Search This Blog

Monday, May 16, 2016



வஞ்சிக்கப்பட்ட இனத்தின் பெண் முகம் 17/05/2016

மே.சி.ஜெமிசன் என்பவருக்கு கருப்பினத்தில் இருந்து விண்வெளிக்குப் போன முதல் பெண் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.  வஞ்சிக்கப்பட்ட இனத்தின் வளர்ச்சிக்கான பெண்முகம் என்று இவரை உலகம் கொண்டாடுகிறது. எண்பதுகளின் பிற்பகுதியில் அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஒன்று வானத்தில் பறப்பதற்கு பதிலாக பசிபிக் கடலில் விழுந்தது. நாசாவிற்கு அது கவுரவப் பிரச்சினை. உடனே அடுத்த விண்கலத்தை ஏவ தயாரானது. அதற்காக 2000 விண்ணப்பங்களிலிருந்து வடிகட்டி, வடிகட்டி குறைவான நபர்களை விண்ணில் பறப்பதற்கான பயிற்சிக்கு தேர்ந்தெடுத்தது.  1987-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெமிசனுக்கு அடுத்த ஐந்தாண்டுகள் அதுவே வாழ்க்கையானது. இத்தனைக்கும், நாசாவிற்கு வருவதற்கு முன்பு வரை ஜெமிசன் ஒரு மருத்துவர். ஸ்டான்போர்டிலும், கார்னல் பல்கலைக்கழகத்திலும் படித்து பொது மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் வானம், விண்மீன்கள், விண்வெளி என பால்ய காலத்து கனவு அவரை துரத்தியது. துணிந்து நாசாவுக்கு விண்ணப்பித்தார். முதல் ஆண்டு தேர்வாகாமல் நிராகரிக்கப்பட்டார். சோர்ந்துவிடாமல், அடுத்த ஆண்டு விண்ணப்பித்ததில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பின சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்  அவர். அப்போதும் விண்வெளிக்கு போவது நிச்சயமில்லை. நாசா எப்போதும் மூன்று அடுக்குகளாகத்தான் ஆட்களை தேர்ந்தெடுக்கும். விண்கலம் ஏவும் நேரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சரியான பேக்-அப் தேவை என்பதற்காக, எப்போதும் ரிசர்வில் ஆட்கள் இருப்பார்கள். ஜெமிசனுக்கு, அவர் படித்த மருத்துவர் பட்டம் காப்பாற்றியது.

விண்கலத்தில் புவியீர்ப்பு விசையில்லாத போது மனிதர்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள், பாதிப்புகள் உண்டாகின்றன என்பதை துல்லியமாக அருகிலிருந்து கணிக்க வேண்டும். அந்த வாய்ப்பு மருத்துவரான ஜெமிசனுக்கு செப். 12, 1992-ல் கிடைத்தது. எண்டவர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தில் ஜெமிசனையும் சேர்த்து ஆறு நபர்கள் பயணிக்க முடிவாயிற்று. ஜெமிசன் விண்வெளி வீரர்களுக்கான உடையை மாட்டினார். எண்டவரில் எட்டு நாட்கள், 190 மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தார். எட்டு நாட்கள் கழித்து செப்டம்பர் 20-ந் தேதி அனைவரும் பூமிக்கு திரும்பினார்கள். பூமியில் காலடி வைத்த அந்த நொடியில் இருந்து கருப்பினத்தவர்களின் வரலாறு மாறியது.

Friday, May 6, 2016


ஏழைகள்  ரெயில்  எப்போது? 07/05/2016

மக்களின் அன்றாட வாழ்வில் போக்குவரத்து என்பது மிக இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். தினமும் தொழிலோ, படிப்போ, மருத்துவமோ, அல்லது சொந்த காரணங்களுக்காகவோ ரெயில் பயணம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஆங்கிலேயர் இந்த நாட்டுக்கு செய்த நன்மை ஒன்று உண்டென்றால், அது நிச்சயமாக ரெயில் போக்குவரத்துதான் என்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது. நாடு முழுவதிலும் 12 ஆயிரத்து 617 ரெயில்கள், 2 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. 7 ஆயிரத்து 172 ரெயில் நிலையங்கள் இவர்களை ரெயிலில் ஏறவும், இறங்கவும் வைக்கிறது.

பயணிகள் ரெயில்களை பொறுத்தமட்டில், தென்னக ரெயில்வே பயணிகள்தான், ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம்செய்வது மட்டுமல்லாமல், பதிவுசெய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுக்கும் பயணிகள் ஒருபோதும் பதிவுசெய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் ஏறுவதில்லை என்பது, வடமாநிலங்களுக்கு ரெயில்களில் பயணம்செய்யும் ஒவ்வொரு பயணியின் அனுபவமாகும். ஆனால், புதிய ரெயில்கள் விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் தென்னக ரெயில்வேவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே என்பது எல்லோருடைய ஆதங்கம் ஆகும். ரெயில் பயணம் என்பது வசதி படைத்தவர்களைவிட, சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கே அத்தியாவசிய தேவையாகும். ஆனால், ரெயில்வே நிர்வாகம் சில வழித்தடங்களில் ஓடும் ரெயில்களில் அதிக கூட்டநெரிசலோ, அல்லது ஏராளமான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலையிலோ, அவர்களுக்கெல்லாம் வசதியாக கூடுதலாக சிறப்பு ரெயில்களை விடவேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாகும். ஆனால், இப்போது ரெயில்வே நிர்வாகம் இத்தகைய நேரங்களில் விடும் சிறப்பு சுவிதா ரெயில்களின் கட்டணம் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது.

சாதாரண ரெயில் கட்டணங்களைவிட, மும்மடங்கு கட்டணம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றால், தூங்கும் வசதிகொண்ட பெட்டிக்கு ரூ.315 கொடுத்து டிக்கெட் எடுக்கவேண்டும். ஆனால், சுவிதா ரெயிலில் டிக்கெட் எடுத்தால் ரூ.1,135 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் இவ்வளவு தொகை கொடுத்து பயணம் செய்யமுடியுமா? என்று கேட்டபோது, சுவிதா சிறப்பு ரெயில்களில் மொத்த இருக்கைகளின் முதல் 20 சதவீத இடங்கள் முன்பதிவுக்கு 415 ரூபாய்தான் வசூலிக்கிறோம். அதன்பிறகு ஒவ்வொரு 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத கட்டணம் உயரும். இந்த வகையில் அடுத்த 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டின் விலை 525 ரூபாய், அதற்கடுத்த 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டின் விலை 775 ரூபாய், 4-வது 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுக்கு 995 ரூபாய், கடைசி 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுக்குதான், 1,135 ரூபாய் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள். இதேபோலதான் 3-வது வகுப்பு தூங்கும் வசதிகொண்ட குளிர்சாதன பெட்டிக்கு சாதாரண ரெயிலில் 810 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக, இந்த ரெயிலில் 3,185 ரூபாயும், 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு சாதாரண ரெயிலில் 1,140 ரூபாய், இந்த ரெயிலில் 4,470 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக, பயணிகளின் பணத்தை கறப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே பட்ஜெட்டில் ஏற்கனவே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் என்ற ஏழைகள் ரெயில் அதாவது, முழுக்கமுழுக்க பதிவு செய்யப்படாத ‘அன்ரிசர்வ்டு’ ரெயில்வே பெட்டிக்கொண்ட சூப்பர் பாஸ்ட் ரெயில்களை விடும் அறிவிப்புகளை தென்னக ரெயில்வேயில் விரைவில் அறிமுகப்படுத்தவேண்டும். இதுபோல, தொலைதூர ரெயில்களில் 2 முதல் 4 வரை பதிவு செய்யப்படாத கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பையும் தென்னக ரெயில்வேயில் விரைவில் நிறைவேற்றப்படவேண்டும். இந்த அந்தியோதயா என்ற ஏழைகளின் ரெயிலையும், தீனதயாளு ரெயில் பெட்டிகளையும் விரைவில் அறிமுகப்படுத்தினால்தான், சாதாரண ஏழை, எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியுமே தவிர, சுவிதா ரெயிலால் அல்ல.


ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது? 07/05/2016

மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்துவம். இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை. வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது. சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும். இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறக்கும். சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத்தான் புரை ஏறுதல் என்கிறார்கள். மருத்துவத்துறையில் இதை ‘வாட்ச் டாக் மெக்கானிசம்‘ என்று கூறுகிறார்கள்.

சிலருக்கு தூங்கும் போது புரையேறும். அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். மனிதர் தூக்கத்தில்தானே செய்கிறார் என்று சுவாசக் குழாய் விட்டுவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும். இதைத்தான் தூக்கத்திலேயே புரையேறுதல் என்கிறார்கள். தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை. விழித்திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்த கெட்டித் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக் குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல்கள் உண்டாகி காற்று போகும் முயற்சி தடைபடும். அப்போது ஏற்படுகிற கொர்... கொர்.. சத்தம்தான் குறட்டை விடுதல் என்கிறார்கள். குறட்டை விடுதல் சில சமயம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள். குறட்டையைத் தடுக்க 500 வழிகள் இருப்பதாகவும், இதில் எது ஒத்துவருமோ அதன் மூலம் குறட்டையை கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். அதிகமாக குறட்டை விடுபவர்கள் கண்டிப்பாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பார்க்க வேண்டும்.

Thursday, May 5, 2016


விலங்குகளின் நுட்பம் 05/05/2016

விலங்குகள், பறவைகள் போன்ற சில உயிரினங்களுக்கு மிக நுட்பமான நுண்ணுணர்வுகள் இருக்கின்றன. இத்தாலி நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலத்த சேதம் விளைந்தது. இதை முன் கூட்டியே அறிந்திருந்தன, சில வீட்டு விலங்குகள். நிலப்பிளவு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே நடக்கப்போகும் விபரீதத்தை அந்த உயிரினங்கள் தெரிந்து கொண்டன. அதோடு நிற்காமல் அவை அந்த இடத்தை விட்டு வெளியேறி பத்திரமான இடத்திற்கு சென்று விட்டன.

விசுவாசம் கொண்ட ஒரு நாய் மட்டும் தனது எஜமானரை விட்டுப் போக மனமில்லாமல் அவருக்கு துணையாக அங்கேயே நின்றது. அப்போதும் அது சும்மா இருக்கவில்லை. இரவு, பகல் பாராமல் குரைத்துக்கொண்டே இருந்தது. தனது எஜமானுக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை அது அறிவித்துக் கொண்டே இருந்தது.

ஆனால், அந்த எஜமானர் அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர் அந்த நாய்க்கு வெறி பிடித்து விட்டதாகவே கருதினார். பொழுது விடிந்தது. நிலம் லேசாக நடுங்கத் தொடங்கியது. அந்த நடுக்கம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து பெரிதாக ஆடியது.

அது நில நடுக்கம்தான் என்று உணர்வதற்குள் நிலம் பிளவு படத் தொடங்கியது. அந்த எஜமானர் அவசரம், அவசரமாக அங்கிருந்து ஓடத்தொடங்கினார். அதற்குள் நிலம் பிளந்து பூமிக்குள் விழுந்தார். நன்றியுள்ள நாய் முன் கூட்டியே இந்த இயற்கை சீற்றத்தை அறிவித்தும், அதைப் பற்றி முன்பே தெரிந்திருந்தும் எஜமான் மீது இருந்த விசுவாசத்தால் அவருடன் சேர்ந்து அதுவும் பூமிக்குள் விழுந்து உயிரை விட்டது.

பூகம்பம் பூமியின் மேற்பகுதியை அடைவதற்கு முன்பே பூமியின் வெகு ஆழத்தில் அதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கி விடும். அப்போது அது பயங்கரமான சத்தத்தை ஏற்படுத்தும். அந்த மிகப் பெரும் ஒலி மனித காதுகளுக்கு கேட்காது. மனிதனின் காதுகள் ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலிகளை மட்டுமே கேட்க முடியும். இந்த பூகம்ப ஒலி வித்தியாசமானது என்பதால் மனிதனுக்கு அந்த சத்தம் கேட்கவே கேட்காது. ஆனால் விலங்குகளின் காதுகளுக்கு இந்த ஒலி நன்றாக கேட்கும்.

இதனால்தான் பூகம்பத்தின் போது நாய், பூனை மற்றும் சில பறவைகள் தப்பித்து விடுகின்றன. மனிதர்களுக்கு அந்த சத்தம் கேட்காததால் அதை அறிந்து கொள்ள முடியாமல் உயிரை விடுகிறார்கள்.


இந்திய உளவு நிறுவனங்கள் 06/05/2016

இந்தியாவில் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, ‘இன்டெலிஜென்ஸ் பீரோ‘, சுருக்கமாக ஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று ‘ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்‘, இதனை சுருக்கமாக ‘ரா‘ என்று அழைக்கிறார்கள்.

உள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகிலேயே மிக பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்புப்படை பிரிவுகளுக்கும் தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா. 1968-ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பணியை சமாளிப்பதே இதன் வேலையாக இருக்கிறது.

உலகநாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு உளவு அமைப்புகளுமே உதவின. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க முடியாது என்பதால் பாதுகாப்பு குறைவாக உள்ள நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளை அனுப்பி, பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என்பதை உலகுக்கு முதலில் அறிவித்ததும் ‘ரா‘தான்.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999-ம் ஆண்டு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த ‘ரா‘ அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளிலும் பாகிஸ்தானின் ஆதிக்கம் பெருமளவு குறைந்ததற்கு ‘ரா‘வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள், பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும் என்கிறது அரசாங்கம். உண்மைதானே!

Tuesday, May 3, 2016


வறட்சியை தாங்கி வளரும் தாவரங்கள் - ஜீன் வங்கி 04/05/2016


நமது நாட்டின் ஒருபுறம் தண்ணீர் கிடைக்காமல் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. மறுபுறம் தண்ணீர் கிடைத்தாலும் அதை பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இத்தகைய நிலையை எல்லாம் தாண்டித் தான் விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் விவசாயமே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இத்தகைய தண்ணீர் பிரச்சினையில் இருந்து விடுபட்டு விவசாயம் செய்வதற்கு ஏற்ற தாவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்விற்காக ரூ.12 கோடியை ஒதுக்கி உள்ளது.

