்சரிக்கை என்கிறார்கள்.

Tuesday, April 14, 2015




பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்
உடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிடலாம். ஒரு பகுதியில் எந்தவிதமான சிறுதானியம் விளைகிறதோ, அதுதான் பொதுவான உணவு. அதில் நமக்கு எது பிடிக்கிறதோ, அது தனி உணவு. அந்த உணவிலும் பசியின் தன்மைதான் உணவின் வடிவத்தை முடிவு செய்யும். உடலின் தன்மையும், வெளிச்சூழலின் தன்மையும் இணைந்து தான் பசியின் தன்மையை உருவாக்கும். சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றுவதும், ஜில்லுன்னு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும், மழை நேரத்தில் ஏதாவது மொறு, மொறுவென சாப்பிடத் தோன்றுவதும் தான் பசியின் தன்மை. இது உடலின் தேவையைப் பொறுத்து ஏற்படும். அதில் முதலில் ஏற்படுவது உடலின் தேவை. அடுத்து வருவது நாக்கின் தேவை. பசியையும், ருசியையும் பார்த்துப் பழகினாலே எந்த உணவை, எப்போது சாப்பிடலாம் என்ற புரிதல் ஏற்பட்டுவிடும். இதன்படி சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். விலங்குகள் எதுவுமே தங்களுக்கு பசிக்காமலோ, பிடிக்காமலோ சாப்பிடுவதில்லை. மனிதன் மட்டும் தான் பசிக்காமலும், பிடிக்காமலும் கடமைக்கு மட்டுமே சாப்பிடுகிறான். மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இதுவே காரணம்.

Tuesday, December 9, 2014




அதிக விலை சினிமா டிக்கெட்டுகள்
உலகிலேயே மிகக் குறைவான சினிமா கட்டணம் கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு இருந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், உடனடியாக மக்களிடம் இருந்து வசூல் செய்து விட வேண்டும் என்ற நெருக்கடியால் கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். மனித உழைப்புக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமா கட்டணத்தின் அளவீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.அதன்படி 10 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒருவர் சினிமா பார்ப்பதற்கு வெறும் 16 நிமிடம் உழைத்தால் போதும். வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த உழைப்பில் ஒரு சினிமாவைப் பார்த்து விட முடியாது. அதனால் அன்றைய உழைப்பாளர் வர்க்கத்தை சினிமா கட்டணம் பெரிதாக பாதிக்கவில்லை. அப்போது சராசரியாக சினிமா டிக்கெட் விலை ரூ.8 ஆக இருந்தது. இதேபோல் அமெரிக்காவில் ஒரு சினிமா பார்க்க அமெரிக்கர் 24 நிமிடம் உழைத்தால் போதும் என்று இருந்தது. இன்று நிலைமையே தலைகீழ். இன்றைக்கு சினிமா டிக்கெட்டின் விலை ரூ.100-ல் தொடங்கி ரூ.350 வரை ஆகிறது. ஒருமுறை குடும்பத்துடன் சினிமா தியேட்டருக்கு போய்வர சராசரி இந்தியன் தனது மாத வருமானத்தில் 27 சதவீதம் வரை செலவழிக்கிறார்.இந்தியர்களின் சராசரி மாத வருமானம் ரூ.3,700 மட்டுமே. லட்சங்கள் இல்லை. லட்சங்களில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் மட்டும்தான். மற்றவர்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். அமெரிக்காவில் எப்படி என்றால், அங்கு சராசரி மாத வருமானம் 3,400 டாலர்கள். சினிமா டிக்கெட்டின் விலை 9 டாலர் முதல் 10 டாலர் வரை தான். ஒருசில தியேட்டர்களில் மட்டுமே அதிகபட்சமாக 25 டாலர் வரை சினிமா கட்டணம் உள்ளது. இதனால் ஒரு அமெரிக்கர் ஒருமுறை சினிமா பார்க்க தனது மாத வருமானத்தில் 0.30 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறார். இங்கிலாந்திலும், அதேநிலை தான் உள்ளது. அங்கு ஒரு பிரிட்டிஷ் காரர் சம்பளமாக 3 ஆயிரம் டாலர் பெறுகிறார். அங்கு சினிமா டிக்கெட்டின் விலை 9 டாலரில் இருந்து 28 டாலர் வரை உள்ளது. சரி, சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டாம். கேபிள் டிவி.யில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், இந்தியாவின் நிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை. இந்தியாவில் கேபிள் டிவி., டிடிஎச் இணைப்புகளின் மாத சந்தா ரூ.150-ல் இருந்து 350 ஆக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரி மாத வருமானத்தில் 10 சதவீதமாகும். அமெரிக்காவில் டிடிஎச்-சின் மாத சந்தா 50 டாலரில் இருந்து 100 டாலராக இருக்கிறது. ஒரு அமெரிக்கர் டிடிஎச் சந்தாவாக மாதம் 3 சதவீதம் மட்டுமே செலுத்துகிறார். இங்கிலாந்திலும் டிடிஎச். சந்தா 75 டாலர் முதல் 125 டாலர் வரை உள்ளது. இதுவும் 5 சதவீதத்திற்கும் குறைவான தொகையே.ஆக மொத்தம் இந்தியாவில் தான் தற்போது உலக அளவில் சினிமா, கேபிள் டிவி., டிடிஎச். போன்ற பொழுதுபோக்கு சமாச்சாரங்களுக்கு அதிக தொகை செலவழிக்கிறார்கள். நம்மை விட வளர்ந்த நாடுகள்கூட பொழுதுபோக்குக்காக செலவிடும் தொகை குறைவு தான்.