வறட்சியையும், உப்புத் தண்ணீரையும் தாங்கும் திறன் கொண்ட தாவரங்களை கண்டறிந்து, அவற்றின் ஜீன்களை பெற்று, அதனைக் கொண்டு மேலும் பல தாவர வகைகளை உருவாக்கும் திட்டத்திற்கே இந்த 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயொடெக்னாலஜி இதை சாதித்துக் காட்டுகிறது. இதன் மூலம் வறட்சியை தாங்கும் திறன் கொண்ட ஜீன்கள் தொகுக்கப்படும். அந்த ஜீன்கள் தற்போது பயன் தந்து கொண்டிருக்கும் தாவரங்களுக்குள் புகுத்தப்படும். இதனால் நெல் போன்ற பயன்தரும் தாவரங்கள் மனிதனுக்கான பயனை எப்போதும் போல் தந்து கொண்டே வறட்சியையும் தாங்கி வளரும். இதனால் உணவு உற்பத்தி தடையின்றி நடக்கும்.

இதேபோன்ற முயற்சி விலங்குகள் மீதும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் இன்னுமொரு பயனும் இருக்கிறது. தாவரங்களில் மேற்கொள்ளப்படும் ஜீன் மாற்றங்களால் நல்ல சத்துள்ள உணவை தரும் வகையில் அந்த தாவரங்கள் மாற்றப்படும்.

இத்தகைய ஆராய்ச்சி மூலம் இந்தியாவில் ஏற்கனவே சத்துள்ள உருளைக்கிழங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக உருளைக்கிழங்கில் மாவுச்சத்து மிக அதிகமாக இருக்கும். ஆனால், ஜீன்கள் மூலம் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உருளைக்கிழங்கில் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள ஜீன் வங்கியில் நான்காயிரம் மருத்துவ தாவரங்களின் ஜீன்களும், 500 நார்ச்சத்து தாவரங்களின் ஜீன்களும், 100 நறுமண தாவரங்களின் ஜீன்களும், எண்ணெய் வித்துக்களின் ஜீன்களும், 400 தீவனத் தாவரங்களின் ஜீன்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேறுபட்ட உயிரினங்கள் வாழும் பகுதிகளில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையும், வடகிழக்கு இந்தியாவும் உலகின் 25 முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கின்றன.


சனிக்கிரகத்தில்  நிலவுகள் 
 03/05/2016

சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் சனி கிரகம் ஆறாவதாக இருக்கிறது. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு முறை சூரியனை சுற்றி வர 29½ ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 34 நிமிடம் நேரம் ஆகிறது.

சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக் கோளினுள் சரியாக 763 பூமிகளை உள்ளடக்கிவிடலாம். அவ்வளவு பெரியது. இருந்தாலும் சனியின் எடை பூமியை விட 95 மடங்கு தான் அதிகம். இதிலிருந்து சனி ஒரு பெரிய வாயுக் கோளம் என்பதையும், கடினமாக இருக்கும் அதன் உட்பகுதி மிகச் சிறியது என்பதையும் ஓரளவு அறிந்து கொள்ளலாம். சனியின் சராசரி அடர்த்தி 0.71 என குறைவாக இருக்கிறது.

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்குதான் அதிகம். பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன், சனியில் 82 கிலோ இருப்பான். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், சனியின் சராசரி வெப்பநிலை மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. சனியின் காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால் கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாய்க் காணப்படுகின்றது.

நமது பூமிக்கு ஒரு நிலவு என்றால் சனிக்கு 62 நிலவுகள். இந்த நிலவுகளின் மொத்த அளவில் 90 சதவீதத்தை 'டைட்டான்' என்ற ஒரு நிலவு மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது கிட்டத்தட்ட நமது பூமி அளவுக்கு பெரியது. சனியின் இரண்டாவது பெரிய நிலவான 'ரியா'வுக்கு சுற்று வளையம் உண்டு. 10 கி.மீ.க்கும் குறைவான விட்டம் கொண்ட நிலவுகள் 34 இருக்கின்றன. 10 கி.மீ. இருந்து 50 கி.மீ.க்குள் விட்டம் கொண்ட 14 நிலவுகள் இருக்கின்றன. இவை தவிர மீதமுள்ள மிகச்சிறிய அளவு கொண்ட நிலவுகள் சனியில் இருக்கின்றன.   பிறகோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் கோளின் நடுப்பகுதியை சுற்றி உள்ளது என்பது சனியின் சிறப்பம்சமாகும். சனியைப்பற்றிய பல புதிர்களில் அதன் வளையம் தான் மிக முக்கியமானது. வியாழனுக்கும், யுரேனசுக்கும் இது போன்ற வளையம் உள்ளது. ஆனாலும் சனிக்கு இருப்பதைப்போல குறிப்பிடும் படியாய் அதற்கு இல்லை.

சனி வளையங்கள் பற்றிய உண்மைகளை 1981 'வாயேஜர்' விண்கலம் மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறியதும் பெரியதுமாய் சனியை துணைக்கோள்கள் போலச் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்களாக தோன்றுகின்றன என்பதும், இவ்வாறு ஆயிரக்கணக்கான வளையங்கள் அதில் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

சனியின் துணைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியதால் இந்த வளையங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. சனிக்கு அருகில் உள்ள வளையங்கள் வட்ட வடிவமாகவும், தள்ளி உள்ளவை முட்டை வடிவமாகவும் காணப்படுகின்றன. சனி வளையத்தின் கட்டமைப்பு சீர்குலையாமல், கோடிக்கணக்கான துகள்கள் எப்படி சீராக ஒரு குறிப்பிட்ட வளையத்தினுள் இயங்கி வருகின்றன என்பது இன்றளவும் புரியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இதற்கும் விடை கொடுக்கும்.

Sunday, May 1, 2016


விற்பனைப் பொருளான குடிநீர் 02/05/2016

கடந்த தலைமுறை வரை குடிநீர் ஒரு விற்பனைப் பொருளாக மாறும் என யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மக்களுக்கு மிக முக்கியமான அத்தியாவசியமான பொருளாக குடிநீர் இருந்தது. இப்போது அது கோடிகள் புரளும் மிகப் பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவிட்டது.

குடிநீருக்கான வர்த்தகம் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதனை வசப்படுத்துவதற்காக முதலாளித்துவ நாடுகள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போடுகின்றன. அதற்கான முதல் முயற்சிதான் குடிக்கும் குடிநீர் பாதுகாப்பற்றது என்ற கருத்தாக்கம். சாதாரணமாக நமது வீடுகளில் வரும் குழாய் தண்ணீரை குடித்தால் ஆரோக்கியம் போய்விடும். நோய்க் கிருமிகள் தாக்கும். என்ற எண்ணத்தை இந்த நிறுவனங்கள் திட்டம் போட்டுப் பரப்புகின்றன.

அதன் தாக்கம் ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை குழாய் நீரை குடித்து வளர்ந்தவர்களின் வீடுகளில் இன்று மினரல் வாட்டர். ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் மாதத்திற்கு குடிநீருக்காக மட்டும் 1,500 ரூபாய் செலவழிக்கிறார்கள்.

இந்தியாவில் ஆண்டுக்கு 552 கோடி ரூபாய்க்கு குடிநீர் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வர்த்தகத்தையும் கைப்பற்ற தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. நீர் விற்பனை என்பது இரண்டு வகைகளில் நடைபெறுகிறது. ஒன்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நீர், மற்றொன்று மினரல் வாட்டர் என்கிற பெரிய கேன்களில் விற்கப்படும் குடிநீர். இரண்டுமே உடலுக்கு நல்லது செய்பவை அல்ல.

பாட்டில் நீரில் இனிப்பு பொருட்களோ, ரசாயனப் பொருட்களோ இருக்கக் கூடாது. சர்க்கரை சேர்க்கக் கூடாது. குறைந்த அளவு கலோரியே இருக்க வேண்டும். அதே வேளையில் பழங்கள், வாசனை பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட எசன்ஸ்களையும், சத்துப் பொருட்களையும் வாசனைப் பொருட்களையும் மிகச் சிறிய அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றின் அளவு மொத்த எடையில் ஒரு சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது.

அப்படி ஒரு சதவீதத்திற்கு மேல் இது கூடிவிட்டால் அது பாட்டில் நீர் என்ற இனத்தில் இருந்து மாறி குளிர்பானம் என்ற பிரிவில் சேர்ந்துவிடும். சட்டப்படி எல்லா குடிநீரும் சோடியம் கலப்பு இன்றி தயாரித்திருக்க வேண்டும். இந்த குடிநீரும் அதிகபட்சம் 6 மாதம் வரைதான் பாதுகாப்பானது.

மினரல் வாட்டர் என்பது குடிநீரில் இயற்கையில் கலந்துள்ள தாது உப்புகளைக் குறிக்கிறது. தொடர்ந்து நீரை 180 டிகிரி சென்டிகிரேட்டில் கொதிக்க வைத்த பிறகு மீதமுள்ள தாது உப்புகளின் அளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரே இடத்தில் இருந்து கிடைக்கும் நீரிலேயே கால மாற்றத்திற்கு ஏற்ப கனிமங்களின் அளவில் சிறிய வேறுபாடுகள் இருக்கும்.

ஆனால், என்னதான் மினரல் வாட்டராக இருந்தாலும் அதில் எந்தவொரு தாது உப்பும் இருப்பதில்லை என்பதே உண்மை. தொடர்ந்து இப்படி சுத்தகரிக்கப்பட்ட நீரையே பருகுவதால் நீரின் மூலம் இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் எலும்புகள் பலவீனம் அடைகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காசு கொடுத்து மினரல் வாட்டரை வாங்குவதை விட வடிகட்டிய நீரை காய்ச்சிக் குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவம் சொன்னாலும், தங்களின் வியாபாரத்திற்காக பல நிறுவனங்கள் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குழாய் நீரை கழிவுநீர் போல் சித்தரித்து மக்களை மூளைச் சலவை செய்து, தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றன என்பதே வருத்தமான உண்மை.

Saturday, April 30, 2016

காமராஜர் மதிய உணவு திட்டம்
Add caption


அமெரிக்காவில் பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை 

   கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்த கொடூரம்

வாஷிங்டன், மே.1-/2016

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த பெண் டைனல் லேன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக கர்ப்ப கால உடைகள் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்து விட்டு, 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த மிச்செல் வில்கின்ஸ் என்ற பெண், டைனல் லேன் வீட்டுக்கு சென்றார்.<

ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் டைனல் லேன், அந்த கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் அறுத்து குழந்தையை எடுத்தார். இந்த தாக்குதலில், கர்ப்பிணி மிச்செல் வில்கின்ஸ் உயிர் பிழைத்தார். ஆனால் அவரது கருக்குழந்தை உயிரிழந்தது.

இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, மிச்செல் வில்கின்ஸ் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், “ ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து டைனல் லேன் வீட்டுக்கு சென்றேன். ஒரு மணி நேரம் அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் திடீரென என்னை அடித்து உதைத்து கீழே தள்ளினார். சமையலறை கத்தியால் என் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்தார். குழந்தை இறந்து விட்டது” என கூறினார்.

ஆனால் கொலையாளி டைனல் லேன் சார்பில் ஆஜரான வக்கீல், “இது முன்கூட்டியே திட்டமிட்டு நடந்த சம்பவம் அல்ல” என வாதிட்டார். ஆனால் அரசு தரப்பு வக்கீல், “மிச்செல் வில்கின்சை அடித்து உதைத்து, அவருடைய குழந்தையை திருட வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டுள்ளார்” என மறுத்தார்.

இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து நீதிபதி, டைனல் லேன் குற்றவாளி என கண்டு, ‘இப்படியெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது’ என கூறி, அவருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

விண்வெளிச் சுற்றுலா 01/05/2016

ஸ்பேஸ் டூர் என்பது  உலக கோடீஸ்வரர்களைப் பித்துப்பிடித்து ஆட்டும் ஒரு விண்வெளி சுற்றுலா ஆகும். பல கோடீசுவரர்களுக்கு இது வாழ்நாள் கனவு. வான்வெளியில் ஜாலியாக டூர் போகலாம் என்றதுமே பல பணக்காரர்கள், பணத்தைக் கட்டி வரிசையில் நின்றுவிட்டார்கள். இந்த டூர் செல்ல மன வலிமை மட்டும் போதாது, உடல் வலிமையும் வேண்டும். உடற் தகுதி விஷயத்தில் பல பணக்காரர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவை எல்லாவற்றையும் கடந்து முதன் முதலில் விண்வெளியில் விசிட் அடித்து திரும்பியவர் டென்னிஸ் டிடோ என்ற அமெரிக்கர்.

ஸ்பேஸ் டூரை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். பூமியில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இரண்டரை மணி நேரம் தங்கிவிட்டு. அந்தரத்தில் மிதக்கும் நீல வண்ண பூமிப் பந்தைப் பார்த்துவிட்டு கிறங்கிப் போய் உடனே பூமிக்கு திரும்புவது. இதில் என்ன ஒரு வித்தியாசமான அனுபவம் என்றால் புவி ஈர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தில் அந்தரத்தில் மிதக்கும் அற்புத உணர்வுதான்.

இப்படி ஒரு டூரை ஏற்பாடு செய்து நம்மை கூட்டிக் கொண்டு போவதற்காகவே ஸ்பேஸ் அட்வெஞ்சர் லிமிடெட் என்ற அமெரிக்க நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது. 2001-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பலரை விண்ணுலகத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இதுவரை 8 பேர் விண்ணுலகம் போய் திரும்பி இருக்கிறார்கள்.

இதற்கு எவ்வளவு செலவாகும் என்றால் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தான் என்கிறார்கள். கால்குலேட்டர் கையுமாக உட்கார்ந்து நம் பணத்துக்கு எவ்வளவு என்று கணக்குப்போட்டுப் பார்த்தால் நம் தலை சுற்றும். கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய். இவ்வளவு பணம் நம்மிடம் இருந்தால் தான், விண்ணுலகத்தில் பறக்க முடியும்.

இன்னொரு வகை டூர் விண்வெளியில் தங்கி வருவது. அமெரிக்க தொழில் அதிபரான ராபர்ட் என்பவர் நாசாவுடன் இணைந்து ‘ஜெனசிஸ்-1‘, ‘ஜெனசிஸ்-2‘ என்ற இரண்டு மாதிரி ஓட்டல்களை விண்வெளியில் வடிவமைத்து வருகிறார். இந்த ஓட்டலில் தங்கி வரலாம் என்ற சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது.

இது ராபர்ட்டுக்கு மகிழ்ச்சி தர 2012-ல் இருந்து இந்த ஓட்டல்களை கமர்சியலாக பயன்படுத்தி வருகிறார். இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. அப்படி வரும்போது இங்கு பயணிகள் தங்கலாம். அப்போது அதிக பட்சமாக 15 நாட்கள் விண்ணில் தங்கலாம். இது நடைமுறைக்கு வரும்போது, விண்வெளி பயணச் செலவு பன்மடங்கு குறையலாம். இப்போது விண்வெளியில் அமைக்கப்படும் ஓட்டல்கள் வருங்காலத்தில் நிலவிலும் அமைக்கப்படும்.