Thursday, September 25, 2014


இதைவிட உண்மையை எப்படிச் சொல்வது..?!!





இந்திய பாரம்பரிய உணவுகள்




































Wednesday, September 24, 2014

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் இலையுதிர்கால இன்னிசை இரவு விழா

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் இலையுதிர்கால இன்னிசை இரவு விழா


வணக்கம். 20.09.2014 அன்று அமெரிக்கா ஓஹியோ மாநிலம் கொலம்பஸ்  தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலையுதிர்கால இன்னிசை இரவு விழாவில் கலந்து கொண்டேன்.அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம். இந்த நாளை நான் மறக்கவே முடியாது. ஏனென்றால் இந்த நாள் புரட்டாசி சனிக்கிழமை என தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படும் நாள். மேலும் அன்று (20-09-2014) காலையில்தான் சென்னையில் இருக்கும் எனது மகன்-மருமகள் (சங்கர்-அனிதா தம்பதியினர்) எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். எனவே, எனக்கு பேரன் பிறந்த நாளில் கலந்து கொண்ட இனிமையான நிகழ்ச்சி என்ற விதத்தில் இந்த நிகழ்ச்சியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனது மருமகன் திரு.ஜெயந்த் மற்றும் அவரது பெற்றோருடன் இந்த நிகழ்ச்சியில் பெற்ற எனது அனுபவங்களை உங்களோடு கலந்து கொள்கிறேன்.
வரவேற்பு இடத்தில் துவங்கிய மகிழ்ச்சி முழுமையாக இருந்தது. தமிழ்நாட்டு கிராமங்களில் சிறுவர்கள் கைகளில் கட்டும் சவ்வு மிட்டாய் போல ஒரு அடையாள காகிதத்தை சுற்றிக் கொண்டது வித்தியாச அனுபவம்.Eureka SuperKidz என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தாரும் வரவேற்று தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அரங்கினுள் செல்லும்போதே வரவேற்புரை தொடங்கிவிட்டது. தொடர்ந்து முழுமையான ஆங்கிலத்தில் பெண்மணி ஒருவர் Eureka SuperKidz பற்றியும் தமிழ்ச்சங்க செயல்பாடு பற்றியும் விவரித்தார். அதே போல பாடல் நிகழ்ச்சியின் இடையிலும் அனுஷ்யா என்னும் பெண் தமிழிலும்,  இன்னொருவர் அமெரிக்க ஆங்கிலத்திலும் மதுரை அருகில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் நடந்த சில கல்வி கற்பித்த  சூழ்நிலைகளை பகிர்ந்து கொண்டனர். சரி... சரி... அமெரிக்க தமிழ்ச்சங்கம் என்பதால் இப்படி ஆங்கில உரையும் இருக்கிறது போலும் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்.

பின்னர் ஆவலோடு எதிர்பார்த்த இன்னிசை நிகழ்வு தொடங்கியது. ஜனனி ஜனனி எனத் துவங்கி செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை என நுழைந்து அம்மா என்றழைக்காத உயிரில்லையே என உணர்ச்சிப் பிழம்பாக பாடல் துவங்கியது. GV சைந்தவி, சத்யபிரகாஷ், ரவிசங்கர், ஆகியோருடன் இசைக்கலைஞர்கள் பங்கேற்க நல்ல தமிழில் பெண்மணி ஒருவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து தெய்வமகள் திரைப்பட பாடலை சைந்தவி பாட விழா களைகட்டியது.(3) பளிங்கினால் ஒரு மாளிகை (கறுப்புப்பணம்).., (4) ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்(ஜானி).., (5) ஓம் சிவோஹம் (நான் கடவுள்).., (6) ஐயையோ ஆனந்தமே (கும்கி)..., (7) வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்(கிழக்கு வாசல்)...,  (8) என் வானிலே ஒரே வெண்ணிலா (ஜானி).., (9) மச்சானைப் பார்த்தீங்களா (அன்னக்கிளி).., (10) வராக நதிக்கரை ஓரம் (சங்கமம்)..., (11) பூமாலையே தோள் சேரவா (பகல்நிலவு).., (12) மலர்களே.. மலர்களே.. இது என்ன கனவா (லவ் பேர்ட்ஸ்).., (13) நிலா அது வானத்து மேலே (நாயகன்).., (14) பொன் ஒன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா).., (15) இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன. (மரியான்) (16) பூக்கள் பூக்கும் தருணம் (மதராசப்  பட்டிணம்).., என பாடல்கள் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. உதித் நாராயணன் பாடியிருந்தால் கர்ணன் திரைப்பட பாடல் "உள்ளத்தில் நல்ல உள்ளம்.. " எப்படியிருக்கும் என்பதையும் பாடிக் காட்டி நகைச்சுவை செய்தனர் மேடைப் பாடகர்கள். தொடர்ந்து சிற்றுண்டி இடைவேளை வந்தது. அதன் பின்னர் இங்கு கொலம்பஸில் இருக்கும் எனது நண்பர்களின் வீட்டுக்கு இரவு 7.30க்கு செல்ல ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்தேன். எனவே நாங்கள் கிளம்பும் நிலையாகிவிட்டது.