இந்தியாவில் இந்த ஸ்பேஸ் டூர் வர இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்படி வரும்போது வாய்ப்பும், வசதியும், உடல் திடமும் இருந்தால் விண்ணில் போய் தங்கி வரலாம்.

Friday, April 22, 2016


அடுத்த இரண்டு ஆண்டுகளில்
இந்தியாவில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும்
ஆய்வறிக்கையில் தகவல் 

சுதானுகா கோசல் கொல்கத்தா 23/04/2016

இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2018-ஆம் ஆண்டிற்குள்), 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும் என அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்

அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில், 2018-ஆம் ஆண்டில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும். தற்போது இந்தியா ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுகளை உருவாக்கி வருகிறது.

எட்டு பெரிய நகரங்களில் மும்பையில் மின்னணு கழிவுகள் அதிகமாக உள்ளது. அங்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.20 லட்சம் டன் கழிவுகள் உருவாகிறது. அடுத்து டெல்லி - என்.சி.ஆர். பகுதி 98 ஆயிரம் டன், பெங்களூரு 92 ஆயிரம் டன் கழிவுகளை வெளியிடுகின்றன. சென்னை (67,000 டன்), கொல்கத்தா (55,000 டன்), அகமதாபாத் (36,000 டன்), ஐதராபாத் (32,000 டன்) மற்றும் பூனா (26,000 டன்) ஆகிய நகரங்களும் மின்னணு கழிவுகளை குவிக்கின்றன.

மறுசுழற்சி

இந்தியாவில் உருவாகும் மொத்த மின்னணு கழிவுகளில் 2.5 சதவீதம் மட்டுமே நாட்டில் உள்ள குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களின் உடல் நலம் கெடுகிறது. 95 சதவீதத்திற்கும் மேலான மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, அவற்றை பிரித்து கையாளும் பணிகளில் பல்வேறு அமைப்பு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து நம் நாட்டில் போதிய அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகள் இல்லை.

கம்ப்யூட்டர் 

மின்னணு கழிவுகளில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்களின் பங்கு அதிகபட்சமாக 70 சதவீத அளவிற்கு உள்ளது. அடுத்து, தொலைத்தொடர்பு சாதனங்கள் (12 சதவீதம்), மின்சார உபகரணங்கள் (8 சதவீதம்) மற்றும் மருத்துவ கருவிகள் (7 சதவீதம்) இருக்கின்றன. இவை தவிர, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது.

ஒட்டுமொத்த அளவில், மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சாலைகளின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. அதே சமயம், வீடுகளில் உருவாகும் மின் கழிவுகளின் பங்கு 15 சதவீதமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளிவரும் மின்னணு கழிவுகளில் டெலிவிஷன், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவை மிக அதிக பங்கினைக் கொண்டுள்ள நிலையில், கம்ப்யூட்டர்களின் பங்கு 20 சதவீதமாகவும், மொபைல்போன்களின் பங்கு 2 சதவீதமாகவும் இருக்கிறது.

பாதிப்புகள்

கம்ப்யூட்டர், டி.வி., மொபைல்போன் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றில் நச்சுத்தன்மை  இருப்பதால்,  மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதன் காரணமாக, தலைவலி, வாந்தி, மயக்கம், மற்றும் கண்வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் குடல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கோகினூர்  வைரம் 23/04/2016

உச்சநீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை கையில் எடுத்து இருக்கிறது. ஆனால், தற்போது மிகவும் வியக்கத்தக்க ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடந்துவருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு, இப்போது இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் ஜொலித்துக்கொண்டு இருக்கும் கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒரு வழக்கு போடப்பட்டு அது நிலுவையில் உள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாறைக்கொண்ட இந்த கோகினூர் வைரம்தான் உலகிலேயே பழமையானதாகவும், புகழ்மிக்கதாகவும் கருதப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இந்த வைரத்துக்கு கோகினூர் என்று பெயரிடப்படவில்லை. பின் நாட்களில்தான் கோகினூர் அதாவது, ஒளி மலை என்று பெயரிடப்பட்டது.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இடைக்காலத்தில் இப்போதுள்ள ஆந்திர மாநிலம் கொல்லூர் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்த வைரம் பலருடைய கைகளுக்கு மாறி மாறி சென்றிருக்கிறது. 1304-ம் ஆண்டு மார்வா மன்னர் கைக்கு வந்திருக்கிறது. 1306-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தி இலக்கியத்தில் இந்த வைரத்தை சொந்தமாக வைத்திருப்பவன் உலகத்தையே சொந்தமாக்கிக்கொள்வான். ஆனால், அதன் அனைத்து துரதிருஷ்டத்தையும் அனுபவிப்பான், தண்டனையில் இருந்து தப்ப கடவுள் அல்லது பெண்கள் மாத்திரமே அணியலாம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி, பாபர், அவுரங்கசீப் என்று பலர் கைக்கு மாறியது. இறுதியில் பாபர் பரம்பரையை சேர்ந்த சுல்தான் முகமது கையில் இருந்த நேரத்தில் 1739-ல் பாரசீக தளபதி நாதிர்ஷா முகாலய பேரரசரோடு போரிட்டு இந்த வைரத்தை பாரசீகத்துக்கு எடுத்துச்சென்றார். அவர்தான் இந்த 186 கேரட் வைரத்துக்கு கோகினூர் என்று பெயரிட்டார். அவர் கொலை செய்யப்பட்டபிறகு இந்த கோகினூர் வைரத்தை, அவருடைய பேரன் ஷா ஷுஜா எடுத்துக்கொண்டுவந்து பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்குக்கு பரிசாக கொடுத்தார். 1813-ல் சீக்கிய போரின்போது உதவியதற்காக ரஞ்சித்சிங் மன்னரின் மகன் துலீப் மகாராஜா கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிசாக அளித்தார்.

கோகினூர் வைரம் விக்டோரியா மகாராணியிடம் 1850-ல் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகுதான் விக்டோரியா மகாராணி தன் கிரீடத்தில் அந்த வைரத்தை பதித்து அணியத்தொடங்கினார். அவர் எழுதியுள்ள ஒரு உயிலில், ‘கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் ராணிகளால் மட்டுமே அணியவேண்டும். அப்படி ஒருவேளை ராஜா ஆளுகையில் இருந்தால், அவரது மனைவிதான் அந்த வைரத்தை வைத்திருக்கவேண்டும்’ என்று எழுதியுள்ளார். இப்படி ஆண்களுக்கு சாபத்தையும், பெண்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் கோகினூர் வைரத்தை திரும்பப்பெறவேண்டும் என்ற வகையில், உச்சநீதிமன்றத்தில் இப்போது ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வைரத்தை லாகூரில் இருந்துதான் எடுத்துச்சென்றிருக்கிறார்கள். ஆகவே, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானோடு தொடர்புள்ளதால் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தலீபான்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைரத்தின் கதையை பார்த்தால், இது இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு சென்றதுபோல தெரியவில்லை. பரிசாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. 1936-ல் பண்டித நேருவே அப்படித்தான் சொல்லியிருக்கிறார். மேலும், கோகினூர் மட்டுமல்ல, பாரீஸ், போலந்து, வியன்னா, ரஷ்யா, அமெரிக்கா, ஈரான் போன்ற பல நாடுகளில் இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட வைரங்கள் இருக்கின்றன. எனவே, இதை ஒரு பிரச்சினையாக்காமல் விட்டுவிடுவதே நல்லது. இதை நாம் கேட்கத் தொடங்கினால், ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது விட்டுச்சென்ற பலபொருட்களை அவர்களும் திரும்பகேட்கும் நிலைமை உருவாகும். எனவே, இதில் ராஜ்யஉறவுகளை எல்லாம் மனதில்வைத்து முடிவெடுப்பதே சாலச்சிறந்தது.

Thursday, April 21, 2016


அமெரிக்காவில் ‘அடிமைப் பெண்’ணுக்கு டாலர் நோட்டில் இடம்



வாஷிங்டன், ஏப்.22-2016

அமெரிக்க நாட்டில் அடிமைமுறையை ஒழிக்க போராடியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர், ஹேரியட் டப்மேன். ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர், 1820-ம் ஆண்டுவாக்கில் ஒரு அடிமையாக பிறந்தவர்.

அடிமைத்தனத்தில் நூற்றுக்கணக்கானோர் விடுபடுவதற்கு உதவியவர், இந்த டப்மேன்.

இவரை கவுரவிக்கிற வகையில், அமெரிக்க நாடு தனது 20 டாலர் நோட்டில் டப்மேனின் உருவப்படத்தை இடம்பெறச்செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 20 டாலர் நோட்டின் முன் பகுதியில் அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் படம் இடம் பெற்றிருக்கிறது. அந்த இடத்தில் அவரது படத்துக்கு பதிலாக இனி டப்மேன் படம் இடம் பெற்றிருக்கும்.

20 டாலர் நோட்டின் பின்பக்கத்தில் ஆண்ட்ரூ ஜாக்சன் படமும், வெள்ளை மாளிகை படமும் இடம் பெற்றிருக்கும்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேக்கப் லெவ் வெளியிட்டுள்ளார்.

20 டாலர் நோட்டில், அடிமை உரிமையாளராக விளங்கிய ஆண்ட்ரூ ஜாக்சனுக்கு கிடைத்திருந்த இடம், இப்போது அடிமை மீட்பு போராளியான டப்மேனுக்கு கிடைத்திருப்பது சிறப்பு. அதுவும் பெண் ஒருவர் கடந்த 100 ஆண்டு காலத்தில் டாலர் நோட்டில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.     இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கடலின் ஆழம்  22/04/2016

கடலின் அடியில் என்ன இருக்கிறது என்ற கேள்வி பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. போதாக்குறைக்கு கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில், கடலுக்கு அடியில் பல சுவராசியமான விஷயங்கள் இருப்பதாக எதையோ சொல்லிவைக்க, அவருடைய சிஷ்யர் அலெக்சாண்டர் என்பவர் கண்ணாடி பலூன் மாதிரி ஒன்றை செய்து அதற்குள் உட்கார்ந்து கொண்டு கடலுக்குள் கொஞ்ச தூரம் சென்று பார்த்துவிட்டு வந்தார். அதில் ஒரு பிரமாண்டமான திமிங்கிலத்தை பார்த்ததாக சொன்னார்.

கரையிலிருந்து கடலுக்குள் ஓரிரு மைல் வரை இருக்கும் பகுதியை கண்டங்களின் நிஜ எல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் சராசரி ஆழம் 600 அடி. இதற்கு அப்பால்தான் நிஜ கடல் ஆரம்பமாகிறது. ‘காண்டினெண்டல் ஷெல்ப்‘ என்று சொல்லக்கூடிய கண்டங்களின் எல்லையில் இருப்பது வெறும் 3 சதவீத கடல் தான்.

அதற்கு பின்பு இருக்கும் 97 சதவீத கடல் தான் உண்மையான பிரமாண்டமான கடல். இங்கு ஆழம் என்பது 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பகுதியை ‘அபீஸ்‘ என்று அழைக்கிறார்கள். இதன் உள்ளே பிரமாண்டமான சமவெளிப் பிரதேசம், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத் தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.

கடலுக்குள் சூரிய ஒளிகூட 100 அடி வரைதான் ஊடுருவிப் போக முடியும். அதற்கு கீழே போகப் போக ஒளி மங்கிக் கொண்டே போகும். 1000 அடிக்கு மேல் கும்மிருட்டு தொடங்கிவிடும். இதில் ஆய்வு செய்வது சாதாரண விஷயமில்லை. இருந்தாலும் ஆய்வுகளுக்கு பஞ்சமில்லை.

எந்தவொரு உபகரணமும் இல்லாமல் மூச்சை மட்டும் ‘தம்‘ பிடித்துக்கொண்டு கடலுக்கடியில் 285 அடி ஆழம் வரை போய் வந்திருக்கிறார் ஒருவர். ஒரு கயிற்றில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டி விட்டார்கள். அந்த சிலேட்டுப் பலகை ஒவ்வொன்றிலும் கையெழுத்துப் போட்டுக்கொண்டே சென்றார். 285-வது சிலேட்டில் கையெழுத்திட்ட அந்த மனிதர் சுயநினைவை இழந்தார். இதுதான் மூச்சை அடக்கி கடலுக்குள் மூழ்கிய ரிக்கார்டு.

சுவிட்சர்லாந்தில் பிக்கார்ட் என்பவர் ஒரு நீர்மூழ்கிப் படகு ஒன்றைத் தயாரித்து அதற்கு ‘டிரையஸ்ட்‘ என்று பெயரிட்டார். அந்தப் படகில் உட்கார்ந்து கொண்டு செங்குத்தாக கடலில் இறங்கினார். நான்கு மணி நேரம் தொடர்ந்து இறங்கியும் தரை தட்டவில்லை. கிட்டத்தட்ட 5 மைல் ஆழம் இறங்கியும் அதுவரை தரையை தொடவில்லை.

ஐந்து மணி நேரம் கழித்து ‘தரையை தொட்டுவிட்டேன்‘ என்று வயர்லெஸ்ஸில்  செய்தி அனுப்பினார். பசிபிக் கடலில் அவர் இறங்கிய அந்த இடம் ‘மெரியானா டிரெஞ்ச்‘ என்றழைக்கப்படுகிறது. இதன் ஆழம் சுமார் 35,808 அடி. எவரெஸ்ட் 29,028 அடிதான்.  கடலின் மிக ஆழமான இந்தப் பகுதியில் பிக்கார்ட் 20 நிமிடம் இருந்தார். இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிக மிக ஆழமான இடம் இதுவே!

Wednesday, April 20, 2016


டைனமைட்டை கண்டுபிடித்த நோபல் 16/04/2016

‘டைனமைட்‘ என்பது ஒரு வெடிமருந்து. இதை கண்டுபிடிப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே துப்பாக்கிகளுக்கான வெடிமருந்து புழக்கத்தில் வந்துவிட்டது. ஆனாலும் ரசாயனத்துறை பெரிய அளவில் வளர்ச்சியடையாததால், துப்பாக்கி வெடி மருந்துகளை விட சக்தி வாய்ந்த ஆயுதத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளை ஒவ்வொரு நாட்டு ராணுவமும் நிர்ப்பந்தித்து வந்தது.