சமீபத்தில் ஒருநாள் தமிழ்நாட்டு டி.வி. செய்தியில் பார்த்தேன். காய்கறி விலையேற்றம் குறித்து ஒரு பெண்ணிடம் பேட்டி எடுக்கிறார் நிருபர். அந்தப் பெண் ," வெஜிடபுல்ஸ் ரேட் எல்லாம் ரொம்ப ஹை ஆயிட்டே போகுது. பேமிலிய ரன் பண்றது ரொம்ப டிபிகல்ட் ஆக இருக்கு " என்று பேசுகிறாள். எந்த விலங்கும் கூட இன்னொரு விலங்கின் மொழியில் பேச முயற்சி செய்வதில்லை - பேசுவதை பெருமையாகக் கருதுவதும் இல்லை. " காய்கறி விலையெல்லாம் கூடிகிட்டே போகுது. குடும்பம் நடத்த சிரமமாக இருக்கு " என எளிய தமிழில் பேச முடியவில்லையா..? அல்லது பேச விருப்பம் இல்லையா..? என்பதே பெரியதொரு கேள்வி. அட அப்படியாவது நல்ல ஆங்கிலத்திலாவது பேசத் தெரியுமா என்றால் அந்த மொழிவளமும் கிடையாது., தெரியாது என்பது ஒரு கசப்பான உண்மை. செம்மொழி என்னும் பெருமை உடையது நமது மொழி. வரிவடிவம் இல்லாத பல மொழிகள் உலகில் உள்ளன. இந்தியாவில் சொல்லப் போனால் நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியும், சௌராஷ்டிர மக்கள் பேசும் சௌராஷ்டிர மொழியும் பல லட்சம் மக்கள் பேசுவதை நாம் அறிவோம். அந்த மொழி பேசும் மக்கள் இன்றளவும் அவர்களது குழந்தைகளுக்கு அவரவர் மொழியை தாய்மொழியாக கற்பித்தும் பேசியும் வருகின்றனர். ஆனால் நமது தமிழர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதிலும், தமிழில் பேசுவதிலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். விழா மேடையில் தமிழில் பேசத் தெரியாமல் நின்ற சிறுவனைக் கண்டதும் எனக்கு இவ்வாறு தோன்றியது. தமிழில் பேசத் தெரியவில்லை என்றால் வீட்டில் தமிழ் இல்லை என்பதுதானே அர்த்தம்..? அதனால் நண்பர்களே நாமாவது சேர்ந்து நல்ல தமிழை பேச-கற்பிக்க முயற்சி செய்வோம். வேறு எந்த மொழியாக இருந்தாலும் அதையும் நல்லமுறையில் பேச பயிற்சி எடுப்போம்.

விழாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு கையேடு அளிக்கப்பட்டது.அதில் "மனித மாண்பு" என்ற தலைப்பிலும், "சான்றான்மையும் வள்ளுவரும்" என்ற தலைப்பிலும் திரு அழகப்பன் கனகசபாபதி அவர்கள் தந்திருந்த தொகுப்பினைப் படித்து மகிழ்ந்தேன். அந்தக் கையேட்டில் தமிழ்நாடு மதுரையில் 1899ஆம் ஆண்டு திரு.பாண்டித்துரை தேவரால் துவங்கப்பட்ட முதலாம் தமிழ்ச் சங்கம் பற்றிய குறிப்புக்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் மதுரை தமிழ்ச் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட 15 நோக்கங்களையும் அறிந்து கொள்ளவும் முடிந்தது. கொலம்பஸ் தமிழ்ச்சங்கம் - தமிழ்ப்பள்ளி பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. விழாவில் Eureka Foundation க்கு 10.000 டாலர்கள் நன்கொடை வழங்கியதையும் கண்டேன். உள்ளபடியே மெய் சிலிர்த்துப் போனேன். நமது இந்திய மதிப்பில் சுமார் 6 லட்ச ரூபாய்களை நன்கொடை வழங்கிய கொலம்பஸ் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் சொல்கிறேன்.

தமிழ் வாழ்க.. தமிழர் ஒற்றுமை உணர்வு ஓங்குக.