விஞ்ஞானிகளும் பல வெடிமருந்துகளை கண்டுபிடித்தார்கள். ஆனால், அவற்றில் எதுவுமே பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. மேலும் யுத்தங்களுக்கு மட்டுமில்லாமல், நிலக்கரி சுரங்கங்கள் தோண்டவும் வெடிமருந்து கட்டாயமாக தேவைப்பட்டது. இதற்கான ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் 1867-ல் டைனமைட்டை கண்டுபிடித்தார்.

இவர் கண்டுபிடித்த வெடிமருந்தை விட மற்ற விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வெடிமருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. ஆனால், உலகம் அவற்றை நிராகரித்து விட்டு டைனமைட்டை மட்டும் ஏற்றுக்கொண்டது. அதற்கு ஒரேயொரு காரணம், நோபல் கண்டுபிடித்த டைனமைட் மிகவும் பாதுகாப்பானது என்பதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

நோபலின் டைனமைட்டுக்கு ஏகப்பட்ட தேவை இருந்தது. மிக அதிகமாகவும் தயாரிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஒரு தொழிற்சாலையை நிறுவினார். உலகின் நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் நோபலிடம் டைனமைட் கேட்டு வரிசையில் நின்றன. 1875-ல் டைனமைட்டின் உற்பத்தி 3 ஆயிரம் டன் வரை உயர்ந்தது. இதனால் நோபல் ஐரோப்பாவின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இடம் பெற்றார்.

டைனமைட்டைத் தொடர்ந்து ஜெலட்டினையும் கண்டுபிடித்தார். இதனால் அவரது புகழ் பெரும் அளவில் பரவி, பணம் எந்த வகையில் வருகிறது என்று தெரியாத அளவிற்கு, அவரது வீட்டின் முன்பு கொட்டியது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் குவிய ஆரம்பித்தது. மற்றவர்களாக இருந்தால் இன்னும் எப்படி சம்பாதிப்பது என்று யோசித்திருப்பார்கள். ஆனால், நோபலுக்கு சந்தோஷம் இல்லை. மாறாக, கவலைப்படத் தொடங்கினார்.

டைனமைட் கண்டுபிடிக்கும் போது தனது சகோதரன் உடல் கருகி இறந்தது போல், தான் கண்டுபிடித்த டைனமைட் எத்தனை ஆயிரம் உயிர்களைக் குடிக்குமோ என்று பயந்தார். நோபலுக்கு திருமணம் நடைபெறவில்லை. அவருக்கு நண்பர்களும் கிடையாது. கடவுள் நம்பிக்கையும் இல்லை. கடைசி காலத்தில் தன் ஆதங்கத்தை சொல்லி அழக்கூட ஆளில்லாமல் தனிமையில் தவித்தார். ‘பிறந்த அந்த நிமிடமே தான் இறந்திருக்கக் கூடாதா..?‘ என்று விரக்தியில் அழுதார்.

வருங்கால சந்ததிக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு அவரை குத்தி எடுத்தது. டைனமைட்டை கையில் எடுத்துக்கொண்டு உலக நாடுகள் போர் செய்தால் இந்த பூமி தாங்காது. அதனால், உலக நாடுகள் எப்படி ஒற்றுமையாக வாழலாம் என்று அவரே ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார்.

டைனமைட்டை ஏற்றுக்கொண்ட உலகநாடுகள், நோபலின் இந்த திட்டத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. மனம் வெறுத்துப்போன நோபல், தனது பெயரிலே ஒரு அறக்கட்டளையைத் தோற்றுவித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் அதற்கு எழுதி வைத்துவிட்டு அனாதை போல் இறந்து போனார். அவரது பெயரால்தான் நோபல் பரிசு வருடந்தோறும் பல்வேறு துறைகளில், சாதனை படைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.


ஆண்-பெண் பார்வை வேறுபாடு 17/04/2016

ஆதிமனிதனாக, மனிதன் காட்டில் இருந்த காலம் முதல் இன்று வரை அவன் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. பெண் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. 10 ஆயிரம் வருடங்களில் டி.என்.ஏ.வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.  காட்டுமனிதர்களில் ஆண் என்றால் வேட்டையாடுதல் முக்கிய வேலையாக இருந்தது. பெண்ணுக்கு குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பது முக்கியமானதாக இருந்தது. வேட்டையாடும் போது விலங்கையும், அது இருக்கும் தூரத்தையும் கணக்கிட்டு, இரை தப்பிவிடாமல் வேட்டையாட ஆணுக்கு கூர்மையான பார்வை தேவைப்பட்டது.  ஆனால் பெண்கள், விலங்குகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் வகையில், அவர்களின் பார்வை அதிக பரப்பை பார்க்கும் திறன் பெற்றிருந்தது. அவர்களில் சிலர் 180 டிகிரி கோணத்தில் பார்க்கும் திறன் கூட பெற்றிருந்தார்கள்.  ஆண்கள் பெரும்பாலும் ஒரு பொருளை வார்த்தை கொண்டு தேடுகிறார்கள். அதில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட தடுமாறுவார்கள். ஆனால், பெண்களின் பார்வையில் சிக்கலான வடிவங்களை தேடிட, அவர்களின் மூளையில் ஆஸ்டொஜன் என்ற ஹார்மோன் உதவுவதாக கூறுகிறார்கள். அதன் காரணமாக பெண்கள், எந்தப் பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என்றும், ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்றும் ஒரே பார்வையால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆண்களைப் போன்று திரும்பத் திரும்ப பார்க்க வேண்டியதில்லை.  ஆணின் கூர்மையான பார்வையிலும், பெண்ணின் பரவலான பார்வையிலும் நன்மை  தீமை இரண்டுமே உண்டு. ஆண்கள் ஓட்டும் வாகனங்கள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவது இல்லை. பக்கவாட்டிலேயே அதிக விபத்து நடக்கும். பெண்களுக்கு பரவலான பார்வை இருப்பதால் பெண்களால் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவதாகவே இருக்கும். சாலைகளில் இது பெண்ணுக்கு தீங்காக இருந்தாலும் வீட்டில் சாவி, சீப்பு போன்ற எந்தவொரு பொருளையும் சட்டென்று கண்டுபிடிக்க இது உதவுகிறது.  இயற்கையின் இந்த உண்மையை ஆண்களும் பெண்களும் அறிய வேண்டும். அவர்கள் தங்களின் இயலாமையை உணர்ந்து, மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடந்தால் சின்னச் சின்ன சச்சரவுகளை தவிர்க்கலாம். ஆண் பெண் இருவருக்கும் மனித இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. இது அறிவியலும், உளவியலும் நமக்கு தரும் தகவல்.

குழந்தைகளை வசியப்படுத்திய ‘வால்ட் டிஸ்னி‘ 20/04/2016

ராணுவம், பீரங்கி, வெடிகுண்டுகள் என்று மொத்த ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்க, ட்லரும், முசோலினியும் புறப்பட்ட சமயம், ஒரு சுண்டெலியையும் வாத்தையும் கையில் பிடித்துக்கொண்டு மொத்த உலகையும் வசப்படுத்தியவர், வால்ட் டிஸ்னி. <p></p>குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையும் ஈர்த்து பரவசப்படுத்தியது, மிக்கி மவுஸ். இதில் மிக்கியின் குரலுக்கு சொந்தக்காரர் டிஸ்னி தான். இந்த சாதனை மனிதரையும் ஆரம்ப காலங்களில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இவர் சினிமா வாய்ப்பு தேடி ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கிய போது, பொம்மையை கிறுக்குபவனுக்கு எல்லாம் எப்படி சினிமாவைக் கொடுக்கமுடியும் என்று கேலியாக சிரித்தார்கள். இதற்கெல்லாம் அசரவில்லை, டிஸ்னி. தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் கடன் வாங்கி சொந்தமாக ‘அலைஸ் இன் கார்ட்டூன் லேண்ட்‘ என்ற படத்தை எடுத்தார். படம் ஓடவில்லை. இருந்தாலும் டிஸ்னி தோல்வியை ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் டிஸ்னி, ஒரு சுண்டெலி ஓவியத்தை உருவாக்கினார். அதற்கு மார்டிமர் என்று பெயர் வைத்தார். ஆனால், அவருடைய நண்பர்கள் அதற்கு மிக்கி என்று பெயர் வைக்கச் சொன்னார்கள். இறுதியில் ‘மிக்கி மவுஸ்‘ என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர் உருவானது. முகத்துக்கு ஒரு வட்டம், இரண்டு காதுகளுக்கு இரண்டு வட்டம் என்று மூன்று வட்டங்களில் பிறந்த மிக்கிமவுஸ், ஒரு வருடத்திற்குள்ளேயே உலகை தன் பக்கம் வளைத்துக்கொண்டது.

தொடர்ந்து இவர் படங்கள் எல்லாம் வசூலை அள்ள, பணம் குவிந்தது. அங்கீகாரமும் தேடி வந்தது. 1932-ல் டிஸ்னி உருவாக்கிய ‘ப்ளவர்ஸ் அண்ட் ட்ரீஸ்‘ படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அப்போதுதான் ‘டொனால்ட் டக்‘ என்ற வாத்தினை அறிமுகப்படுத்தினார். உலகில் உள்ள உல்லாச பொழுது போக்கு பூங்காக்களை கணக்கெடுத்தால், முதலிடத்தில் இருப்பது ‘டிஸ்னி லேண்ட்‘ தான். 300 டாலர் நுழைவுக்கட்டணம் கொண்ட இந்த பூங்கா, பூலோக சொர்க்கம் எனப்படுகிறது. இங்கு ஒரு வருடத்திற்கு ஒன்றரைக் கோடி பேர் வந்து போகிறார்கள். இந்த பூங்கா உருவானது கூட ஒரு பழிவாங்கும் கதைதான்.  டிஸ்னி சிறுவனாக இருந்தபோது பள்ளிக்கு போகும் வழியில் ஒரு சிறு பூங்கா இருந்தது. கட்டணம் செலுத்தினால் மட்டுமே உள்ளே போகமுடியும். ஒவ்வொரு நாளும் பூங்காவில் விளையாடும் சிறுவர்களை அவர் ஏக்கத்தோடு பார்த்தபடியே வீடு திரும்புவார். ஏழ்மையில் வாடிய டிஸ்னி ஒருநாள் கூட அந்த பூங்காவிற்குள் செல்லவில்லை. அந்த ஏக்கம்தான் பின்னாளில் டிஸ்னி லேண்ட் உருவாக காரணமானது.

டிஸ்னி மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன பின்னரும், அவரது வாழ்க்கை முறை மாறவில்லை. சாதாரண மனிதர்களைப் போல் எளிமையானவராகவே இருந்தார். ஆனால், அவரிடம் ஒரே ஒரு ஆடம்பரம் மட்டும் உண்டு. ரெயில் மீது மிகுந்த ஆசை கொண்ட அவர், சொந்தமாக தனது வீட்டைச் சுற்றி ரெயில்பாதை அமைத்து பழைய கால ரெயிலை அவரே ஒட்டி விளையாடினாராம்.


திமிங்கலம், மீன் அல்ல.21/04/2016

திமிங்கலம் மீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது குட்டி போட்டு பால் கொடுக்கும் விலங்குகள் இனத்தை சேர்ந்தது. உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது, நீரில் வாழும் திமிங்கலம் ஆகும். திமிங்கலத்தில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது.

இதன் நீளம் 36 மீட்டருக்கு மேல் இருக்கும். எடை 162 டன்னுக்கு மேல். இது சுமார் 40 யானைகளின் எடைக்கு சமம் ஆகும். இதன் எலும்புகள் மட்டும் 91 டன்னுக்கு மேல் தேறும். திமிங்கலம் 40 வருடங்கள் வரை உயிர் வாழும். இதன் உடலில் 20 பீப்பாய் எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும் இருக்கிறது. இதன் தலையில் மட்டும் ஒரு டன் எண்ணெய் கிடைக்கும். திமிங்கலத்தின் எண்ணெய்யை கொண்டு ‘அம்பர்‘ என்ற வாசனைத் திரவியம், சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம்.  திமிங்கலத்தின் உணவு, மீன்கள், கீல், கடல் நாய்கள் தான். இதன் வாயின் நீளம் 18 அடி. வாயைத் திறந்து கொண்டு நீருடன் சேர்த்து இரையை விழுங்கும். ஒரு நாளைக்கு 1,000 கிலோ உணவை உண்கிறது. ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். கருக்காலம் ஒரு வருடம்.

பிறந்த குட்டி கூட ஒரு பெரிய யானையின் உருவத்தைவிட பெரிதாகவும், அதிக எடையுடனும் இருக்கும். பிறக்கும் போதே 7.5 மீட்டர் நீளம் இருக்கும். குட்டி, தாயிடம் பால் குடித்து வளரும். ஒரு தடவைக்கு 46 லிட்டர் பாலை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும்.3 மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும். 9 மீட்டர் நீளம் வளர்ந்தவுடன் தாயை விட்டு பிரியும். ஒரு திமிங்கலம் அதன் வாழ்நாளில் அதிக பட்சமாக 4 குட்டிகள் வரை ஈனும். இதுவும் பாலூட்டி இனங்கள் போன்றே நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது. மூக்குத் துவாரம் தலையின் மேல் பகுதியில் இருக்கிறது. மூச்சை வெளியிடும் போது காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து நீரூற்று போல் பீய்ச்சியடிக்கும். இது நெடுந்தொலைவுக்கு தெரியும். திமிங்கலம் பிராண வாயுவை கிரகித்து கரியமில வாயுவை வெளியிடுகிறது. நீர் மட்டத்திற்கு மேல் வந்து காற்றை இழுத்துக்கொண்டு நீருக்கடியில் சென்றால் 45 நிமிடங்கள் கழித்தே மீண்டும் காற்றுக்காக மேலே வரும்.  ஒரு முறைக்கு சுமார் 12 கிலோ காற்றை இழுத்துக்கொள்ளும். நீருக்கடியில் 162 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும். மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும். நீந்துவதற்கு 600 குதிரை சக்தியை செலவிடுகிறது. இவ்வளவு பெரிய உருவத்தின் கண், ஒரு குதிரையின் கண் அளவே உள்ளது. ஆனாலும் இதன் பார்வை மிகக் கூர்மையாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

கண்களுக்கு அருகே செவித் துளைகள் இருக்கின்றன. ஒரு ஈர்க்குச்சி நுழையும் அளவே இதன் செவித்துளைகள் உள்ளன. திமிங்கலங்கள் பல வகை உண்டு. நீலத் திமிங்கலம், ஸ்பெர்ம் திமிங்கலம், கொலைத் திமிங்கலம், சிலம்புத் திமிங்கலம், வர்க்க திமிங்கலம், பலின் திமிங்கலம் ஆகியவை அவற்றில் சிலவாகும்.